தெ. வெற்றிச்செல்வனின் ‘ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்’ பற்றிய சிறு குறிப்பு!

தெ. வெற்றிச்செல்வன்ஈழத்தமிழரின் புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி இதுவரையில் முறையான ஆய்வு நூலொன்று வெளிவரவில்லையே என்ற குறையினைத் தீர்த்துவைக்கின்றது தமிழகத்திலிருந்து சோழன் படைப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள தெ.வெற்றிச்செல்வனின் ‘ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்’ என்னும் ஆய்வு நூல். பெயருக்கு ஒரு சில நூல்களைப் படித்து விட்டு , தங்கள் எண்ணங்களைப் பக்கம், பக்கமாக எழுதித் தள்ளும் நமது பிரபல எழுத்தாளர்களின் நுனிப்புல் மேய்தல் போலில்லாது உண்மையிலேயே மிகவும் சிரமமெடுத்து, இயலுமானவரையில் நூல்களைத் தேடிப்பிடித்து இந்த ஆய்வு நூலினைப் படைத்துள்ள வெற்றிச்செல்வனின் இந்த முயற்சி மிகுந்த பாராட்டுதற்குரியது மட்டுமல்ல இத்துறையில் விரிவான , எதிர்கால ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும். அந்த வகையில் இந்த நூலுக்கு முக்கியத்துவமுண்டு.

நூலின் உள்ளடக்கத்தினைப் பார்க்கும்போது வெற்றிச்செல்வன் ‘ஈழத்தமிழர் புகலிடக் கவிதை’ பற்றித்தான் ஆய்வினைச் செய்யத் தொடங்கியிருக்க வேண்டும்போல் படுகின்றது. நூலின் பத்து அத்தியாயங்களில் எட்டு அத்தியாயங்கள் புகலிடக் கவிதை பற்றி விரிவாகப் பேசுவதைப் பார்க்கும்போது அவ்விதம்தான் எண்ணத்தோன்றுகிறது. மிகுதி இரண்டு அத்தியாயங்கள்தாம் புகலிடப் புதினங்கள் பற்றியும், புகலிடச் சிறுகதைகள் பற்றியும் பேசுகின்றன. புகலிடக் கவிதைகள் அதன் வளர்ச்சிப் போக்கு, அதன் உள்ளீட்டியல், வெளியீட்டியல், உளவியல், அழகியல், ஒப்பீடிட்டியல் என்று இவ்வாய்வு நூல் விரிவாகவே பேசுகின்றது. அத்துடன் நூலின் ‘நுழைவாயிலும்’, ‘நிறைவு’ அத்தியாயமும் கூடப் புகலிடக் கவிதை பற்றியே பேசுகின்றன.

புகலிடமும், புலம்பெயர்தலும் பற்றிக் குறிப்பிடும்போது ஆசிரியர் ‘பலரும் புகலிடமும், புலம்பெயர்தலும் ஒன்றெனப் பிழைபட எண்ணும்போக்கு நிலவிவருகிறது. இரண்டுமே அடிப்படையில் வேறு வேறானவை’ என்கின்றார். உண்மையில் புகலிட இலக்கியத்தை புலம்பெயர் இலக்கியத்தினோர் சிறப்பான அம்சங்களைக் கொண்ட பிரிவாகவே நான் கருதுகின்றேன். சொந்த மண்ணில் இருப்பே கேள்விகுறியானதொரு சூழலில், பல்வேறு அடக்குமுறைகளுக்குள்ளாகிப் புகலிடம் நாடிப் புலம்பெயரும் மக்கள் படைக்கும் இலக்கியமே புகலிட இலக்கியமாகின்றதென்பதென் கருத்து. அத்துடன் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு காரணமாகப் புலம்பெயரும் மக்கள் படைக்கும் இலக்கியத்திற்கும், புகலிடம் நாடிப் புலம்பெயரும் மக்கள் படைக்கும் மக்கள் படைக்கும் இலக்கியத்திற்குமிடையில் வேறுபாடுகள் பல உள்ளன. அதே சமயம் சொந்த மண் பற்றிய கழிவிரக்கம் போன்ற பொதுவான அம்சங்களுமில்லாமில்லை. பொருளாதாரக் காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்த ஒருவர் சில சமயங்களில் நாடு திரும்பவே முடியாததொரு புதிய சிக்கல்களுக்குள் சிக்கிச் சொந்த மண் பற்றிய கனவுகளிலேயே தன் மீதி நாட்களைக் கழிக்கக் கூடும். அதே சமயம் புகலிடம் நாடிச் சென்றவர்களில் பலர் தமது புதிய சூழலுக்குள் தம்மை நிலை நிறுத்துகொண்ட பின்னர் அடிக்கடி சொந்த நாட்டிற்குச் சென்று வரலாம். எனவே புலம்பெயர் மக்கள் புலம்பெயர்ந்த காரணங்கள் எதுவாகவிருந்தபோதிலும், படைக்கும் இலக்கியத்தின் பண்பென்பது அதனைப் படைக்கும் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வு நிலை காரணமாக வேறுபடலாம். பிரச்சினையென்னவென்றால் புகலிடம் நாடிச் சென்ற ஒருவர், செல்வச் சிறப்பில் மிதந்து கொண்டு, அடிக்கடி சொந்த மண்ணுக்கு பயணித்துக் கொண்டு, உதட்டளவில் கூட இலக்கியம் படைக்கலாம். அதனை வாசிக்குமொருவர் அது கூறும் பொருள் பற்றி மிகவும் தீவிரமான தாக்குதலுக்குள்ளாகக் கூட நேரலாம். அதே சமயம் பொருளியல் காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்த ஒருவர் , புதிய சமூக, பொருளியல் சூழல்களுக்குள் சிக்கி, சொந்த மண் திரும்ப முடியாத நிலையில் , புதிய சூழலில் கிளைவிட்ட உறவுகளுக்குள் சிக்கிச் சொந்த மண் பற்றிய கனவுகளே வாழ்வாக வாழுமொரு நிலையில் இலக்கியம் படைக்கலாம். இது மிகவும் விரிவாகப் பல்வேறு தளங்களில் ஆராயப்பட வேண்டியதொரு பிரச்சினையாகவே எனக்குப் படுகிறது. இத்தகையதொரு பின்னணியில்தான் நான் புகலிட இலக்கியத்தையும், புலம்பெயர் இலக்கியத்தையும் அணுகுகின்றேன். அதனால்தான் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் இலக்கியமென்பதில் எந்தவிதத் தவறுமில்லையென்றே கருதுகின்றேன். ஆனால் அதனை விபரிக்கும்போது அவ்விலக்கியத்தின் முக்கியமானதோர் அம்சமாக புகலிடம் நாடிய அவர்களின் நிலைப்பாடு புலப்படுத்தும் உணர்வுகள் இருக்குமென்பதை எடுத்துரைக்கலாம்.

இன்னுமோரிடத்தில் ‘புலம்பெயர்தலை விட ஆழ, நீள, அகலப் பரிமாணங்கள் கொண்டதாகவும் உள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை மரபைத் தொடர்ந்து கணினியும் கணினி சார்ந்தும் தமிழை ஆறாம் திணையாகவும், புகலிடமும் புகலிடம் சார்ந்தும் தமிழை ஏழாம் திணையாகவும் ‘ விரிந்த போக்கில் காண்கிறார் சேரன் என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். கவிஞர் சேரன் அது பற்றிக் குறிப்பிட்ட கட்டுரையினை நான் வாசிக்கவில்லை. இந்நிலையில் அவர் முழுமையாகக் குறிப்பிட்ட விடயம் பற்றி என்னால் முழுமையானதொரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் நூலாசிரியர் குறிப்பிட்டதிலிருந்து நான் புரிந்துகொண்ட அடிப்படையில் கணித்தமிழைத் தனித் திணையாகப் பிரிப்பதிலும், புகலிடம் சார்ந்து தமிழை ஏழாந்திணையாகப் பிரிப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளும் அங்கு நிலவும் காலநிலை, நிலம், வாழும் உயிரினங்கள், சமூக அமைப்பு ஆகிய பல்வேறு அம்சங்களில் வேறுபாடுள்ளவை. ஆனால் கணித்தமிழை அவ்விதமொரு தனித்த திணையாகப் பிரிக்க முடியாது. ஏனெனிலில் கணித்தமிழென்பது ‘டிஜிடல்’ ஊடகத்தினொரு விளைவு. சுவடிகளில், அச்சு என்று வளர்ந்து வந்த பரிணாம வளர்ச்சியினொரு விளைவு. இந்த அடிப்படையில் கணித்தமிழ் ஒரு திணையல்ல.

அதுபோல் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த மக்கள் படைக்கும் இலக்கியத்தை ஒரு திணையாகப் பிரிப்பதிலுமொரு சிக்கலுண்டு. அந்தச் சிக்கலென்னவென்றால் … ஏற்கனவே பிரிக்கப்பட்ட திணைகளெல்லாம் மக்கள் வாழும் மண், அங்கு நிலவும் நிலவும் இயற்கை அமைப்பு போன்ற அடிப்படையிலேயே, ஏற்கனவே குறிக்கப்பட்டதைப் போல் , பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் புகலிடம் நாடிப் புலம்பெயரும் ஒருவரையும் அந்த அடிப்படையில் பிரிப்பதென்றால் அவர்கள் வாழும் மண், அங்கு நிலவும் சமூகப் பொருளாதாரச் சூழல்.. போன்ற அடிப்படையில்தான் பிரிக்க வேண்டும். புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தவர்கள் மேற்கு நாடுகளுக்கு மட்டும் புலம்பெயரவில்லை. அருகிலுள்ள தமிழகத்திற்கும் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள். தென் கிழக்காசிய நாடுகள், வட துருவ நாடுகள், தென் துருவ நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளென்று … பலவேறு நாடுகளுக்கும் புலம் பெயர்ந்திருக்கின்றார்கள். எனவே இவ்விதமானதொரு சூழலில் ஏற்கனவே சங்க காலத்தில் நம் முன்னோர்கள் திணைகளாகப் பிரித்துவிட்டார்களேயென்பதற்காக நாமும் அவ்விதம் பிரித்துப் பார்க்கவேண்டுமென்பதில்லை. அந்த அடிப்படையில் பிரிக்கவும் முடியாது. மாறாக பல்வேறு தேசங்களுக்கும் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த மக்கள் படைக்கும் இலக்கியத்தில் நிலவும் தேசியக் கூறுகளின் அடிப்படையில் அவற்றை அணுகுவதில் நல்ல பயனுண்டு என்பதென் கருத்து. இவ்விதமான நோக்கில் ஏற்கனவே தமிழகத்தில், ஈழத்தில் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பட்டப்படிப்பு மாணவர்கள் தமது ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். இது நல்லதொரு முன்னேற்றமான தொடக்கம்.

மேலும் ஆசிரியர் கணித்தமிழை ஒரு திணையாகவும், புகலிட இலக்கியத்தை இன்னுமொர் திணையாகவும் ஏற்றுக்கொண்டு விட்டதால் போலும், மேற்படி நூலில் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கணித்தமிழ்ப் பங்களிப்பைக் கவனிக்க மறந்துவிட்டார். கணித்தமிழ் ஈழத்துத் தமிழ் இலக்கியம், தமிழகத் தமிழ் இலக்கியம், சிங்கைத் தமிழ் இலக்கியம், மலேசியத் தமிழ் இலக்கியம், புகலிடம்நாடிப் பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் படைக்கும் புகலிட இலக்கியம் .. எனப் பல்வேறு பிரிவுகளையும் உள்ளடக்கியதொன்று. கணித்தமிழில் வெளிவந்து, இன்னும் அச்சுருப் பெறாத புகலிடக் கவிதைகள், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகளென… பல படைப்புகளையும் ஆசிரியர் கவனத்திலெடுத்து இந்நூலை இன்னும் விரிவாக்குவாரென்றால் இதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும்.

ஆக, இவ்விதமானதொரு சூழலில் வெளிவந்துள்ள வெற்றிச்செல்வனின் மேற்படி ஆய்வு நூலானது புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் புகலிட இலக்கியத்தின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்து வெளிவந்திருக்கின்றது. இதுவரையில் வெளிவந்த புலம்பெயர்ந்த தமிழரின் புகலிடச் சிறுகதைகளை உள்ளடக்கிய நல்லதொரு தொகுப்பு நூலாக மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்த ‘பனியும் பனையும்’ நூலினையே காணுகின்றேன். அது போல் இயலுமானவரையில் தகவல்களைத் திரட்டி இத்துறையில் வெளிவந்த நல்லதொரு ஆய்வு நூலாக இந்நூலினைக் காண்கின்றேன். எதிர்காலத்தில் மேலும் பல தரவுகளை உள்ளடக்கி, இன்னும் விரிவாக வெளியிடுவதன் மூலம் இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கும்.

இந்நூலின் பின்மட்டையில் வெளியாகியுள்ள எழுத்தாளர் தமிழ்நதியின் நூல் பற்றிய குறிப்பில்  ‘வெற்றிச்செல்வனின் ஈழத்து இலக்கியம் பற்றிய எனது வாசிப்பு விரிவடைந்திருப்பதாக உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. அதிலொரு சிறு திருத்தம். ‘வெற்றிச்செல்வனின் இவ்வாய்வு நூலைப் படித்தபிறகு  ஈழத்திலக்கியத்தினோர் அங்கமான புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் படைக்கும் புகலிட இலக்கியம் பற்றிய எனது வாசிப்பு விரிவடைந்திருப்பதாக உணர்கிறேன்’ என்றிருந்தால் இன்னும் பொருத்தமாகவிருந்திருக்கும். இருந்தாலும் தமிழ்நதி கவிஞரென்பதால் மேற்படி அர்த்தத்திலேயே , சொற்சிக்கனம் கருதி ‘ஈழத்து இலக்கியம்’ என்று குறிப்பிட்டிருக்கக்கூடும்.

[நூலைப் பெற்றுகொள்ள: சோழன் படைப்பகம், 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை -78. கைபேசி: 9444302967.  வெற்றிச்செல்வனின் மின்னஞ்சல்: vetripoet@gmail.com]

ngiri2704@rogers.com