1
யார் எத்தனை கேலி செய்தாலென்ன…? ஜோல்னாப் பையின் அழகே தனி தான்!
என்னவொரு உறுதி! என்னவொரு நளினம்!
எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் அதில்அடுக்கிவிட முடியும்; அடைத்துவிட முடியும்.
தோளில் மாட்டித் தூக்கிசென்றால் பாரந் தாங்கலாகாமல்
கையுங் கழுத்தும் இற்றுவிழக் கூடுமே தவிர
‘பை’யின் பிடி யறுந்துபோகாது.
‘ஆள் பாதி; ஜோல்னாப் பை மீதி’ என்பதும்
அர்த்தமுள்ள பொன்மொழிதான்!
2
ஆனால் ஒன்று _ சமீபகாலமாக ஜோல்னாப் பைக்குள்
புத்தகங்கள் குறைந்து தராசுத்தட்டுகள் நிறையவாகிவருகின்றன.
விதவிதமான அளவுகளில் துலாக்கோல்கள் இருக்கமுடியும்.
ஆனால், எடைக்கற்கள் கூடவா?
அதாவது, ஒரே எடையளவை ஒவ்வொருவருக்கும், இல்லை, வேண்டும்போதெல்லாம், வெவ்வேறு எடையாக்கிக் காட்டுபவை!
3
தராசுத்தட்டின் அடியில் புளியை அழுத்தி ஒட்டவைத்தல் _
தாங்கிப்பிடிக்கும்போது சற்றே ஒரு புறமாய் சரியச் செய்தல்
இன்னபிற உத்திகள் பத்தாம்பசலித்தனமானவை.
இப்பொதெல்லாம் கைகளே துலாக்கோல்களாக
ஒரு கை காட்டும் எடை மறு கை மாற்ற
முடையில்லா கடைவீதிகள்
நீண்டகன்று நாற்புறமும் விரிந்தேகத் தடையில்லை.
4
ஆயிரமாயிரம் கோப்புகள் ஒரு கணிணிக்குள் அடங்கும் காலமிது.
அந்தக்கால எடைக்கற்கள் யாருக்கு வேண்டும்?
இன்று வரிகளிலும், வார்த்தைகளிலும், வாக்கியங்களிலும் _
அட, ஒற்றைச் சொல்லிலும் கூட உண்டு _
துலாக்கோல்களும் எடைக்கற்களும்.
அதேசமயம், வண்டிவண்டியாய்ப் பக்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல!
5
‘நலம், நலம் அறிய ஆவல்’ போய்
‘நாசமாய்ப் போவாய்’ என்றே மலரும் திருவாயின்
சொத்தைப் பற்களும் கூடத் தம்மை
தராசெனக் கற்பிதம் செய்துகொள்ளும்.
இதழ்க்கடையோர இளக்கார முறுவலில் வெளிப்படும்
துருப்பிடித்த தராசுத்தட்டுகள்.
6
ஆளுக்கொரு துலாக்கோலைக்
கக்கத்திலிடுக்கிக்கொண்டுபோகும் சிலர்_
கையில் பிடித்தாட்டிக்கொண்டேகும் சிலர்_
ஆளுக்குத் தக்கபடி எடையைக் கூட்டிக்குறைக்கும் சிலர்_
‘கடவுள் நான்; அவர் செய்வதும் இதுதான்’ என்று வக்கணை பேசி
தம் துக்கிரித்தனத்திற்கு நியாயம் சேர்க்கும் சிலர்_
கத்தியைத் துலாக்கோலாக்கும் சிலர்_
கத்திக் கத்தித் தம் குரலையே தராசாக்கிக்கொள்ளும் சிலர்_
கழிவிரக்கத்தால் தம் எடை கூட்டிக்கொள்ளும் சிலர்_
கல்பகால சோகங்களுக்கு ஏகபோக உரிமைபாராட்டி
தம் துலாக்கோலை கவனமாய் ஒரு பக்கமாய் சாய்த்தபடியே சிலர்….
சுருங்கச் சொன்னால், இந்நாள்
இல்லாத கையிலு மிருக்கும் தராசுகள் சில பல!
7
அதோ, தனித்தன்மை வாய்ந்ததாய் தன்னைத் தானே அன்றாடம்
துண்டுபோட்டுத் தாண்டாத குறையாய் கொண்டாடிக்கொள்ளுகின்ற
கடல் தாண்டிப் போயிருக்கும் தராசின் தட்டொன்றில்
மனிதர்கள் தூசின் மொந்தைகளாக்கப்பட்டு
மற்றதில் அத்தனை எடைக்கற்களும் அதிகாரத்தின் குறியீடாய்
பிடித்துக்கொண்டிருக்கிற தொரு மண்ணாந்தைக் கை.
8
எத்தனையெத்தனை வடிவங்களில் எடைக்கற்கள்!
மண்டையோடுகள்; ரத்தம் சொட்டும் மனிதத் தலைகள்;
ஆள்காட்டி விரலும், கட்டைவிரலும் சேரும் நுனியில்
‘இங்க்’, ‘பால் பாயிண்ட்’, ‘ஜெல்’ பேனாக்கள்.
பல்லெல்லாம் வெளியே தெரியும் வாய்கள்.
கனியிருப்பக் கவர்ந்த காய்கள்.
முனிப்பேய்கள்; பனிப்போர்கள்
நார்நாராய்க் கிழிக்கக் காத்திருக்கும் கூர்நகங்கள்
காரிருளார்ந்த அகங்கள், கனம் பிடித்த சிரசுகள்,
பிறவேறும் இதுபோலும்….
9
எத்தனையெத்தனை வண்ணங்களில் துலாக்கோல்கள்1
நிறம் மங்கியவை; நிறம் மாறாதவை.
நிறமற்ற நீரனைய தூய்மையாகசும் தூசிகளோடு,
கொள்கலத்திற்கேற்ப எடைகாட்டக் கூடியவை.
ஏட்டில் மட்டுமே இடம்பெற்றிருப்பவை.
எந்நேரமும் ஊசலாடிக்கொண்டிருப்பவை.
கச்சிதமாய் எடையைக் கூட்டிக்குறைத்து
வருமானம் பெருக்கி வெற்றிவாகைப்
பிச்சிப்பூ அணிந்திருப்பவை.
பச்சோந்தி நிறத்தில் இறுமாந்திருப்பவை….
10
எத்தனை சிரமங்களுக்கிடையில் தராசுகள் தயாராகின்றன தெரியுமா!
நைச்சியமா யொரு ராஜாளிப்பறவையைக் காக்காய் பிடித்து
வளிமண்டலத்தில் நிரம்பியிருக்கும் கரியமிலவாயுவை
கடத்திக்கொண்டுவந்து சிலர் உருவாக்க,
வேறு சிலர் நீமூழ்கிக்கப்பலுக்குள் பதுங்கிக்கொண்டு
கடலடிக்கு ‘விர்ரெ’ன்று சென்று
திமிங்கலம் சுறாமீன்களூடாய் சீறிப்பாய்ந்து
பவழப்பாறைகளுக்கப்பாலோ எங்கோவான
எழவெடுத்த பள்ளத்திலிருந்து
அள்ளிக் கொண்டு வருகிறார்கள்.
11
மூச்சை யடக்கித் தன் உளச்சான்றைக் கொன்று முடித்து
ஒரே வீச்சில் தராசை வென்றெடுப்பது எத்தனை கடினம் தெரியுமா?
கண்டு விண்டிட வியலா வேதனையில்
காற்றிலொரு துலாக்கோலைக் கட்டமைத்து
குமிழ் எடைக்கற்களால்
நம் வாழ்வின் சாரங்களையும் பாரங்களையும் நாளும்
அளக்கும் ஆதிபகவன் கைத் துலாக்கோல் கலகலத்து
இற்றுவீழ்ந்துவிடுவது முண்டு!
12
துலாக்கோலும் தராசும் ஒன்றுதானா…? முதலில் அது தெரியுமா…?
என்று பேச்சை மாற்றுகிறாய்.
இது மொழிப்பிரச்னை யல்ல; வழிப்பிரச்னை. புரிந்துகொள்ளேன்.
ஒருவகையில் சந்து வீதி சாலை எல்லாம் ஒன்று தான்; எனில், தனித்தனியும் கூட.
ஆனால் நீயோ துலாக்கோல்களோடே போய்க்கொண்டிருக்கிறாய்
வழியெங்கும் எடைக்கற்களைக் குறிபார்த்து வீசியெறிந்தபடி.
சேருமிடம் வந்துவிட்டால் எதுவும் சரிதான் என்பாய்.
செல்வழியெங்குமுள சுவடுகளைக் காலக்கண்கள் அளவெடுத்தபடியே…