சிறுகதை: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது..’

சிறுகதை: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது..'1.

குளிர்காலம்போய் வெயில் வந்தவுடனே ஒரு சந்தோஷம்.ஒரு உஷார். எனக்குள்ளே இரண்டு மடங்கு உஷார். அவனை நினைக்கும்போதெல்லாம் அவனைக்காணவேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் மனதிற்குள் நெருக்கு நெருக்கு என்றிருக்கும். இருட்டுறதுக்கு முன்னர் போனால்தான் முழுமையான ஒரு சந்திப்பை உருவாக்கமுடியும். அவனை ஒருதனமேனும் ஏற இறங்க ஆசைதீர பார்க்கமுடியும். அவனை நினைக்க உற்சாகமாக இருந்தது.  தினமும் மாலையில் காலாற நடந்து செல்லும் அதேபாதையில் தடம் பதிக்கின்றேன்.என்னைத்தினமும் சந்திக்கும் அந்த உயிர் கோடையில் ஆரம்பத்தில் மீண்டும் உயிர்பெற்றிருந்தது. என் வாழ்வில் எத்தனை உறவுகள் வந்தது.இவன் மட்டும் எப்படி என் உறவோடு கலந்தான்? எனக்கும் இவனுக்குமுள்ள உறவுதானென்ன? எந்த உறவில் இவன் உறவைச்சேர்ப்பது? தொப்புள்கொடி உறவிலா? இரத்தஉறவிலா? அம்மாவழிச் சொந்தத்திலா? இல்லை அப்பாவழி பந்தத்திலா? ‘யார்இவன்? இத்தனை சொந்தங்களையும் மீறிய அர்த்தமுள்ள, ஆதரவான, ஆச்சரியமான, உணர்வுபூர்வமான சொந்தமானவன். இதே உறவு ஊரிலும்எ மக்கிருந்தது. இதனால்தான் இவனைப்பார்க்கும்போதெல்லாம் அதே நினைவு. ஊரில் இருந்த அதே உறவின் சாயல் இவனிலும் இருக்கப்போய்த்தான் இவ்வுயிரையும் ஒரு நாளைக்கு ஒருக்காத்தன்னும் காணவேணும்போல மனம் கிடந்துதுடிக்கும். இவனைக்கண்டாலோ பழசுகள் மனசை வந்து ஒரு தட்டுத்தட்டும்.

இவனை மாதிரித்தான் ஊரில் அவனும் விருட்சமாக வளர்ந்து அடிப்பாகம் அகன்றுமூன்று பகுதிகளாக நிலத்துடன் ஆழப்பதிந்திருந்தான். அவன்,  இவன்,  நான் அதில் குந்துவோம். மற்றவன், இன்னொருவன் சைக்கிள் சட்டத்தில் சாய்ந்திருப்பார்கள். மாணிக்கவாசருக்கு குருந்தமரம், புத்தபெருமானுக்கு போதிமரம், எங்களுக்கு இந்த அரசமரம். பசளையிட்டு நீர்ப்பாய்ச்சி அந்தமரம் வளரவில்லை. மழைநீரில் அந்த மரம் வளர்ந்தது. பசளையாய் எம் பேச்சு இருந்தது. எமது முன்னோர் சிலரும் அந்த மரத்தின் அடியில் குந்தியிருந்து கதைபேசியிருக்கலாம். நாமும் கதைப்போம். என்னதான் கதைக்கவில்லை? எல்லாக் கதையும் அந்த மரம் சொல்லும். எமது நட்பின் ஆழத்தை அது சொல்லும். எங்கள் வேதனைகளை விரக்திகளை அது சொல்லும்.கிண்டல் கேலிப்பேச்சுக்கள் அதையும் சொல்லும். வாழ்வில் ஏதும் சாதிக்கவேண்டும் என்ற விருப்பத்தையும் அது சொல்லும். எங்கள் கேலிப்பேச்சுக்களுக்கு சலசலவென்ற ஒரு சிரிப்புச்சிரிப்பான்.  இப்படி இருக்கமுடியாதபடி காக்கைக்கூட்டத்திற்கு ஒருநாள் கல்லெறி விழுந்தது.

2.

காக்கைகள் நாம் சிதறினோம். சிதறிப்போன ஒவ்வொருவரையும் நான் நினைத்துப்பார்க்கின்றேன். அவன், இவன், மற்றவன், இன்னொருவன், பிறகுநான். நினைவழியா நாட்கள். எப்போதும் வானம்போல, எப்போதும் சூரியன்போல எப்போதும் கடல்போல , எப்போதும் எங்களூர் பனைபோல அழிந்தே போயிராத, அழிந்தே போகமுடியாத நாட்கள். நினைவுகள் அழிவதில்லை.

முதன்முறையாக பள்ளிக்கூடம் போகின்றேன்.முதலாம் வகுப்பு.முதலாம் நாள். அம்மா கூட்டிப்போகிறா. அழுகை, அழுகையாக வருது. பயமா இருக்கு. இதனால் அம்மாவின் கையை இன்னமும் அழுத்தமாக பிடித்துக்கொள்கின்றேன். அம்மாவை விட்டிட்டிருக்க வேணும். அதுதான் அழுகை. யாரோடோ இருக்கவேணும். அதுதான் பயம். அழுகையும் வராமல், பயமும் வராமல் “இஞ்சை எனக்குப்பக்கத்தில இருக்கலாம்” என்று ஒருவன் இடம் தந்தான். அவன் என் மனதில் இடமானான்.  நண்பர்களானவர்கள் இப்படித்தான் ஏதோ ஓர் இக்கட்டில் கைகொடுத்தவர்கள்.
 
அருமை நண்பர்கள் ஐவரானோம்.எங்களுடைய அரசமரத்துடன் ஆறுபேராகிவிட்டோம். மாலையில் அவன் முன்னால் ஒன்று கூடுவோம். அன்றைய கூடலில் முதலில் சபைக்கு எடுக்கப்படுவது எமது அன்றைய நிதி நிலைமை எப்படி என்பதே. ஒவ்வொருவன் பொக்கற்றுக்குள் இருப்பதையும் சேர்த்துப்பார்ப்போம். சரி இன்றைக்கு ´மொக்கங்´கடையில் புட்டும் இறைச்சிக் குழம்பும் சாப்பிடலாம். நல்ல ரசமும் குடிக்கலாம். காசு போதாதா? பிளவ்ஸில் சுடச்சுடப்பாணும் இறைச்சி ரொஸ்ற்றும். அதற்கும் போதாதா? இருக்கிறது பத்மா கபே வடையும் பிளேன் ரீயும்.இல்லாவிட்டால் பிளேன்ரீ மாத்திரம்.  பிறகு.. ஒரு உஷார். கவியரங்கம், பாடல்கள், நகைச்சுவைக்கதைகள் ,பேச்சுக்கள், ஓவியம் கூட அந்தச் “சமாவில்” சங்கமமாயிருந்தது. யாழ் கோட்டையும், அதனுடன்சேர்ந்து அகழியும், முனியப்பர் கோவில் முன்றலில் கிரிக்கெட் விளையாட்டும், அந்தக்கடலைக்காரியும் கரம் சுண்டல் காரனும் என்று அந்த வெள்ளியின் மாலைப்பொழுதையும் உணர்வு கலந்த ஓவியமாக்கியிருப்பான். வசந்தமாளிகைக் கட்அவுட்டில் சிவாஜியையும் வாணிஸ்ரீயையும் பாவங்களுடன் வரைந்த அவனின் திறமையும் அந்த மரத்தடியில் அரங்கேறியது. இவன்சொல்லுவான் பாரதியின் கண்ணம்மாவிற்கு காற்சட்டை போட்டுப்பார்க்கவேண்டும், மினி போட்டுப்பார்க்கவேண்டுமென்று. அதன் அர்த்தமே பாரதியார் பாடல்களிற்குப்புதுமெட்டுக்கட்டிப்பாடுவதுதான்.

இவனொருபாடகன். சினிமாப்பாடல்களைப்பாடிவிட்டு அதே மெட்டில் திருக்குறளையும் பாடுவான். இசையில் ஆர்வம் இவனால் எமக்கு வந்தது. திரைப்படம் பார்த்தால் எழுத்தோட்டத்திலிருந்து சுபம் வரைக்கும் ஒரு வரிவிடாமல் கதை இசை பாடலென்று திரையில்லாமல் சொல்லும் கதைஞன் மற்றவன். மேசை, கதிரை கரண்டி தகரடப்பாக்களில் இசை வழங்கும் இன்னொருவன்.அந்தி நேரக்கூடலில் வெறும் தகரடப்பாவில் நல்ல இசையை வழங்கி அப்பொழுதை களைகட்டச்செய்வான். சோகத்திலும் சுகம் இருக்கிறது என்று சிரித்துக்கொண்டு நகைச்சுவையாகப்பேசுவான். வாழ்க்கையில் துவண்டு மடிதல் கூடாது என பலமாகவே நம்பிவந்தான். எவ்வளவ கலகலப்பு, சந்தோஷம், சைக்கிள் ஓட்டம், விளயாட்டு வேடிக்கையென்று களைப்பு அறிந்திராத வயது.

3..

இளைஞர்கள் ஊர்ஊராக வேட்டையாடப்பட்டுக்கொண்டிருந்த நாட்கள். இரவிரவாக இளைஞர்கள் இல்லாமல் போன நாட்கள். கரும்பச்சை வாகனம் கரும்புகைகக்கி வீதியை அதிரவைத்த நாட்கள்.வருகின்ற செய்திகள் அச்சம் தந்தன.செய்தியின் தலைப்புக்கள் இரத்தத்தால் எழுதப்பட்டு வந்தன.

அம்மா போகச்சொன்னா “ராசா எங்கையெண்டாலும்…”

“எங்க போறது?எல்லோருக்கும் இருக்கிற கஷ்டந்தானே?”

இந்த நாட்களில் ஒருநாள்கூடலில் ஒருவன் தன் வெளிநாட்டுப்பயண அறிவித்தலை முன்வைத்தான். வீட்டில் எல்லாம் முடிவாகி, முடிவை தீர்மானமாக தன்னிடம் சொன்னார்களாம்.”என்னடா செய்ய” என்று கலங்கிப்போய் நின்றிருந்தான். அவ்வளவு விரைவில் விட்டுவிட்டுப்போகக்கூடிய பந்தமாக எமது நட்பு இருந்திருக்கவில்லை. ஒருநாளைக்கு ஒருத்தன் குறைஞ்சாலே என்னமோ, ஏதோ என்று அவன் வீட்டிற்கே போய்விடுவோம். ஒருத்தனுக்குச்சுகமில்லையென்றால் அவனைத்தனியாகவிட்டுவிட்டு நாம் களித்திருந்ததில்லை. அவனுக்குத்துணையாக எமது கூடலும் அவனருகில்தான் இருக்கும். இப்படியிருந்த சங்கிலிப்பிணைப்பிற்குள் ஒரு சங்கிலி அறுந்துபோனால் தொய்ந்துபோறமாதிரி மனமும் தொய்ந்து போயிற்று. அவனைத்தேற்றி, அவனின் பயணத்திற்கும் ஆயத்தங்கள் செய்துகொண்டே அழுதோம், மனத்தால் கதறி அழுதோம்.அந்த மரமும் அன்று சேர்ந்து அழுதது. எல்லோரும் பொழிந்த கண்ணீர் அடங்குவதற்குள் அவனும் பிரிந்து எம்மைவிட்டுப்பறந்தான். போனவன் போட்ட கடிதத்தை அரசமரத்தின் கீழிருந்து வாசித்தோம். தன் இலைகளையும் சரசரக்காமல், எம்முடன்கூடி அவனின் சுகமறிந்துகொண்டபின் அது” ஓ” வென்று இரைச்சலிட்டது. கண்ணீர் சிந்தமுடியாமல், கவலைகளைச்சொல்ல முடியாமல் இரைச்சலிட்டே தன் வேதனைகளைப்பறைந்தது. பகிர்ந்தது. என்றும் சலசலவென்று சிரிக்கும் அவனின் சோகத்தின் வெளிப்பாட்டை எம்மால்உணரமுடிந்தது.எமக்கிடையில் இசைநின்று போயிற்று.சோகத்திற்குள்ளும் சுகம்கண்டவன், சுகத்தையே சோகமாக்கி விட்டுப்போயிருந்தான். இசைபிரிந்த பின்னால் பாட்டிற்கென்ன மதிப்பென்று எண்ணினானோ இவனும் பறந்தான்.மற்றவனும் பறந்தான்.

இவர்களின் பிரிவால் எமக்கிடையில் வெறுமை படரத்தொடங்கியது. எங்களின் குதூகலமிழந்த முகத்தைக்கண்டு ஏனோ இவனும் தன்செழிப்புக்குன்றத்தொடங்கினான். இலைகளை உதிர்த்து சலசலப்புக்குறைந்துபோய் நின்றிருந்தான். காலத்தின் விரட்டலில் கடல்கடக்க நானும் தயாரானேன். வேதனை மீதூரக்கடல் கடந்தேன். இளமையில் எமது நண்பனை அங்கு விட்டு விட்டு நாமும் அவன் நினைவுடன் பிரிந்துவிட்டோம். பிரிந்தநாம் கடைசியில் நரைதட்டி மூப்பெய்திய பின்னாவது, உயிர் பிரியும் முன்னாவது அம்மரத்தடியில் ஐவரும் கூடுவோமா? பழையதையெல்லாம் இளமைத்துடிப்புடன் பறையவேண்டும். சைக்கிளில் டபிள் போகவேணும். டபிள் பெடலும் போட வேண்டும். ஆகுமோ? அப்படி நடக்குமோ? ஊரில் அந்த உயிர் இருக்குமா?’செல்’ அடித்து பொம்மர் குத்தி அந்த மரம் தன்தலையை இழந்து முண்டமாக இருக்குதோ? அல்லது சிதறிப்போயிற்றோ? இல்லையென்றால் இன்னும் நாலு இளவட்டங்கள் அதனடியில் குந்தியிருக்கலாம். என்றாவது எம்மைக்காண நாள்வரும் என்ற நம்பிக்கையில் முண்டமாகவோ, முடமாகவோ நிச்சயம் அந்த அரசமரம் உயிர்வாழும். நாங்களும் ஊர் போவோம். ஒரு சொல்லாவது எம்சோகம் அதனுடன் பகிர்வோம். நம்பி இருப்போம். நம்பிக்கை… நம்பிக்கை.   மனிதர்கள் மட்டும் நம் சொந்தங்களல்ல. பூக்களும் மரங்களும் மழையும், மண்ணும்… கடலும்,  காற்றும்கூட எம் சொந்தங்களே..