வாசிப்பும், யோசிப்பும் 59 : மேலும் சில முகநூற் குறிப்புகள்!

எனக்குப் பிடித்த நாவல்களில் சில.

வாசிப்பும், யோசிப்பும் : மேலும் சில முகநூற் குறிப்புகள்!இது ஒரு தர அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலல்ல. நான் வாசித்த படைப்புகளில் என் மனதில் முதலில் தோன்றிய படைப்புகளிவை. இங்குள்ள படைப்புகள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்தவை.

1. டால்ஸ்டாய் – புத்துயிர்ப்பு
2. தத்தயேவ்ஸ்கி – குற்றமும், தண்டனையும்
3. அதீன் பந்த்யோபாத்யாய – நீலகண்ட பறவையைத் தேடி..
4. தி.ஜானகிராமன் – மோகமுள்
5. எம்.டி.வாசுதேவன் நாயர் –  காலம்
6. ஹெமிங்வே – கடலும், கிழவனும்

7. வைக்கம் முகம்மது பஷீர் – என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது
8.  மார்க்சிம் கார்க்கி – தாய்
9.  காப்ரியல் கார்சியா மார்க்வேஸ் – ஒரு நூற்றாண்டுத் தனிமை
10. வால்டயர் – கேண்டிட்
11. டானியல் டீபோ – ரொபின்சன் குரூசோ
12. டால்ஸ்டாய் – அன்னா கரினினா
13. ஹேர்மன் மெல்வில் – மோபி டிக்
14. ஜேர்சி கொசின்ஸ்கி- Being There
15. எஸ்.கே.பொற்றேகாட் – ஒரு கிராமத்தின் கதை
16. தத்தயேவ்ஸ்கி – க்ரமசாவ் சகோதரர்கள்
17. ஜெயகாந்தன் -ஒரு வீடு! ஒரு மனிதன்! ஒரு உலகம்!
18 ஜெயமோகன் -விஷ்ணுபுரம்
19 கு.அழகிரிசாமி  – தீராத விளையாட்டு
20 அ.ந.கந்தசாமி – மனக்கண்
21. கோகுலம் சுப்பையா – தூரத்துப் பச்சை
22. தகழி சிவசங்கரம்பிள்ளை – ஏணிப்படிகள்
23. கல்கி – பொன்னியின் செல்வன்
24. டால்ஸ்டாய் – போரும் அமைதியும்.
25. எமிலி சோலா – நாநா
26. எமிலி சோலா – The Earth

பட்டியல் தொடரும்.


எழுத்தாளரும், வயதும், சிறந்த படைப்பும், ஜெயமோகனும்!

வாசிப்பும், யோசிப்பும் : மேலும் சில முகநூற் குறிப்புகள்!அண்மையில் ”தி இந்து’ இணையத்தளத்தில் வெளியான நேர்காணலில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர்கள் ‘உலகத்தின் சிறந்த படைப்புகளை ஐம்பது வயதுக்குள்தான் எழுதியிருக்கிறார்கள்’ என்று அடித்துக்  கூறியிருக்கின்றார். எழுத்தாளர் ஒருவரின் வயது அதிகரிக்க அதிகரிக்க அவரது படைப்புத்திறனும், சிந்தனைத் தெளிவும் அதிகரிக்கும் என்றுதான் நான் நினைக்கின்றேன்.

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களிலொருவரான டால்ஸ்டாய் எழுதிய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘புத்துயிர்ப்பு’ அதனை அவர் எழுதியபோது அவரது வயது 71. தகழி சிவசங்கரப்பிள்ளையின் மிக முக்கிய படைப்புகளில் ஒன்றான ‘கயிறு’ எழுதியபோது அவரது வயது 78 என்று நினைக்கின்றேன். ராபின்சன் குரூசோ எழுதிய Daniel Defoe எழுதிய நாவல்கள் அனைத்துமே 59 வயதுக்குப் பின்னர் எழுதியவைதாம். ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ் பெற்ற படைப்பான ‘கடலும் கிழவனும்’ எனக்கு மிகவும் பிடித்த அவரது படைப்பு. அதனை எழுதியபோது அவரது வயது 52. எனக்குப் பிடித்த இன்னுமொரு நாவலாசிரியரான தத்தயேவ்ஸ்கியின் மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படும் ‘க்ரமசாவ் சகோதரர்கள்’ நாவலை அவர் எழுதியபோது அவருக்கு வயது 59. வைக்கம் முகம்மது பஷீரின் சிறந்த படைப்புகளான ‘மதிலுகள்’, பால்ய காலத்து சகி’ போன்றவை எழுதியபோது அவருக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டிருந்தது.

‘உலகத்தின் சிறந்த படைப்புகளை ஐம்பது வயதுக்குள்தான் எழுதியிருக்கிறார்கள்’ என்று அறுதியிட்டுக் கூறாமல் ‘உலகத்தின் சிறந்த படைப்புகள் பலவற்றை ஐம்பது வயதுக்குள்தான் எழுதியிருக்கிறார்கள் என்று ஜெயமோகன் கூறியிருக்கலாமென்று எனக்குப்படுகிறது.

ngiri2704@rogers.com