இனிய நண்பர் செல்வா கனகநாயகம்

பேராசிரியர் செல்வா கனகநாயகம் குரு அரவிந்தன் இனிய நண்பர் பேராசிரியர் செல்வா கனகநாயகத்தின் திடீர் மறைவு இலக்கிய உலகிற்கு ஒரு பேரதிர்ச்சியைத் தரும் செய்தியாகும். இலங்கைத் தமிழறிஞர் பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் மகனான இவர், தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக மட்டுமல்ல, சிறந்த ஆங்கில அறிவு கொண்டவராகவும் இருந்ததால் ஈழத் தமிழர்களின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வதில் கனடாவில் முன்னோடியாக இருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிய நண்பரான இவரது அறிமுகம் கனடாவில்தான் எனக்கு முதலில் கிடைத்தது. கனடிய இலக்கிய மேடைகளில் அவரது சொற்பொழிவைக் கேட்டு வியந்திருக்கின்றேன். தொடக்க காலத்தில் ஆங்கில மொழியில் உரையாற்றிக் கொண்டிருந்தவர், காலத்தின் தேவை அறிந்து பின்னாளில் மேடைகளில் தமிழில் உரையாற்றத் தொடங்கியிருந்தார்.  எனக்கு அவர் அறிமுகமானபின் அவ்வப்போது அவரது உரைகளைக் கேட்டு அவரைப் பாராட்டியிருக்கின்றேன். எனக்கு அவர் அறிமுகமானது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம்தான். அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் தனது நூல் ஒன்றிற்கு ஆய்வுரை செய்யும்படி பேராசிரியர் செல்லவா கனகநாயகத்தைக் கேட்டிருந்தது மட்டுமல்ல அந்த நூலை அவரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பையும் என்னிடம் தந்திருந்தார். எனது வீட்டிற்கு அருகாமையில் அவரது வீடும் இருந்ததால், அதிபர் என்னிடம் இந்தப் பொறுபப்பை ஒப்படைத்திருந்தார். எனவே பேராசிரியரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன். மறுநாள் மாலை நேரம் 7:00 மணியளவில் தனது வீட்டிற்கு வரும்படி சொல்லியிருந்தார்.

குறிப்பிட்ட நேரத்திற்கு நான் புத்தகத்துடன் சென்ற போது அவர் என்னை வரவேற்று, என்னைப் பற்றிய பல விபரங்களை அறிந்து கொண்டார். அவரது மனைவியார் தேனீர், சிற்றுண்டி கொடுத்து உபசரித்தார். வேலையால் வந்த களைப்பாக இருந்தாலும் இலக்கியம் என்றதும் இருவரும் பல விடையங்கள் பற்றியும் உரையாடினோம். தமிழகத்தில் எனக்குக் கிடைத்த இலக்கிய விருதுகள், பரிசுகள் பற்றியும், தமிழ் சிறுவர் இலக்கியத்தில் எனக்கிருந்த ஆர்வம் பற்றியும் தான் அறிந்திருந்ததாகவும், இன்றுதான் நேரடியாக என்னைச் சந்திக்க முடிந்தது என்றும் சொல்லிப் பாராட்டினார். அதுமட்டுமல்ல, தனது மனைவியாருக்கும் என்னை அறிமுகப் படுத்தி வைத்தார். ஈழத் தமிழரின் பல நூல்களைத் தொகுத்து வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அப்போது குறிப்பிட்டார். காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப சிறந்த மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கவில்லை என்பதை அவரோடு உரையாடும் போது புரிந்து கொண்டேன். விரைவில் வெளிவர இருக்கும் எனது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிற்கு அணிந்துரை எழுதித்தரவும் அவர் அப்போது சம்மதித்தார். ஆனால் எனது பக்கத்தில் நான் காலம் தாழ்த்தியதால் அது கைகூடவில்லை. இனியும் கைகூடப்போவதுமில்லை.

பேராசிரியர் செல்வா கனகநாயகம் இலங்கையில் உள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டமும் பெற்றவராவார். ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகக் கடமையாற்றினார். இந்திய, தென்கிழக்காசிய இலக்கியம் பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள் இலக்கிய ஆர்வலர் பலரது கவனத்தையும் கவர்ந்ததாக இருந்தது. அதுமட்டுமல்ல, ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் தமிழியல் மகாநாடுகளைக் கடந்த ஒன்பது வருடங்களாகத் தொடர்ந்து நடத்திவந்த பெருமை இவரையே சாரும். ரொறன்ரோவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தை நிறுவியவர்களில் செல்வா கனகநாயகம் முக்கியமானவர். இலை மறை காயாக இருந்த பல ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டு ஈழத்தமிழருக்குப் பெருமை சேர்த்தார்.

சென்ற நவம்பர் மாதம் 23 ஆம் திகதி (23-11-2014) அன்று மொன்றியலில் நடந்த ரோயல் கழகத்தின் விருது வழங்கும் வைபவத்தில் கலந்து விட்டுத் திரும்பும் வழியில் அறுபத்தி இரண்டு வயதேயான இவர் திடீர் மாரடைப்பினால் காலமானார். கனடாவின் இன்றைய சூழலில் பேராசிரியரின் மரணம் கனடியத் தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். இச்சந்தர்ப்பத்தில், அவரது குடும்பத்தினருடன் துயரத்தைப் பகிர்ந்து கொண்டு, அவரது ஆத்மா சாந்தி அடைய நாங்களும் இறைவனைப் பிரார்திக்கிறோம்.

kuruaravinthan@hotmail.com