அறம் வெல்லுமோ இல்லையோ என்று கவலைப்படுவதற்குப் பதில் நடந்து முடிந்தவற்றிலிருந்து பாடங்களைப் படிப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். இவ்வளவு மனித உரிமை மீறல்களைப் புரிந்த இலங்கை அரசு ஏன் வென்றது? என்பதைச் சிந்திக்க வேண்டும். அவர்களிடம் ஆட்சி அதிகாரமிருந்தது. சர்வதேச, பிராந்திய அரசியலைத் தமக்குச் சார்பாகத் தந்திரமாகக் கையாண்டார்கள். நாம் எமக்குள் முட்டி மோதிக்கொண்டோம். தமிழ் அமைப்புகள் மத்தியில் ஏற்பட்ட மோதல்கள், பிளவுகள்தாம் ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமென்று நினைக்கின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சியோ, சிறீலங்கா சுதந்திரக் கட்சியோ இரண்டு கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் வேறானவையாக இருந்த போதிலும், ஆட்சிக் கட்டிலிருக்கும்போது அக்கட்சியினர் தமிழர்களுக்கெதிரான அரசியற் செயற்பாடுகளில் ஒன்றாகவே இருந்தார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சியிலிருந்த போதும், சிறீலங்கா கட்சியினர் ஆட்சியிலிருந்த போதும் தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன். சிங்களம் ஆட்சி மொழியாகி தமிழர்கள் மேல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரின் காலத்திலென்றால், ஐக்கிய தேசியக் கட்சியினரின் காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, யாழ் நூலகம் எரிக்கப்பட்டு, 83 இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டு வன்முறைகள் தமிழர்கள் மேல் பிரயோகிக்கப்பட்டன, இருவர் ஆட்சியிலும் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றன.
தனி ஈழ விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட தமிழர்கள் தமக்குள் முரண்பட்டு முட்டி மோதிக்கொண்டிருந்தபோது, தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இலங்கை ஒரு பெளத்த நாடு, பிரிபட முடியாத பெளத்த நாடு என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்கள். அவர்கள் தமக்குள் அரசியல்ரீதியாக முட்டி மோதிக்கொண்டாலும், இந்த விடயத்தில் ஒற்றுமையாக, உறுதியாக இருந்தார்கள். அதற்கேற்ற வகையில் காய்களை நகர்த்தினார்கள். அதனால்தான் பலமற்ற தமிழ் அமைப்புகளைக் கூட அவர்கள் ஒதுக்கித்தள்ளவில்லை, தம் நலன்களுக்குச் சார்பாக அவற்றைக் கையாண்டார்கள். சமயம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் அமைப்புகளைப் பிரிப்பதில், உடைப்பதில் அவர்கள் கண்ணாயிருந்தார்கள். சர்வதேச , உபகண்ட அரசியலுக்குள் சிக்கிய ஈழத்தமிழர் பிரச்சினையில் , தமிழர்களுக்கென்றொரு நாடில்லாத நிலை அவர்களுக்கு ஒரு பலவீனமாகவும், சிங்கள மக்களுக்கு அரசியல் அதிகாரம் மிக்க நாடொன்றிருந்தது அவர்களுக்குப் பலமானதாகவுமிருந்தது.
1987 இலங்கை / இந்திய ஒப்பந்தக் காலகட்டத்தை ஈழத்தமிழர்கள் தவறாகக் கையாண்டுவிட்டார்களென்றே எனக்குப் படுகிறது. அந்த ஒப்பந்தம் நிச்சயம் இந்திய அரசின் நலன்களுக்குச் சார்பானதாகத்தானிருந்தது. அப்படித்தானிருக்கும். ஆச்சரியமானதொன்றல்ல. அவர்களிடமிருந்து பெற்ற ஆயுதங்களும், ஆதரவும்தாம் மிகவும் குறுகிய காலகட்டத்தில் தமிழ் அமைப்புகளை வளர வைத்தன என்பதை மறுக்க முடியாது. அந்த ஒப்பந்தத்தை ஈழத்தமிழர்களாகிய நாம் தவறாகக் கையாண்ட அதே சமயம் , இலங்கை அரசோ தமக்குச் சார்பாகக் கையாண்டு வெற்றியும் பெற்றது. இலங்கையிலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்றுவது இலங்கை அரசுக்கு மிகவும் முக்கியமானவிருந்தது. அதனை அக்காலகட்டத்தில் உருவாகியிருந்த இந்திய அரசுக்கும், ஈழத்தமிழர்களுக்குமிடையிலான முரண்பாடுகளை இலங்கை அரசு நன்றாகவே பயன்படுத்திக்கொண்டது.
பின்னர் ரணிலின் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சியில் நோர்வேயின் ஆதரவுடன் அமுல்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தக் காலகட்டத்தில் கூட இலங்கை அரசு விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவதிலும், அதனை உடைப்பதிலுமே கருத்தைச் செலுத்தியிருந்தது. அதிலவர்கள் வெற்றியும் அடைந்தார்களென்றே கூற வேண்டும். ஏனென்றால் ஆரம்பத்தில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசியற் செயற்பாடுகள் புரியலாம் என்று அனுமதித்த இலங்கை அரசு, விடுதலைப் புலிகளின் அவ்வாறான அரசியல் செயற்பாடுகளை விரைவிலேயே செயற்பட முடியாது தடுத்து, அவர்களுக்கு ஆதரவளித்தவர்களின்மேல் வன்முறையினைக் கட்டவிழ்த்து விட்டது. அத்துடன் விடுதலைப் புலிகளை ஓரிடத்தில் முடக்குவதிலும் வெற்றி கண்டது. எண்பதுகளில் இருந்தது போல், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் மக்களோடு மக்களாக மறைந்து போராடுவது முடியாமற் போனது. விடுதலைப் புலிகள் அவர்களது பகுதிகளிலும், ஏனைய அமைப்புகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இயங்கியதால், ஒருவரது பகுதியில் மற்றவர் இயங்குவது முன்புபோல் முடியாததாகவிருந்தது. தமிழ் அமைப்புகள் மத்தியில் அரசியல்ரீதியில் பலமான ஒற்றுமை இருந்திருக்கும்பட்சத்தில், இந்த நிலை ஏற்பட்டிருக்க முடியாது.
இன்று ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டிருக்கின்றது. அரசியல்ரீதியாகப் போராட்டம் உறுதியாக முன்னெடுக்கப்படுவதற்கு, இதுவரை காலமும் நிகழ்ந்த ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பக்கச்சார்பற்று ஆராயப்படுவதும், நடந்த தவறுகள் இனங்காணப்படுவதும் அவசியம். எவ்விதம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தம் நலனகளைப் பொறுத்தவரையில் மிகவும் உறுதியாக இருக்கின்றார்களோ அவ்வாறே தமிழ் அரசியல் அமைப்புகளும் தமிழர் நலன்கள் விடயத்தில் ஒத்த கருத்தைக்கொண்டவையாக விளங்க வேண்டும். அதற்கு நடந்த முடிந்தவற்றிலிருந்து பாடம் படிக்க வேண்டும். அதிலிருந்து தெளிவு பெற வேண்டும். ஆனால் இன்னும் அதற்கான சூழல் தென்படவில்லை. இன்னும் அமைப்புகளை முன்னிலைப்படுத்தித்தான் அரசியற்செயற்பாடுகள், ஒற்றுமையற்ற நிலையில், முன்னெடுக்கப்படுகின்றன.
எதிர்காலத்தில் தமிழர்கள் தம் நலன்கள சார்ந்த விடயத்தில் ஒற்றுமையாக, உறுதியாக அரசியற் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முதற்படியாக , இதுவரை காலமும் தமிழர் விடுதலைப் போராட்டத்தில், உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள், மாற்றுக்கருத்துகள் காரணமாகத் தம்முயிரை இழந்த மானுட உரிமைப் போராளிகள் , பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் மலையகத்தமிழ் மக்கள் அனைவரையும் நினைவு கூரும் மாதமாகக் கார்த்திகை மாதத்தினை வைத்து, நினைவு கூரலாம். அவ்விதம் செய்தால் , எதிர்காலத்தில் தமிழர்கள் அரசியல்ரீதியில் உறுதியாக விளங்குவார்களென்று எனக்குத்தென்படுகிறது. ஆனால் இதுகூட அவ்வளவு சுலபமானதல்ல.
பல்வேறு பிராந்திய, உள்நாட்டு, மற்றும் சர்வதேசச்சக்திகள் இவ்விதமான ஒற்றுமைக்கெதிராகத் தமது நலன்களுக்கேற்றவகையில் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விடத்தான் செய்வார்கள். தொலைநோக்கில் அவற்றை எதிர்கொண்டு அரசியல்ரீதியில் ஒற்றுமையாகத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதொன்றே சரியான வழியாகதென்படுகின்றது. இவ்விதம் போராடும்போது தென்னிலங்கையிலுள்ள முற்போக்குச் சக்திகளையும் அரவணைத்துச் செல்வதும் முக்கியமானது.