அண்மையில் ‘வல்லினம்’ இணையத்தளத்தில் கருணாகரனின் ‘ இலங்கையின் தமிழ் இலக்கியம்’ என்ற கட்டுரையினை வாசித்தேன். கட்டுரையின் ஓரிடத்தில் கட்டுரையாளர் ‘மணிக்கொடியில் புதுமைப்பித்தனைப்போல மறுமலர்ச்சியில் அ.செ.மு இருந்தார். புதுமைப்பித்தன் எழுத்தின் உச்சத்தைத் தொட்டார். அ.செ.மு பத்திரிகையாளராகவே தன்னை நிறுத்திக்கொண்டார். இதனால் தன்னை முழுமையாக இலக்கிய எழுத்தில் ஈடுபடுத்திக்கொள்வதற்கே அ.செ..முவினால் முடியாமற் போய்விட்டது. மறுமலர்ச்சி முக்கியமான பல படைப்பாளிகளை உருவாக்கியது’ என்று குறிப்பிடுவது ஆச்சரியத்தைத்தருகின்றது. அக்கூற்று அ.செ.மு பற்றிய போதிய ஆய்வின்றி கூறப்பட்ட கூற்றாகவே எனக்குத்தென்படுகின்றது.
அ.செ.மு புனைகதையில் சாதனை புரிந்தவர். அவரது சிறுகதைகள் முக்கியமானவை. அவரது படைப்புகள் பல இன்னும் நூலுருப்பெறவில்லையென்பதற்காக அவரது பங்களிப்பை மறந்துவிடவோ அல்லது மறைத்து விடவோ முடியாது. ஒரு படைப்பாளியின் படைப்புகளின் எண்ணிகையை மட்டும் வைத்து அவரது சாதனையையோ அல்லது பங்களிப்பினையோ மதிப்பிடுவதில்லை. அ.செ.மு பத்திரிகையாளராக இருந்த அதே சமயம் ஈழத்தமிழ் இலக்கியத்தின் புனைகதைத்துறையிலும் காத்திரமாகக் கால் பதித்தவர். அவரது சிறுகதைத்தொகுதியான ‘மனித மாடு’ (யாழ் இலக்கியக் கலாச்சாரபேரவையினால் வெளியிடப்பட்டது) நூலுக்கு விடுதலைப்புலிகளின் கலைப்பண்பாட்டுக்கழகத்தினர் பணமுடிப்பு வழங்கிக்கெளரவித்ததாக அவர்கள் வெளியிட்ட எரிமலை சஞ்சிகையில் வாசித்திருக்கின்றேன்.
அ.செ.மு.வின் காத்திரமான இலக்கியப்பங்களிப்பை அந்நூலுக்கு முகவுரைகள் எழுதியவர்களான பேராசிரியர் சு.வித்தியானந்தன் மற்றும் எழுத்தாளர் சொக்கன் ஆகியோரின் கட்டுரைகள் பறைசாற்றி நிற்கின்றன. தனது பதிப்புரையில் சிற்பி சரவணபவன் அவர்கள் ‘தமது இலக்கிய சிருஷ்டிகள் மூலம் ஈழத்தின் புகழை ஓங்கச்செய்த அ.செ.மு’ என்பார். இவர்களது கட்டுரைகள் அ.செ.மு பாவித்த புனைபெயர்கள், எழுதிய பத்திரிகை மற்றும் சஞ்சிகைகள் ஆகியவை பற்றிய தகவல்களை அறியத்தருகின்றன. மேலும் நூறு சிறுகதைகள் வரையில் அ.செ.மு. எழுதியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 24 சிறுகதைகள் மட்டுமே ‘மனித மாடு’ தொகுதியில் உள்ளடங்கியுள்ளன.
நூலில் எழுத்தாளர் சொக்கன் எழுதிய ‘சிந்தனைச்செல்வர் அ.செ.முருனானந்தன் வாழ்வும் பணியும்’ அ.செ.மு.வின் படைப்புகள் பற்றிய விபரங்களைத்தருகின்றது. அவை வருமாறு:
“அ.செ.மு.வின் படைப்புகள்:
முழுநாவல் – 1
கட்டுரை – 100
மொழிபெயர்ப்பு – 5
சிறுகதைகள் – 100
இலக்கிய நாடகம் – 10
குறுநாவல் – 1 (புகையில் தெரிந்த முகம்)
வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் – 10ட்நடத்திய பத்திரிகைகள் – 2
கடமையாற்றிய பத்திரிகைகள் – ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு
பாவித்த புனைபெயர்கள்: பீஷ்மன், யாழ்ப்பாடி, யாழ்தேவி, முருகு, நீலாம்பரி, காங்கேயன், கதிரவன், மயிற்புறவம், சோபனா, இளவேனில், பூராடன், தனுசு, மேகலை, கத்தரிக்குறளி, போர்வீரன், வள்ளிதாசன்“
இக்கட்டுரையில் சொக்கன் அவர்கள் மேலும் கூறுவார்: “இவற்றை அடிப்படையாகக்கொண்டு அ.செ.மு அவர்களை மதிப்பீடு செய்தால், அவர் கட்டுரையாசிரியர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாளர், நாவலாசிரியர், வானொலிக்கலைஞர், நாடகாசிரியர் என்ற பல முகங்களோடு உலா வந்தவர் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.:
தன் காலத்துப் பரிச்சயமான எழுத்தாளர்களின் பெயர்களையெல்லாம் குறிப்பிடுவதில் மிகுந்த தாராள மனப்பான்மையினக் காட்டும் கருணாகரன் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த முக்கியமான விடயங்களை, படைப்பாளிகளை மறந்தது கட்டுரைக்குச் சிறப்பளிக்கவில்லையே.
சுதந்திரன் பத்திரிகையின் ஆரம்ப காலகட்டத்தில் அ..ந.கந்தசாமி, அ.செ.மு எனப்படைப்பாளிகள் பலர் மிகுந்த பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சுதந்திரனின் ஆசிரிய பீடத்தை அலங்கரித்தவரான அ.ந.க.வின் பல படைப்புகள் (கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நாவல், கவிதைகள், சிறுகதைகள், பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் எழுதிய கட்டுரைகள்) வெளியாகியுள்ளன. ‘1940களின் இறுதியில் சுதந்திரன் பத்திரிகை இலக்கிய ரீதியாகப் பலருக்குக் களம் கொடுத்தது. டொமினிக் ஜீவா, டானியல் போன்ற முக்கியமான இடதுசாரிப் படைப்பாளிகளே அந்த நாட்களில் சுதந்திரனில் எழுதியிருக்கிறார்கள்’ என்று கட்டுரையில் குறிப்பிடும் கருணாகரன் இவர்களை விட மிகவும் அதிகமாக எழுதிப்பங்களிப்பு செய்தவர்களிலொருவரான அ.ந.க.வின் பெயரை மறந்து விட்டார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றிய தகவல்கள் மற்றும் அதன் பங்களிப்பு பற்றி எதனையும் காணவில்லை. (சில விடயங்கள் பொதுவாகக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அதே சமயம் மிகவும் சாதாரணமானவை முக்கியத்துவத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளன.)
மேலும் ஓரிடத்தில் ‘கவிதையில் மஹாகவி, நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், சு.வே, முருகையன், தா. இராமலிங்கம் எனப் பல ஆளுமைகள் மேலெழுந்தனர். நாவல் இலக்கியத்தில் டானியல், செ.கணேசலிங்கன் போன்றவர்கள் இயங்கினர். சிறுகதையில் டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, நீர்வை பொன்னையன், நந்தி, என். கே. ரகுநாதன், பவானி ஆழ்வார்ப்பிள்ளை எனப் பலர் எழுதினர்.’ என்று குறிப்பிடுகின்றார். இவரது கண்களுக்கு ஈழத்துக்கவிதைத்துறையில் காத்திரமான பங்களிப்பைச் செய்த கவீந்திரன் (அ.ந.க) எழுதிய கவிதைகள் தென்படவில்லை என்பதைக் கட்டுரை வெளிப்படுத்துகிறது. அ.ந.க.வின் ‘எதிர்காலச்சித்தன்’, ‘துறவியும் குஷ்ட்டரோகியும்’, ‘வில்லூன்றி மயானம்’, ‘சிந்தனையும், மின்னொளியும்’, ‘கைதி’ போன்ற கவிதைகள் முக்கியமானவை. இவற்றையெல்லாம் எவ்விதம் கருணாகரன் தவறவிட்டார்? ஈழத்துச்சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், நாடகம் எனப்பல்துறைகளிலும் அ.ந.க.வை மறைத்துவிட முடியாது. கருணாகரன் எவ்விதம் மறந்தார். ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி வெளியான தரமான ஆய்வு நூல்களிலெல்லாம் அ.ந.க.வின் பல்துறைப்பங்களிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈழத்துத்தமிழ் இலக்கியம் என்று கட்டுரைக்குத்தலைப்பு வைத்துவிட்டு, முக்கியமான படைப்பாளிகளின் பங்களிப்புகளையெல்லாம் மறைத்துவிட்டு, தனது காலகட்டத்துப்படைப்பாளிகளின் பெயர்களையெல்லாம் மறக்காமல் குறிப்பிடுவது தற்போது ஒரு நாகரிகமாகவே வளர்ந்து வருகின்றதோ என்று ஐயுறுகின்றேன். இவரைப்போல் வேறும் பலரின் கட்டுரைகளிலும் இவை போன்ற தவறுகளைக் கண்டிருக்கின்றேன். இதற்கு முக்கிய காரணம் கூறப்படும் விடயம் பற்றிய போதிய ஆய்வுகளற்ற நிலையில் இவ்விதமான கட்டுரைகளை எழுத முற்படுவதுதான். என்று எண்ணுகின்றேன்.
இவ்விதமான கட்டுரைகள் செய்யும் மிகப்பெரிய தவறு என்று நான் கருதுவது ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த பங்களிப்பினைச் செய்த படைப்பாளிகளையெல்லாம் மறைத்துவிட்டு அல்லது பொதுவாக அவர்களைப் பற்றி ஓரிரு வரிகள் கூறுவதுடன் நின்றுவிடும் அதே சமயம் மிகவும் சாதாரணப்பங்களிப்பு செய்த பலரின் பெயர்களைக்குறிப்பிடுவதில் மட்டும் தாராளமனப்பான்மையினைக் காட்டுவது. இவ்விதமான கட்டுரையொன்றினை வாசிப்பவர் மனதில் அத்தகையவர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் , தமிழ் இலக்கியத்துக்காகத்தம்மை அர்ப்பணித்து வாழ்ந்தவர்களுக்கு, அவர்களது படைப்புகளுக்குக் கிடைப்பதில்லை.
ஒரு முக்கியமான குறிப்பிடவேண்டிய விடயமென்னவென்றால் கருணாகரன் முன்பு ‘புல்வெளி’ வலைப்பதிவில் அ.செ.மு பற்றி விரிவானதொரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரை ‘பதிவுகள்’ இணைய இதழிலும் மீள்பிரசுரமானது. அதிலவர் அ.செ.மு பற்றிக்குறிப்பிடும்போது ‘ஆனால் அ.செ.மு ஊடகவியலாளராக தொழில் செய்திருந்தாலும் அவர் அடிப்படையில் ஒரு படைப்பாளியாகவே இருந்திருக்கிறார். அவருடைய விருப்பமும் கவனமும் எழுத்துத்தான். அதற்காகவே அவர் ஊடகங்களைச் சார்ந்திருந்தார். அவை போதாதபோது வேறு இதழ்களையும் பத்திரிகையையும் வெளியிட்டார்.’ என்று குறிப்பிடுவார். அப்பொழுது அ.செ.மு அடிப்படையில் ஒரு படைப்பாளியாக இருந்திருக்கின்றார் என்று குறிப்பிடும் கருணாகரன் இன்று ‘வல்லினம்’ கட்டுரையில் ‘அ.செ.மு பத்திரிகையாளராகவே தன்னை நிறுத்திக்கொண்டார்.’ என்று குறிப்பிடுகின்றார்.
அன்று அக்கட்டுரையில் ‘அ.செ.மு வின் சிறுகதைகளில் புதுமைப்பித்தனின் தொடர்ச்சியையே நாம் அவதானிக்கலாம். அவர் புதுமைப்பித்தனின் தொடரியே. அதிகம் அறியப்பட்ட அவருடைய சிறுகதையான மாடு சிரித்தது புதுமைப்பித்தனின் தொடரியாக அ.செ.மு இயங்கினார் என்பதற்கு நல்ல ஆதாரம். புதுமைப்பித்தனில் தொனிக்கும் கிண்டலும் கேலியும் கலந்த அங்கதம் அ.செ.முவிடமும் தொனிக்கிறது.’ என்று குறிப்பிடும் கருணாகரன் இன்று வல்லினம் கட்டுரையில் ‘புதுமைப்பித்தனைப்போல மறுமலர்ச்சியில் அ.செ.மு இருந்தார். புதுமைப்பித்தன் எழுத்தின் உச்சத்தைத் தொட்டார். அ.செ.மு பத்திரிகையாளராகவே தன்னை நிறுத்திக்கொண்டார்.’ என்று குறிப்பிடுகின்றார். ஏன?