எழுத்தாளர் காஸே மொட்ஸிசி:
கரோபோ மோசெஸ் மொட்ஸிசி (Karobo Moses Motsisi ) என்ற இயற்பெயரைக் கொண்ட காஸே மொட்ஸிசி தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். 1932 ஆம் ஆண்டு, ஜோஹன்னர்ஸ்பர்கில் பிறந்த இவர், அங்கேயே கல்வி கற்று பின்னர் சிறிது காலம் தென்னாபிரிக்காவின் கௌதெங்க் மாகாணத்திலுள்ள ப்ரிடோரியா எனும் நகரத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். அத்தோடு ‘ட்ரம் (Drum) இதழில் ஊடகவியலாளராகப் பணியாற்றியதோடு ட்ரம் (Drum), த கிளாசிக் (The Classic), த வேர்ல்ட் (The World) ஆகிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார். 1977 ஆம் ஆண்டு, தனது 45 ஆவது வயதில் காலமான இவரது படைப்புக்களையெல்லாம் ஒன்று சேர்த்து ‘ராவன்’ பதிப்பகமானது, 1978 ஆம் ஆண்டு ‘காஸே & கோ (Casey & Co)’ எனும் முழுத் தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
களவாக மதுபானக் கடையொன்றை நடத்தி வந்த எஸ்தர் ஒரு விபச்சாரியாகவும் இருந்தாள். அவளது மகன் போய்-போய் இடது காலில் ஒரு குறையுடனே பிறந்திருந்தான். ஆயினும் கூட, பத்து வயதாகும்போதே தனது வாழ்க்கையைக் கொண்டு செல்ல போய்-போய் பணம் உழைக்க ஆரம்பித்திருந்தான். அவன், நகரத்தில் பத்திரிகை விற்பதில் ஈடுபட்டிருந்தான். தேனீயைப் போல பணத்தை சேமித்து ஒளித்து வைத்திருந்த அவனுக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு நீளக் காற்சட்டையும், காற்றுப் புகாத பல வர்ண ஆடைகளையும் வாங்கிக் கொள்ள முடிந்தது. நீண்ட காற்சட்டையும், பல வர்ணங்களிலான மேற்சட்டையும் உடுத்து, ஊன்றுகோலின் துணையுடன் நடமாடும் அவனுக்கு, தான் ஒரு வளர்ந்த மனிதனாகியிருப்பது போன்ற உணர்வு தோன்றியது.
எஸ்தர் தனது புதல்வன் குறித்து பெருமைப்பட்டாள். தனது ஒன்பது வயதில் போய்-போய் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்திவிட்ட போதிலும் அவள் அதற்காகக் கவலைப்படவில்லை. ஏனெனில், அறிவைத் தேடிச் செல்லாமலேயே தனது மகனுக்கு வெற்றிகரமான வாழ்க்கையொன்றைக் கொண்டுசெல்ல முடியுமென அவள் நம்பினாள்.
காலம் செல்லச் செல்ல போய்-போய் மூளை குழம்பிப்போன ஒருவனின் நிலைக்கு ஆளானான். தனது மகன் குறித்து எஸ்தருக்குள் இருந்த பெருமையெல்லாம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அவள் தனது மகனைக் குறித்து சந்தேகப்பட ஆரம்பித்தாள்.
“மாஸேலோ, என்னோட பையன் மூடத்தனமான கேள்விகள் நிறையக் கேட்டுக் கேட்டு என்னைத் தொந்தரவு பண்றான். அவனோட தலைக்குள்ள என்ன புகுந்திருக்குன்னு எனக்குப் புரியல”
எஸ்தர் தனது அயல்வாசிப் பெண்ணொருத்தியிடம் கூறினாள். எஸ்தர் மிகவும் கவலைக்குள்ளாகியிருப்பதை அறிந்த மாஸேலோ அவளைத் தேற்ற முயற்சித்தாள்.
“இந்த வயசுல எல்லாப் பசங்களுமே இப்படித்தான். போய்-போய் பற்றி சொல்ல இருப்பதுவும் அவ்வளவுதான். என்னுடைய பசங்களைப் பற்றி சொல்ல இருப்பதும் அவ்வளவுதான்” என அவள் மிருதுவாகக் கூறினாள்.
“அம்மா”
“சொல்லு போய்-போய்?”
“அம்மாவுக்குத் தெரியுமா? ஜோஹன்னர்ஸ்பர்க் ஸ்டேஷனிலிருக்குற படிக்கட்டுக்கள் ஓடுமாம்.”
“ஆமாம். அது ‘Escavator – அசையும் படிக்கட்டுக்கள்’ என்று அழைக்கப்படுது.”
என எஸ்தர் விளக்கினாள். அவளைச் சந்திக்க வரும் அநேகமான வாடிக்கையாளர்கள் அவளுக்கு அந்தச் சொல்லை சொல்லிக் கொடுத்திருந்தனர். சிலவேளை அந்தச் சொல்லை சொல்லிக் கொடுத்தது மெற்றிக் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும், மார்பில் மயிரடர்ந்த இள வயது மாணவனாக இருக்கலாம் என ஞாபகங்களைக் குடைந்தபடி யோசித்தாள்.
“கீழே போகும் படிக்கட்டுகளும் தனியாக உள்ளது”
“ஆனா, நான் முன்னாடி சொன்ன படிக்கட்டுகள் எப்பவும் மேலேயே போகுதாம். எனக்கு மேலே போற படிக்கட்டில் ஏறி கீழே போக முடியாதா?”
“எனக்குத் தெரியல”
“அம்மா முயற்சித்துப் பார்த்திருக்கியா?”
“எனக்குத் தெரியாது. வாயை மூடிட்டிரு”
“நான் முயற்சித்துப் பார்க்கப் போறேன்”
போய்-போய் மேலே செல்லும் படிக்கட்டு நெடுகவும் கீழே இறங்க முயற்சித்ததோடு அது செய்யக் கூடிய ஒரு வேலைதானென அறிந்துகொண்டதில் அதிக பூரிப்புக்குள்ளானான். ஒரு புறம் மாத்திரமே வாகனங்கள் செல்லவேண்டிய பாதையில் வெற்றிகரமாக எதிர்ப்புறத்தில் வாகனத்தை ஓட்டிய சாரதிக்கு ஏற்படும் உற்சாகம் போய்போய்க்குள்ளும் ஏற்பட்டது.
“அம்மா, எங்களுக்கு போலிஸ்காரன்கள் எதுக்கு?”
“எங்களுக்கு போலிஸ்காரன்கள் மட்டுமில்ல. போலிஸ்காரிகளும் இருக்கிறாங்க”
எஸ்தர் தனது மகனின் அடுத்த கேள்வியை எதிர்பார்த்தபடி கூறினாள்.
“எங்களுக்கு அவங்க எல்லாம் எதுக்கு?”
“மனுஷங்களக் கைது செய்ய”
“நான் போலிஸ்காரனாகப் போறேன்”
போய்-போய் கைவிலங்குச் சோடியொன்றையும் போலிஸ் ஊதியொன்றையும் கண்டெடுத்தான். அவற்றை எங்கு, யாரிடமிருந்து பெற்றுக் கொண்டானென்பது பரம ரகசியமாக இருந்தது. போலிஸ் ஊதியை ஊதுவதன் மூலம் போய்போய் எவ்வளவு திருப்தியடைந்தான்?! அவ்வாறே அந்த ஓசையைக் கேட்டு எஸ்தர் எவ்வளவு திகிலடைந்தாள்?!
“நான் போலிஸ்காரன். குசினியில் கள்ளச்சாராயம் குடிக்கிற மனுஷங்களை நான் கைது செய்யப் போறேன்”
போய்-போய் தனது கண்களிலிருந்து கடமையின் ஒளியைச் சிந்தியவாறு எஸ்தரிடம் கூறினான்.
“நான் உங்களைக் கைது செய்றேன்”
தனது பாத்திரத்தில் மதுபானத்தை அருந்தியபடி, நரைத்த தலையுடனிருந்த ஒருவரிடம் சென்ற போய்போய் கூறினான்.
“சரி. கைது செய்”
பையனுக்கு மகிழ்ச்சி தரும் எண்ணத்தில் வயதான அம் மனிதர் கூறினார். அத்தோடு தனது இரு கரங்களையும் நீட்டினார். கை விலங்குகளேறின.
அதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்குப் பிறகும் கை விலங்குகளை அகற்றுமாறு போய்-போயிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தலை நரைத்த மனிதரைக் காணக் கூடியதாக இருந்தது. முதல்தடவையே போய்போய் அதற்கு ஐந்து சிலிங் காசுகள் கேட்டிருந்தான். இப்பொழுது திரும்பவும் அதையே கேட்டான். தலை நரைத்த மனிதர் கோபத்துக்குள்ளானார்.
“நீ இதைக் கழற்றலன்னா நான் உனக்குக் காலால…”
அவர் வாக்கியத்தை முடிக்கும் முன்பே போய்-போய் தனது ஊன்றுகோலினால் அவரது நரைத்த தலையைத் தாக்கினான். ‘எஸ்தர்’ என அவர் ஓலமிட்டார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தலையிலிருந்து சில இரத்தத் துளிகள் சிந்தின.
தலை நரைத்த மனிதன் தர வேண்டிய பணத்தை எஸ்தர் கொடுத்தாள். கை விலங்குகள் அகற்றப்பட்டன.
“நானொரு போலிஸ்காரன்” எனக் கத்தியபடி போய்போய் வீட்டிலிருந்து தெருவுக்கு ஓடினான்.
“நான் இனி ஒருநாளும் இந்த வீட்டுக்குக் குடிக்க வரமாட்டேன்”
தலை நரைத்த மனிதன் கூறினார்.
அதற்குப் பிறகு காலக்கிரமத்தில் எஸ்தரின் மதுபான வாடிக்கையாளர்களது எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அவளது ஆண் நண்பர்களது வருகையும் படிப்படியாகக் குறைந்தது. போய்-போயின் நடவடிக்கைகளே அதற்குக் காரணமாக அமைந்தது. நள்ளிரவில் படுக்கையறைக்கு ஓடிவரும் போய்-போய், எஸ்தருக்கருகில் படுத்துக் கொண்டிருப்பது எவராயிருந்தபோதிலும் தனது ஊன்றுகோலால் தாக்கினான்.
“இந்த வீட்டுல தேவைக்கும் அதிகமாக பூச்சிகள் இருக்கு”
என ஒருநாள் போய்-போய் தனது தாயிடம் கூறினான். எஸ்தர் பதிலளிக்கவில்லை. தனது மகன் நொண்டியவாறே வீட்டிலிருந்து வெளியேறிப் போவதைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு டசினளவு தீப்பெட்டிகளை வாங்கி எடுத்துக் கொண்டு போய்-போய் திரும்ப வந்தான். வாங்கொன்றில் அமர்ந்த அவன் தீப்பெட்டியொன்றைத் திறந்து தீக்குச்சியொன்றை வெளியே எடுத்தான். அதை எரித்த அவன் அதிலிருந்து எழுந்த நெருப்பைப் பார்த்துச் சிரித்தான். தீக்குச்சிகள் தீரும்வரைக்கும் அவன் அக் காரியத்தையே தொடர்ந்தபடி இருந்தான். அது முடிந்ததும் அடுத்த தீப்பெட்டியை எடுத்தான். சொற்ப நேரத்துக்குப் பிறகு பன்னிரண்டு தீப்பெட்டிகளும் முடிந்திருந்தன.
“இப்ப என்கிட்ட பன்னிரண்டு சவப்பெட்டிகள் இருக்கு”
வெற்றுத் தீப்பெட்டிகளை அவாவோடு பார்த்தவாறு போய்போய் மேலும் கூறினான்.
“நான் இன்னிக்கு பன்னிரண்டு பூச்சிகளைப் பிடிச்சு கொன்னு பார்க்கப் போறேன்”
அன்று பன்னிரண்டு பூச்சிகள் கொன்று புதைக்கப்பட்டன.
மறுநாள் பலகைத் துண்டுகளையும், ஆணிகளையும் கொண்டு ஏதோ செய்துகொண்டிருந்த மகனை எஸ்தர் கண்டாள். அவன் அப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான் என்பதால் அவனுடன் கதைக்க விரும்பாவிடினும் கூட, அவளால் கதைக்காமலிருக்க முடியவில்லை. அவள் தனது மகன் செய்துகொண்டிருக்கும் வேலை குறித்து விசாரித்தாள்.
“நான் டொப்ஸிக்கு ஒரு சவப்பெட்டி செய்றேன்”
டொப்ஸி, அக் குடும்பத்தின் வளர்ப்புப் பிராணியான நாய்க்குட்டி. வார்த்தையால் விபரிக்க முடியாதளவு பீதியோடு எஸ்தர் வினவினாள்.
“ஆனா நாய்க்குட்டி செத்துப் போகலையே?!”
“அது செத்துப் போன மாதிரி நேற்று ராத்திரி ஒரு கனவு கண்டேன்”
அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
“அது ஒரு கெட்ட கனவு. அது இன்னும் சாகல”
டக்.டக்.டக். சுத்தியலின் ஓசை கேட்டது.
“அப்படீன்னா நான் அதைக் கொல்லணும். நான் இந்தப் பெட்டியில அதைப் போட்டுப் புதைக்கணும்”
எஸ்தர் நாயைத் தேடிக் களைத்தாள்.
“டொப்ஸி..டொப்ஸி..டொப்ஸி..டொப்ஸி..டொப்ஸி”
நாயைக் கண்டுபிடித்த எஸ்தர் அதனைப் பாதுகாக்க வேண்டி அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்த தனது மாமா ஒருவரின் வீட்டுக்கு அதனை எடுத்துச் சென்றாள்.
அவள் திரும்பவும் தனது வீட்டுக்கு வரும்போது இரவு ஒன்பது மணியிருக்கும். கதவு மூடித் தாழிடப்பட்டிருந்தது. அவள் கதவைத் தட்டினாள். ஜன்னல் வழியே பார்த்து போய்-போய் கத்தினான்.
“இது என்னோட வீடு.. போயிடு”
“போய்போய் இது நான். உன்னோட அம்மா”
“போ..போயிடு.. என்னோட அம்மா இன்னும் பிறக்கல”