கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கனடாவின் மூத்த தமிழ் இலக்கிய முன்னோடிகளான அமரர் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும் கவிஞர் திரு. வி. கந்தவனம் அவர்களுக்கும் வழங்கிக் கௌரவித்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை (14-03-2015) ஸ்காபரோ சிவிக்சென்ரர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாக அன்று நடைபெற்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் இணையத்தின் உபதலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவரது வரவேற்புரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.
‘முதற்கண் அமரர் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, அமரர் அதிபர் பொ, கனகசபாபதி அவர்களுக்கான தேகாந்த நிலை விருதை ஏற்றுக்கொள்ள வந்திருக்கும் அவரது குடும்பத்தினரான மணிவண்ணன், மணிமொழி, மணிவிழி ஆகியோரையும், இன்றைய விழா நாயகனான கவிநாயகர். வி. கந்தவனம் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்ததையிட்டு, அவர்களை அன்புடன் வரவேற்கின்றேன். தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசீய கீதம் ஆகியன இசைத்த செல்விகள் சங்கவி முகுந்தன், சாம்பவி முகுந்தன் அவர்களையும் அமரர் அதிபர் கனகசபாபதி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து கௌரவம் தந்த கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்களையும் வருக வருக என வரவேற்கின்றேன். அடுத்து தலைவர் உரையாற்றவிருக்கும் எமது இணையத் தலைவர் கலாநிதி எஸ்.சிவநாயகமூர்த்தி, தகமைச்சான்றுரை ஆற்றவிருக்கும் பேராசிரியர் நா.சுப்பிரமணிய ஐயர் அவர்களையும், மற்றும் பிரதம விருந்தினரையும் அன்புடன் வரவேற்கின்றேன்.
விசேட விருந்தினர்களாக வந்து உரையாற்றவிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வி; ராதிகா சிற்சபேசன், மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி ஆகியோரையும், இன்று சிறப்புரையாற்றவிருக்கும் பேராசிரியர் இ. பாலசுந்தரம், முனைவர் பார்வதி கந்தசாமி, அதிபர் த.சிவபாலு, அதிபர் சின்னையா சிவநேசன் மற்றும் கவிதையில் அவர்தம் சாதனைகளைப் பாடவிருக்கும் அருட்கவி த. ஞானகணேசன், கவிஞர் வே. ராஜலிங்கம் அவர்களையும் வீரகேசரி எஸ்.மூர்த்தி திருமதி ராஜ்மீரா இராசையா அவர்களையும் நன்றியுரையாற்ற வந்திருக்கும் செயலாளர் சிவநயனி முகுந்தன் அவர்களையும் அன்புடன் வரவேற்கின்றேன்.
வாழ்நாள் சாதனையாளர் விருதை அமரர் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களின் சார்பாக அவரது குடும்பத்தினரும், கவிஞர் திரு. வி. கந்தவனம் அவர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர விருதைக் கவிஞர் கந்தவனமும் பெற்றுக் கொண்டனர். மாலை ஆறு மணியளவில் விருது வழங்கும் விழா இனிதே நிறைவுற்றது.
அனுப்பியவர்: kuruaravinthan@hotmail.com