1. வர்ணத்தின் நிறம்
முதலில்
நிறத்தில்
வர்ணம்
தெரிகிறதாவெனத்
தேடுகிறோம்
நெற்றியில் தெரியவில்லையெனில்
சட்டைக்குள் தெரியலாம்
சில பெயர்களிலும்
வர்ணம் பூசியிருக்கலாம்
வார்த்தையிலும்
சில நேரம்
வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்
நான்கு மூலைகளில்
மஞ்சள் தடவிய
திருமண அழைப்பிதழ்களில்
முந்தைய தலைமுறையின்
வால்களில்
வர்ணங்கள் தெரிகின்றன
சிவப்பு பச்சை நீலம்
அடிப்படை வர்ணங்கள்
மூன்றென்கிறது
அறிவியல்
நான்காவது
கறுப்பாக இருக்கலாம்
நான்கு வர்ணங்களையும்
நானே படைத்தேன்
என்றவன்
ஒரு நிறக்குருடு
2. தூக்கத்தில் நடப்பவை
தூக்கத்தில்
கனவுகள் நிகழ்கின்றன
கனவுகள் பெரும்பாலும்
நினைவிலிருப்பதில்லை
தூங்குவதுபோல் கனவு கண்டு
விழிப்பவர்களுக்கு
தூக்கமே கனவாகப் போய்விடுகிறது
தூக்கத்தில்
மரணங்கள் நிகழ்கின்றன
தூக்கத்தில் சாவது நல்ல சாவென்று
செத்தவனைத் தவிர்த்து
எல்லோரும் சொல்லுவார்கள்
தூக்கத்தில்
விபத்துகள் நிகழ்கின்றன
இறந்து போன பயணிகளும்
ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததாக
யூகங்களினடிப்படையில்
ஊடகங்கள் தெரிவிக்கின்றன
சாவதற்கு சற்றுமுன்
அவர்கள் விழித்திருப்பதற்கு
சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன.
தூக்கத்தில் நிகழ்கின்ற விபத்துகளில்
பெண்களின் தூக்கத்தில்
அதிகார்ப்பூர்வ கணவர்களால்
நிகழ்த்தப்படும் விபத்துகள்
சேர்க்கப்படக் கூடாதென
உச்ச நீதிமன்றமே
தீர்ப்பளித்திருக்கிறது
தூக்கத்தில் கொலைகள் நிகழ்கின்றன
மதுபோதையிலோ
புணர்ச்சிக்குப் பிந்தைய அயர்ச்சியிலோ
உறங்கும் கணவனின் தலையில்
குழவிக்கல்லையோ (கிராமப் பெண்டிர்)
கிரைண்டர் கல்லையோ (நகரப் பெண்டிர்)
போட்டுக்கொல்வது பெரும்பான்மையாக உள்ளது
அப்படியொரு கொலையைச் செய்து
ஜெயிலுக்குப் போய்வந்த சாவித்திரி
75 வயதிலும் நலமாக இருக்கிறாள்
தாங்கள் தூக்கத்தில் நடப்பதையோ
தங்கள் தூக்கத்தில் நடப்பதையோ
தூக்கத்தில் நடப்பவர்கள் அறிந்திருப்பதில்லை
நடைப்பயிற்சியின் அவசியம் குறித்த
மருத்துவர்களின் பயமுறுத்தலாலும்
ஊடகங்களின் மிகைப்படுத்தலாலும்
ஏற்படுகின்ற மனஉலைச்சலாலேயே
அவர்கள் தூக்கத்தில் நடப்பதாக
அவர்களால் சொல்ல முடிவதில்லை
3 இழந்தவை
என் முன்னோருக்கு இருந்தது
எனக்கு வால் இல்லை
என் முன்னோருக்கு இருந்தது
எனக்கு வாள் இல்லை
என் முன்னோருக்கு இருந்தது
எனக்கு வாழ்வில்லை
4 அவரவர் அகராதிகள்
நீ குடை கொண்டுவர விரும்பாத
ஒரு நாளில்
திடீரென்று மழை வந்தது.
எனது குடையில்
இருவருக்கும் இடமிருந்தபோதும்
நாகரிகமும் கூடவர
இடமில்லாததால்
குடையை உன்னிடம் தந்து
நனைந்தபடி நானும் நடந்தேன்.
நான் மகிழ்ச்சித் துள்ளலுடன் நடப்பதை
நீ கடைக்கண்ணால் பார்த்தாய்.
நான் மகிழ்ந்தது
உனக்கு கொடை கொடுக்க முடிந்ததற்காக அல்ல;
குடை இருந்தும்
நான் நனைய முடிந்தற்காகவே.
உன் கூந்தலிலிருந்த ரோஜா
கீழே விழுந்ததை
நான் வருத்தத்துடன் பார்த்ததை
நீ ஓரக்கண்ணால் பார்த்தாய்.
நான் வருந்தியது
உன் கூந்தலிலிருந்து
ரோஜா விழுந்ததற்காக அல்ல,
அது விழுந்ததற்காகவே.
என் மகிழ்ச்சியையும்
வருத்தத்தையும்
உனது அகராதியில்
அர்த்தப்படுத்திக்கொண்டு,
ஓர் ஏளனப் பார்வையோடு
எனக்குக் குடையும் விடையும் தந்து
நீ நிழற்குடையில் ஒதுங்கினாய்.
அப்படி ஒரு பார்வை பார்த்ததனால்
உனக்கு
என்ன கிடைத்தது?
எனக்கு –
ஒரு கவிதை.