வாசிப்பும், யோசிப்பும் 81: ஜெயகாந்தன் பற்றிய நினைவுகள் சில ..

வாசிப்பும், யோசிப்பும் 81: ஜெயகாந்தன் பற்றிய நினைவுகள் சில ..அறுபதுகளின் இறுதியில் என்று நினைக்கின்றேன் அப்பொழுதுதான் நான் முதன் முதலாக எழுத்தாளர் ஜெயகாந்தனை அறிந்துகொண்டது. ஆனந்த விகடனில் முத்திரைக்கதைகளாக வெளிவந்த ஜெயகாந்தனின் ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’. ‘ஆடும் நாற்காழிகள் ஆடுகின்றன’ போன்ற குறுநாவல்களைப்பற்றி அப்பாவும், அம்மாவும் உரையாடிக்கொண்டிருந்தபோதுதான் அவரது பெயரினை நான் அவ்விதம் அறிந்துகொண்டேன். ஆனால் நான் முதலில் வாசித்த அவரது முதலாவது படைப்பு ராணி முத்து வெளியீடாக வெளிவந்த ‘காவல் தெய்வம்’ என்ற தொகுப்புத்தான். அந்தத்தொகுப்பில் காவல் தெய்வம் குறுநாவலுடன் அவரது இன்னுமொரு குறுநாவலான ‘கருணையினால் அல்ல’ குறுநாவலையும் இணைத்து ராணிமுத்து பதிப்பகம் வெளியிட்டிருந்தது. கை விலங்கு என்ற பெயரில் வெளியான அவரது குறுநாவல்தான் காவல் தெய்வம் என்ற பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும், திரைப்படமாகவும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவரது இன்னுமோர் ஆரம்பகாலத்து நாவலான ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலும் ராணி முத்து வெளியீடாக வெளியானது.

இவ்விதமாக ஜெயகாந்தனுடன் எனது பயணம் ஆரம்பமாகியது. அதன் பின்னர் தினமணிக்கதிர் ஜெயகாந்தனின் புகழ்பெற்ற சிறுகதைகள் பலவற்றை மீள்பிரசுரம் செய்தபொழுது அவற்றை வாசித்தேன். ‘ஒரு பிடி சோறு’, ‘மவுண்ட்ரோடு மைக்கல்’, ‘டிரெடில்’, ‘பிணக்கு’, ‘ராசா வந்திட்டாரு’ போன்ற சிறுகதைகளைப்படித்தது அப்பொழுதுதான். தினமணிக்கதிரில் தொடராக வெளிவந்து பலத்த வாதப்பிரதிவாதங்களை எழுப்பிய ஜெயகாந்தனின் ‘ரிஷி மூலம்’ குறுநாவலினையும் மறப்பதற்கில்லை. அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் வெளியான அவரது சிறுகதையான ‘ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது’ வாசித்தது நினைவிலுள்ளது.

இவ்விதமாக எனது பால்யகாலத்தில் அவரது படைப்புகள் பலவற்றை வாசிக்கத்தொடங்கிவிட்டேன். என வயதுக்குமீறிய படைப்புகள் அவை. ஆனால் அக்காலகட்டத்திலேயே அவற்றை வாசிக்கத்தொடங்கிவிட்டிருந்தேன். அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவல்களான ‘ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்’ ,’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ மற்றும் தினமணிக்கதிரில் ‘காலங்கள் மாறும்’ என்ற பெயரில் வெளியாகிப்பின்னர் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று பெயர் மாற்றமடைந்து வெளியான தொடர்நாவலையும் விரும்பி வாசித்திருக்கின்றேன். கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியான அந்நாவலின் காட்சிகள் இன்னும் அன்று வாசித்தபொழுது எவ்விதம் காட்சியளித்தனவோ அவ்விதமே ஞாபகத்திலுள்ளன. குறிப்பாக கங்கா வக்கீல் மாமாவுடன் உலாவச்செல்லும் காட்சி, பஸ்ஸுல் செல்லும் காட்சி போன்றவற்றைக்குறிப்பிடலாம். மேற்படி நாவல்களையெல்லாம் அழகாகக்கட்டி, நூலாக்கி வைத்திருந்தேன்.  ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ விகடனில் கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளிவந்தபொழுது கதையையும், கதைக்கான ஓவியங்களையும் மிகவும் இரசித்திருந்தேன். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலைப்படிக்கத்தொடங்கியபோதுதான் அந்நாவல் உருவாகக்காரணமான, ஆனந்தவிகடனில் ஏற்கனவே முத்திரைக்கதையாக வெளிவந்து புகழடைந்திருந்த ‘அக்கினிப்பிரவேசம்’ நெடுங்கதையினைப்பற்றி அறிந்துகொண்டேன். அதன் பின்னர் அக்கினிப்பிரவேசம், உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான் ஆகிய அவரது படைப்புகளைத்தேடிப்பிடித்து வாசித்தேன்.

அதன் பிறகு வெளியான அவரது படைப்புகள் எவையும் என்னைக்கவரவில்லை. எனக்குப்பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வெளியான வரையில்தான். பிற்காலத்து ஜெயகாந்தனின் கருத்துகள் பலவற்றிலோ, படைப்புகளிலோ எனக்கு நாட்டமிருந்ததில்லை. தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவை ஜெயகாந்தனின் எழுபதுகள் வரையில் வெளியான படைப்புகளே என்று கருதுகின்றேன்.

என் வாசிப்பில், வாசிப்பனுவத்தின் வரலாற்றில் ஜெயகாந்தனின் எழுத்துகளும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதன் பின் பல வருடங்களின் பின்னர், என் வாசிப்பில் இன்பம் தந்த ‘ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்’,  ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகியவற்றையும் எழுத்தாளர் திலீப்குமார் மூலமாகத்தமிழகத்திலிருந்து பெற்றுக்கொண்டேன். அவற்றில் . ‘ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்’ நாவலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகம் அந்நாவல் தொடராக வெளியானபோது வெளியான கோபுலுவின் ஓவியங்களையும் சேர்த்து வெளியிட்டிருந்த காரணத்துக்காகவே , ஏற்கனவே என்னிடம் அந்த நாவல் இருந்தபோதும், மேலதிகமாக வாங்கினேன்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் மறைவுச்செய்தியினைக்கேள்விப்பட்டபோது மேற்படி நினைவுகளெல்லாம் நினைவுத்திரையில் படம் விரித்தாடத்தொடங்கின. முரண்பாடுகளற்ற மனிதர்கள் தாம் யார்? ஜெயகாந்தனும் அதற்கு விதிவிலக்கானவரல்லவே. ஆனாலும், தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகள் பலவற்றை அவர் வழங்கினாரென்பதிலோ, தமிழ் இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியில் ஜெயகாந்தன் ஒரு மைல்கல் என்னும் கூற்றினிலோ யாருக்குமே மாற்றுக்கருத்துகள் எதுவுமிருக்க முடியாதென்றே நினைக்கின்றேன்..