இன்றைய தமிழ் இலக்கியத்தில் தி.ஜானகிராமன் ஒரு தனித்த, விதிவிலக்கான நிகழ்வு.. அவர் ஒரு முதல் தர இலக்கியத் தரமான எழுத்தாளர் அதே சமயம் மிகப் பிரபலமான எல்லோரும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளரும் கூட. இவரைப் போன்று இலக்கியத் தரமும் பிராபல்யமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற இன்னொரு எழுத்தாளர் இன்று தமிழ் எழுத்துலகில் இல்லை. அவருடைய எழுத்தின் குணங்கள் மிக நுண்ணிய ரசனை கொண்ட விமர்சகனையும் வியக்க வைக்கும். வெகு சாதாரண வாசகனையும் கவர்ந்து கொள்ளும். அவருடைய சம்பிரதாய கட்டுப்பாடுகளை மீறும் கதைகளில் காணும் ஆழம்,, கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் உருவாக்கப்படும் தீவிரம், எல்லாம் ஒரு விமர்சகனை வியக்க வைக்கும் அதே சமயம் அவரது சொக்க வைக்கும் நடையழகும், வெகு சுலபமாக எவ்வித சிரமமும் கொடுக்காமல் எத்தனை நூறு பக்கங்களானாலும் அலுக்காமல் படிக்க வைக்கும் எளிய சின்ன சின்ன சம்பாஷணைகளாலேயே ஆன கதை சொல்லும் நேர்த்தி எல்லாம் எந்த சாதாரண வாசகனையும் மனம் கவரும்.. சாதாரணமாக நம்மில் பெரும்பாலாருக்கு வார்த்தைகளில் அடைபட மறுக்கும் எந்த சிக்கலான சம்பவமுமோ, அல்லது சிந்தனையுமோ வெகு எளிதாக அன்றாடம் நாம் புழங்கும் வார்த்தைகளில் ஜானகிராமனால் சொல்லிவிட முடிகிறது. தன்னை அதிகம் சிரமப்படுத்திக்கொள்ளாத சாதாரண கதை படிக்கும் வாசகன் இத்தகைய எழுத்தின் ஆழத்தை உணர்த்து கொள்ளாமல் படித்துச் செல்லக்கூடும் தான். ஆனால் ஜானகிராமன் எழுத்து தரும் சுகானுபவத்தில் அவன் தீவிர ஜானகிராமன் ரசிகனாகிவிடுகிறான் இதெல்லாம் போக, ஜானகிராமனின் எழுத்தில் காணும் பரிகாசமும் கேலியும் யாரையும் துன்புறுத்தாத மென்மையும் விடம்பன குணமும் கொண்டது. இது எந்த ரக வாசகனையும் கவர்ந்து ரசிக்க வைக்கும்.
ஜானகிராமனின் நாவல்கள், சிறுகதைகள் எல்லாமே அவர் பிறந்த தஞ்சை ஜில்லாவின் மத்திய தர பிராமணர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பவை, அந்த வாழ்க்கை கொண்ட மதிப்புகளின் உச்சங்களையும் சீர்கேடுகளையும் பிரதிபலிக்கும் ஆவணம் என்றும் ஒரு நோக்கில் சொல்லலாம். ஜானகிராமன் படைக்கும் உலகம் லக்ஷிய வாதிகளால் நிறைந்தது. அவர்கள் தாம் தமக்கு விதித்துக்கொண்டுள்ள லக்ஷியங்களைக் காக்க எப்போதும் வாழ்க்கையின் வதைக்கும் யதார்த்தங்களையும், சூழ்நிலையையும் போராடிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. அவர்களது லக்ஷியங்கள் மரபிலிருந்து பெற்றவையாக இருக்கலாம். அல்லது அவர்களே தேர்ந்து கொண்டவையாக இருக்கலாம். அல்லது அவர்கள் செய்யும் தொழில் சார்ந்தவையாக இருக்கலாம். அவர்கள் லக்ஷியவாதிகளாக இருக்கலாம். ஆனால் ஜானகிராமன் சொல்கிறார், “என் எல்லா கதாபாத்திரங்களும் வாழ்க்கையிலிருந்து பெறப்பட்டவர்கள் தான்” இதை நாம் நம்பலாம்.. ஏனெனில் ஜானகிராமன் வாழ்க்கையையும் மனிதர்களையும் அவர்கள் சுபாவங்களையும் மிகவும் கூர்ந்து கவனிப்பவர். அவர்கள் ஒவ்வொருவரது தனிப்பட்ட பாவனைகளையும் குணவிசேஷங்களையும் நிறைந்த விவரங்களோடு ஒரு முழுச் சித்திரத்தைத் தன் எழுத்தில் கொணர்ந்து விடுபவர். அவர் எழுத்தே அவர் கூற்றுக்கு சாட்சி.
ஜானகிராமன் சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவர். அதே சமயம் அவர் ஒரு யதார்த்த வாதியும் கூட.. சம்பிரதாயங்களில் நம்பிக்கை என்றால் அவர் பழமையின் லட்சியங்களில் வாழ்க்கை மதிப்புகளில் நம்பிக்கை கொண்டவர் என்று அர்த்தம். யதார்த்த வாதி என்றால், இன்றைய யதார்த்த வாழ்க்கையைப் பற்றிய பூரண பிரக்ஞை யோடு அவர் இருந்த போதிலும், நம்மில் பலரைப் போல பழம் லட்சியங்களும், வாழ்க்கை மதிப்புகளும் இன்றைக்கு செலவாணி இழந்தவை என்று அவர் நினைப்பவரில்லை. அவற்றிற்கு இன்றும் ஜீவிய நியாயம் உண்டு என்று நம்புகிறவர். அவற்றிற்கான புதிய உறவுகளும் தேவைகளும் இன்றைய வாழ்க்கையில் உண்டு, அவற்றிற்கான புதிய அர்த்தங்களும், இன்றைய வாழ்க்கையில் அவை பொருந்தும் புதிய பார்வைகளும் உண்டு என்று எண்ணுபவர். அவருக்கு சமூகத்தில் தனி மனிதனின் முக்கியத்துவம் தான் பெரிது. அந்த தனிமனிதன் தன் தனித்வத்தை விட்டுக்கொடாது தன் வாழ்க்கையை தன் லட்சியங்களுக்கு ஏற்ப வாழும் போராட்டங்களைத் தான் அவர் கதைகள் சொல்கின்றன.
மூன்று நாடகங்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு குறு நாவல்கள், ஆறு நாவல்கள் இது வரை( *1968 ) வெளிவந்துள்ள அவரது எழுத்துக்கள்.. அவர் நாவல் எழுத ஆரம்பித்தது சமீப காலமாகத் தான். இருப்பினும், வெகு சீக்கிரம் அவர் இலக்கியத் தரமான தமிழ் நாவலாசிரியர்களில் ஒருவராக தன்னை அடையாளப் படுத்திக்கொண்டுவிட்டார். அவரது இரண்டாவது நாவல், மோக முள், இதுகாறும் அவர் எழுதியவற்றுள் சிகர சாதனை என்று சொல்லவேண்டும் அத்தோடு இன்றைய தமிழ் நாவல் இலக்கியத்திலேயே சிகர சாதனை என்றும் அதைச் சொல்ல வேண்டும். இப்போது நம் முன் இருப்பது அவரது மிகச் சமீபத்திய நாவல். அம்மா வந்தாள் சமீப காலங்களில் எழுதப்பட்டுள்ளவற்றில் சிறந்ததும் ஆகும்.
அப்பு தன் ஏழாம் வயதிலியே தன் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து ஒரு தூரத்து கிராமத்தில், குருகுலம் போன்ற ஒரு பாடசாலையில் வேதம் படிக்கப் போய்விடுகிறான். அங்கு அவனுக்கு வேதங்களும், ஆசார அனுஷ்டானங்களும் போதிக்கப்படுகிறது. அந்த பாட சாலை ஒரு வயதான விதவையின் தர்மத்தில் நடைபெறுகிறது. அங்கு ஏழுவயதிலேயே விதவையாகிவிட்ட ஒரு பெண்ணும் அந்த விதவை மூதாட்டியின் சம்ரக்ஷணையில் வளர்கிறாள்.
விதவைப் பாட்டிக்கு அப்புவிடம் ஒரு தனி பாசம். அதன் காரணமாக, சாதாரணமாக அந்த மாதிரியான ஆசாரம் மிகுந்த வீடுகளில் கிடைக்காத சலுகையோடும் சுதந்திரத்தோடும் அப்பு அந்த வீட்டில் வளைய வருகிறான். அப்பு பதினேழு வருடங்கள் அந்த வேத பாடசாலையில் வேதங்களும் ஆசார அனுஷ்டானங்களும் படிப்பதில் கழிக்கிறான். இந்த பதினேழு வருஷங்களும் தன் பெற்றோர்கள் தன்னை மாத்திரம் ஏன் இந்தப் பாடசாலைக்கு வேதம் படிக்க அனுப்பினார்கள்?. தான் நான்காவது பிள்ளை. மற்ற மூத்த சகோதரகள், சகோதரிகள் எல்லாருக்கும் ஆங்கிலப் படிப்பு கிடைத்திருக்கும் போது தனக்கு மாத்திரம் ஏன் இப்படி என்ற எண்ணங்களில் அவ்வப்போது அவன் மனம் உளைச்சல் பட்டதுண்டு. அத்தோடு அந்தப் பாடசாலையில் வளைய வரும் அந்த விதவைப் பெண் இந்து தன்னிடம் காட்டும் பாசம், அதை ஏற்பதா, அல்லது மறுத்து ஒதுங்குவதா, என்ற ஊசலாட்டம் வேறு அவனை வாட்டிக்கொண்டிருந்திருக்கிறது. வேத பாடசாலைப் படிப்பு முடிந்ததும் அப்பு தன் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான். இந்து அவனை தன்னைவிட்டுப் போகவேண்டாம் இங்கேயே என்னோடேயே இருந்து கொள் என்று வற்புறுத்துகிறாள். அப்புவோ இந்துவை தான் தன் அம்மாவாகவே, வேதங்களைப் போன்ற ஒரு புனித வடிவிலேயே பார்த்து வந்ததாகச் சொல்லி மறுக்கிறான். இதைக்கேட்ட இந்துவுக்கு பொறுக்க முடிவதில்லை. . அவன் அம்மா அப்படி ஒன்றும் அவன் நினைப்பது போல பனிதமே உருவானவள் அல்ல, அவளுக்கும் வேண்டிய அளவு வேண்டாத உறவுகள் உண்டு,, எனவே தன்னையோ வேதங்களையோ அவன் அம்மாவோடு சேர்த்துப் பேசவேண்டாம் என்று தன் சீற்றத்தைக் கொட்டித் தீர்க்கிறாள்.
அப்பு 17 வருஷங்கள் கழித்து தன் வீடு திரும்புகிறான். அங்கு ஒரு ஆஜானுபாவனான மத்திம வயதில் ஒரு அழகான பணக்காரன் தன் பழைய காதலியாக அம்மாவைப் பார்க்க வழக்கமாக வந்துபோய்க்கொண்டிருப்பது .தெரிகிறது. அப்போது தான் அவனுக்குத் தெரிகிறது தான் தான் தன் அப்பாவுக்குப் பிறந்த கடைசிக் குழந்தை என்றும் அங்கு இருக்கும் தன் தம்பி தங்கைகள் எல்லாம் தன் தாய்க்கும் இந்த வந்து போகிற பணக்காரனுக்கும் பிறந்தவர்கள் என்று. இது வீட்டில் உள்ள எல்லாருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கிறது. தன் அப்பாவுக்கும் கூடத் தான். அவரும் செய்வதறியாது இவ்வளவையும் சகித்துக்கொண்டு தான் அங்கு இருக்கிறார். எல்லாவற்றையும் ஒதுங்கி நின்று பார்க்கும், எதிலும் தான் ஒட்டாத சாட்சிபூதராகிவிடுகிறார். அவன் அம்மா அலங்காரத்தம்மாளுக்கு தன் கடந்த கால பாபங்கள் எல்லாம் தெரிந்தே இருக்கிறது. வருந்தி வேதனைப் படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. காலைச் சுற்றிய பாம்பு விடமாட்டேங்கறதே என்பது அவள் வேதனை.. இந்தப் பாபத்தைக் கழிக்கத் தான் அப்புவை தான் வேதம் படிக்க அனுப்பி வைத்ததாகவும், அவன் ஒரு ரிஷியாகத் திரும்பி வருவான், அவன் கற்ற வேதங்களின் ஒளிப் பிழம்பில் தன் பாபங்களைப் பொசுக்கிக்கொள்ள நினைத்ததாகச் சொல்கிறாள்.
அப்பு திரும்பிச் செல்கிறான். தன் பழைய வேதப் பாடசாலைக்கு. அவன் மேல தன் பாசமெல்லாம் பொழிந்த இந்துவிடமும் தான். தி. ஜானகிராமனின் பலமே சம்பாஷணைகளாலேயே கதை சொல்லும் அவர் சிறப்புத் தான். அவரது எல்லா எழுத்துக்களிலும் போல இந்த நாவலிலும் அவர் சம்பாஷணைகளில்தான் அவர் உலகமே விரிகிறது. இன்றைய எந்த தமிழ் எழுத்திலும் இதற்கு இணையான ஒரு சிருஷ்டிகரத்தை காணமுடியாது.
கதை சொல்லல் வெகு சரளமாக, எளிமையாக, அதே சமயம் கொள்ளை அழகுடன் ஆற்றின் புது வெள்ளம் போலச் ஓடுவது அறியாது செல்கிறது.. ஒரு குதூகலத்தின் துள்ளல், ஆரவாரம். எப்படிச் சொன்னாலும் அது அப்படியாகத் தான் தோன்றும்.. அவருடைய நடை பனிக்கால காலை நேரங்களில் புல் நுனியில் துளிர்த்து பளிச்சிடும் பனித் துளிகள் போல கண் சிமிட்டும். ஈர்க்கும். அவருடைய வர்ணணைகள். கதை சொல்லிச் செல்லும் போது இடைபுகுந்து அவர் சொல்லும் சில பார்வைகள், இவற்றில் எல்லாம் ஒரு Cinematic Quality இருக்கும். ஃப்ரெஞ்ச் சினிமாவின் Cinema Verite பாணியில் அந்த சம்பவத்தின், அந்த சூழலின் அடர்த்தி நம் கண்முன் விரியும் அந்தக் காட்சியின், அல்லது சம்பவத்தின் வர்ணணை வாசகனின் கண்முன் அததனை அடர்த்தியான விவரங்களுடனும், ஏதோ ஒரு நடப்பு நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுத்தது போல ஒரு உக்கிரத்துடன், யதார்த்த பதிவாக கண்முன் காட்சி தரும். பலருக்கு இந்த விவர வர்ணணைகள் அநாவசியமாக, கதைக்குத் தேவையற்றனவாகத் தோன்றக்கூடும். அவர்கள் கதை மட்டுமே வேண்டுபவர்கள்..
மேலும் ஜானகிராமனின் எழுத்தின் ஒரு தனித்வ சிறப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும். பாலியல் உறவுகளைப் பற்றியே நிறைய எழுதுவதாக ஒரு பரவலான கருத்து உண்டு. அவரது கதை சொல்லலும் சம்பாஷணைகளும் பாத்திர வார்ப்பும், மிக நுட்பமானது. கத்தி மேல் நடப்பது போன்றது.. சறுக்கி விடும் அபாயம் கொண்டது கண்ணியத்துக்கும் ஆபாசத்துக்குமான இடைவெளி மிக நுண்ணியதாக இருக்கும். அவர் எழுத்தில் நுட்பமும் மென்மையும் மற்றவர் கையாளலில் ஆபாசமாகக் கீழிறங்கிவிடக்கூடும். அதை மிக லாவகமாக, தன்னறியாத நம்பிக்கையுடன் கையாளும் திறன் அவருக்கு வாய்த்திருந்தது. அத்தோடு இது சாத்தியமல்ல என்று நாம் சாதாரணமாக நினைக்கும் இடங்கள் கூட மிக யதார்த்தமாக, இது நடந்திருக்கக்கூடும் தான் என்று நம்மை நம்பவைக்கும் எழுத்துத் திறன் அவரது. என் மனதில் இப்போது இருப்பது அந்த குக்கிராமத்தில், ஆசாரம் மிகுந்த வேதம் போதிக்கும் வீட்டில், ஒரு இளம் விதவையும் ஆசாரமான விதவைப் பாட்டியும் இருக்கும் சூழலில் அப்பு வும் இந்துவும் பழகும் அன்னியோன்யம் நாம் நம்ப வியலாத ஒன்று. பிராமண குடும்பங்களில் இது சாத்தியமே இல்லை. ஆனால் தி ஜானகிராமனின் எழுத்துத் திறன் நம்மை நம்ப வைக்கும் தந்திரம் செய்கிறது.
இந்த நாவலில் மிக நெருடலான ஒரு விஷயம்,. தன் கணவனுக்குப் பிறந்த கடைசி பிள்ளையை வேதம் படிக்க அனுப்பி வைத்து அவன் ஒரு வேதவித்தாகத் திரும்பி வந்தால், தன் பாபங்கள் எல்லாம், இன்னமும் தொடரும் பாபங்கள் எல்லாம் அதில் கரைந்து விடும் என்று அலங்காரத்தம்மாள் எப்படி நம்புகிறாள்? தன் பிள்ளை வேதம் படிப்பது தன் பாபங்களுக்கான விமோசனம் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது? வேதங்கள் என்ன பாபாத்மாக்களுக்கு அடைக்கலம் தருமா, தன் பாபங்களை அது எப்படி சுத்திகரிக்கும் என்று அலங்காரத்தம்மாள் நினைக்கிறாள்? வேதங்களைப் புனித தெய்வ வாக்காகப் பூஜிக்கும் மனதுக்கு இது ஒரு பாபகாரியமாகத்தானே தோன்றும். ஆசார சீலர்களை விட்டு விடுவோம். இன்றைய அறிவு ஜீவி ஒருத்தனுக்கு இதில் என்ன மனத்தத்துவ விளக்கங்கள், சமாதானங்கள் காணுதல் சாத்தியம்?. தன் எல்லா பாத்திரங்களும், சம்பவங்களும் வாழ்க்கையிலிருந்து பெறப்பட்டவையே என்றும், அவற்றை நம்புவதும் நம்ப மறுப்பதும் அவரவருக்குக் கிட்டும் அனுபவங்களைப் பொருத்தது என்று ஜானகிராமன் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். இதை நாம் ஒப்புக்கொள்வதாக இருந்தால், கதாபாத்திரங்களின் சம்பவங்களின் நீட்சியை நாம் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு ஜானகிராமனின் கதை சொல்லலில் ஒரு தவிர்க்க முடியாமையைக் காணலாம்.
இந்த தர்க்க அதர்க்க நியாயங்களையும் சாத்தியங்களையும், விளக்கங்களையும் பற்றி ஒருவரது கருத்து எப்படி இருந்தாலும், ஜானகிராமன் எழுத்து எதையும் படிப்பது ஒரு அனுபவம், ஒரு மகிழ்ச்சி தரும் அனுபவம் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்., ஜானகிராமனைத் தமிழில் படிக்க இயலாத தமிழ் அறியாதவர்கள் தாம் இழந்தது என்ன என்பதை அறியமாட்டார்கள்.
Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>