[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இதுவுமொன்று. சில்லையூர் செல்வராசனின் கவிதைகளை ஒரு அரைகுறை விமர்சகர் Blank Verse என்று விமரிசிக்கப் போய் அறிஞர் அ.ந.கந்தசாமியிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் விளைவே கீழுள்ள கட்டுரை. இச்சமயத்தில் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தனது ‘ஒப்பியல் யாப்பிலக்கணம்’ நூலினை அறிஞர் அ.ந.கந்தசாமிக்கே சமர்ப்பணம் செய்திருந்ததை ஞாபகப் படுத்துவதும் பொருத்தமானதே – பதிவுகள் – ]
சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத்தொடக்க விழாவில் பேசிய ஒரு பட்டதாரி சிறு கதாசிரியர், சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verse என்று குறிப்பிட்டாராம். இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தால் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல்லாம் பரிமளிக்கும். பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது.
நமது நாட்டிலுள்ள ‘மரபு’களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ, பட்டதாரியோ ஆகி விட்டால் அவர் ஒரு படித்தவர் என்று கணித்துக் கொள்வதாகும். ஆனால் அவர்களில் பலர் பாடப் புத்தகங்களைத் தவிர வேறெதையும் படித்தவர்களல்ல. இங்கு நான் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். தொல்காப்பியத்தின் ஒரு பகுதியையும், திருவாசகத்தின் ஒரு பகுதியையும், பாரதத்தின் இரண்டு சருக்கத்தையும் பள்ளிக்குச் சென்று படித்துப் பெற்றவனா அல்லது வீட்டிலிருந்து கொண்டே மூன்று நூல்களையும் முழுவதும் கற்றவனா அவற்றை முற்றாகப் படித்தவன்? ஞானசம்பந்தர் ஓதாதுணர்ந்தவர், முலைப்பாலைக் குடித்தே முழு அறிவும் பெற்றவர் என்கிறார்கள். ஒரு சில பண்டிதர்களும் பட்டதாரிகளும், ஏன் பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியார்களில் சிலர் கூட, தம்மை ஞானசம்பந்தர்கள் என்றுதான் காட்டப் பார்க்கிறார்கள்.
யாப்பிலக்கணத்தைக் கற்காமலே அது பற்றித் தீர்ப்புக் கூறத் தமக்கு உரிமையுண்டு என்று அவர்கள் நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியார்- நான் முன்னே கூறிய பட்டதாரிச் சிறு கதாசிரியரால் ‘சொறி விமர்சகர்’ என்று ஒரு முறை வர்ணிக்கப்பட்டவர் – நான் சில ஆண்டுகட்கு முன்பே ‘வெண்பா எழுதுவது எப்படி?’ என்ற யாப்பிலக்கணம் சம்பந்தமான தொடர் கட்டுரையை வீரகேசரியில் எழுதியபோது, அதில் ஏதோ பிழை இருப்பதாகக் குறிப்பிட்டார் இப்போ செத்துமடிந்து போன ஒரு யாழ்ப்பாண ஏட்டில்! ஆனால் என்ன பிழை என்று அன்றும் காட்டவில்லை, இன்றும் காட்டவில்லை. பிழை இருந்தால் அல்லவா காட்டுதற்கு? மேலும் பிழை காட்டுவதற்கு அவருக்கு யாப்பிலக்கணம் பிழையறத் தெரிந்திருக்க வேண்டும். அவர் அந்த நிலையில் இல்லை. இருந்தாலும் பேசத்துணிவு கொண்டு விட்டார்! ஏன்? அவர் தமிழ் வாத்தியார்; ஓதாது உணரக்கூடிய ஞானசம்பந்தர்! படித்திராவிட்டாலும் படித்திருப்பார் என்று எண்ணக்கூடிய மெளடீகங்கள் எம்மிடையே பலர் உண்டு என்பது அவருக்குத் தெரியும், அதுதான் அவ்வளவு துணிவு!
Blank Verse பற்றிப் பேசியவருக்கு ஆங்கிலப் படிப்பு உண்டு. ஆனால் அது பற்றிப் பேச ஆங்கிலமொழி அறிவு மட்டும் போதாது. ஆங்கில யாப்பிலக்கண அறிவு வேண்டும். மேலும் சில்லையூர் கவிஞன் தமிழ்க் கவிஞன். அவனது கவிதை எந்த தமிழ் யாப்புக்குள் அடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ளத் தமிழ் யாப்பிலக்கண அறிவும் வேண்டும். இரண்டும் தெரியாதவன், ஒப்பியல் யாப்பிலக்கண சம்பந்தமானஇந்தப் பிரச்சினைப்பற்றிப் பேசவே கூடாது. எந்த ஜனநாயகத்திலும் இந்த உரிமையை நாம் மறுத்தேயாக வேண்டும். இரண்டும் தெரியாமலே இந்த மெளடீகம் தான் ஓதாது உணரக்கூடிய ஒரு ஞானசம்பந்தர் என்ற எண்ணத்தில் போலும் தன் வாயைப் பிளந்து வாந்தி எடுத்தது! ஆனால் அந்த வாந்தியில், பார்ப்பனக் குறவனின் பால் மணம் வீசவில்லை; சாராய நெடி தான் சந்தி சிரித்தது! என்னைப் பொறுத்தவரையில் நான் பண்டிதரல்ல, பட்டதாரியல்ல, பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியுமல்ல, ஓதாதுணர்ந்த ஞானசம்பந்தன் என்று மார் தட்டி நிற்க! ஒரு சிலவற்றையேனும் ஓதியுணர்ந்த, சாதாரண மனிதன் நான். உலகில் எட்டு அதிசயம் என்றெல்லாம் ஏதேதோ சொல்லுகிறார்கள் இன்று. இதில் நான் கண்ட பேரதியம் என்னெவென்றால், விஷயந் தெரியாதவர்கள் மிகத் துணிவுடன் விஷயந் தெரிந்தவர்கள் போலப் பேச முன்வந்து விடுவதுதான். இந்த அதிசயத்தைப் பார்த்த பிறகு மற்ற அதிசயங்களை நேரில் சென்று பார்க்க வேண்டுமென்ற் ஆசையே எனக்கு இல்லாமல் போய் விட்டது.
பண்டிதத் தராதரப் பத்திரமோ, பட்டதாரித் தராதரப் பத்திரமோ, வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவதற்கு லைசென்ஸ் அளிக்கிறது என்று எவரும் எண்ணக் கூடாது! ‘எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் எப் பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ‘ என்ற வள்ளுவன் கருத்து, இன்றைய உலகின் கருத்து என்பதை மறந்துவிட வேண்டாம். இத்துடன் பீடிகை போக நான் எடுத்துக் கொண்ட ஒப்பியல் யாப்பிலக்கண விவகாரத்துக்கு வருவோம்.
முதலாவதாக, Blank Verse என்றால், வெறும் செய்யுள் என்று மொழி பெயர்த்துக் கொண்டு, வெறும் செய்யுள் என்றால் வெற்றுச் செய்யுள் என்று வியாக்கியானம் செய்து, ‘ஆகா வெற்றுச் செய்யுள் என்றால் மோசமான செய்யுள்!’ என்று ஆர்ப்பரிக்க, இலக்கணம் தெரியாத, ஓதாதுணர்ந்த, ‘மரபு’ காக்க முற்பட்ட மெளடீகங்களால்தான் முடியும்! ‘வெண்பா’ என்றால் ‘வெள்ளைக் கவி’. வெள்ளைக் கவி என்றால் ஆழ்ந்த பொருள் அமையாக் கவி. அதனால்தானே ‘வெள்ளைக் கவி காளமேகமே! உன் கள்ளக் கவிக் கடையைக் கட்டு’ என்று அதிமதுரன் பாடினான், என்று யாராவது ஆர்ப்பரித்தால் அது எத்துனை அபத்தமோ அத்தகைய அபத்தம் தான் Blank Verse பற்றி இப்படி நினைப்பதும். Blank Verse என்றால் வெற்றுக் கவி அல்ல. வெண்பா என்பது வெள்ளைக் கவி அல்ல. Blank Verse ஒரு ஆங்கிலப் பாவினம். வெண்பா தமிழ்ப் பாவகைகளான வெண்பா, கலிப்பா,வஞ்சி,ஆசிரியம் என்ற நான்கு பாக்களில் ஒன்று.
Blank Verse இன் இலக்கண அமைதி பின்வருமாறு;
அதில் எதுகை இருக்கக் கூடாது. எதுகை என்றதும் இந்தப் பட்டதாரிகளும் பண்டிதர்களும் தாம் ஓதாதுணர்ந்த யாப்பிலக்கண , அறிவோடு ‘எதுகை – கை எது?’ என்று கேட்டுக்கொண்டு கிளம்ப வேண்டாமென்று அவர்களை மிகத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். இன்னும் எனக்குத் தெரிந்த ஒரு பண்டித வித்துவான் யாப்பிலக்கணம் என்றால் எதுகையும் மோனையும்தான் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்; அவர் , – அதெப்படி? எதுகை இல்லாமலும் ஒரு பாட்டா?’ என்று கேட்டுக்கொண்டு வரலாம். கரை போட்ட துணியில் அழகிருக்கிறது. ஆனால் கரை போடாத துணியிலும் இன்னொரு வகை அழகு இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் நாம் இவருக்கு அளிக்கக் கூடிய பதில்! ஆனால் அதைப் புரிந்து கொள்ள அழகுணர்ச்சி வேண்டும். அது அவரிடம் இருக்கிறதா என்பதைப் பொறுத்துத்தான் அவர் நம் பதிலை ஏற்றுக் கொள்வார். இது ஆங்கில இலக்கண விவகாரம். ஆங்கில யாப்பின்படி Blank Verseஇல் எதுகை இருக்கக் கூடாது. மோனை இருக்கலாம் அன்றி இல்லாதிருக்கலாம். மோனை என்றதும், இது மகனே என்பதன் மரூஉ. யாழ்ப்பாணப்பகுதியில் வழங்கும் ஒரு கொடுந்தமிழ்ப் பிரயோகம் என்று ஆர்ப்பரிக்க வேண்டாமென்று இந்த அரைகுரைப் படிப்புள்ள பட்டதாரிகளையும் பண்டிதர்களையும் வேண்டிக் கொள்கிறேன். உளரும் லைசென்ஸ் பெற்றவர்களல்லவா? அதனால்தான் இவ்வேண்டுகோள். ஆனால் அளவொத்த அடி வேண்டும். அடி என்றதும் கையால் அடித்தல், காலால் அடித்தல் அல்ல. அடி என்றால் வரி. வரி என்றால் திருமணம் செய், சுயம் வரி என்றெல்லாம் பாதை தவறிப் பேசலாம் பத்திரம் பெற்ற பட்டதாரிகள். பத்திரம் இருக்கும்போது பயம் உண்டோ? ஆனால் அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பதை நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அல்லது அடி விழலாம். அடி என்றால் பொல்லடி மட்டுமல்ல, சொல்லடியும் கல்லடியும்தான். ஒரு வகைச் சீரில் இயங்க வேண்டும். சீர் என்றதும் சிறப்பு, சீர்வரிசை என்று ஓதாதுணர்ந்தவர்கள் பொருள் தர முன்வரலாம். இது யாப்பிலக்கணச் சீர்; நீங்கள் நினைக்கும் சீர் அல்ல. இந்த Blank Verse இற்கு ஒரு உதாரணத்தைத் தந்து அதை அலகிட்டுப் பார்ப்பது நல்லதென்று நான் நினைக்கின்றேன். பட்டதாரி மெளடீகம் Blank Verse என்றால் என்ன என்று இதைப் பார்த்தாவது புரிந்து கொள்ளட்டும்.
O, swear not by the moon, the inconstant moon,
That monthly changes in her circled orb, (Shakespeare, Romeo Juliet)
இதில் எதுகை கிடையாது. முதல் அடியில் மோனையில்லை. இரண்டாம் அடியில் Changes in her circled orb என்று வருவது மோனை. மோனை வரலாம்; அல்லது வராது விடலாம்… ஒவ்வொரு அடியும் ஐந்து சீர்கொண்ட Pentameter என்ற அடிகள். ஆகவே அளவொத்த அடிகள். இதில் காணும் சீரின் பெயர் Lambic. இரண்டு அடிகளும் ஒருவகைச் சீரிலேயே இயங்குகின்றன. Blank Verse என்பது இதுதான். இது போல் அமைந்ததைத்தான் ஆங்கில யாப்பில் Blank Verse என்று அழைப்பார்கள். ஆனால் ஆங்கிலத்திலும், இதர மேனாட்டு மொழிகளிலும் Verse Librre அல்லது Free Verse என்று இன்னொன்றும் உண்டு. அதற்குத்தான் விதிகள் கிடையாது. எதுகை, மோனை, அளவு, சீர், தளை என்பன எதுவுமே கிடையாது அதற்கு. ஆனால் அதற்கும் இலக்கண அமைதி ஒன்றுண்டு. கூறும்பொருள் கவிதைத் தன்மை கொண்டதாயிருக்க வேண்டும். Cadense என்ற இன்னிசை அதில் ஒழுக வேண்டும். Blank Verse ஆங்கிலத்தில் எப்படிப்பட கவிஞர்களால் இதுவரை எழுதப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதும் நல்லது. உலகின் மிகச் சிறந்த கவிஞன் என்று பலரால் கருதப்படும் ஷேக்ஸ்பியரின் கவிதை, பெரும்பாலும் இந்த எதுகையற்ற Blank Verseஆல் தான் எழுதப்பட்டுள்ளது. டெனிசன், மார்ளோவ், மில்டன் எல்லோரும் தம் நீண்ட காவியங்களை இந்த Blank Verseஇல்தான் எழுதினார்கள். பெரும்பாலும், தமது சிறுகவிதைகளில் தான் இக்கவிஞர்கள் எதுகையை உபயோக்கித்துள்ளார்கள்.
சரி, இதுவரை ஷேக்ஸ்பியடின் Blank Verseஐப் பார்த்தோம். இனி, தான் தோன்றிக் கவிராயர் என்னும் சில்லையூ செல்வராசனின் கவிதைகளை அலகிட்டு, அவற்றில் Blank Verse என்ற யாப்பின் தன்மைகள் ஓரளவாவது இருக்கின்றனவா என்பதை ஒருவகை ஒப்பியல் யாப்பிலக்கண முறையில் கவனிப்போம்.
சில்லையூர் செல்வராசன் வெண்பாக்கள், விருத்தங்கள்,சிந்துக்கள், ஆசிரியப்பாக்கள், கட்டளைக் கலித்துறை என்ற பலவித பா வகைகளிலும் தமது கவிதைகளைப் புனைந்து தமிழன்னையின் பாதங்களில் சூட்டியிருக்கிறார். இவை யாவும், அவற்றுக்குரிய இலக்கணத்துக்குள் அமைந்திருக்கின்றனவே அல்லாமல் Blank Verse என்ற கவி உருவத்தின் தன்மைகளைப் பெறவில்லை. பொதுவாகக் கவி அரங்கங்களில் அவர் பாடும் பாடல்கள் வெண்டளை தழுவிய ஒரு புதிய கவி உருவமாகும். இது பாரதிதாசன் போன்ற பெருங் கவிஞரால் கையாளப்பட்டு, இன்று தமிழ்க் கவிஞர் பலராலும் உபயோக்கிக்கப்படும் ஒன்று. இக்கவி உருவத்திற்கு உதாரணமாக செல்வராசன் கவி அடிகள் ஒன்றிரண்டை இங்கு அலகிட்டுப் பார்ப்போம்.
யாழ்ப்பாணச் சாமி தனைக்
காழ்ப்பால் இகழ்ந் தெழுதும்
கூழ்ப்பானைப் பண்டிதரைக்
குட்டுதற்கே வந்துள்ளேன்!
இது பின்வரும் சீரமைதி:
தேமாங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமாங்காய்
இவை யாவும் வெண்பாவில் பயிலும் சீர்கள். காய் முன் நேரும், மா முன் நிரையும், நிரை முன் நேரும், வருவது வெண்டளை. தளை அமைதி சரி. இப்புதிய பாவினத்தில், சாதாரணமாக, குறளைப்போல, இணை எதுகையே வரும். ஆனால் இவரது அடியிலோ யாழ், காழ், கூழ் என்று மூன்று எதுகைகள் வந்துள்ளன. ஆகவே, எதுகையமைதி தேவைக்கதிகமாகவே இருக்கிறது. முதலடியில் இரண்டு எதுகை விழுந்து விட்டதால் மோனை அவசியமில்லை. ஆனால் அங்கும் ‘யா’வுக்கு ‘இ’ மோனையாக விழுகிறது. சொல்லாட்சியில் கவிஞர் வல்லவராய் இருப்பதால் அவரால் தேவைக்கதிகமாகவே எதுகைகளையும், மோனைகளையும் அள்ளி வீச முடிகிறது. தமிழ்ப் பாட்டில் எதுகை மோனை நயம் அதிகமாயிருப்பது குற்றமல்ல, தனிச்சிறப்பு எனக் கருதப்படுகிறது என்பதையும் நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
நிச்சயமாக இது Blank Verse அல்ல. அதில் எதுகையே இருக்கக் கூடாது. செல்வராசனின் கவி அதற்கு முற்றிலும் முரண். அப்படியானால், இது Verse Libre ஆக இருக்கலாமோ? அதுவும் முடியாது. ஏனெனில் அளவொத்த அடிகள், அதுவும் தளைச் சிறப்புக் கொண்டவை, எதுகை மோனை எல்லாம் கொண்டவை, எப்படி Verse Libre ஆக முடியும்? அதுவும் முடியாது. ஆகவே செல்வராசனின் கவியரங்கக் கவிதைகள் Blank Vesre அல்ல’ வேறு பாவினம். உண்மையைச் சொல்லப்போனால் செல்வராசன் இதுவரை எழுதாத பாவினங்களில் ஒன்றுதான் Blank Verse. அவர் எதுகையற்ற பாட்டு எழுதினதே கிடையாது. எதுகையற்ற பாட்டுத்தான் Blank Verse.
ஏன், இந்தப் பட்டதாரிச் சிறுகதையாளர் பேசிய கூட்டத்திலேயே செல்வராசனின் கவி மழை பொழிந்தது. அதுகூட ப·றொடை வெண்பா (சிலர் இதைக் கலி வெண்பா என்று அழைத்தலும் உண்டு)வில் தான் பொழிந்தது. உதாரணத்திற்குச் சில வரிகளை இங்கு தருகிறேன். சீரமைதி, தளையமைதி, எதுகை, மோனை எல்லாம் சரிவர அமைந்த ப·றொடை அது:-
‘……….
பாராட்டைப் பெற்றவர்கள் பாலவும் பீரிசுடன்
சீராளன் ஆறுமுகச் செல்வனும் – ஆராய்ந்து
செய்யும் கருமம் சிறப்பாகச் செய்பவர்கள்
எய்யும் இலக்கறிந்தே எய்பவர்கள் – ஐயமிவண்
சற்றுமில்லை அன்னார்கள் காரியத்தைச் சாதிப்பர்
முற்றும் சிறப்பாய் முடிப்பார்கள்….!’
இவ்வாறு அழகுறச் செல்லும் ப·றொடையே இது. ஆனால் Blank Verse தமிழிலும் உண்டு. அது ஒரு வகை ஆசிரியம். ஆசிரியத்தில் எதுகை வரலாம்; அல்லது வராது விடலாம்.
அளவொத்த அடி ,எதுகை இன்மை, மோனை இருத்தல் அல்லது இல்லாதிருத்தல்
ஒரே வகைச் சீர் இவை எல்லாம் அமைந்த எதுகை அற்ற நிலை மண்டில ஆசிரியம் – அதாவது கடைசியடிக்கு முன்னடி முச்சீராக வராத ஆசிரியம் –
ஏறக்குறைய, ஏன் முற்றாகவே ஆங்கில Blank Verse இற்குச் சமம் என்று கூறலாம். ஆனால் இவ்வகை Blank Verse தமிழில் கவிஞர்களின் விருப்பினை ஏனோ இதுவரை பெறவில்லை. செல்வராசனும் இதுவரை அதனைக் கையாண்டது கிடையாது. அவர் இதுவரை எழுதாத பாவினம் உண்டானால் அது Blank Verse தான்.
விஷயம் இவ்வாறிருக்க செல்வராசனின் கவிதையை ஆராய்ந்து, அது Blank Verse என்கிறார் பட்டதாரிச் சிறுகதையாசிரியர், ஒப்பியல் யாப்பிலக்கணம் அறிந்த மேதாவி போல! ‘தேவதைகள் போவதற்கஞ்சும் இடங்களிலும் குட்டிச் சாத்தான் நாணாது செல்லுமாம்’ என்ற வசனம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது, இதைப் பார்க்கும்பொழுது!
நன்றி: மீள்பிரசுரம்: 31 ஜூலை 1970 – தேசாபிமானி –
வசந்தம் நவம்பர் 1965
மீள்பிரசுரம்: பதிவுகள் மார்ச் 2004; இதழ் 51
http://www.geotamil.com/pathivukal/ankonblankverse.html