மொழி என்பது காலந்தோறும் மாறிக்கொண்டே வரும். மாற்றத்தைப் படைப்பாளிகள் தமது படைப்பில் பதிந்து படைப்பாக்குவர். தமிழ் மொழி பற்றியச் சிந்தனை தொல்காப்பியர் காலம் முதல் தொடங்கி வந்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் தமிழ் மொழி மூவழக்கு நிலையாக இருந்தது.
அதாவது செய்யுள் வழக்கு, உரைநடை வழக்கு, பேச்சு வழக்கு என்ற நிலையில் மொழி விளங்கியது. இந்த நிலை ஐரோப்பியர் காலத்திற்குப் பின் மாறிவிட்டது. காரணம் பா வகையும் (செய்யுள் வழக்கு) உரைநடையும் இலக்கியப் படைப்பிற்குரிய இருவகைகளாக மாறின. பொதுப் பேச்சு வழக்கும் தமக்குரிய எழுதும் சூழல்களைப் பெருக்கிக் கொண்டது. காலப்போக்கில் உயர் வழக்கு என்று ஒன்றும் பேச்சு வழக்கு என்று ஒன்றும் உரைநடையில் உருவாகி தனித்தனிச் சூழல்களைத் தத்தமது பயன்பாட்டிற்கு அமைத்துக் கொண்டன. இதன் பயனாய் தமிழில் இரட்டை வழக்கு நிலை உருவாகியது என்று ஆரோக்கியநாதன் கூறுகிறார்.
,மேலும் சண்முகம்பிள்ளை சில ஆண்டுகளுக்கு முன் உயர்வழக்குப் பயன்பட்ட சில சூழல்களில் தற்போது பேச்சு வழக்குப் பயன்படுகிறது என்று கூறுகிறார். இன்றையப் பத்திரிகைகள் சிறுகதைகளைப் பேச்சு வழக்கிலேயே முழுதும் வெளியிடுகின்றன என்று கூறலாம். இதன் தொடர்ச்சி நவீன இலக்கியங்களில் தொடர்ந்து காணமுடிகின்றது.
நவீன இலக்கியங்களில் படைப்பாளியை இனங்கண்டு கொள்வதற்கு நடை பெரிதும் பயன்படுகின்றது. நடை என்பது படைப்பாளியின் அனுகுமுறை என்று கூறலாம். இது அருமையான நடை, இவர் நடை அழகானது. இந்த நடை மோசமானது என்றெல்லாம் எவரும் கூறமுடியும்.ஆனால் நடை என்றால் என்ன? என்ற வினாவிற்கு விடையளிப்பது எளிதன்று. அதனை இனங்கண்டு கொள்வதற்கான வரன்முறையாக்கப்பட்ட உத்திகளையு ம் காண முடிவதில்லை1 என்பர் நீதிவாணன். ஆனாலும் நடை என்பது பாஷையின் போக்கு, (Style in Langage) என்று தமிழிப் பேரகராதி கூறுகின்றது. தொல்காப்பியர் நடை என்னும் சொல்லாட்சியை பல இடங்களில் கையாண்டுள்ளார். எனவே நடை என்னும் சொல் பழமையான சொல்லாகக் கருதலாம்.
பிளாக் நம்பர் : 27 திர்லோக்புரி : கதைக்கரு
இக்கதை சுபமங்களா இதழில் வெளிவந்த கதை. இந்தக் கதையின் ஆசிரியர் சாரு நிவேதிதா, கதையின் பின்புலம் தில்லியைக் கொண்டுள்ளது. அதாவது இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தப் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தைப் பற்றிய கதை. இக்கதையில் தலைமை கதைசொல்லி அவரது மனைவி மீனா மகள் ரேஷ்மா சிறுவன்: ரேக்கி, சிறுவனின் தாய் ஜஸ்பீர், போன்ற பாத்திரங்கள் இடம்பெறுகின்றன. பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு சீக்கியர்களை ஒரு பிரிவைச் சார்ந்தவர்கள் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதில் இருந்து ரேக்கியைக் காப்பாற்ற முயற்சித்து முடியாமல் தவிக்கும் தலைமைப் பாத்திரம், இங்கு தலைமைப் பாத்திரம் சாரு நிவேதிதா, வாகக் கூட இருக்கலாம். காரணம் இவர் 1978-இலிருந்து 1990 வரை தில்லியில் வசித்து வந்தார் என்று இரண்டாம் ஆட்டம் நூலின் முன்பகுதி கூறுகிறது.
புனைகதை நடை
இந்தக் கதை தமிழில் வெளிவந்தக் கதை. இதில் சாரு நிவேதிதாவின் மொழி அணுகுமுறை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. நடையியல் ஆய்விற்கு நிலை, பின்னணி, கருத்து, வடிவம்2 ஆகிய நான்கும் முக்கியமானவை என்று நீதிவாணன் கூறுகிறார்.
நிலை :
நிலை என்பது படைப்பாளி – படிப்போர் ஆகிய இருவரது மனநிலை அல்லது பக்குவத்தைக் குறிப்பதாகும். படைப்பாளி எந்த மனநிலையில் நின்று படைப்பினை ஆக்கினன் என்று தெரிந்து கொண்டு அதே நிலையைப் படிப்பாளியும் எட்டினால் தான் இலக்கியச் சுவைப்பு முழுமையாக நிகழும் என்பர் நீதிவாணன். இக்கதையில் சாரு நிவேதிதா உணர்ச்சியின் கொந்தளிப்பில் இருந்து தம் கண்முன் காண்கிற வன்முறை வெறியாட்டங்களைப் பதிவு செய்கிறார். அதனால் தான் கதையில் உயிரோட்டம் ததும்பி நிற்கிறது. ‘எரியும் பஸ்களைப் பார்த்ததும் என்னைப் பயம் தொற்றிக் கொள்ள நான் நேராக வீட்டுக்குத் திரும்பினேன் அன்று பூராவும் ரேக்கி எங்கள்
வீட்டுக்கு வரவேயில்லை3 என்றும், ‘நான்கு பேர் உயிரோடு கொளுத்தப்பட்டு எரிந்து கொண்டிருந்தார்கள். தீப்பிடித்த நிலையில் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்த அவர்களை, சுற்றி நின்றிருந்த கும்பல் கற்களால் அடித்துக் கொண்டிருந்தது. வேறு சிலர் தங்கள் கைகளில் வைத்திருந்த கம்புகளால் அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள்4 என்றும் கதையாசிரியர் எழுதுவதில் இருந்து மொழியியலின் ஷநிலை| நடையியலின் உத்தி நன்கு வெளிப்படுகிறது. இதன் வழியாக கதையின் ஆழம், உணர்வு, போன்றவை தெளிவாகின்றன. கதையை அமைக்க உதவும் கூறுவாக இது விளங்குகின்றது.
பின்னணி :
நிலையின் அடுத்தத் தேவை ஷஒரு படைப்பு எந்தப் பின்னணியில் ஆக்கப்பட்டதென்பதைப் புரிந்து கொள்வது ஆகும், பின்னணியைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் அது வெறும் தகவல்களாக மாறிவிடுகின்றன. புனைகதையின் இயல்பு கதையில் பின்னணியை எளிமையாகவும்,
தெளிவாகவும் அமைப்பது தான். கதையாசிரியர் சாரு நிவேதிதா, எனது கதையின் பின்னணியை இவ்வாறு கூறுகிறார். ‘ஞாயிற்றுக் கிழமைக்காக ரேக்கியும், ரேஷ்மாவும் ஆசையுடன் காத்துக் கொண்டிருந்தபோது அதற்கு முன்னதாக புதன் கிழமை காலை பத்து மணி அளவில் அந்தச் செய்தி காட்டுத் தீயைப் போல் பரவி எங்கள் மயூர் விஹாரை வந்து அடைந்தது. அன்று எனக்கு இலேசான ஜீரமாக இருந்ததால். நான் அன்றைக்கு அலுவலகம் போகவில்லை. நான் போகாததால் மீனாவும் போகவில்லை. அப்போது பூஜா விடுமுறையாக இருந்ததால், ரேஷ்மாவை கிரஷ்ஷில் விட்டுவிட்டு வரவேண்டும். ஆனால் நாங்கள் இருவருமே வீட்டில் இருந்ததால் ரேஷ்மாவும் இரஷ்ஷீக்குப் போகவில்லை. அப்போது தான் பிரதம மந்திரி சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தி வந்தது முதலில் புரளி என்று நினைத்தோம்.பிறகு கொஞ்ச நேரத்தில் அந்தச் செய்தி உண்மைதான் என்று தெரிந்துவிட்டது5 இவ்வாறு ஆசிரியர் கதை கூறுவதால் கதையின் பின்புலம்
நன்கு தெரிகின்றது.
மேலும் ஆசிரியரின் உணர்வு வெளிப்பாடு புனைகதையில் வெளிப்படுகிறது. காலையில் எழுந்து திர்லோக்புரி சென்றேன். சாலையிலும், தெருவிலும் கருகிய உடல்களும், அடித்துக் கொல்லப்பட்ட உடல்களும், துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளும் இறைந்து கிடந்தன. கிட்டத்தட்ட ஐநூறு உடல்களாவது இருக்கலாம் என்று தோன்றியது. 27வது பிளாக்கின் எல்லா வீடுகளுமே எரிந்து கரிக்கட்டைகளாக நின்றன. ரேக்கியின் வீடும், தப்பியிருக்கவில்லை6 இவ்வாறான கொடுமையானச் செய்தி கதையில் பதிவு பெறுகின்றது. 1984 ஆம் ஆண்டினைப் பற்றி தெரிந்தவர்கள், அந்த வன்முறை நிகழ்வினைப் புரிந்துகொண்டவர்கள் மட்டும்தான் இந்த துன்ப நிகழ்வை உணர முடியும். அந்த வரலாற்றை அறியாதவர்கள் இக்கதையை ஒரு புனைவாக ஒரு செய்தியாக மட்டுமே பார்க்க முடியும்.
ஒரு படைப்பாளியின் மனநிலை அல்லது அறிவு நிலையும் காலப்பின்னணி. அல்லது இடப்பின்னணியும் உறுதியாக அவர் எடுத்துக் கூற விரும்பும் கருத்தினையும் கையாளவிருக்கிற உருவத்தையும் பாதிக்கின்றன. சங்ககாலப் புலவர் ஒருவர் பக்திக் காலத்திலே வாழ்ந்திருப்பாரென்றால் நிச்சயமாக விருத்தப்பாவிலே ஒரு சமய தத்துவத்தைப் பாடியிருப்பார், எதுவை, மோனைகள் அடிசீர் தவறாமல் பயன்படுத்தப்பட்டிருக்கும்7 என்று நடையியலாளர் நீதிவாணன் கூறுவது ஏற்புடையதே, படைப்பு சமுதாயத்தை பின்புலமாகக் கொண்டு விளங்குகிறது என்பதை சாரு நிவேதிதா கதையின் பின்னணியாக வைத்துக்கொண்டு கதையை நகர்த்திச் செல்கிறார்.
கருத்து
ஒரு படைப்பாளியின் நடையை உருவாக்குவதில் பெரும்பங்கு பெறுபவை அவர் மேற்கொண்ட கருத்து. அக்கருத்தினை அவர் பெறுவதற்கும், காரணமாகவிருந்த காலப்பின்னணி, அக்கருத்திற்கு அவர் தந்த வடிவம் மூன்றுமேயாகும். இம்மூன்றுமே நடையை உருவாக்கும்8 என்ற அடிப்படையில் பிளாக் நம்பர் 27: கதைப்புனைவில் சாருவின் நடை அதன் கருத்தை மையமாக வைத்து விளங்குகிறது. அதாவது அன்றைய பாரதப் பிரதமர் இறந்துவிட்டார். சீக்கியர்கள் வாழும் பகுதியில் உள்ளவர்கள் ஒரு சிலர் கொண்டு குவித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது, நாட்டில் புதிய பிரதமராக ராஜீவ் காந்தி பதவியேற்றுவிட்டார் அவர் அறிக்கை விடுகிறார். நடு இரவில், புதிய பிரதமர் தூர்தர்ஷனில் பேசினார். மறைந்த பிரதமர் என்னுடைய அன்னை மட்டுமல்லளூ இந்தப் பாரதம் முழுமைக்கும் அன்னையாக விளங்கினார். அடுத்த மனிதரைக் கொல்லாதீர்கள். அடுத்த மனிதர் மீதான வெறுப்பைக் கொல்லுங்கள் என்று சொன்ன அந்த அன்னையின் வாசகங்களை நாம் இந்த சோதனையான தருணத்தில் நினைவுபடுத்திக் கொண்டு அமைதியையும், பொறுமையையம் கடைப்பிடித்து உலகிற்கு பாரதத்தின் பண்பை எடுத்துக் காட்டுவோம்’ என்று தெளிவான அமைதியான குரலில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.9
ஆனால் இவரது வேண்டுகோளை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கதையின் கருவாக சாரு புனைந்துள்ளார், வன்முறையாளர்கள் பிரதமரின் இறப்பினை ஈடு செய்வதற்காக பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்துவிட்டனர். ஆனால் அரசம், காவல் துறையும் பொய்யானத் தகவல்களைத் தான் செய்தியாக கொடுத்துள்ளன என்ற கருத்தை சாரு தமது கதையில் புனைந்துள்ளார். அதாவது, ‘ரேடியோ செய்தியில் இன்று கலவரம் நடக்கும் இடங்களுக்கு ராணுவம் அனுப்பப்பட்டிருக்கிறது என்றும், நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் செய்தி கேட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ராணுவமோ, போலீஸோ எங்கள் பகுதிக்கு வரவில்லை’. இந்த அறிவிப்பு போலித்தனமான அறிவிப்பாக இருந்தது என்பதை தமது கதையில் புனைந்து உண்மையான கருத்தை வெளிப்படுத்துகிறார். கருத்தை வெளிப்படுத்துவது கதையின் சுவையை அதிகரிக்கும் இது நடையாய்வில் முக்கியமான ஒன்று. கதையில் சாரு சொல்லும் உண்மை. ‘சாலை நெடுகிலும் ஒரே பணங்களாகக் கிடக்க ஒரு ஆள் அந்தப் பிணங்களை எண்ணிக்கொண்டிருந்தான். யார் நீங்கள்? என்று கேட்டேன். ஜர்னலிஸ்ட் என்றான் மேலும் சொன்னான் இதுவரை 639 பிணங்களை எண்ணியிருக்கிறேன். நீங்களும் சேர்ந்து எனக்கு உதவி செய்யுங்கள். குறைந்த பட்சம் இந்தப் பிணங்கள் எவ்வளவு என்று எண்ணியாவது உலகுக்குச் சொல்வோம்’10 என்று கதையை புனையும் சாரு நிவேதிதா, அதற்கு அரசு தரப்பில் இருந்த பதிலையும் புனைகிறார், இது கதைக்கருவின் போக்கு கதையின் கருத்து வெளிப்பாடு எனலாம்.
‘அன்றைய இரவு டி.வியில் இன்று பதினைந்து பேர் அல்லது ஆநேகமாக இருபது பேர் இறந்திருக்கலாம் ஆனாலும் நிலைமை கட்டுக்குள் தான் இருக்கிறது என்று தெரிவித்தார் போலீஸ் கமிஷனர். அடுத்துப் பேசிய கவர்னர், நிலைமை கட்டுக்குள் தான் இருக்கிறது. இன்று எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது என்று சொன்னார். ஆனால் பி.பி.சில் கேட்டபோது இன்றைய தினம் தான் இந்த மூன்று நாட்களிலேயே மிகவும் உச்சகட்ட கலவரங்கள் நடந்த தினமாகத் தெரிவிக்கிறது’11 என்று கதையை நகர்த்திச் செல்வது கருத்தை முழுமையாக விளக்கப் படைப்பாளிகள் கையாளுகின்ற நடையியல் உத்தி ஆகும்.
ஒருவருடைய நடையே அவருடைய உள்ளம் என்றும் நடையினை வைத்தே ஆசிரியனின் இயல்பை உணர முடியும் என்றும் கூறுவர். நடைக்கும் படைப்பாளியின் உள்ளத்திற்கும் பொதுவாக நெருங்கிய தொடர்பு உண்டு, உளவியலின் ஒரு கூறாகவே அவர் தம் நடையியல்பு திகழ்கிறது எனலாம்’12 மேலும் படைப்பாளியின் உள்ளத்தில் உண்மையும் உறுதியும் சிறந்து விளங்கினால் அவருடைய நடை திட்பமும் நுட்பமும் அமைந்ததாகும். அவருடைய உள்ளத்தில் தெளிவு இருந்தால் நடையில் எளிமை விளங்கும். அவருடைய உள்ளத்தில் ஆர்வம் மிகுதியினால் நடையில் ஆற்றல் மிகுதியாகும். அவருடைய உள்ளத்தில் துன்ப உணர்வு பெருகினால் நடையில் சோர்வும் குழைவும் பெருகும் அவருடைய உள்ளத்தில் இன்ப உணர்வு பெருகினால் நடையில் சுவையும் கவர்ச்சியும் பெருகும். அவருடைய உள்ளத்தில் குழப்பமும் கலக்கமும் இருந்தால் நடையில் சிக்கலும் தடுமாற்றமும் காணப்படும்’ 13 என்று டாக்டர் மு.வ. கூறுவது இங்கு எண்ணத்தக்கது. இந்த அடிப்படையில் சாரு கருத்தை தமது கதையில் படைத்துள்ளார். படைப்பாளிகள் எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியாத படைப்பினால் பயனேதுமில்லை என்பதனால் இக்கதையில் வரும் கருத்து சாருவைப் புரிந்துகொள்ள அவரது நடைத்திறத்தைப் புரிந்து கொள்ள உறுதுணையாக இருக்கிறது.
முடிவுரை
படைப்பாளிகளுக்கு ஒரே விதமான நடை இருப்பதில்லை என்பதை சாரு நிவேதிதாவின் நடையமைப்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்தக்கதையில் கையாண்டுள்ள மொழி நடையைத் தற்போது புனைவுகளில் சாரு நிவேதிதா கையாளவில்லை. இது நடைமாற்றத்தைக் குறிப்பிடுகிறது, படைப்பின் கருவும் காலத்திற்கேற்ப மாறுபடும் அதுபோல நடையும் காலத்திற்கேற்ப மாறுபடும்.
குறிப்புகள்
1. ஜெ.நீதிவாணன் (க.ஆ.), வையை 5 – பக்.137-138.
2. ஜெ. நீதிவாணன், நடையியல், ப.10.
3. சுபமங்களா இதழ் தொகுப்பு, ப.168.
4. மேலது, ப.169.
5. மேலது, ப.168.
6. மேலது, ப.174.
7. ஜெ.நீதிவாணன் (க.ஆ.), வையை 5, ப.139.
8. ஜெ.நீதிவாணன் (க.ஆ.), வையை 1, ப.57.
9. சுபமங்களா, இதழ் தொகுப்பு, ப.169.
10. மேலது, ப.171.
11. மேலது, ப.174.
12. இ.சுந்தரமூர்த்தி நடையியல் சிந்தனை, ப.25.
13. மு.வரதராசன், இலக்கியத்திறன், ப.238.
kailairavisankar@gmail.com