வாசிப்பும் யோசிப்பும் 97 , 98 & 99

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

வாசிப்பும் யோசிப்பும் 97 : ஒரு கவிதையென்ற உரைநடை பற்றிச் சில வரிகள்…..

அண்மைக்காலமாக வெளிவரும் கவிதைகள் என்ற பெயரில் வரும் படைப்புகளைப் படிக்கும்போது ஒரு விடயத்தை அவதானிக்க முடிகிறது. கவித்துவமான தலைப்புகளுக்காக நேரத்தைச்செலவிடும் அவ்விதமான படைப்புகளைப் படைப்பவர்கள் கவிதையென்ற பெயரில் எழுதுபவையெல்லாம் கவிதைகளாக எனக்குத் தெரியவில்லையே. உங்களுக்குத் தெரிகிறதா?

உதாரணத்துக்குக் கீழுள்ள கவிதையென்ற பெயரில் வந்துள்ள படைப்பினை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்”

கவிதையின் தலைப்பு: மெய்நிகர் தீபம்

கவிதை கீழுள்ளவாறு செல்கிறது.  வரிகளென்ற பெயரில் முறித்து முறித்து எழுதப்பட்டிருந்த படைப்பினை ஒரு மாறுதலுக்காக முறிக்காமல் எழுதியிருக்கின்றேன்.

“மெட்ரோபாலிடன் நகரின் வேகம் பரபரக்கும் சாலை அது. பின்னிருக்கையில் உட்காரப் பழகாத மலரொன்றை அமர்த்தியிருக்கிறான் தகப்பனெனப்படுபவன். செல்பேசியில் தன் காதலியோடு உல்லாசித்தபடியே செலுத்துகிறான். இருசக்கர வாகனத்தை. இடையிடையே வெடித்துச் சிரிக்கிறான். அப்போதெல்லாம் வாகனம் சமன் குலைகிறது.”

இவ்விதமாக நீண்டு செல்கிறது கவிதையென்ற அந்தப்படைப்பு. இதனைக்கவிதையென்று கூறாமல் வசன கவிதை என்று கூறியிருக்கலாமா என்று சிறிது சிந்தித்துப்பார்த்தேன். அப்படியும் கூறுவதற்கில்லை. வசன கவிதையென்றாலும் அங்கும் கவிதைக்குரிய அம்சங்கள் இருக்க வேண்டும். இந்தக்கவிதையென்ற படைப்பிலுள்ள முக்கியமான அம்சங்கள் இரண்டே இரண்டுதாம்.  கவித்துவமான தலைப்பு: மெய் நிகர் தீபம். அடுத்தது கூறும் பொருள். கவிதையென்ற படைப்பு கூறும் பொருளென்ன? விம்ப ஆதிக்கத்தினுள் மூழ்கிக் கிடக்கும் சமுதாயமொன்றில் வாழுகின்றோம். எல்லாவற்றையும் பொழுது போக்கு அம்சங்களாக ஆக்கிவிட்ட விம்ப ஆதிக்கச்சமுதாயம். ‘ஸ்கூட்டரில்’ அல்லது ‘மோட்டார் பைக்’க்கில் செல்லும் தகப்பன் தன் காதலியுடன் செல்பேசி உரையாடலில் மூழ்கிக்கிடக்கின்றான். ஒழுங்காக இவ்விதமான வாகனத்தில் உட்கார்ந்து செல்லப்பழகாத மகள் அவனுக்குப் பின் அமர்ந்திருக்கின்றாள். தகப்பன் செல்போனில் மூழ்கி வாகனத்தைச் செலுத்துவதால் விபத்து நடக்கப்போகின்றது. இந்நிலையில் பார்வையாளரான உங்கள் இரத்த அழுத்தம் கூடுகிறது. அந்தச்சமயம் பார்த்து உங்களது வீட்டுச் சிறுவன் ‘சானலை’ மாற்றி விட்டுச் செல்கின்றான். இப்பொழுது ‘கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு’ பாடியபடி நடிகையின் தரிசனத்தில் உங்கள் இதய இறுக்கம் தளர்ந்து கவனம் திசை திரும்புகிறது. பாடலின் வரிகள் உங்கள் இதயத்தை பின்னோக்கி நகர்த்தி விடுகின்றன. காதலின் தீபத்தினை ஏந்தியபடி காதலனாகவே மாறி விடுகின்றீர்கள். உண்மையான விபத்தொன்றின் நடிப்பாக இருக்கக்கூடிய காட்சி (அல்லது உண்மையான விபத்தொன்று நடைபெறுவதன் காட்சி) பொழுது போக்கு அம்சங்களிலொன்றாக மாறி விடுகின்றது. கற்பனையான காதல் காட்சியொன்று உங்களை உங்கள் வாழ்வின் உண்மையான ஒரு தருணத்தை நோக்கித்தள்ளி விடுகிறது. மெய் நிகர் காதல் தீபத்தை ஏந்தியதொரு காதலனாக உருமாறி விடுகின்றீர்கள்.
இந்தக் கவிதையென்ற படைப்பு கூறும் பொருளில் சிறந்து விளங்குகின்றது. கவித்துவம் மிக்க தலைப்பில் சிறந்து விளங்குகின்றது. ஆனால் கவிதையல்ல.

இதனை எழுதியிருப்பவர்: கவிதா பாரதி. அண்மையில் ‘ரொறாண்டோ’வில் கவிதைக்காக விருது பெற்ற கவிஞர். இவரது விருது பெற்ற கவிதை நூலினை இதுவரை வாசிக்கவில்லை. ஆனால் அதிலுள்ள கவிதைகள் நிச்சயமாக தலைப்பு, கூறும் பொருள், கூறப்படும் மொழி எல்லாவற்றிலும் கவித்துவம் மிக்கதாக இருக்குமென்று நம்புகின்றேன்.

*இந்தப்படைப்பு 17.06.2015 ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ளது.


வாசிப்பும் யோசிப்பும் 98 :  கர்நாடக சங்கீதமும், சங்கீத வாத்தியார் பொன் நடராசாவும்!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

எனக்கு இலக்கியப்படைப்பொன்றினை திறனாய்வு செய்வதைப்போல், படித்து இரசித்துச் சுவைப்பதைப்போல் கர்நாடக சங்கீதத்தை அதன் அடிப்படைகளை உணர்ந்து இரசிக்க வேண்டுமென்றோர் ஆசை உண்டு. நூல்களைப்படிப்பதன் மூலம் முழுமையான புரிதலைப்பெற்றுவிட முடியாது. உண்மையில் ஆசிரியர் ஒருவரிடம் கற்பதன் மூலமே, கடுமையான பயிற்சியின் மூலமே கர்நாடக சங்கீதத்தை அறிந்துகொள்ள முடியுமென்ற முடிவுக்கு என் அனுபவங்களின் அடிப்படையில் வந்திருக்கின்றேன். ஆனால் எனக்கு அவ்விதம் கற்பதில் ஆர்வமில்லை. ‘யு டியூப்பி’லுள்ள கர்நாடக சங்கீதப்பாடங்கள் மூலம் ஓரளவாவது அறிந்துகொண்டால் போதுமானது என்ற முடிவுக்கு வந்தேன்.

ஏழு ஸ்வரங்களைப் பல்வேறு வகைகளில் கலந்து நூற்றுக்கணக்கான இராகங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு இராகத்தையும்  தாளங்களின் அடிப்படையில்  பாட முடியும். அவ்விதமான தாளங்கள் ஒவ்வொன்றும் ஏழு விதமான ‘தாளங்காஸ்’களின் அடிப்படையில் மேலும் உபபிரிவுகளாகப்பிரிக்கப்பட்டுப் பாட முடியும். அதாவது இராகம் ஒன்றானது ஒரு தாளத்தின் பல்வேறு உபபிரிவுகளுக்கேற்ப பாட முடியுமென்பது புரிகிறது. என் புரிதலில் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும். மேலும் ஸ்வரமொன்றினை நீட்டி குறைத்தெல்லாம் தாளங்களைத்திருப்திப்படுத்துவதற்குரிய முறையில் பாட முடியும்.

இவற்றையெல்லாம் முழுமையாக அறிந்துகொள்ள முடியாவிட்டாலும், ஒரு திரைப்படப்பாடலொன்றின் இராகமொன்றினைக் கண்டறியும் திறன் வந்து விட்டாலே போதுமானதென நினைக்கின்றேன். திரைப்படங்களில் குறிப்பிட்ட வகையான இராகங்களையே அதிகம் பாவித்திருப்பார்கள். அவற்றில் ஒன்றிரண்டையாவது அறிந்துகொள்ளும் அறிவு வந்தாலே போதுமானது.

சங்கீதமென்றதும் என் நினைவுக்கு வருபவர் சங்கீத வாத்தியார் பொன் நடராசா அவர்கள். சிறுவயதில் பாடசாலைகளில் சங்கீதமும் கட்டாயப்பாடங்களிலொன்றாக இருந்தது. எதற்காகச் சங்கீதத்தை அவ்விதமாகக் கட்டாயப்பாடமாக வைத்தார்களோ தெரியவில்லை. குரலினிமை மிக்கவர்கள் எடுக்க வேண்டிய பாடமது.

என் ஆரம்பக் கல்வி ஏழாம் வகுப்பு வரையில் வவுனியா மகா வித்தியாலயத்திலேயே கழிந்தது. அக்காலகட்டத்தில் எங்களது சங்கீத வாத்தியாராகவிருந்தவர்தான் பொன் நடராசா அவர்கள். அவரது வகுப்புகளில் சரிகம பதநிச, சநிதப மகரிச என்று ஆரோகண, அவரோகண வரிசைகளில் பாடியது மட்டும்தான் ஞாபகத்திலுள்ளது.

சங்கீத வாத்தியார் பொன் நடராசா அவர்கள் மிகவும் மென்மையான உள்ளம் படைத்தவர். எப்பொழுதும் சந்தனப்பொட்டும், சிரித்த முகமுமாகக் காட்சியளிப்பவர். ஆனால் அவருக்கேற்பட்ட முடிவு மிகவும் துயரினை அளிக்குமொரு நினைவாக என் மனதில் இடம் பெற்றுவிட்டது. 1977இல் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான இனக்கலவரத்தில் , அநுராதபுரப்புகையிரத நிலையத்தில் வைத்துக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டு , எரிக்கப்பட்டதாகக்கேள்விப்பட்டிருக்கின்றேன். அந்த மென்மையான உள்ளத்துக்கு இவ்விதமொரு முடிவு. சங்கீதம் பற்றி எண்ணியதும்  அவர் பற்றிய நினைவுகளும் தோன்றுவது வழக்கம். அச்சமயங்களில் ‘இன, மத ,மொழி, வர்ண வேறுபாடுகளால் மானுடர்கள் அடைந்த துன்பங்கள் போதும். போதும். இனியாவது மனித நேயம் மிக்கவர்களாக மானுடர்கள் ஒன்றுபட்டு வாழ்ந்திட காலம் வழி காட்டட்டும்’ என்றொரு சிந்தனையும் கூடவே எழுவதுமுண்டு.


வாசிப்பும் யோசிப்பும் 99 :  ‘டிராகுலா’ கிறிஸ்தோபர் லீ!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

சேர் கிறிஸ்தோபர் லீ தனது தொண்ணூற்று மூன்றாவது வயதில் ஜூன் 7, 2015 அன்று மறைந்தார் என்ற செய்தியினைக் கேள்விப்பட்டபோது என் சிந்தனைக்குதிரை என் மாணவப்பருவத்துக்கே சென்று விடுகிறது. யாழ் மனோகரா தியேட்டரில் ‘Taste the Blood of Dragula”   என்ற ஆங்கிலப் படத்தைப்பார்த்துவிட்டு வீடு திரும்புகையில் , இருளில் மூழ்கிக் கிடந்த நகரில், காற்றில் அசையும் இலைகள், பனைமரங்கள் எல்லாமே நெஞ்சினில் அச்சத்தை ஏற்படுத்திய தருணம் நினவுக்கு வருகின்றது. அந்த அளவுக்கு அந்தத்திரைப்படத்தில் ‘டிராகுலா’வாக நடித்திருந்த கிறிஸ்தோபர் லீயின் நடிப்பு எங்களை வசியப்படுத்திவிட்டிருந்தது. நான் பார்த்த அவரது ‘டிராகுலா’ திரைப்படங்கள் இரண்டுதாம். ‘Taste the Blood of Dragula’ , ‘Horror of Dragula’ ஆகிய இரு திரைப்படங்களுமே அவை. உயர்ந்த , இரத்தம் வடியும் நீண்ட பற்களுடனான அவரது தோற்றம் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகின்றது. அவ்வளவுதூரம் Dragula பாத்திரத்துக்கு உயிரூட்டி நடித்திருந்தார் கிறிஸ்தோபர் லீ. ‘ஜேம்ஸ் பான்ட்’ என்றால் ‘ஷோன் கானரி’யப்போல், ‘டிராகுலா’ என்றால் கிறிஸ்தோபர் லீ என்று கூறுமளவுக்கு அவரது நடிப்பு ‘டிராகுலா’ திரைப்படங்களில் அமைந்திருந்தது.

கிறிஸ்தோபர் லீ ‘டிராகுலா’ படங்கள் மட்டுமே நடித்தவரல்லர்.  ‘ஸ்டார் வார்ஸ்’, ‘தி லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ (தொகுதி), ‘தி ஹொபிட்’ (தொகுதி), ‘ஸ்டார் வார்ஸ்’ (தொகுதி), ‘ஜேம்ஸ் பான்ட்’ திரைப்படமான ‘த மான் வித் த கோல்டின் கன்’ என்று பல திரைப்படங்களில் வில்லத்தனமான பாத்திரங்களில் நடித்தவர். இறக்கும்போது கூட திரைப்படமொன்றில் நடிப்பதற்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தாரென்று செய்திகள் தெரிவிக்கின்றன.

டென்மார்க் நாட்டைச்சேர்ந்த ‘மொடல்’ ஒருவரை மணந்துகொண்ட அவரது திருமணம் அவரது வாழ்க்கையின் இறுதிவரை நீடித்திருந்தது குறிப்பிடத்தக்க விடயம். . இரண்டாம் உலக மகாயுத்தத்திலும் அவர் நேசநாடுகளுக்காகப்போரிட்டிருக்கின்றார்..

தான் இறக்கும் வரையில் நடித்துக்கொண்டேயிருக்க வேண்டுமென்பதவர் விருப்பம். அதுபோன்றே அவரது மறைவும் அமைந்திருந்ததுதான் ஆச்சரியம்.

என்னைப்பொறுத்தவரையில் கிறிஸ்தோபர் லீயின் திகிலூட்டும் திரைப்படங்கள் என் வாழ்வின் ஒரு காலகட்டத்தில் திகிலூட்டின; களிப்பூட்டின. அந்த வகையில் என்னைக்கவர்ந்த திரைப்பட ஆளுமைகளில் ஒருவராக விளங்குபவர்களில் அவரும் ஒருவர்.