கவிதை: காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (2)அதிகாரம் 110: குறிப்பு அறிதல்.

- பிச்சினிக்காடு இளங்கோ பாவைக்கு இரண்டுபார்வை’

இந்தப்பாவையின் கண்களுக்கு
இரண்டு பார்வை

ஒரு பார்வை
காதலினால் உயிர்குடிக்கும்
நோய் பார்வை

மறுபார்வை
அதுதீர்த்து
உயிர்தளிர்க்கும் மருந்துபார்வை

கணநெரமே கண்களிடை
பார்வை பண்டமாற்றம்
ஆனால்
அதன்
ஆழமும் பொருளும்
அளவற்றவை

திடீரென்று
யாதும் அறியாதவர்போல்
ஏதும் தெரியாதவர்போல்
நாங்கள் பேசுகிறோம்
இது!
பனிபோல் மறையும்
விரைவில் தீரும்
வெறும் காதலர் கோபமே

வெடுக்கென்று பேசுகிறோம்
விரோதிபோல் பார்க்கிறோம்
இதுகூட
உள்ளம் ஒன்றான
எங்களின்
கள்ளநடிப்பே

என்ன இது?
யாரோபோல் எவரோபோல்
பார்க்கிறாள்!

ஓகோ! இதுவும்
காதலைச்சொல்லும்
கண்களே அறிந்த தந்திரம்

சரிதான்…..!

அவள்
ஏக்கம் மிகுதியால்
என்னைப்பார்ப்பது
என்னுள்
அன்புப்பயிர்வளர
அருவிநீர் பாய்வதுபோல்..

நான் பார்க்கிறேன்
நாணத்தால்
நிலம்பார்க்கிறாள்.

சற்றே
பார்க்காதபோது
சற்றே
என்னை
உற்றுப்பார்க்கிறாள்.

எங்கோ பார்ப்பதுபோல்
பாசாங்கு காட்டி
ஓரப்பார்வையாள் உரச
பற்றி எரிவது
நான்
பார்த்துச்சிரிப்பவள்
அவள்

கண்களே பேசத்தொடங்கினால்
காதலரின்
வாய்க்குவேலை வேறு
அது
கண்டிப்பாய் பேச்சில்லை.

pichinikkaduelango@yahoo.com