அரசியலும் ஆட்சியும்: இருபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன ஆனால் “சிங்கள நிட்டாயவோ” இன்னும் இருக்கிறார்கள்.

குசல் பெரேராஇலங்கையில் உள்ள “ நிட்டாயவோ” பற்றி எழுதும்போது பிரட்ரிக் லூயிஸ் சொன்னார், தோற்றத்தில் அவர்கள் குள்ளமாகவும், நீளமான பலம் வாய்ந்த கரங்களையும், கழுகின் பாதத்திலுள்ள நகங்களைப்போல கொக்கி போன்ற நகங்களையும் கொண்டு, கிட்டத்தட்ட மனிதர்களைப் போலத்தான் இருப்பார்கள் என்று.  இந்த நிட்டாயவோக்கள் 15 இலிருந்து 20 வரையான சிறிய குழுக்களாகச் சேர்ந்துதான் வசிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் இரைகளின் வயிற்றை கழுகின் பாதம் போன்ற தங்கள் கூரிய நகங்களால் கொடூரமாக குத்திக் கிழிப்பார்கள், என்று ஹக் நெவில் என்கிற மற்றொரு எழுத்தாளர் கூறியுள்ளார். அவர்கள் வேடர்களின் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றதால்தான் வேடர் இனமே அழிந்து போனது என இரண்டு எழுத்தாளார்களுமே எழுதியுள்ளார்கள்.

 இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு ஞாயிறு தினத்தில்தான் மிகவும் பரிவும் மற்றும் பெரிய மனதும் கொண்ட சிங்கள மக்களுக்கு பல தசாப்தங்களாக தென்பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் சிங்கள நிட்டாவோக்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டபோது அந்தத் தமிழர்களுக்கு புகலிடமும் பாதுகாப்பும் வழங்கி பயங்கரமான ஒரு வாரத்தை ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

பிரசித்தமாகப் புகழப்படும் ஜே.ஆர். ஜெவர்தனாவின் அரசாங்கத்தில் கைத்தொழில் மந்திரியாக இருந்த சிறில் மத்தியுவினால் வழி நடத்தப்பட்ட 15இலிருந்து 20வரையான சூறையாடும் குழுக்கள் ஸ்ரீலங்கா சமூகத்தின் வயிற்றைக் குத்திக் கிழித்தார்கள்.

சுதந்திரத்துக்குப் பின்னான ஸ்ரீலங்காவில் சிங்கள பௌத்த இனவாதத்தின் கட்டடக் கலைஞரைப் போலிருந்த சிறில் மத்தியு, சாதனை படைக்கும் விதத்தில் தான் எழுதிய “சிங்களவரின் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள்” எனும் புத்தகத்தில், “இந்தப் புத்தகத்தை வாசிக்கும் எந்த ஒரு நபரும் அவதானத்துடன் உணரவேண்டியது. இந்த நாட்டில் சிங்கள பௌத்த கலாச்சாரத்துக்கும்; மற்றும் ஸ்ரீலங்காவின் அரசியல் பொருளாதாரப் பின்னணிகளுக்கு எதிராகவும் தமிழ் சக்திகளின் முறையான திட்டமிட்ட ஒரு வளர்ச்சி இருந்து வருகிறது. இப்போது இருக்கும் நிலமைகளைப் பொறுத்த மட்டில் அங்கு சமாதானம் நிலவட்டும் என்று வெறுமனே சொல்வதால் பயனெதுவும் கிடையாது”  என்று எழுதியுள்ளார்.

இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் மீதான நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் 11 ஜூலை, 1983ல் லண்டன் டெய்லி ரெலிகிறாப் எனும் பத்திரிகையின் நிருபர் இயான் வாட்டுக்கு ஜனாதிபதி ஜெயவர்தனா கூறியது, “ நான் இப்போது யாழ்ப்பாண மக்களின் கருத்தைப்பற்றிக் கவலைப்படவில்லை,…n வடக்கின் மீது எந்தளவுக்கு நீங்கள் அழுத்தத்தைப் பிரயோகிக்கிறீர்களோ அந்தளவுக்கு இங்கேயுள்ள சிங்கள மக்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்…. உண்மையில் நான் தமிழ் மக்களை பட்டினி போட்டால் நிச்சயம் சிங்கள மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள” என்று.

மகாவலி அமைச்சர் காமினி திசாநாயக்கா மகிழ்ச்சியுடன் அதே பாஷையில் 5 செப்டம்பர் 1983ல் ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்ற லங்கா ஜாதிக்க தோட்டத் தொழிலாளர் சங்க நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில பேசும்போது : “இன்றும்கூட பாராளுமன்றத்தில் தொண்டமான் அமிர்தலிங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் உள்ள மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது பற்றிப் பேசினார். எங்களது பௌத்த பிக்குகளும் மற்றும் சிங்கள இளைஞர்களும் இதைக்கேட்டு மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளார்கள். மிகுந்த பிரயாசைப்பட்டு அவர்களை நாங்கள் சமாளித்தோம். உங்களைத் தாக்கியவர்கள் யார்? சிங்களவர்கள். உங்களைப் பாதுகாத்தது யார்? சிங்களவர்கள். எனவே உங்களை அடிக்கவும் அணைக்கவும் உள்ளவர்கள் நாங்கள்தான்” என்று கூறியுள்ளார்.

இதுதான் தமிழ் மக்கள்மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி சோதனையான இரத்தம் சிந்தலையும், மற்றும் ஒழுக்கக் கேடானதுமான அழிவுகளை ஏற்படுத்திய இந்த சிங்கள ‘நிட்டாயவோக்களின்’ குரூரமான திட்டமாக இருந்தது. ஆனால் அது ஆயுதம் ஏந்திய தமிழ் இராணுவத்தினருக்கு ஈழம் என்கிற தனியரசு கோரும் கோரிக்கையை நியாயப்படுத்த உதவியது போலாயிற்று. ஸ்ரீலங்கா சமூகத்தின் இந்த உணர்வுபூர்வமான பலவந்த இரத்தப் பெருக்கு மேற்கு நாடுகளில் புலம் பெயர் தமிழர் அமைப்பு ஒன்றை உருவாக்கவும், மற்றும் தமிழ் நாட்டில் மிகப் பெரியளவில் அகதிகளின் பிரசன்னத்தை ஏற்படுத்தவும் உதவியானது. 26 வருடங்களாக அவமானப்பட்டு உடைந்துபோன மிகவும் வலிமையான இந்த தமிழ் சமூகப் பிரிவினர் எல்.ரீ.ரீ.ஈ ஒரு தனியான தமிழீழ அரசை நிறுவித் தங்கள் இழந்த கௌரவத்தை மீண்டும் அடையவேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

இது  சிங்களத் தென் பகுதி நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடம்.  ஸ்ரீலங்கா நீண்ட நெடிய யுத்தத்தை நோக்கித் தள்ளப்படும்போது, முரட்டுத்தன்மையான பாதையும் திமிரான அரசியலும் அரசியல் மோதல்களுக்கான தீர்வாகாது. அதனால்தான் இந்த புலம் பெயர் தமிழர் அமைப்புகள் எல்.ரீ.ரீ.ஈக்கு அதன் ஆயுதக் கிளர்ச்சி என்கிற சமமான மிருகத் தன்மையுடன் தமிழீழ அரசு என்கிற  ஒரு தனிநாட்டை அமைப்பதற்கு நிதியுதவி செய்தன. இதே புலம் பெயர் சமூகம்தான் ராஜபக்ஸ ஆட்சிக்கு எதிரான போர்க் குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கப் படவேண்டும் என்கிற உறுதியான கோரிக்கையுடன் நிற்கிறார்கள். சர்வதேச சமூகத்தினரால் அதை இப்போது குப்பையில் போட முடியாது.

இதன்படி ஜூலை 20ந்திகதி தமிழ் நாட்டு முதலமைச்சரை அதன் அயல்நாட்டு அரசியல் விவகாரங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக உத்தியோகப் பற்றுள்ள விஜயம் ஒன்றை மேற்கொண்ட முதலாவது அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹிலரி ரோட்ஹாம் கிளின்டன் ஆவார். சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆற்றிய உரையில் அமெரிக்கா ஏன் இந்தியா மீது இத்தனை ஆர்வம் கொண்டிருக்கிறது என்பதை வெகு தெளிவாக விளக்கியிருந்தார். ”21ம் நூற்றாண்டின் வரலாற்றின் பெரும் பகுதி ஆசியாவிலே எழுதப்படப் போகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம் மேலும் ஆசியாவின் எதிர்காலத்தின் பெரும்பகுதி உருவகப்படுத்தப் படப்போவது, சாதாரணமாக இந்திய அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்களை மட்டும் பொறுத்ததாக இருக்கப் போவதில்லை, ஆனால் இந்தியாவைச் சுற்றியுள்ள அரசாங்கங்களாலும் மற்றும இந்நாட்டில் வாழும் 1.3 பில்லியன் மக்கள் தொகையினராலுமே அவை உருவாக்கப்படப் போகின்றன”.

கிளின்ரன் அம்மையாரின் கூற்றுப்படி இந்தியா கடந்த வருடம் அமெரிக்காவுடனான அதன் வர்த்தகத் தொடர்புகளை 20விழுக்காட்டினால் அதிகரித்துள்ளது. எனவே அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் அனைத்து வழிகளிலும் புதிய எழுச்சி பெறும் ஆசியாவில் இந்தியா அதன் முக்கிய பூகோள அரசியல் கூட்டாளி ஆகும். ஒரு புதிய ஆசியாவில் உலகிலுள்ள சகல கடும்போக்கு அரசாங்கங்களுக்கும் நிதியுதவி அளித்துவரும் சீனாமீது அமெரிக்கா மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்.

புது தில்லியும் கொழும்பும் இருபக்கத்தாலும் எழுதிவரும் அரசியல் சமன்பாட்டுக்குள் தமிழ் நாட்டு முதலமைச்சர் என்ற வகையில் ஜெயலலிதா, அமெரிக்காவுடன் அதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தக்கவகையில் புதுதில்லி நிருவாகத்துக்கு ஒரு இணக்கப்பாட்டை மேற்கொள்ளத் தக்கதான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்.

எனவேதான் கிளின்ரன் அம்மையார், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழுமியிருந்த பல்வேறு வகையான பார்வையாளர்கள் திரண்டிருந்த பெருங்கூட்டத்தில் “ இந்தியாவின் மாறுபட்ட மற்றும் ஜனநாயக வழிமுறையிலான அமைப்பு ஸ்ரீலங்காவுக்கு ஒரு மாதிரி வடிவமாகக் கொள்ளப்படலாம்” எனக்கூறினார்.

“அனைத்து மக்களும் அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கை முறையில் பங்குபற்றும் போது, அந்த சமூகத்தால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதை சென்னையிலும் தமிழ்நாட்டின் இதரபகுதிகளிலும் உங்களால் கண்கூடாகக் காணமுடியும். ஸ்ரீலங்காவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதேபோன்ற தகுதி இருக்கிறது.” ஸ்ரீலங்கா பற்றி அவர் தெரிவித்த  அந்த ஒற்றை அறிவிப்புக்காக அவருக்குக் கிடைத்த பலத்த கரகோசம் வெகுநேரம் நீண்டு நின்றது. அந்த உணர்வுகளின் அடிப்படையில் தனது தேர்தல்கால சொல்லாட்சிப்படி தமிழக சட்டமன்றத்தில் ஒரு உத்தியோகபூர்வ தீர்மானத்தை நிறைவேற்றியதன் பின்னர் ஜெயலலிதா இப்போது எந்தவகையில் பணியாற்ற வேண்டும் என்பதையும் மேலும் அது தெரியப்படுத்தியது.

ஆனால் மிகவும் துர்ப்பாக்கியமான முறையில், அமெரிக்கா, புது தில்லி, மற்றும் ஜெயலலிதா ஆகிய எல்லோருமே பல்வேறுபட்ட கருத்துள்ள விவாதங்களில் அதிக நம்பிக்கையில்லாத சிங்களப் பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களுடன்தான் பணியாற்ற வேண்டியுள்ளது. ”அனைத்து மக்களும் அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கை முறையில் பங்குபற்றும் போதுதான், ஒரு சமூகத்தால் சாதிக்க முடியும்”என்கிற கருத்து இங்கே கேள்விக் குறியாகிறது.

ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை அடைவதற்காக அவர்கள் கடந்த காலத்திலிருந்தோ அல்லது வேறு எதிலிருந்துமோ பாடங்களைக் கற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றே தெரிகிறது. ஜனாதிபதி ராஜபக்ஸ தானே ஒரு கொள்கைப் பிடிவாத குணமுடைய சிங்களத் தலைவர் என்கிற வகையில் பிரபாகரனது வழி சரியானது என்பதை நிரூபிக்க விரும்பவில்லை. ராஜபக்ஸ முதல் தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட எட்டு நாட்களின்பின் 27 நவம்பர் 2005ல் இடம்பெற்ற தனது மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் மகிந்த ராஜபக்ஸவை கணக்கிட முடியும் என்று தெரிவித்தார்.

இதன்படி இந்த ஆட்சியும் தொடர்ந்து “ஜெயவர்தனாவின் சிந்தனைப்படியேதான்” செயற்படுகிறது. ”மகிந்த சிந்தனைக்கும்” அதற்கும் எதுவித வித்தியாசமுமில்லை. தமிழ் மக்களைப்பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்களின் உயிர்களைப் பற்றியோ அல்லது ராஜபக்ஸவின் ஆட்சியைப் பற்றி அவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது பற்றியோ சிந்திப்பதில்லை. வடக்கின்மீது அதிக அழுத்தங்களைப் பிரயோகித்து சிங்கள மக்களை மகிழ்ச்சிப் படுத்துகிறது. இதைத்தான் 1983ல் ஜனாதிபதி ஜெயவர்தனாவும் சொன்னார்.  அவர் செய்ய விரும்பினார். அதை ஜனாதிபதி ராஜபக்ஸ இப்போது செய்து கொண்டிருக்கிறார். இன்னும் சற்று வித்தியாசத்துடன் ஜெயவர்தனா தொடக்கம் குமாரதுங்க வரையிலான அனைத்து ஜனாதிபதிகளுக்கம் அனைத்து ஆட்சிகளுக்கும் மிகவும் வித்தியாசமான யுத்தம் மூலமாக.

இந்த ராஜபக்ஸ ஆட்சியானது நிறைவேற்றிய போர் திட்டமானது, கிட்டத்தட்ட 2007 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரம்பித்து 22 மாதங்கள் வரையான காலத்தில் மக்களை அவர்கள் கிராமங்களிலிருந்து மொத்தமாக வேரோடு களைந்து இடப்பெயர்வுக்கு ஆளாக்கியது. இந்த 22 மாத காலப்பகுதியில் பயங்கரமான எறிகணை வீச்சுகள், மோட்டார் தாக்குதல்கள், மற்றும் பல்குழல் ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற அனைத்து வகையான சுடுகலன் தாக்குதல்களையும் மேற்கொண்டு மன்னாரின் மேற்குக் கரையோரக் கிராமங்களிலிருந்து மக்களை கூட்டாக முல்லைத்தீவின் கிழக்குக் கரையான முள்ளிவாய்க்காலுக்கு இடம்பெயர வைத்தது.இந்தக் காலப்பகுதியில் எறிகணைகள், மோட்டார்கள், குண்டுகள் என்பன மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மழையெனப் பொழிந்து அந்த நிலங்களை சுத்தமாகத் துவம்சம் செய்ததுடன், ஆண்,பெண், முதியோர், இளையோர், குழந்தைகள் என 280,000 பேர்களை உள்ளக இடம் பெயர்ந்தோர்களாக முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் உள்ள முகாம்களில் கோர்டன் வைஸ் கூறியதைப்போல கூண்டிலடைத்தது. மே 19, 2009ல் இந்த மனிதாபிமானப் போர், பொதுமக்களின் இழப்பு பூச்சியம் என வர்ணிக்கப்பட்ட போர், முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

சிங்கள சமூகம் இதை ஒரு விடுதலைப் போராகவே ஏற்றுக்கொண்டது, ராஜபக்ஸ ஆட்சியினருக்கும் அந்த வழியே தேவையாகவிருந்தது. எனவேதான் போர் முடிவடைந்து இரண்டு வருடங்களின்பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், ராஜபக்ஸ ஆட்சியினர் சமூக நல்லுறவுக்கு தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என வெளியுலகத்துக்கு சொல்வதைப் போலல்லாது, தமிழ் மக்கள் இன்னமும் எந்த வகையில் நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு விரிவான அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்த போது பிரதான எதிர்கட்சிகளான ஐதேக, மற்றும் ஜேவிபி என்பன அதைப்பற்றி விவாதிக்கவோ கலந்தரையாடவோ விரும்பவவில்லை. அதைப் பார்க்காமலிருப்பதே நல்லது என அவர்கள் விரும்பினார்கள்.எ னவேதான் சுமந்திரனின் அறிக்கையைப்பற்றி அவர்கள் இதுவரை பகிரங்கமாக கருத்து எதையும் கூறாதிருக்கிறார்கள்.

பிரதானமான வெகுஜன ஊடகங்கள் அந்த மக்களின் பிரச்சினைகளை தொடுவதற்கே தயாராக இல்லை. வடக்கு கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைப் பிரச்சனையாகப் பேசப்படும் விடயம்பற்றி பத்திரிகைகளில் முன்பக்கச் செய்தியாகவோ, ஆசிரியத் தலையங்கமாகவோ எதுவுமே இடம் பெறவில்லை. எனினும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ககவத்தையைச் சேர்ந்த ஒரு ஒற்றை இராணுவ வீரன் இரத்த வெறிபிடித்து கொலைகளைப் புரிந்ததுக்காகக கொல்லப்பட்டபோது, பல பத்திரிகைகளில் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயத்தோடு முகப்புச் செய்தியாக தொடர்ந்து பலநாட்கள் வெளிவந்தன.

இதன்படி வடக்கு கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் நிலை தொடர்பான பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரனின் அறிக்கை, ககவத்தை தொடர் கொலையாளி ஒருவரை விடவும் மிகவும் அவசியமற்றதாக மாறி தென்னிலங்கைச் சிங்களவர்களின் பார்வையில் படாமலும் கவனிக்கப் படாமலும் போனது. அவர் குறிப்பிட்ட பாதுகாப்புப் படைகளின் பிரசன்னத்தால் இராணுவ மயமாக்கப்பட்ட  நிருவாகம் மற்றும் அரசியல் உடந்தையாளர்களினால் மக்களின் பாரம்பரிய நிலங்கள் அவர்களிடமிருந்து கபளீகரம் செய்யப்பட்டு வாழ்வாதாரம் அற்றவர்களாக அவர்களை இடம்பெயர வைத்திருப்பது,

புலனாய்வுக் கண்காணிப்பின் கீழேயே அவர்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பது, அவர்களது கலாச்சார வாழ்வுகூட மழுங்கடிக்கப்படுவது போன்ற எந்த விடயமுமே தெற்கில் பேசப்படுவதற்கு லாயக்கற்றதாகிவிட்டது.

ஊடகங்களுக்குக் கூட அறிக்கை வெளியிட போதுமானதாக இல்லாமல் போய்விட்டது. ஏராளமான மத்தியுஸ்களும், ஜெயவர்தனாக்களும், மற்றும் திசாநாயக்காக்களும் சேர்ந்து பிடித்து வைத்திருக்கும் இந்த ஆட்சியில், இது சிங்கள நிட்டாயவோக்களின் மனநிலையின் விரிவாக்கத்திலேயே முழுத் தென்பகுதியும் 28 வருடங்களின் பின்பும் வாழுகிறது என்பதையே காட்டுகிறது.

இருப்பினும் இந்த கொடூரமான நிட்டாயவோ மனநிலையின் வளர்க்கப்படும் அரசியல் அதிகாரம் எவ்வளவு காலத்துக்கு தாக்குப் பிடிக்க முடியும் என்பது நச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு கேள்வியாகும். ஹக் நெவில் எழுதியிருப்பது, இறுதியாக வேடர்கள் செய்த தீர்மானத்தின்படி நிட்டாயவோக்களை ஒரு குகையின் மூலையில் அடைத்து அதன் வாயிலை பல நாட்களாக பாரிய தீ மூட்டி தடை செய்தார்கள் .தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்திலும் வாழவேண்டும் என்று வேடர்கள் முடிவெடுத்தார்கள். எங்காவது சிலவேளைகளில் சிலது யாருக்காவது அதிகளவில் அல்லது குறைந்தளவிலாவது வெற்றி வாய்ப்பை உருவாக்கக் கூடும். மார்க்ஸ் இதனை தற்சார்புக் காரணி என குறிப்பிட்டுள்ளார். நவீன அரபு உலகில் தற்போதைய ஜனநாயக சார்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் செயலுக்கு “அராபிய வசந்தம்” என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அப்படியான வெற்றிவாய்ப்பு உருவாகும்போது வரலாறு புதிதாக எழுதப்படும்.

தமிழில்: எஸ்.குமார்

மூலம்: சண்டே லீடர்
நன்றி: தேனீ.காம்
http://www.thenee.com/html/270711-5.html