பாரதியாரின் “புதிய ஆத்திச்சூடி” – வாழ்வியல் சிந்தனைகள்

முன்னுரை

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-‘இந்திய தேசியக் கவிஞர்களுக்கு இடையில் திலகம் போன்றவர் பாரதியார்’ என்று வினோபா பாவேவால் போற்றப் பெற்றவர் பாரதியார். தமிழ் இலக்கிய உலகில் சக்திதாசன் காளிதாசன் ஷெல்லிதாசன் சாவித்திரி என்ற நிருபநேயர் ஒரு உத்தம தேசாபிமானி நித்தியதீரர் போன்ற புனைப்பெயர்களைக் கொண்டவர் பாரதியார் மட்டும் என்றால் மிகையல்ல தான் வாழ்ந்த காலத்தில் உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தவன் பாரதி எனவே தான்

‘எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்’

என்று தனது கடைசிப் பாடலாக இவற்றை எழுதியுள்ளான் ஆம் இது பாரதியின் இறுதிப்பாடல் ‘இப்போது 1921 ஆம் ஆண்டு பாரதி தனது இறுதிக் காலத்தில் ஒரு கவிதை எழுதுகிறான் அது ஒரு வாழ்த்துக் கவிதை வாழ்த்து வழக்கம் போல நாட்டிற்காக? அல்லது பாரத நாட்டு மக்களுக்கா? என்று கேட்டால் வாழ்த்து பாரத சமுதாயத்திற்கு எழுதப்பட்டுள்ளது. இந்த பாரத சமுதாய வாழ்த்தே பாரதியின் கடைசிப்பபடல் என பாரதியின் நண்பர் ஸ்ரீ சக்கரை செட்டியர் கூறுகிறார்.’ என்று முத்துக்கிருஷ்ணன் பதிவு செய்கிறார். இவ்வாறாக எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்த்த பாரதியார் தமது ஆத்திச்சூடியில் மக்கள் வாழ்ககைக்குத் தேவையான பல்வேறான சிந்தனைகளைக் கூறியுள்ளார். இக்கட்டுரை புதிய ஆத்திச்சூடியின் பன்முகத் தன்மைகளை ஆராய்வதாக அமைகிறது. ஆத்திச்சூடி
நீதிக்கருத்துக்களை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக அமைவது ஆத்திச்சூடி அந்த வகையில் ‘ஆத்திச்சூடி பிற்கால நீதிநூல்களில் தலையாயது முழுமையாக அறம் கூறுவது சிறு வயதில் கற்கத் தக்க எளிமையது இது கல்வியுலகின் தொடக்க இலக்கியம் அரிச்சுவடி இலக்கியம் இது தமிழ் நெடுங்கணக்கின் அமைப்பில் பாடப்பெறுவது அகர வரிசை முறையைப் பின்பற்றியது. கட்டளை வாக்கியங்களால் அமைந்தது சொற்செட்டு சொல் அழுத்தம் ஓசையினிமை வாய்ந்தது மாறி வரும் தமிழ்ச்சமூகத்தின் காலக்கண்ணாடியாகத் திகழ்வது. இது சமுதாய இலக்கிய மட்டுமன்று குழந்தை இலக்கிய மட்டுமன்று கொள்கை இலக்கியமும் ஆகும்’ என்று மெய்யப்பன் கூறுகிறார்.

பாரதியார் புதிய ஆத்திச்சூடியின் தந்தை ஆவார். இலக்கியத்தில் பல்வேறான மாற்றங்களைச் செய்த பாரதியார் தமது ஆத்திச்சூடியைப் பல்வேறு வகையான சிந்தனைகளை உள்ளடக்கிப் படைத்துள்ளார்.

    வாழ்வியல்
    ஆளுமை
    புரட்சி
    சுயமரியாதை

போன்ற தன்மைகளில் கருத்துக்களை இளைய தலைமுறையினருக்கு வழங்கியுள்ளார்.

வாழ்வியல்
மக்கள் வாழும் இந்த வாழ்க்கை சிலருக்கு இன்பமாகவும் சிலருக்குத் துன்பமாகவும் அமையும், அதனால் தான் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற சிந்தனை மக்களிடத்தில் உருவாகிவிட்டது. மக்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கின்ற செயல்கள் அவர்களை உயர்த்தவும் செய்யும் அவர்களை சிறுமையடையவும் செய்யும் இதனை வள்ளுவர்

‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்’  – 505

என்கிறார் எனவே வாழ்க்கையில் உயர்வடைய நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்பதை பாரதியார் ஆத்திச்சூடியில் கூறுகிறார். முனிதன் தனக்குத் தேவையான அளவு வருமானம் பெருக்கிய பின்பு அதில் சிறிதளவு ஈகையாகக் கொடுக்க வேண்டும் இதனை பாரதியார்

‘ஈகை திறன்;’  – 1

என்று கூறியுள்ளார். மேலும் கல்வியின் மேன்மையைப் பற்றி பலரும் கூறியுள்ளனர். வள்ளுவர் கல்வி கற்றவன் வாழ வேண்டிய முறையை

‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக’

என்கிறார். படித்தால் மட்டும் போதாது படித்தவன் படிப்பின் வழியில் நின்று வாழ வேண்டும். பாரதியார் தமது ஆத்திச்சூடியில்

‘கற்றது ஒழுகு’  – 13

என்கிறார். கல்வி கற்ற வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்போது தான் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக பொருள் தரும். வாழ்க்கையில் பிறரைச் சார்ந்து வாழக் கூடாது என்பதை வலியுறுத்தும் நோக்கமாக

‘கைத்தொழில் போற்று’

என்கிறார். அதுவே சில நேரங்களில் ஒற்றுமையாகப் பலர் சேர்ந்து தொழில் செய்தால் பெரும் பொருள் ஈட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதனையும் பணத்தை சேர்க்க வேண்டும் என்பதனையும் பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்.

‘கூடித் தொழில் செய்’  – 18
‘செய்வது துணிந்து செய்’ – 31
‘திருவினை வென்று வாழ்’ – 44
‘நாளெல்லாம் வினை செய்’ – 55
‘பணத்தினைப் பெருக்கு; – 65

என்று வாழ்வியல் சிந்தனையை முன்வைக்கிறார் கூடித் தொழில் செய்வதால் பணத்தைப் பெருக்கலாம் என்கின்ற வாழ்வியல் தத்துவத்தைப் பாரதியார் ஆத்திச்சூடியில் விவரித்துள்ளார்.

மேலும் பொய்யான செய்திகளை நம்பாதே என்பதையும் யாரையும் புறம் பேசாதே என்பதையும் பெண்களை மதிக்க வேண்டும் நீதியைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் நேர்மையாகப் பேச வேண்டும் என்பதையும் பிறரை மதிக்க வேண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் ஒவ்வொரு வரிகளில் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.

‘சோதிடந் தனை யிகழ்’ – 35
‘துன்பம் மறந்திடு’ – 46
‘தூற்றுதல் ஒழி’ – 47
‘தையலை உயர்வு செய்’    – 50
‘நீதி நூல் பயில்’ – 57
‘நேர்பட பேசு’ – 61
‘யவணர்போல் முயற்சி கொள்’ – 86
‘யாவரையும் மதித்து வாழ்’ – 87

என்று மனிதன் வாழ வேண்டிய வழிகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். தமிழ் இலக்கியத்தில் மக்கள் வாழ வேண்டிய வழிகளைக் கூறியுள்ள நூல்கள் மிகமிக அதிகமாக உள்ளன. அற இலக்கிய காலங்களில் வெளிவந்த நூல்கள் அனைத்தும் மக்கள் வாழ்வதற்கான கருத்துக்களைக் கூறுவனவாகவே இருக்கின்றன அந்த அடிப்படையில் பாரதியார் கட்டளை வாக்கியத்தில் மிக எளிய தெளிவான சொற்களில் வாழ்வியல் கருத்துக்களை தமது ஆத்திச்சூடியில் பதிவு செய்து வைத்துள்ளார்.

ஆளுமை
ஆளுமை என்பது மனிதன் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்வது ஒரு வகையில் அது ஒருவனுடைய தனித்தன்மையாகக் கூட வெளிப்படும் அது தவிர ஒட்டுமொத்தமான மனிதர்களும் சில பொதுவான ஆளுமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் அந்த மாதிரியான பொதுவான ஆளுமைக் குணங்களைப் பாரதியார் ஆத்திச்சூடியில் கூறியுள்ளார்.

மனிதன் எவ்வாறு நினைக்கிறானோ அதுவாகவே மாறுகிறான் என்பது அறிஞர்கள் கூற்று எனவே பாரதியார் எதையும் உயர்வுள்ளதாக நினைக்க வேண்டும் என்கிறார்.

‘எண்ணுவது உயர்வு’ – 7

உயர்வானவற்றை நினைப்பது மட்டும் போதாது கிடைத்ததை விட்டுவிடக்கூடாது என்பதை ‘கல்வியதை விடேல்’ – 24 என்கிறார். எந்த சூழ்நிலையிலும் மனம் நொந்துபோக கூடாது என்றும் கூறுகிறார்.

‘சிதையா நெஞ்சுகொள்’ – 27
‘சைகையில் பொருளுணர்’ – 33
‘சொல்வது தெளிந்துகொல்’ – 34
‘தோல்வியில் கலங்கேல்’ – 52
‘யௌவனம் காத்தல்செய்’ – 88

என்று மனிதனுக்குத் தேவையான அனைத்து ஆளுமைப் பண்புகளையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார். இவையெல்லாம் பாரதியார் தம் வாழ்நாளில் கடைப்பிடித்தவை என்பது எல்லோரும் அறிந்ததே! பிராய்டின் கருத்துப்படி மனிதனிடத்தில் அமைந்துள்ள ஆளுமை என்பது இடையறாது இயங்கும் உயிர்ப்பாற்றல் மிக்க ஓர் இயற்கைப் போக்காகும் இந்தப் போக்கினைப் பாரதியார் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார் எல்லவாவற்றிலும் தலைமையாக இருக்க வேண்டும் என்பதை

‘வையத் தலைமை கொள்’ – 109

என்கிறார். பொதுவாக பாரதியார் தமது படைப்புகளில் ஆளுமைப் பண்பை எடுத்துக் காட்டியுள்ளார். அது போலவே புதிய ஆத்திச்சூடியில் வளரும் தலைமுறை;கான ஆளுமையைக் கூறியுள்ளார்.

புரட்சிக் கருத்துக்கள்
எங்கு அடக்குமுறை இருக்கின்றதோ அங்கு மீறல்கள் இருக்கும். எவன் அடக்குமுறையை மீறுகிறானோ அவன் புரட்சியாளன் எனப்படுகிறான். சிலர் புரட்சியாளர்களாக உலகத்தில் அறிமுகமாகிவிட்டனர் அதற்குள் காரணம் அவர்களில் உரைவீச்சும் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஆகும் அந்த வகையில் மார்க்ஸ் லெனின் மாவோ போன்றவர்கள் புரட்சிச் சிந்தனையை உலகிற்குக் கொடுத்தவர்கள் அது போல பாரதியார் மிகப் பெரிய புரட்சியாளர் என்பதை அவரது படைப்புகள் உறுதி செய்கின்றன. புதிய ஆத்திச்சூடியிலும் புரட்சிக் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.

‘ஒற்றுமை வலிமையாம்’ – 10
‘கொடுமையை எதிர்த்து நில்’ – 22
‘சாவதற்கு அஞ்சேல்’ – 26
‘சீறுவோர்க்கு சீறு’ – 28
‘நையப் புடை’ – 62
‘பேய்களுக்கு அஞ்சேல்’ – 72
‘போர்த்தொழில் பழகு’ – 74
‘ரௌத்திரம் பழகு’ – 96

இந்த கருத்துக்கள் எல்லாம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்திய மக்களைப் பார்த்து கூறியன. ஆந்நியர் ஆட்சியில் இருந்த இந்திய நாட்டை மீட்பதற்காகப் பாடல்களால் போராடியவன் பாரதி. மக்களைப் பார்த்து ஒற்றுமையாக இருங்கள் கொடுமையைக் கண்டு போராடுங்கள் சாவிற்கு அஞ்சாதீர்கள் சந்தர்ப்பங்களில் சண்டையிடவும் தயாராகுங்கள் அதற்காகப் போர் தொழிலைப் பழகுங்கள் என்று புரட்சிக் கருத்துக்களை விதைத்துள்ளான் ஆத்திச்சூடி வெறுமனே சிறுவர்களுக்கான ஒரு இலக்கிய வகையாகக் கொள்ள முடியாது அது வீரத்தையும் வாழ்வையும் சுயமரியாதையையும் ஆளுமையையும் வளர்த்த ஓர் இலக்கியமாகும் பாரதியார் அந்நியர் ஆட்சியில் இருக்கும் இந்தியா விடுதலை பெற வேண்டி இந்தக் கருத்துக்கைளப் படைத்துள்ளார்.

சுயமரியாதை
எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல முறையான வாழ்க்கையை வாழ வேண்டும். கோழைத்தனமாக தன் மரியாதையை இழந்து வாழ்வதை விரும்பாத பாரதியார் ஆத்திச்சூடியில் சுயமரியாதைக் கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளார்.

‘கீழோர்க்கு அஞ்சேல்’ – 16
‘குன்றென நிமிர்ந்து நில்’ – 17
‘எமலிபோல் வாழேல்’ – 37
‘தாழ்ந்து நடவேல்’ – 43
‘தீயோர்க்கு அஞ்சேல்’ – 45
‘மானம் போற்று’ – 76

பாரதியார் கீழோர் என்று குறிப்பிடுவது அறிவாலும் வீரத்தாலும் செயலாலும் கீழ்மைத்தனமாக உள்ளவர்களைக் குறிப்பிடுகிறார். அவர்களிடம் இருக்கும் செல்வாக்கைக் கண்டு அஞ்சக்கூடாது. அதேபோல எப்போது தலைநிமிர்ந்து இருக்கவேண்டும் எதற்காகவும் நாய் போல் வாழக்கூடாது தாழ்ந்து போகக் கூடாது கெட்டவர்களுக்குப் பயப்படக் கூடாது மானத்தோடு வாழ வேண்டும். மனிதன் இந்தக் கருத்துக்களைப் பின்பற்றினால் எப்போதும் சுய மரியாதையை இழக்கமாட்டான் இவையெல்லாம் நாட்டு மக்களுக்காக மட்டும் கூறியது அல்ல அது போலவே பாரதியாரும் வாழ்ந்து காட்டியவர்.

முடிவுரை
புதிய ஆத்திச்சூடி 110 வரிகளை உடையது பாரதியார் இந்த வகையை நீதி நூல்களுக்கு அடுத்துத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து பாரதிதாசன் வ.சு.ப மாணிக்கம் நாச்சியப்பன் மெய்யப்பன் வாணிதாசன் போன்றவர்கள் புதிய ஆத்திச்சூடி எழுதியுள்ளனர். இங்கு பாரதியார் பன்முகத்தளங்களில் சிந்தித்து 110 ஆத்திச்சூடிகளை எழுதியுள்ளார். இது காலத்தால் அழியாத கருவூலம் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான கருத்துப் பெட்டகம்.

kailairavisankar@gmail.com