கவிஞர் திருமாவளவன் காலமானார். புலம் பெயர் தமிழ் இலக்கியத்தில் கவிதைத்துறையில் முக்கியமான கவிஞர்களிலொருவர். கவிதை, சிறுகதை, கட்டுரை என இலக்கியத்தின் பல்துறைகளிலும் பங்களிப்புச்செய்தவர் கவிஞர் திருமாவளவன். இனி அவர்தம் படைப்புகளினூடு நிலைத்து வாழ்வார். அவரது நினைவாக ‘எதுவரை’ இணைய இதழிலில் வெளியான அவரது கவிதைகள் சிலவற்றைப் பதிவு செய்கின்றோம்.
கவிதைகள் – திருமாவளவன்
1.
எறும்புகள் – சிறு குறிப்பு
எறும்புகளின் வாழ்வு எளிதல்ல
தினமும் தன் வயிற்றுக்காய் நெடுந்தூரம் நடக்கிறது
நாள் முழுவதும் அலைகிறது
வியர்வை ஒழுக ஓடியோடி உழைக்கின்றது
பேரழிவிலிருந்து
தன் சந்ததியைப் பேண பேரச்சம் கொள்கிறது
மேலும்
ஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒவ்வொரு ஊர்
மனிதர்களைப் போல்
எறும்பூர்கள் இரண்டு மோதுவதில்லை என்பது முரண்தான்
இருந்தாலும்
தனதினத்துக்கு வரும் இடர்ப்போதுகளில்
நீண்ட வரிசைகளில் மூட்டை முடிச்சுகளோடு
ஊர் ஊராய் அலைகிறது
அவை நடக்கிற போதில் கால்களின் வழி
துயர் வழிகிறது
ஒன்றையொன்று சந்திக்கும் தருணங்களில்
ஒரு கணம் நின்று
துக்கங்கௌவ விசாரிப்புகளைப் பரிமாறிக் கொள்கின்றன
ஒதுங்க இடங்களற்று கற்களின் கீழும்
மர இடுக்குகளிடையேயும் தங்கிச் சீரழிகிறது
பெரும் படையெடுப்புகளென
திடீரென எழும் தீயிலும்
மற்றும் வெள்ளப் பெருக்குகளிலும்
அவற்றின் ஊர்கள் சின்னாபின்னப்பட்டு விடுகிறது
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டவை போக
எஞ்சியவை
தலைதெறிக்கச் சிதறி ஓடுகின்றன
அகப்பட்ட பொருட்களிலே தொற்றி
நெடுந்தூரம் மிதந்து
புலம் பெயர்ந்து விடுகிறது
பின்னர்
தொடரும் பிறிதொரு அலைவு
புகலிட வாழ்வும் எளிதல்ல
எறும்புக்கும்…
2. இருள் பெருகும் காலம்
கழிந்தது குளிர்காலம்
காற்றில் மெல்ல எழுகிறது சிறு வெப்நன்றிபம்
பனி விலக மண் துலங்க புற்களின் மீது பசுமை படிகிறது
மீள வந்திறங்குகின்றன பறவைகள்
வேனில் முகையவிழும் உறைபனிக் கிளைகளில்
தத்தித்தத்தி இடந்தேடுகிறது குருவி
எதிரே கோடை
கோடையைச் சுகிக்கும் வேட்கை விழிகளில்
வீட்டைச்சுற்றிலும் முகிழ்த்திருக்கிறது ‘டூலிப்’ மொட்டுக்கள்
சொட்டும் துளியென ஒவ்வொன்றும் இரத்தச்சிவப்பில்
கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்ட உறவுகளை நினைவூட்டுகிறது
குழந்தைகள் குருதியில் கோலேச்சியவன் மாண்டுபோனான்
வெறிகொண்டு வெற்றிச் சதுராடும் மறு ஆக்கிரமிப்பாளனின்
காலடிக்கீழ் நசியுன்டு கதறுகிறது
தோற்கடிக்கப்பட்ட என் தேசம்
வாழும் வழியறியா உறவுகள்
உயிர் பிடுங்கும் வலியுடன் தார்ப்பாள் கூடாரங்களுக்குள்
நாளை ஒருகால்
‘காமம் முற்றிக் களிறும் பிடியும் மறிபட்ட நிலமிது’
எனப்பெரும் புலவன் இதைப் பாடிச்செல்தல் கூடும்
நான் வாழுமிக்கணத்தில் ‘டூலிப்’ மலர்களிலிருந்தும்
உடைத்துப் பெருகிவழியும் நினைவும் அடங்முடியாத் துயரும்
தவிக்கிறேன்
வரண்டு கிடக்கிறது விழிக்குளம்
விழிநீர்த் தடத்தில் பூத்திருக்கு
உப்பு
3. பூவரசு
கிழக்கு வேலிக்கரையோரம்
தறித்த பூவரசின் அடிவேர் கிடந்தது
அப்புவுக்கு உரிமைக் கட்டைக்காய்
தறித்ததென்றாள் அம்மா
அப்பா இறந்த போது தெற்குவேலியிலே
மூன்று பூவரசுகள் விறகாச்சு
மூன்றாம் நாள் காடாற்று கருமம்
அன்றும் கணன்றபடி கிடந்தது
நெருப்பு
பெரிய மாமாவின் சவத்தின் முன்னிருந்து
ஒப்புச் சொல்லுகையில்
“மகராசா! படலைக் கரையோரம்
நீ நட்டுவைச்ச பூவரசு கொப்பெறிந்து கிடக்கிறது
உன்கட்டை வேகத்தான் பூவிரித்துப் பாத்திருக்கோ ஐயா”
உயரக் குரல் எடுத்தாள் அம்மா
பாதி வயதில் பறிபோன அவள் தம்பிக்கு
கருமம் நடத்துகையில்
என் வளவு வேலியிலே முதுமரமாய் பூவரசு
உரிமைக் கட்டைக்கு மறக்காமத் தறியுங்கோ”
புலம்பினாள்
போர் தொடரப் பின்னால்
விறகுப் பஞ்சம்
பின் வளவுத் தென்மேற்கு மூலையிலே
கிழட்டுப்பூவரசு
தறிப்பதற்கெண்ணி கோடரி எடுத்தேன்
“உன்னாணை வெட்டாதை; ஒருக்காலும் விடேன்; என்
கட்டை வேக விறகுக்கு எங்கு செல்வாய்”
அடிமரத்தில் குந்திவிட்டாள்.
எவள் எறிந்தாள் பாதிமுலை
ஊர் கலைந்து போயிற்று
ஒரு துருவம் நான்; பிறிதொரு தேசம் அவள்
அம்மாவின் சாவறிந்து பதைபதைத்தோடினேன்
மூலைக்கொருவராய் நின்றனர்
தம்பியர்
மறுநாளில்
அவள் உடல் பார்க்க போனோம்
வாய்விட்டு அழவும் அனுமதிக்கவில்லை
சூழல்
விடுமுறை பார்த்து
ஏழாம்நாள் அந்திமச்சடங்கு
மின் அடுப்புக்கூட அன்று செயலிழந்து போயிற்று
தேவாரம் சொல்லி
கற்பூரம் கொழுத்தி
அவள் பெட்டியின் மேல்வைத்து
கொடுத்துவிட்டு திரும்புகிறோம்
உடலை
இன்று
பனி உறையுந் தேசத்தில்
உயிர்உதிரக் காத்திருக்கிறேன் நான்
இனி
கூடியழ ஊருமில்லை
என் கட்டை வேக ஒற்றை பூவரசுமில்லை
௦
நன்றி ‘எதுவரை’ ஜுலை 07, 2010
கவிஞர் திருமாவளவன் (விக்கிபீடியாவிலிருந்து)
கவிஞர் திருமாவளவன் (1955 – 5 அக்டோபர் 2015) அவர்களது இயற்பெயர் கனகசிங்கம் கருணாகரன். யாழ்ப்பாணம் வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யூனியன் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் கட்டிட தொழில்நுட்ப மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். மறைந்த எழுத்தாளர் ‘உயிர்நிழல்’ கலைச்செல்வனின் சகோதரர். புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்தவர்.
வெளிவந்த நூல்கள்
யுத்தத்தைத் தின்போம் 1999 (மூன்று கவிகளின் தொகுப்பு)
பனிவயல் உழவு 2000 எக்ஸில் வெளியீடு, பிரான்ஸ்.
அஃதே இரவு அஃதே பகல் 2003 மூன்றாவது மனிதன் வெளியீடு, இலங்கை.
இருள்யாழி 2008, காலச்சுவடு வெளியீடு.
சிறு புலர் மனம் திருமாவளவன் கவித்தொகை – 2015 காலச்சுவடு வெளியீடு.
இதழியல் பங்களிப்பு
கனடாவில் இருந்து வெளிவந்த ‘ழ’கரம் (1996-1997)சிற்றிதழின் இணையாசிரியராக இருந்தார்.
விருது
கனடாவில் இயங்கும் தமிழ்த்தோட்டம், திருமாவளவனின் ‘இருள்யாழி’ கவிதைநூலுக்கு பேராசிரியர் ஆ.வி. மயில்வாகனம் ஞாபகார்த்த விருது வழங்கியது.
நன்றி: தமிழ் விக்கிபீடியா