ஈழத்துத் தமிழ்ச்சிறுகதை மூலவர்களில் ஒருவரான சி.வைத்தியலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த நிதி உதவித் திட்டம்.

ஈழத்துத் தமிழ்ச்சிறுகதை மூலவர்களில் ஒருவரான  சி.வைத்தியலிங்கம்

சி. வைத்தியலிங்கம் அவர்களின் புதல்வியான திருமதி யமுனா சுமங்கலி தர்மேந்திரன் லண்டன்  பிரெண்ட் மாநகராட்சி மன்றத்தின் நூலகங்களில் கடந்த முப்பத்தாறு வருடங்களாக பணியாற்றி வருகின்றார். லண்டனில் தமிழ் மொழியை வளர்ப்பதில் பல்வேறு வழிகளில் செயற்பட்டு வருகின்ற யமுனா தர்மேந்திரன், தமிழ் மக்களின் நலன் கருதி ஆயிரக்கணக்கான தமிழ்நூல்களை பிரெண்ட் மாநகராட்சி நூலகங்களில் அறிமுகஞ்செய்து வருவதோடு தமிழ் விழாக்கள் பலவற்றையும் மிகவும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றார். கடந்த ஒன்பது வருடங்களாக மாதந்தோறும் தமிழ் வாசகர் வட்டத்தினை நடாத்தி வரும் திருமதி யமுனா தர்மேந்திரன், அவற்றினூடாக பல்வேறு இலக்கிய ஆளுமைகளின் திறமைகளை கலந்துரையாடல் மூலமாகவும், ஆய்வுகள் மூலமாகவும் வெளிக்கொண்டு வருவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார். இத்தகைய முன்னெடுப்புக்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் திகழ்பவர் லண்டனில் சமூகசேவை மனத்துடன் ‘சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தின்’ முன்னைய தலைவராகவும், தற்போதைய லண்டன் தியாகராஜ உற்சவ விழா நிறுவனத்தின் தலைவராகவும் செயற்பட்டு வரும் அவரது துணைவர் திரு. தருமேந்திரன் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

இத்தகைய செயற்பாடுகளின் மத்தியில் தமது தந்தையான, ‘ஈழத்துச் சிறுகதை முன்னோடி எழுத்தாளர்களின் மூலவராகக் கருதப்படும் சி.வைத்தியலிங்கம் ஞாபகார்த்தமாக’, யாழ் பல்கலைத் தமிழ் வழாகத்தில் தமிழைத் தமது கல்வித்தேர்ச்சிப் பயிற்சியாக (பட்டப்படிப்பு – – Degree) தெரிவுசெய்துள்ள மாணவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாவை வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக இட்டுள்ளனர்.  அதன் மூலமாக வரும் வருமானத்திலிருந்து  தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் நிதியுதவியினைப் பெறுவதற்கான ஒழுங்குகளும்; செய்துள்ளனர். முப்பத்தாறாயிரம் ரூபா மேலதிகமாக அனுப்பப்பட்டு 2015- 2016 கல்வியாண்டில் இத்திட்டம் தொடங்கவுள்ளது.

மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற முடியும் என்பதனையும் தெரிவிக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு என்றும் அழியாது சிரஞ்சீவியாக இருப்பதுபோன்று இந்த நற்பணியும் அழியாது ஒவ்வொரு வருடமும்  தொடர்ந்துகொண்டேயிருக்கும்.

navajothybaylon@hotmail.co.uk