வாசிப்பும், யோசிப்பும் 125 : திருமாவளவனின் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு பற்றி…

1. திருமாவளவனின் ‘தமிழ்க்கனேடியனும் நானும்’ மற்றும் இருப்பு பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் 125 : திருமாவளவனின் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு பற்றி...இருப்பு நிரந்தரமானதல்ல. இருக்கும் மட்டும் பலர் இதனை உணர்வதில்லை. மனிதர் உருவாக்கிய அமைப்பானது பொருளுக்கு முதலிடம் தருகிறது. அதுதான் இருப்பின் பயன் என்பதாக இருப்பினைச் சித்திரிக்கிறது. விளைவு? பொருள் தேடுவதே வாழ்க்கையாகப் பலருக்குப் போய் விடுகிறது. அதிலும் பொருள்மயமான மேற்குலகு நாடுகளின் சமுதாய அமைப்பு மானுட இருப்பினை அந்த அமைப்பின் சிறைக்கைதியாகவே ஆக்கி விடுகிறது. உழைப்பது இருப்புக்கு என்பதாக மாறி விட்டது. அவ்விதம் இருக்க விரும்புவோர், அதுதான் இருப்பின் நோக்கம் என்போர், அதுவே இருப்பின் பயன் என்போர் அவ்விதமே இருந்து போகட்டும். அது அவர்தம் உரிமை. ஆனால் உண்மைக்கலைஞர்கள், இலக்கியவாதிகள் இருப்பினை இவ்விதம் எண்ணுவதில்லை. இவர்களை பொருள்மயமான இருப்பு என்றுமே சிறைப்பிடிப்பதில்லை. இந்த இருப்பினை இவர்கள் தம் இருப்புக்கேற்றபடி மாற்றிவிடுவதில் வல்லவர்கள்.

இவர்களைச்சுற்றி இருப்பவர்களுக்கு இவர்களைப்பார்த்தால் பரிதாபம். இவர்களைப்பார்க்குபோதெல்லாம் ‘இந்தக் கலை, இலக்கியமெல்லாம் சோறு போடுமா? இவற்றால் எவ்வளவு உழைக்கிறாய்?’ என்பதாகவே அவர்களது கேள்விகள், அனுதாபங்கள் மற்றும் ஆலோசனைகளெல்லாமிருக்கும்.

எனக்குத்தெரிந்த பலர் இங்கு வந்து பொருளியல்ரீதியில் உயர்ந்து தொழிலதிபர்களாக விளங்குகின்றார்கள். இன்னும் பலர் சொத்துகளைச்சேர்ப்பதிலேயே குறியாகவிருக்கிறார்கள். அவ்விதமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியினைத்தருகிறது. பாராட்டுகள். ஆனால் அவ்விதம்தான் எல்லாரும் இருப்பார்களென்று அவர்களெண்ணுவதுதான் நகைப்புக்கிடமானது.

மிகுந்த வேடிக்கை என்னவென்றால் தாம் உண்மையான கலை, இலக்கியவாதிகளாகத்தம்மை வெளிக்காட்டிக்கொள்ளும்பலர் கூடத்தம் சொந்த வாழ்வில் இவ்விதம்தானிருக்கின்றார்கள். இவ்விதமான நகல் கலை, இலக்கியவாதிகள் அசல் கலை, இலக்கியவாதிகளைச்சந்திக்கும்போது கலை, இலக்கியம் பற்றி உரையாடுவதில்லை. பொருள் பெருக்குவது பற்றியதாகவே அவர்களும் உரையாடலைத்தொடங்குவார்கள்.

இந்நிலையினை வெளிப்படுத்தும் வகையில் அமரர் திருமாவளவன் தனது கவிதையொன்றில் விபரித்திருக்கின்றார். கவிதையின் பெயர்: ‘தமிழ்க்கனேடியனும் நானும்’. அந்தக் கவிதையினை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


 

தமிழ்க் கனேடியனும் நானும்!

– கவிஞர் திருமாவளவன் –

உடல் உழைத்து
களைத்துச் சோர்ந்த
துளிப்பொழுது அமைதியை
அழித்து
அலறுகிறது தொலைபேசி.

எதிர்முனையில் அவன்.

தீர்மானமாக மறுதலித்தேன்
உன்னுடன் பேசுவதில்
கிஞ்சித்தும்
இசைய மறுக்கிறது
மனது.

முன்னொரு நாளில்
கவிதை பற்றிப் பேசினேன்.
ஒரு கவிதைக்காய்
எவ்வளவு பணக் கிடைக்குமென்றான்
பூக்களின் அழகில் வியந்தேன்
மாலை தொடுத்தால்
பெருந்தொகை
பெறுமென்றான்

காலாற நடந்த
மாலை பொழுதொன்றில்
தேனீர்ச்சாலையுள் நுழைந்தோம்
விலைப்பட்டியலில் குறியாயிருந்தான்

வாழ்வின் இருப்புப் பற்றி
விவாதித்தோம்
ஆயுட்காப்புறுதி செய்து விட்டாயா?
வினாவினான்.

உலகின்
ஒவ்வொரு துளியையும்
பருகத்துடிக்கும் கவிஞன் நான்.

இன்னும் இவனுடன் பேச
என்ன இருக்கிறது?

*** *** *** *** ***

“முன்னொரு நாளில்
கவிதை பற்றிப் பேசினேன்.
ஒரு கவிதைக்காய்
எவ்வளவு பணக் கிடைக்குமென்றான்
பூக்களின் அழகில் வியந்தேன்
மாலை தொடுத்தால்
பெருந்தொகை
பெறுமென்றான்”

என்ற வரிகளைப்படிக்கும்போது இதழ்க்கோடியில் புன்னைகை மின்னி மறைகிறது. ‘பதிவுகள்’ இணையத்தளத்தைக் கடந்த பதினைந்து வருடங்களாக நடாத்திக்கொண்டு வருகின்றேன். எத்தனை கலை, இலக்கியவாதிகள் சந்திக்கும்போது கேட்டிருப்பார்கள் ‘எவ்வளவு பேர் பார்க்கின்றார்கள்? இதனால் எவ்வளவு உழைக்கின்றீர்கள்?’


2. திருமாவளவனின் ‘வாடா மல்லி -3 ‘ கவிதை பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் 125 : திருமாவளவனின் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு பற்றி...மானுட இருப்பென்பது பல்வேறு பருவங்களை உள்ளடக்கியதொன்று. பால்யப் பருவம், பதின்மப்பருவம், வாலிப்பருவம்….. எனப்பல பருவங்களை உள்ளடக்கியது. பதின்மவயதுப்பருவத்து உணர்வுகளில் நிச்சயம் முக்கியம் வகிப்பது எதிர்ப்பாலார் பற்றிய நினைவுகள்தாம். ஆண்களுக்கு அது கோழி கூவும் பருவம். இப்பருவத்தில் எதிர்ப்பாலார் மேல் ஏற்படும் உணர்வுகளை உண்மைக்காதலாக எண்ணி, எண்ணி உருகிு விடுகின்றார்கள். இப்பருவத்து உணர்வுகள் பெரும்பாலும் கால , ஓட்டத்தில் அள்ளூண்டு போய்விடுகின்றன. பின்னர் அவர்கள் வளர்ந்து இருப்பின் சுழல்களுக்குள் அகப்பட்டு , எதிர் நீச்சல் போடத்தொடங்கி விடுகின்றார்கள். தமக்கென்று குடும்பம், குட்டிகளென்று உறவுகளைப் பெருக்கிக்கொள்கின்றார்கள். இச்சமயத்தில் அவ்வப்போது நிறைவேறாத பதின்ம வயது உணர்வுகளை, அவ்வுணர்வுக்குரியவர்களை எண்ணிச் சிற்சில சமயங்களில் பெருமூச்சும் விட்டுக்கொள்கின்றார்கள். அவ்விதமானதொரு சூழலில் இருப்பவனே இக்கவிதை விபரிக்கும் மனிதனும்.

தன் இளம் பருவத்தில் நெஞ்சிற்கினியவளாக விளங்கிப்பின் காணாமல் போனவளைப்பற்றிச் சிந்திக்கின்றான். அவளுடன் பழகிய காலகட்ட நிகழ்வுகளைப்பற்றி எண்ணுகின்றான். அவள் தற்சமயம் எவ்விதம் இருப்பாளோ என்று சிந்திக்கின்றான். அவளைப்பற்றிய அவனது நினைவுகளுக்கோ முடிவில்லை. நிரந்தரமாக அவனுடன் கூடவே தொடரும் நினைவுகளவை. [ திருமாவளவனின் இந்தக் கவிதையை வாசித்தபொழுது எனக்கு எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் எழுதிய சிறுகதையொன்றின் ஞாபகம் எழுகின்றது. ‘கணையாழி’ சஞ்சிகையில் வெளிவந்த சிறுகதையாக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். தன் நெஞ்சுக்கினியவளாக இருந்தவளைச் சந்திக்கும் ஒருவனுக்கு நரையும், தளர்வுமாக மீண்டும் கண்ட அவளது நிலை பற்றிய யதார்த்தம் உறைக்கின்றது என்பதைக் கருவாக வைத்துப்பின்னப்பட்ட சிறுகதை அது. பெயர் ஞாபகமில்லை]. திருமாவளவன் தன் நெஞ்சைக்கவர்ந்த வாடாமல்லி பற்றி மூன்று கவிதைகள் வாடாமல்லி -1, வாடாமல்லி-2 & வாடாமல்லி -3 என மூன்று கவிதைகள் எழுதியிருக்கின்றார். வாடாமல்லி-3 கவிதை பற்றியே இங்கு குறிப்பிட்டுள்ளேன். அது கீழே:

வாடாமல்லி -3

– திருமாவளவன் –

அலைமோதும் கூட்டத்தில்
அவள் முகந்தேடி அலைகிறது
மனது.

அன்றொரு துளிப்பொழுதில்
என்னில் ஒன்றி
கவர்ந்து
காதல் மொழிந்து
பின்
விடை பெறாமல்
விட்டுச் சென்றவள்
அவள் முகந்தேடி அலைகிறது
மனது

தெரு சந்தடியில்
கோவில் நெரிசலில்
விழாக் கூட்டத்தில்
சினிமாக் கொட்டகையில்
பிரயாணக் கும்பலில்
திடீரென
நினைவு விழித்து
அவளோ
என எண்ணித் துடிக்கிறது

புணரும் இரு கரு அரவென
புட்டம் தாண்டி நெளிந்த கூந்தல்
உதிர்ந்து நரைமேய்ந்து
விழி சூழ கருவளையம் படர்ந்து
உளைச்சதை தொங்க
தோல் செத்து
நிமிர்ந்த முலை தளர்ந்து
அவள்
அழகும் அடையாளங்களும்
வீழ்ந்து
அழிந்திருத்தல் கூடும்

நினைவுகள் மட்டும்
யெளவனமாய் எழுகிறது
இன்றும்
அலை மோதும் கூட்டத்தில்
அவள் முகந்தேடி.


3. ஒரு படைப்பின் மொழிபெயர்ப்பு பற்றி…

வாசிப்பும், யோசிப்பும் 125 : திருமாவளவனின் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு பற்றி...மஞ்சுள வெடிவர்தனவின் சிங்கள மொழிக்கவிதைகளைத் தமிழில் வெளியிட்டிருக்கின்றார்கள் எழுநா பதிப்பகத்தினர். அண்மையில் அந்நூலினை வாசித்துக்கொண்டிருந்தபொழுது மொழிபெயர்ப்பு பற்றி அங்கு குறிப்பிட்டிருந்த கருத்துகள் சில என் கவனத்தைக்கவர்ந்தன. நூலின் ‘பதிப்புரை’யில் எழுநா மொழிபெயர்ப்பு பற்றிக்குறிப்பிடுகையில் ‘மொழிபெயர்ப்பு என்பது மீளப்படைத்தல் என்று சொல்வார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.

நூலினைத்தமிழுக்கு மொழிபெயர்த்தவர்கள் ஃபஹீமா ஜஹான் மற்றும் எம்.ரிஷான் ஷெரீப். ரிஷான் ஷெரீப் ‘மொழிபெயர்ப்பாளர் குறிப்புக’ளில் ‘இம் மொழிபெயர்ப்புக் கவிதைகளில் என்னை நீங்கள் காணாது, கவிஞர் மஞ்சுளா வெடிவர்தனாவை நீங்கள் கண்டு கொண்டால் அதுவே அவரது படைப்புகளின் வெற்றியாகும்’ என்று கூறுவார்.

ஃபஹீமா ஜஹான் தனது குறிப்பில் “இக்கவிதைகள் குறித்து ஊடகவியலாளர் இளைய தம்பி தயானந்தாவோடு கதைத்த வேளை ‘முக்கிய மொழிபெயர்ப்பாளர்களின் கவிதை நூல்களினுள் அவர்களும் இருக்கிறார்கள். இக்கவிதைகளினுள் ஃபஹீமா இருக்க வேண்டும் – ஆனால் காணவில்லை செம்மைப்படுத்துங்கள்’ என்று மிகச்சரியாகவே குறிப்பிட்டார். இயலுமானவரையில் இந்தக் கவிதைகளைச் செதுக்கியும் செழுமைப்படுத்தியும் தருகிறோம். நன்றி”

மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் என்னைக் காணாது கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தனவைக் காணுங்கள் என்கின்றார். மொழிபெயர்ப்பாளர் ஃபஹீமா ஜஹான் இக்கவிதைகளில் என்னைக் காணுங்கள் என்கின்றார். பதிப்பகத்தாரோ கவிதைகள் மூலக் கவிதைகளின் மீள்படைப்பு என்று கூறுகின்றார்கள்.

என்னைப்பொறுத்தவரையில் எழுநா கூறுவது சரியே. மொழிபெயர்ப்பென்பது ஒருவகையில் மூலப்படைப்பின் மீள்படைப்பே. அந்த வகையில் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரீப் ‘என்னைக் காணாது கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தனவைக் காணுங்கள் ‘கூறுவதும் ஏற்கத்தக்கதே. இந்த வகையில் மொழிபெயர்ப்பாளர் ஃபஹீமா ஜஹான் ‘ இக்கவிதைகளில் என்னைக் காணுங்கள்’ என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒரு மொழிபெயர்ப்பின் வெற்றியானது பின்வரும் விடயங்களில் தங்கியுள்ளது:

1. மூலப்படைப்பு எழுதப்பட்டிருக்கும் மொழியில் எழுதவும், பேசவும் நன்கு புலமை பெற்றவராக மொழிபெயர்ப்பாளர் இருக்க வேண்டும்.

2. மொழிபெயர்க்கப்படும் மொழியிலும் மொழிபெயர்ப்பாளர் மிகுந்த புலமை வாய்ந்தவராகவிருக்க வேண்டும்.

3. இரு மொழிகளிலும் மட்டுமல்ல, இரு மொழிகளையும் சார்ந்த கலாச்சாரங்களிலும் மிகுந்த பரிச்சயமுள்ளவராக மொழிபெயர்ப்பாளரிருப்பது மொழிபெயர்ப்பின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.

4. இரு மொழிகளிலுல் வழங்கப்படும் மரபு வழக்கான சொற்கள் மற்றும் சொற்களின் மூலம் மற்றும் அவற்றின் வரலாறு , உருவாக்கம் போன்றவற்றில் ஆழமான புலமையுள்ளவராக இருக்க வேண்டும்.

5. மேலும் மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்போது வரிக்கு வரி மொழிபெயர்ப்பார்கள். இன்னும் சிலர் மூலப்படைப்பின் சாரத்தை உள்வாங்கித் தம் மொழியில் மொழிபெயர்ப்பார்கள். ஆனால் திறமையான மொழிபெயர்ப்பாளரொருவர் ஒரு படைப்பினை மொழிபெயர்க்கும்போது இரு முறைகளையும் பொருத்தமாக, தேவைக்கேற்பக்கையாள்வதில் வல்லவராகவிருப்பார்.

முடிவில் திறமையான மொழிபெயர்ப்பானது மூலத்தை எவ்வளவு தூரம் (மொழி மற்றும் கலாச்சாரரீதியாக) மீளப்படைப்பதில் வெற்றியடைந்திருக்கின்றது என்பதில்தான் தங்கியுள்ளது.

இந்நூலின் ‘என்னுரையில்’ மஞ்சுள வெடிவர்தன பின்வருமாறு கூறுவார் ” ஃபஹீமா ஜஹானும், எம்.ரிஷானும் அவர்களின் சிங்கள – தமிழ் அறிவுக்கும், இலக்கிய அறிவுக்கும் , அரசியல் அறிவுக்கும் ஏற்ப நான் சிங்களத்தில் எழுதிய அனைத்தையும் தமிழில் உங்கள் கரங்களில் முன்வைத்திருக்கிறார்கள் என உறுதியாக நம்புகிறேன். நன்றி”. இந்த விடயத்தில் மொழிபெயர்பாளர்கள் எவ்வளவுதூரம் வெற்றியடைந்திருக்கின்றார்கள் என்பதை உறுதியாகக்கூற முடியாது. ஏனெனில் எனக்குச் சிங்கள மொழியில் ஆழ்ந்த புலமை இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு கூறும் விடயம், ஏற்படுத்தும் உணர்வுரீதியிலான தாக்கம், பாவிக்கப்பட்டிருக்கும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் அந்த மொழிபெயர்ப்பின் வெற்றியினை என்னால் ஊகித்திட முடியும். அது பற்றிப்பின்னொரு சமயம் கூறுவேன். ஆனால் இவ்விதமான மொழிபெயர்ப்புப்படைப்புகள் மிக அதிக அளவில் தமிழிலிருந்து சிங்கள மொழிக்கும், சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கும் வெளிவரவேண்டும். இரு சமூகங்களின் மத்தியிலும் ஆழமான புரிந்துணர்வினை ஏற்படுத்த இவ்வகையான மொழிபெயர்ப்புகள் உதவி புரிகின்றன. அந்த வகையில் இம்மொழிபெயர்ப்பு நூலினை வெளியிட்ட எழுநா பதிப்பகத்தாரையும், மொழிபெயர்ப்பாளர்களையும் பாராட்டலாம்.

ngiri2704@rogers.com