நூல் அறிமுகம்: விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு! | மழலையர் மாருதம் நூல் பற்றிய கண்ணோட்டம்!

1. விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு!

விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு!தம்பிலுவில் ஜெகாகிழக்கிலங்கையின் தெற்கே அமைந்துள்ள தம்பிலுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரி நாதனின் கன்னிக் கவிதைத் தொகுதியே விடைதேடி எனும் கவிதை நூலாகும். 100 பக்கங்களில் அமைந்துள்ள இந்தக் கவிதை நூலில் 75 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இக்கவிதைகள் தாயன்பு, தமிழின் சிறப்பு, ஆடவரின் அடக்குமுறை, இனத்துன்புறுத்தல்கள், வன்னிப் போரின் கொடூரம், கடமையுணர்வு, ஆசிரியரின் பெருமை, வாழ்வியல் தரிசனங்கள், மனித நடத்தைக் கோலங்கள், சிறுவர் துஷ்பிரயோகம், காணாமல் போனோர் ஆகிய கருப்பொருட்களில் அமைந்துள்ளன.

தனது 12 ஆவது வயதில் எழுதத் தொடங்கிய இவர் தம்பிலுவில் ஜெகா என்ற புனைப்பெயரிலேயே அதிகம் எழுதியுள்ளார். எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர் அன்று தொடக்கம் இன்று வரை மரபுக் கவிதை வடிவங்களிலும், புதுக் கவிதை வடிவங்களிலும் தனது கவிதைகளை எழுதி வருகின்றார். இன்னும் விடியவில்லை, கண்ணாடி முகங்கள், கவிதைகள் பேசட்டும் ஆகிய நூல்களிலும் இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1990 இல் கலைப்பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிப்பவர் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

இனத்தின் விடியலுக்காய் இன்னுயிர்த் துணை இழந்து மனதில் உறுதியுடன் சுமைதாங்கும் மாதருக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்து ஆறுதலடைகிறார் நூலாசிரியர். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“மரபுக் கவிதை வடிவங்களில் கவிதை எழுதுவோர் பெருகிய முன்னைய காலங்களில் கூட, கவிஞைகள் அவற்றைப் பின்பற்றி எழுதுவது அரிதாகவே இருந்தது. எழுபதுகளில் புதுக் கவிதை வடிவம் முக்கியம் பெற ஆரம்பித்தபோதுதான் கவிஞைகளும் கவிதை உலகில் பிரவேசிக்கத் தொடங்கினர். எனினும் எண்பதுகளில் கவிதை எழுதத் தொடங்கிய ஜெகா அன்று முதல் இன்று வரை மரபுக் கவிதை வடிவங்களை எழுதுகின்றார். அதேவேளை புதுக்கவிதை வடிவத்தையும் கையாளும் திறன் இவரிடம் சிறப்பாக மிளிருகின்றது. இவ்வாறு மரபுக் கவிதை, புதுக் கவிதை எனும் இருவெறு வடிவங்களையும் கையாளும் ஆற்றல் கிழக்கிலங்கைக் கவிஞைகளான மண்டூர் அசோகா முதலான ஓரிருவரையே குறிப்பிடலாம். இப்பட்டியலில் தம்பிலுவில் ஜெகாவின் பெயரும் இணைந்துகொண்டமை எனக்கு மகிழ்வைத் தருகிறது” என்கிறார்.

இந்த நூலில் உள்ள முதலாவது கவிதை மாதா (பக்கம் 19) என்ற தலைப்பில் அமைந்து தாயின் பெருமையை பேசுகின்றது. ஒரு ஆணின் உடலிலிருந்து உயிரைப் பிரித்தெடுத்தால் அவன் பிணமாகிறான். ஆனால் ஒரு பெண்ணின் உடலிலிருந்து ஒரு உயிரைப் பிரித்தெடுத்தால் அவள் தாயாகின்றாள். அத்தகையதொரு உறவின் உன்னதத்தைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை. எனக்கு என்ன வாங்கினாய் என்றே எல்லா உறவுகளும் கேட்கும். ஆனால் தாயின் குரல் மாத்திரம்தான் எனக்கு எதுக்கு வாங்கினாய்? என்று ஒலிக்கும். நமது அத்தனை கவலைகளுக்கும் துன்பங்களுக்கும் வடிகாலாக தாயின் புன்னகை முகமே மருந்தாகிவிடும். பத்து மாதங்கள் தன் வயிற்றில் சுமந்து பெற்று தனது உதிரத்தையே பாலாக மாற்றி பசி போக்கிய தாயின் பெருமை பற்றி நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

அன்னை யெனும் உறவு அடிமனத் துணர்வு
அன்பின் சிகரமாய் அவனியில் நிலைக்கும்
என்னைச் சுமந்து எத்தனையோ நோய் தாங்கி
ஏற்றமுற வைத்த எழிலான தெய்வம்
இன்னல்கள் பல தாங்கி இன்பங்கள் மறந்து
இதய நோய் சுமந்த இல்லத் தலைவி அவள்
தன்னலம் பாராது தனித்துவம் பேணி
தளராது பணி செய்த தியாக தீபம்!

காவியம் இயற்றிட வேண்டும் அம்மா அதில்
கருப்பொருளாய் உனை அமர்த்தி
ஆவியது உடலைவிட்டகலும் வரை நீ
அகத்தினில் என்றும் உறைந்திருப்பாய்
பூவிலே வாசனை இருப்பது போல் உன்
புன்னகை முகம் என்றும் வாழுமம்மா
பாவிலே எனக்கென்றும் பல்லவி நீ
பண்புடன் உன் புகழினைப் பாடுகிறேன்!

குழந்தைகளின் உலகில் எல்லாமே மகிழ்ச்சிக்குரியனதான். கள்ளம் கபடமற்று மனதில் சந்தோசத்தை மட்டுமே சுமந்துகொண்டு புள்ளி மான்களாகத் துள்ளித் திரியும் பரவசம் மிகுந்த காலமது. எல்லோர் வாழ்விலும் மறக்க முடியாததொரு பொற்காலம். சின்னச் சின்ன சண்டைகள்.. குறும்புகள்.. அழுகைகள், விளையாட்டுக்கள் என பொழுது போவதே தெரியாமல் மகிழ்ந்திருந்த காலத்தை பசுமைக்காலம் (பக்கம் 23) என்ற கவிதை ஞாபகமூட்டிச் செல்கின்றது.

பத்து வயதுப் பருவமதில் பாலகர் நாமும் சேர்ந்தொன்றாய் சித்தம் மகிழ்ந்து திரிகையிலே சிந்தையில் கவலை இல்லையடி.. கடற்கரையோர மணல்மீது கள்ளங் கபடம் ஏதுமின்றி அடம்பன் பூவால் மாலைகட்டி அணிந்து நாமும் மகிழ்ந்தோமடி.. சிப்பி பொறுக்கிக் கொண்டு வந்து சிரட்டையில் ஒன்றாய்ச் சேர்த்தெடுத்து தப்பியோடிய நண்டு பற்றி தலையில் ஓடவிட்டோமடி.. கிணறு தோண்ட வேண்டுமென்று கிண்டிக் கிண்டி மண்ணெடுத்து தண்ணீர் ஊறி வருகையிலே தாவிக் குதித்துக் களித்தோமடி.. மண்ணால் வீடு கட்டி அதில் மலர்கள் குத்தி அலங்கரித்து வண்ணச் சிவப்புத் தாமழம் பழம் வைத்து அழகு பார்த்தோமடி.. ஆலமரத்தின் விழுதினிலே அழகாய் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்த காலம் என்றும் பசுமையடி கண்ணில் இன்றும் வாழுதடி..

பிரிவு ஏனோ? (பக்கம் 34) என்ற கவிதை ஒற்றுமையை வலியுறுத்தும் அழகியல் கவிதையாகும். காகங்கள், எறும்புகள் போன்ற படைப்பினங்கள் கூட ஒற்றுமையாக வாழ்கின்றன. சூரியன் தனது ஒளியை உலகுக்கே வாரிக் கொடுக்கும். பேதமின்றி மழையும் எல்லா இடங்களிலும் பெய்யும். இப்படி இயற்கையே எல்லாவற்றிலும் ஒற்றுமையை காட்டி நிற்கும்போது மனிதன் மாத்திரம் செயற்கையாக எதற்கு சண்டைப் போட்டு பிரிந்து போக வேண்டும் என்று கேள்வியெழுப்புகின்றார்.

வானமொன்று பூமியொன்று வண்ணமதி யொன்று காணமொன்று காற்றினில் கலந்ததுவே இன்று சாதிமத பேதமின்றி சாற்றுவதே நன்று ஓதியதை உள்ளமென்றும் உணர்வதுவே நன்று.. காக்கையினம் ஒன்று கூடி களித்துண்டு வாழும் யாக்கையது அழிந்தபோது கரைந்தொன்றாய்ச் சேரும் எறும்பினமும் ஒன்றாக எவ்விடமும் செல்லும் குறமணியாம் உணவுதனை கூட்டாகச் சேர்க்கும்.. காலையிளம் பரிதியது கதிர் நீட்டும் உலகில் சோலையிலே மலர்களெலாம் சுகந்தமதை வீசும் கார்மேகம் மழை பொழியும் காட்டாது பேதம் ஊர் நிலவும் தண்ணொளியை உலகோர்க்கு ஊட்டும்.. பிறப்பாலும் மனிதரொன்று பிறந்தபின் இறப்பொன்று நிறத்திலும் குருதியொன்று நீ அதை உணராயோ? இயற்கையோ ஒற்றுமையை இதமாகக் காட்டுகையில் செயற்கையால் பிரிவு செய்து சீர் கெடுக்கலாமோ???

முதியோரெனும் முத்து (பக்கம் 41) எனும் கவிதை முதியோரின் பெருமையை எடுத்துக் காட்டுகின்றது. தாய் தந்தையர் எப்போதும் பிள்ளைகளைப் பிள்ளையாகத்தான் பார்க்கின்றனர். அனால் பிள்ளைகள்தான் அவர்களை தொல்லையாகப் பார்க்கின்றனர். சில காலங்களுக்கு முன்பு முதியோர் இல்லங்களில் உள்ளவர்களின் விகிதத்தைவிட இன்றைய காலத்தில் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. பகட்டு வாழ்க்கைக்குப் பழகியவர்கள் வயதான தமது தாய் தந்தையரை, பாட்டன், பாட்டியை வீட்டை விட்டும் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். படிக்க வைத்தது மாத்திரமன்றி நல்ல அனுபவப் பாடங்களையும் கற்றுத் தந்த அவர்களை எதுவும் தெரியாதவர்கள் என்றெண்ணுவது இதற்கொரு முக்கிய காரணம். தாய்ப்பால் குடித்த மனித மிருகங்கள் மாத இறுதியில் வங்கியில் பணத்தை வைப்பிலிட்டு விடுவதுடன் தன் கடமை முடிந்ததாக எண்ணுகின்றனர். ஆனால் முதியவர்கள் என்போர் எவ்வளவு போற்றப்பட வேண்டியவர்கள் என்பதை கீழுள்ள வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.

அறுபது அகவை பெறும் அனைத்து மனிதரும்
பெறுவோர் முதியோர் எனும் பெயரை நன்றாய்
ஐப்பசி ஒன்று அகிலத்தில் முதியோர் தினம்
எப்படி மறப்பது ஏந்தல்கள் பெருமை

மண்ணின் சரித்திரம் மாட்சிமை புரிந்தவர்
பண்பாடு பேணும் பழம்பெரும் களஞ்சியம்
வளையாக் கொள்கையுறு வளமுடை பொக்கிஷம்
இளையோர்க்கு வழிகாட்டும் இணையில்லா செம்மல்

வயதால் மூத்தவர் வளங்கள் நிறைந்தவர்
அயராது உழைத்து எமை ஆளாக்கி விட்டவர்
அன்பாகப் புத்தி சொல்லும் அனுபவ முத்துக்கள்
பண்பாடு பேணுகின்ற பழம்பெரும் பெட்டகங்கள்

வாசிப்பை நேசி (பக்கம் 48) என்ற கவிதை வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணமாக்குகின்றது. வாசிப்பதால் கிடைக்கும் அறிவின் மூலம் மனிதன் தன்னில் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து அதிலிருந்து நீங்கிவிடுகின்றான்;. நல்ல நண்பர்களாக புத்தகங்களைக் கொண்டவன் பாக்கியசாலியாவான். ஏனெனில் நண்பர்கள்கூட எந்த நேரத்தில் துரோகியாக மாறுவார்கள் என்று தெரியாத காலம் இது. ஆனால் நல்ல புத்தகங்கள் என்றும் எம்மை நல்வழிப்படுத்துவன. தீய வழியின்பால் நாம் செல்லாமல் எம்மைக் காத்து நிற்பன. தேனீக்கள் தேனைத் தேடிச் செல்வது போல ஞானிகள் புத்தகங்களை நாடிச் செல்வர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து வாசிப்பின் பெருமையை நாம் அறிய முடிகின்றது.

மனிதன் அறிவு பெறும் மகத்தான வாசிப்பால்
புனித நூல்களை புவனத்தார் போற்றுகின்றார்
தேனீக்கள் தேடுகின்ற தேனுள்ள மலர் போல
ஞானிகள் நாடுகின்றார் நல்லமுத நூல்களை
வாசிப்பின் அவசியத்தை வளமுள்ளோர் அறிவர்
யாசிப்பர் புத்தகங்கள் யாங்கனும் தேடியதை

ஐப்பசித் திங்களதை வாசிப்பு மாதம் என்றே
செப்பியோர் சிந்தையது தேடலை ஊக்குவிக்கும்
பத்திரிகை சஞ்சிகை பயனுள்ள நூல்களெல்லாம்
திக்குள்ள தகவல்களைத் திரட்டி எமக்களிக்கும்
கிடைக்கும் நேரமதில் வாசித்துப் பழகிவிட்டால்
படைப்பாக்கத் திறனும் பக்குவமாய் வளரும்

துணை (பக்கம் 60) என்ற கவிதை அழகிய காதல் கவிதையாகும். காதல் பற்றிய நூலாசிரியரின் பார்வை இரசிக்கத் தக்கதாக அமைந்திருக்கின்றது. தம்பதியரிடத்தில் காணப்பட வேண்டிய புரிந்துணர்வை கவிதையினூடாக பின்வருமாறு சித்தரித்திருக்கின்றார் நூலாசிரியர்.

நீ சூரியனாக இருப்பதனால்தான் நான் பூமியாகச் சுற்றுகிறேன்.. உனது ஒளி பெற்றே நிலவாகப் பிரகாசிக்கிறேன்.. நிழலாக உன்னைத் தொடர்வதால் நிம்மதியாய் மூச்சு விடுகின்றேன்.. உன்னால் எழுதப்பட்ட வீட்டுச் சட்டங்களையும் குடும்ப நிர்வாகத்தையும் எனது வாழ்க்கையின் பாட நூலாக்கினேன்.. புரிந்துணர்வுப் பாடத்தை நீயே புரிய வைத்தாய் எனக்கு.. எமது வீட்டு எறும்புகள் கூட உன்னிடமிருந்தே சுறுசுறுப்பைக் கற்றுக்கொண்டன..

பெண்ணைப் பெற்றவரே (பக்கம் 83) என்ற கவிதை சின்னளஞ்சிறு பெண் பிள்ளைகளை வை;ததிருப்பவர் முதல் திருமண வயதை அடைந்த பெண்ணை வைத்திருப்பவர் வரை அனைவருக்கும் பொருத்தமானதொரு கவிதையாகும். இன்று எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், சிறுவர் துஷ்பிரயோகம் என்று தினம் தினம் நடந்தேறி வருகின்றது. மனித  இனத்திலிருந்து விலங்கினத்தை நோக்கி நம் சமுதாயம் நகர்ந்து செல்வதை இது பறைசாற்றுகின்றது. இரக்க குணம் மாறி இன்று அரக்க குணம் தலைதூக்கி விட்ட துரதிர்ஷ்டத்தை கீழுள்ள வரிகள் சுட்டிக்காட்டுகின்றன.

பெண்ணைப் பெற்ற தாய்மாரே பிள்ளை தின்னிகள் திரிகின்றனர்.. கண்ணைப் போன்ற சிறுவர்களைக் காப்பது எமது கடன்.. பள்ளி செல்லும் பாலகரை பாலியல் வெறிக்குப் பாழாக்கி கொள்ளி வைக்கவும் துணிகின்ற கொடிய அரக்கரை அறியுங்கள்.. அந்தரங்க உறுப்புக்களை அன்புத் தந்தை தொட்டாலும் வந்திடும் தீமை என்பதனை வகையாய்ச் சொல்லி வையுங்கள்.. புலமைப் பரிசில் பரீட்சைக்கு புத்தி சொல்வது போலவே நிலைமை பற்றிக் கூறுங்கள் நித்தம் செய்தி அறியுங்கள்.. நம்பிக்கை வைக்கும் உறவாலும் நாசம் வந்து சேர்ந்திடலாம் சம்பவம் நடந்த பின்பு நாம் சாபம் இட்டு என்ன பயன்?

சிந்தையைக் கவரும் சிறப்பான கவிதைகளைத் தந்த தம்பிலுவில் ஜெகா பாராட்டுக்குரியவர். மறைந்த முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களால் இவருக்கு ஷஷகவிக்கோகிலம்|| என்ற பட்டம் வழங்கப்பட்டமை சாலப் பொருத்தமானதாகும். இலக்கிய உலகில் விடைதேடி என்ற இந்த நூலுக்கு நிச்சயமாக நல்லதொரு வரவேற்பு கிடைக்கும் என்று கூறி அவரை வாழ்த்துகிறேன்!!!

நூல் – விடைதேடி
நூல் வகை – கவிதை
நூலாசிரியர் – தம்பிலுவில் ஜெகா
விலை – 240 ரூபாய்
மின்னஞ்சல் – thambiluviljega23@gmail.com

 


2. மழலையர் மாருதம் நூல் பற்றிய கண்ணோட்டம்!

 

மழலையர் மாருதம் நூல் பற்றிய கண்ணோட்டம்!கிழக்கிலங்கையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எழுத்தாளரான ஜெனீரா அமானின் மழலையர் மாருதம் எனும் நூல் வெளிவந்திருக்கின்றது. சிறுவர் உளவியல் கட்டுரைகளின் தொகுதியாக வெளிவந்திருக்கும் இந்நூல் குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின் மனநிலை போன்றவற்றை உணர்ந்து குழந்தைகளை சீராக வளர்ப்பதற்காக பல விடயங்களைப் பற்றி பேசியிருக்கின்றது.

இந்நூலுக்கான அணிந்துரையை வழங்கியிருக்கும் கலாநிதி கே.எம். இக்பால் அவர்கள் “மனித வாழ்வில் பிள்ளைப் பருவம் முக்கியமானது. பெற்றோர் தமது பிள்ளைகளை உளவியல் ரீதியாக அணுகிட இந்நூல் உதவும். பிள்ளைகளின் உடல் உள நலன்களைப் புரிந்துகொள்வது அவர்களின் முன்னேற்றத்திற்கு அவசியமாகும். இந்நூலில் உள்ள கட்டுரைகள் பிள்ளைகளின் உடல், உள தேவைகளை நிறைவேற்ற உதவும்” என்கிறார்.

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். குழந்தைகள் நற்பிரஜைகளாக வளர்வதற்கான அடித்தளம் முதலில் வீட்டிலிருந்துதான் ஆரம்பமாகின்றது. வீட்டில் பெற்றோர் குழந்தைகளுடன் நடந்துகொள்ளும் முறை, குழந்தையின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றும் முறை போன்ற குழந்தை வளர்ப்பிற்கு இன்றியமையாதவையாகும். குழந்தைகளின் மனதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல செயற்படும்போது அவர்களின் உடல், உள ரீதியான பிரச்சினைகளை நாம் கண்டுகொள்ள இயலும். ஒரு சிறந்த நிர்வாகியாக தாயும், தந்தையும் செயற்படும்போது குழந்தைகளின் மன வளர்ச்சியும் ஆரோக்கியமானதாகவே இருக்கும். அவ்வாறில்லாமல் தான்தோன்றித்தனமாக குழந்தைகளை செயல்பட அனுமதித்தால் குழந்தைகள் மனதளவில் சிதைந்து நல்லொழுக்கமற்ற, சமுதாய துரோகியாக வளர்வதற்கு ஏதுவாக அமையும்.

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். அந்த கூற்றுக்கிணங்க குழந்தைகள் விரல் சூப்புவதை சிறுவயதிலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வளர்ந்து பெரியவர்களானாலும் அவர்களால் அப்பழக்கத்தை விடமுடியாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள். விரல் சூப்பும் பழக்கமானது குழந்தைகளின் பற்களை உறுதியற்றதாக்கி விடுகின்றது. அதுபோல் குழந்தைகள் பிடிவாதக் குணம் உள்ளவர்களாகுவதற்கும் ஏதுவான காரணியாக அது அமைகின்றது. எனவே வேறு விடயங்களில் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதாக அறிவுரை சொல்லியிருக்கின்றார் நூலாசிரியர்.

அன்பு உலகை இயங்கச் செய்கின்றது. அன்பால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை யாவருக்கும் அன்பு ஒரு ஆயுதமாக, கேடயமாக இருக்கின்றது. அன்பு காட்டுபவர்களையே குழந்தைகள் அதிகம் நேசிக்கின்றார்கள். தனிமையில் விடப்படும் குழந்தை கத்தி அழுகின்றது. தாய் ஓடிவந்து உணவு ஊட்டிவிட்டு குழந்தை பசிக்காக அழுததாக தீர்மானிக்கிறார். ஆனால் அன்பை எதிர்பார்த்து அதை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் குழந்தை மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகின்றது. எனவே தன் பக்கம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க ஏனைய குழந்தைகளை அடித்தும், கிள்ளியும் தனது செயல்களை மாற்றிக்கொள்கின்றது. அது பொறாமையாக உருவெடுத்து விடுவதாக இந்த நூலில் உள்ள கட்டுரை அமைந்திருக்கின்றது. நாம் சாதாரணமாக நினைக்கும் ஒரு விடயத்தில் எத்தனை தூரம் குழந்தைகள்; பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நூலாசிரியர் மிக அருமையாக சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

விருப்பு வெறுப்புக்கள் மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் வேறுபடும். குழந்தைகள் விடயத்தில் அது மிகவும் கரிசனை காட்டப்பட வேண்டியதொன்றாகும். குழந்தைகளுக்கு உணவூட்டுவது பெரும் பிரச்சினைகளில் ஒன்று. எல்லா தாய்மார்களும் முகம்கொடுக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை இது. தாம் விரும்பியவற்றை பிள்ளைகளுக்குத் திணிக்காமல் பிள்ளை விரும்பும் உணவை அறிந்து அதைக் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த உணவு ஆரோக்கியமானதாக இருப்பது அவசியம். பிள்ளைகள் தம் பிஞ்சுக் கைகளால் தாமாக உணவை அள்ளிச் சாப்பிடவே மிகவும் விரும்புவார்கள். ஆனால் உணவை சிதறி விடுவார்கள் என்பதற்காக குழந்தைகளின் கையில் கொடுக்காமல் இருப்பது பிழையான செயலாகும் என்று உணவூட்டல் சம்பந்தமாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷசிறு பிள்ளைகள் தானே.. வளர்ந்ததும் திருந்திவிடுவார்கள்| என்ற கோட்பாட்டிலிருந்து பெற்றோர்கள் விலகிக்கொள்ளல் அவசியம். ஏனெனில் பிள்ளைகள் பெரியவர்களானதும் திருந்திவிடுவதில்லை. சிறுவயதில் தாம் பழகியவற்றை சரியென்றே அவர்கள் எண்ணுகின்றார்கள். பெற்றோர்கள் கண்டிக்காத செயல்கள் சிறுவர்கள் உள்ளத்தில் சரியானவை என்ற பதிவையே உருவாக்கிவிடுகின்றன. சின்னச் சின்ன பொருட்களை திருடுவது தெரிந்தாலே ஆரம்பத்தில் அதைத் தடுக்க வேண்டும். திருடுவது தவறு, மற்றவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படக் கூடாது என்று பிள்ளைகளிடம் ஆணித்தரமாக எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான் பிஞ்சு உள்ளத்தில் அது பதியும். அதைவிடுத்து அவற்றை இரசித்து சிரித்துக் கொண்டிருந்துவிட்டால் எதிர்காலத்தில் அழுது தீர்க்க வேண்டியேற்படும்.

மழலையர் மாருதம் ஜெனீரா கைருல் அமானின் ஏழாவது நூல் வெளியீடாக அமைந்துள்ளது. இவர் ஏற்கனவே பாலர் பாடல் (சிறுவர் பாடல் – 1991), சின்னக்குயில் பாட்டு (சிறுவர் பாடல் – 2009), பிரியமான சினேகிதி (சிறுகதை – 2009), மிதுஹாவின் நந்தவனம் (சிறுவர் கதை – 2010), கட்டுரை எழுதுவோம்  (03 – 05 ஆம் வகுப்புக்களுக்குரியது – 2010), முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் (சிறுவர் பாடல் – 2012) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளை நல்வழிப்படுத்தி சிறந்தவர்களாக அவர்களை மாற்றுவதற்குரிய சிறந்த பல ஆலோசனைகளை முன்வைத்து மழலையர் மாருதம் என்ற நூலைத் தந்த ஜெனீரா கைருல் அமான் பாராட்டுக்குரியவர். அவரது இலக்கியப் பணி தொடர வாழ்த்துகின்றேன்!!!

நூலாசிரியர் – ஜெனீரா அமான்
நூல் – மழலையர் மாருதம்
தொலைபேசி – 0262236487
வெளியீடு – அல் அக்தாப் இலக்கிய மன்றம், கிண்ணியா
விலை – 200 ரூபா

poetrimza@gmail.com