கவிதை: சொல்லாத வார்த்தைகள்!

-பேராசிரியர் கோபன் மகாதேவா -இல்லாத இலக்கைப் போல்… நில்லாத நிழலைப் போல்…
சொல்லாத வார்த்தைகளை எவர் எங்ஙனம் காண்பார்?
சொல்லாத வார்த்தைகளை எவர் எங்ஙனம் கேட்பார்?
சொல்லாத வார்த்தைகளை எவர் எவ்வாறு அறிவார்? 

வில்லாலே விசயன் நில-நீர் நோக்கி மேலே-சுழல் மச்சம் 
நல்லாய்க் குறி வைத்து நங்கையைப் பிடித்தான் என்றால்…
பொல்லால் தன் பெண்ணாளை இருள்பிடித்த அடுக்களையுள்    
கல்வி-குறை முடக்குருடன் அடக்கத் துணிந்ததைப்போல்… நாம்…

அவல் போன்ற வார்த்தைகளை வெறும் வாயில் சப்புவதா?                                                      
சவர்க்காரக் குமிழிகளால் கவிக்கோட்டை கட்டுவதா?
இவர் என்ன, சுவர் இல்லாச் சித்திரங்கள் தேடுகிறார்?
மந்திரத்தால் மாம்பழங்கள் யாம் விழுத்த வேண்டுகிறார்?          
சந்தி சிரிக்க வைக்க எமைச் சங்கடத்தில் மாட்டுகிறார்?

மூலைகளில் மௌனமாய் இருந்து எழுதும் எமைச் சீண்டி
மூளையுள்ளே முடங்கியுள்ள திரவியங்கள் தோண்டுகிறார்?                                         
ஆலையிற்போல் அலைவரிசை ஆக்கங்கள் தேடி…வேறு                                               
வேலை இல்லை எமக்கென்று ஓட்டை வலை வீசுகிறார்!

சமகால இலக்கியத்தில் சமபங்கு எமக்கு உண்டு என்பது உண்மை!                                        
கமகமவாம் கந்தமுடை நூல்கள்பல இருமொழியில் நாம்செய்தது உண்மை!!                                  
எமகாத ஊக்குநர்கள் எனக் கண்ட சிலரிடம் நாம் வீழ்ந்ததும் உண்மை.   
தமதுதனித் திட்டங்கள் மற்றோர்க்கும் ஏற்றாலன்றோ பொது நன்மை வெல்லும்!

இலக்கியத்துக்கு இலக்கு வேண்டும். அல்லவேல், இலக்கியம் சிதறிச் செல்லும்.                                      
பல-நோக்கு இலக்கியம் பரந்து, பறந்து விடும். பாருக்கும் அதன் பலன் குன்றும்.   
சிலர்-இலக்கு மற்றவர்க்குச் சரி வராது. சிந்தித்தால் அதுவும் நியாயமே தான்!
பலர்நோக்கு ஒன்றாகி உருவாகும் இலக்கியங்கள் என்றும் காலத்தை வெல்லும்.

இன்றைய கவியரங்கில் பங்குகொள்ளும் பாவலர்கள் எல்லோரும் எமது நண்பர்.
தன்னலத்தைத் துறந்து தமிழ் இலக்கியத்துக்குத் தொண்டாற்றத் துடிதுடிப்போர்.                          
இன்றுள்ள உலகில் தமிழ் தழைத்தோங்குதற்குத் தம்மால் ஆனதைச் செய்வோர்.
இன்தமிழைச் சுவாசிப்போர், நேசிப்போர், பா இயற்றித் தம் பசியையும் மறுப்போர்.              
அன்னார்களுடன் இன்று, இவ்வரங்கு தனில் இணைவதில் மிக மகிழ்ச்சி உற்றேன்.                                 
இன்று விலகிவரும் தமிழ்இன்னல் கெதியில் மறைய வேண்டி முடிக்கின்றேன் யான்.     

prof.kopanmahadeva@yahoo.co.uk