யதார்த்தமான விடயங்களை அச்சுப் பிசகாமல் வாசகர்களிடம் முன்வைப்பது எழுத்தாளர்களால் மாத்திரமே சாத்தியமாகின்றது. அதையும் சுவாரஷ்யமான முறையில் தெளிந்த மொழிநடையுடன் சமர்ப்பிக்கும் ஆற்றல் எல்லோரிடத்திலும் வாய்த்து விடுவதில்லை. சிங்களமொழி மூலம் கல்வி கற்று தமிழ் மீது கொண்ட அபிமானத்தால் இலக்கியவாதியாக உருவெடுத்து இன்று தன் பெயரை நிலைக்கச் செய்திருப்பவர் எழுத்தாளர் ஏ.சீ. ஜரீனா முஸ்தபா அவர்கள். நாவல் துறையில் அதிக முனைப்புடன் செயற்பட்டு வருபவர். ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37ம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய 04 நாவல்களையும், ரோஜாக் கூட்டம் (சிறுவர் கதை), பொக்கிஷம் (கவிதைத் தொகுதி) ஆகிய நூல்களையும் அத்துடன் யதார்த்தங்கள் என்ற சிறுகதைத் தொகுதியை அடுத்து மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியையும் இதுவரை இவர் வெளியிட்டிருக்கின்றார். மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதி நூலாசிரியரின் 08 ஆவது நூல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இனி மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ள 13 சிறுகதைகளில் சில சிறுகதைகளை இங்கு பார்ப்போம்.
சிதறிய நம்பிக்கைகள் (பக்கம் 13) என்ற சிறுகதை திருமணம் என்ற பெயரில் பெண் வீட்டாரிடமிருந்து சீதனம் வாங்கும் ஆண்களுக்கு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. சீதனம் வேண்டாம் என்று மணமுடித்துவிட்டு அதன்பிறகு பணம் வேண்டும் வீடு வேண்டும் என்று மனைவியைத் துன்புறுத்தும் சில ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அஸ்மான் என்பவன் ஸாஹினாவைப் பின்தொடர்ந்து சென்று தன்னுடன் மீண்டும் இணைந்து வாழும்படி கெஞ்சுகின்றான். அவனது கெஞ்சுதல் ஸாஹினாவின் உள்ளத்தை உருக்கிவிடவில்லை. அவன் ஏற்கனவே அவளை அவமானப்படுத்தி இல்லாத விடயங்களை எல்லாம் இட்டுக்கட்டிய ஒரு சூத்திரதாரி. தந்தையை இழந்த அவளது குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் சுமந்துகொண்டவர் அவளது சாச்சா (தந்தையின் இளைய சகோதரர்). அவரிடமிருந்து இவர்களுக்குச் சொந்தமான சொத்தைப் பிரித்துக் கேட்குமாறு அடிக்கடி மனைவி ஸாஹினாவை அஸ்மான் வற்புறுத்துகின்றான். ஆரம்பத்தில் சீதனம் எதுவும் வேண்டாம் என்று உத்தமனாக வந்தவனை அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அவன் சொத்தாசை பிடித்த ஒரு பேய் என்பதை போகப் போக அனைவரும் உணர்ந்து கொள்கின்றனர். பின்வரும் உரையாடல் இதை நிதர்சனமாக்குகின்றது.
`இதெல்லாம் உங்களை ஏமாத்துற வேலை. உங்களுக்காக எந்த சொத்தையாவது சாச்சா எழுதிவச்சாரா?’
‘ஆமா! நீங்க சீதனமே வேணாம்னு என்னை கட்டிக்கிட்டபோதும் காணி முழுசையும் என் பேருல எழுதியிருக்காரே’
‘வெறும் காணியை தந்தா போதுமா? அதுல குடை பிடிச்சிக்கிட்டா குடும்பம் நடத்துறது?’
‘குடை பிடிச்சுக்கிட்டு எதுக்கு குடும்பம் நடத்தனும்? இருக்கிற வரைக்கும் இந்த வீட்டுலயே வாழலாமே. கடல் மாதிரி இடம் இருக்கே’
அஸ்மானின் சுயரூபத்தை அறிந்துகொண்ட ஸாஹினா அவனைவிட்டு தூரமாகின்றாள். இப்போதுகூட அவன் ஸாஹினாவைக் கெஞ்சுவது அவளது நகைகளை எடுப்பதற்காகத்தான் என்று கதை இறுதியில் சொல்லப்படுவதிலிருந்து அவனது பேராசைக் குணம் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கின்றது.
இன்றைய காலத்தில் மற்றவர்களுக்கு நன்மை செய்யப் போய் ஆபத்தில் மாட்டிக் கொள்பவர்கள் அதிகம். காசு கொடுத்தால் அதைத் திருப்பி எடுப்பதற்குள் பகை ஏற்படுகின்றது. உதவிகள் செய்தால் அது உபத்திரவமாகின்றது. கலிகாலம் என்று சொல்வதற்கேற்ப இன்று அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கொண்டால் போதும் என்ற பக்குவம் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. தலைநகரைப் பொறுத்தளவில் அடுக்குமாடி வீடுகளில் வாழ்வோர் அடுத்த வீட்டில் யார் தங்கியிருக்கின்றனர் என்பதைக்கூட அறிந்துகொள்ள முனையாதவர்களாகக் காணப்படுகின்றனர். காரணம் யாரை நம்புவது என்று தெரியாத நிலை. யாரைப் பார்த்தாலும் குள்ள நரித்தனம். நலவுக்குக் காலமில்லை (பக்கம் 22) என்ற சிறுகதையும் அத்தகையதொரு வலியையே தனக்குள் சுமந்திருக்கின்றது.
காயத்ரியின் வீட்டில் வேலம்மா என்பவள் வேலை செய்கின்றாள். இந்த நிலையில் தனது மகளின் பாதுகாப்புக் கருதி, தனது மகள் ரோஜாவை காயத்ரியின் வீட்டில் தங்க வைக்க காயத்ரியிடம் அனுமதி கேட்கின்றாள் வேலம்மா. நல்லுள்ளம் படைத்த காயத்ரியும் தன் கணவனிடம் அனுமதி கேட்டுவிட்டு அதற்குச் சம்மதிக்கின்றாள். ரோஜா வந்து சிறிது காலத்தில் வேலம்மா தனக்குச் சுகமில்லை என்றுகூறி வேலையிலிருந்து நின்றுவிடுகின்றாள். காயத்ரி ரோஜாவை ஒரு வேலைக்காரியாகப் பார்க்காமல் அவளைப் படிக்கவைத்து ஆடைகள் வாங்கிக்கொடுத்து அன்பாகக் கவனித்து வருகின்றாள். ஆனால் ரோஜா மற்றவர்களின் துன்பத்தில் குளிர்காயும் கெட்ட பழக்கத்தை சிறுவயதிலேயே பழகியிருந்தாள். கோள் சொல்வது அவளுக்கு வா(வே)டிக்கையான விடயமாக இருந்தது. காயத்ரியின் அயல் வீட்டில் வாழ்பவர்களையும் காயத்திரியையும் பிரிக்கும் துரித வேலைகளில் ரோஜா சந்தோசம் கண்டாள். பின்வரும் உரையாடல் இதைப் பறை சாற்றுகின்றது.
‘காயத்ரி அக்கா அடுத்தவீட்டு ஆனந்தி எங்க மரத்துல மாங்கா பறிக்கிறா. உங்ககிட்ட கேட்டாவா?’ என்றாள் ரோஜா.
‘இல்ல ரோஜா. பறிச்சிட்டு போவட்டும். பாவம் மசக்கைக்காரி’
எனப் பதிலளித்துவிட்டு தன் வேலைகளில் மூழ்கினாள் காயத்ரி. உடனே ஆனந்தியிடம் சென்ற ரோஜா,
‘நீங்க யாருகிட்ட கேட்டு மாங்கா பறிக்கிறீங்கன்னு காயத்ரி அக்கா கேட்டுவரச் சொன்னா’
இவ்வாறான செயற்பாடுகளால் காயத்ரியிடம் யாரும் அன்பாகப் பழகவில்லை. அவர்களிடமிருந்து காரணத்தை அறிந்துகொண்ட காயத்ரி அதிர்ச்சியடைகின்றாள். காலப்போக்கில் ரோஜாவின் நடவடிக்கைகளும் மோசமாகின்றன. பல வாலிபர்களோடு அவளுக்கு தொடர்பிருப்பதாக அறிந்த காயத்ரி அவளை அங்கிருந்து அனுப்பி விடுகின்றாள். அதன் பிறகுதான் அவள் நிம்மதியாக இருப்பதாகக் கதையில் சொல்லப்படுகின்றது.
சமூகமே உணர்வாயா? (பக்கம் 28) என்ற கதை அனைவரும் படித்துத் தெளிவடைய வேண்டிய சிறப்பான சிறுகதையாகும். இன்று சில ஆண்கள் தன் மனைவி அழகானவளாக, கவர்ச்சியானவளாக இருக்க வேண்டும் என எண்ணி வெளியிடங்களுக்கும் அவ்வாறே அழைத்துச் செல்கின்றனர். தம் நண்பர்களிடத்தில் தன் மனைவியின் பெருமைகளைப்பற்றி சிலாகித்துப் பேசுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் மற்றவர்களின் மனதில் தீய எண்ணங்களை வளர்த்துவிடும் என்பதை அநேகர் உணர்ந்து கொள்வதில்லை.
இக்கதையில் வரும் ஸபார் என்பவன் சபலப் புத்திகொண்டவன். அவன் ரஸ்லானின் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ரஸ்லானின் மனைவியைத் தகாத முறையில் பார்த்து ரசிக்கின்றவன். இதை அறிந்த ரஸ்லானின் மனைவி, ரஸ்லானிடம் பல தடவைகள் ஸபாரை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம் என மன்றாடுகின்றாள். ஆனால் ரஸ்லான் அவள் சொல்வதைக் கேட்கவில்லை. இன்னொரு தினம் திடீரென தன் வீட்டுக்கு வரும் ரஸ்லான் ஸபார் சமையலறை ஜன்னல் வழியாக தன் மனைவியை கள்ளத்தனமாக நோக்குதைக் ஒருநாள் கண்டு விடுகின்றான். தன் மனைவி ஸபாரை வெறுப்பதற்கான காரணம் ரஸ்லானுக்கு அப்போதுதான் புரிகின்றது. அதை எமது சமூகம் எப்போது உணரப் போகின்றது என்று கதை இறுதியில் நூலாசிரியர் வாசகர்களிடம் கேள்விக் கணையைத் தொடுக்கின்றார்.
தென்றலின் தாக்கம் (பக்கம் 12) என்ற சிறுகதை திருமணமான ஆண்கள் எதிர்நோக்கும் நெருக்கடியான சூழலை நன்கு சித்தரித்துக் காட்டுகின்றது. திருமணமான பின்பு மனைவியை ஆண்களின் மனம் அதிகமாக விரும்புகின்றது. தாயின் சொல்லைவிட மனைவி சொல் மந்திரமாகின்றது. அந்த மனநிலையில் இருப்பவன்தான் இக்கதையில் வரும் பிரதான பாத்திரம். மனைவியின் சொல்லுக்கு அடிமையாகி தாயின் அரவணைப்பை இழந்து தவிக்கின்றான். தான் விரும்பியவளையே தனக்குத் திருமணம் முடித்து வைத்த தன் தாயை எப்படி அவ்வளவு சீக்கிரம் தூக்கியெறிய முடிந்தது என்று தன்னைத் தானே கேட்டு அழுகின்றது அவனது ஆத்மா. மனைவியின் அன்பில் புதைந்து கிடந்தவன் தாயைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.
ஒரே வீட்டுக்குள் வசித்தாலும் ஒரு திருடனைப் போலத்தான் ஆரம்பத்தில் தன் தாயுடனும் தங்கையுடனும் அவன் பேசுவான். காலப் போக்கில் மனைவிக்கு கட்டுப்பட்டு அதையும் அடியோடு நிறுத்திவிட்டு வேறு வீட்டுக்குச் சென்றுவிட்டான். மனைவியின் ஆடம்பரத் தேவைகள் அதிகரித்தன. காலப்போக்கில் அவனது வியாபாரம் நஷ்டமடைந்தது. பணம் இருக்கும்போது அவனை மதித்த மனைவியும், மனைவியின் தாயும் இப்போது அவனைக் கணக்கெடுப்பதே இல்லை. இப்போதுதான் அவனுக்கு தன் தாயின் அருமை புரிகின்றது. எல்லாவற்றையும் வீசிவிட்டு தாய் மடியில் விழுந்து கதறி அழ வேண்டும் போலிருக்கின்றது அவனுக்கு. ஒருநாள் அவனது தாய் வாழ்ந்த வீட்டுக்கு வந்து பார்க்கின்றபோது வீட்டுக் கதவு பூட்டியிருக்கின்றது. இத்தகையதொரு நிலையில் இறைவனிடம் சரணடைவதுதான் ஒரே வழி என்றெண்ணி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றான் அவன். இக்கதையை வாசிக்கும்போதே உள்ளத்தில் ஏற்படும் வலி உயிர் வரை ஆழமாக ஊடுறுவுகின்றது. தன் தாயை மறந்து மனைவியை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இக்கதை நல்லதொரு படிப்பினையாக அமைகின்றது.
சமுதாயத்தில் நாம் காணும் விடயம் யாவும் நமக்கொரு பாடமாகத்தான் இருக்கின்றது. நாம் தான் அவற்றைப் பயில்வதில்லை. அவ்வாறான விடயங்களை சிறுகதைகள் மூலம் படிக்க நேர்கின்றபோது மனதுக்கு நிறைவாக இருக்கின்றது. அந்த நிறைவை வாசகர்களுக்குத் தன் எழுத்து மூலம் வழங்கும் நூலாசிரியர் ஏ.சீ. ஜரீனா முஸ்தாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
நூல் – மீண்டும் ஒரு வசந்தம்
நூல் – சிறுகதை
நூலாசிரியர் – ஏ.சீ. ஜரீனா முஸ்தபா
வெளியீடு – பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி – 0115050983, 0115020936
விலை – 300 ரூபாய்
poetrimza@gmail.com