நெருங்கிய ‘மடத்து’ நண்பர்களுக்கு ஜே.கே. ஊருக்கு, உலகத்துக்கெல்லாம் ஜெயகாந்தன். பெற்றோர் வைத்த பெயரும் அதுவே. இந்த அடலேறு பிறந்த இடம்: மஞ்சக்குப்பம்; கடலூரின் ஒரு பகுதி. ஜெயகாந்தனின் எழுத்துப் பற்றி, தனக்கு வெளியேயான புறவுலகை அவர் பார்த்த பார்வையான அவரின் எழுத்தின் சாதனை பற்றி நிறையப் பேர் நிறைய எழுதிவிட்டார்கள். அவர்களில் வாசகர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள் என்று நிறையப் பேர். பொதுவாக எழுத்தாளர்கள் இன்னொரு எழுத்தாளரைப் பற்றி விமர்சன ரீதியில் எழுத நிறைய யோசிப்பார்கள். இது பொதுவாக ஒரு எழுத்தாளர் குணம். இவர் விஷயத்தில் அவர்களிடையே அந்த யோசிப்பும் இல்லாது போயிற்று நல்லதாயிற்று. அவரது இளமைப் பருவத்தில், விந்தன் நடத்திய ‘மனிதன்’, இஸ்மத் பாஷாவின் ‘சமரன்’, மாஜினியின் ‘தமிழன்’, தோழர் விஜயபாஸ்கரனின் ‘சரஸ்வதி’, மற்றும் ‘தாமரை’ ஆகிய இதழ்களுக்கு தமது எழுத்துக்கள் பிரசுரமாக இலாயக்கான பத்திரிகைகள் இவையே என்று இவரே தெரிவுசெய்து தமது கதைகளைக் கொடுத்திருக் கிறார். இவைகளே எழுதுவதற்கு இவர் நடை பழகிய பத்திரிகை களாகவும் ஆயிற்று.
இருந்தும் பிற்காலத்து இவர் பெற்ற வீச்சின் வேகம், ஆரம்பகால கதைகளிலேயே விதையாகப் புதைந்திருந்திருப்பதை இயல்பாக இனம் காணலாம்.’சரஸ்வதி’யில் இவர் எழுதிய சிறுகதைகளெல்லாம் அந்தக் கால சிந்தனைக்கு மிகவும் புதுசு. ‘போர்வை’ என்றொரு சிறுகதை. தெருவில் போவோர் வருவோரெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மனநிலை சரியில்லாத நிர்வாணப் பிச்சைக்காரிக்கு அவளைப் பார்த்த கணமே பொறிகலங்கித் தான் கட்டியிருந்த வேட்டியை சடாரென்று அவிழ்த்துப் போர்த்திய ஆண்மகனின் சித்திரம் இது. இவ்வளவு காலத்திற்குப் பிறகும் நினைவில் நிற்கிற கதை அது.
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒரு பிடிச்சோறு’. அதற்கு தி.ஜ.ர. முன்னுரை எழுதியிருக்கிறார். கவியரசர் கண்ணதாசன் கவிதை வாழ்த்துரை அளித்திருக் கிறார். ஆனந்தவிகடன் நூலகத்தில் இருந்த அந்தப் புத்தகம் விகடனில் உதவி ஆசிரியாராய் இருந்த மணியனின் பார்வையில் பட்டு, அவர் அதைப் படித்து, பரவசமாகி, ‘இவர் விகடனில் எழுத வேண்டுமே’ என்று ஜெயகாந்தனின் விலாசம் அறிந்து அவரைத் தேடிப்போகிறார். விகடனில் எழுத சில நிபந்தனைக்களைப் போடுகிறார் ஜெயகாந்தன். அவற்றில் ஒன்று, ‘எனக்குத் தெரியப்படுத்தாமல், என் கதையில் எந்தப் பகுதியையும் நீக்கக்கூடாது’ என்பது. இதுவரை இந்த மாதிரி எதுவும் அறிந்திராத ஆனந்தவிகடன் அதற்கு ஒப்புக்கொள்கிறது. இதையெல்லாம் எதற்கு எழுத நேரிட்டது என்றால், எழுத்தாளனின் தார்மீக பலத்தை தனது இளம் வயதிலேயே தோளில் தூக்கிச் சுமந்தவர் இவர். விகடனுக்கும் சரி, ஜெயகாந்தனு க்கும் சரி, அது ஒரு பொற்காலம். ஜே.கே.யின் எழுத்துக்கள் தமிழகத்து பட்டி தொட்டிகளிலெல்லாம் பேசப்பட்ட காலம் அது.
‘விகடனி’ல் இவர் எழுதிய சிறுகதைகளில் ‘சுயதரிசனம்’ மிகவும் பேசப்பட்ட கதை. அசட்டு சாஸ்திரிகள் என்று தன்னைப் போலவான சாஸ்திரிகள் குழாத்தாலேயே பரிகசிக்கப்பட்ட கணபதி சாஸ்திரிகள், குளத்தங்கரையில் ஏற்பட்ட விவாதச் சண்டையில் அவமானமுற்று டெல்லிக்கு ஓடிப் போய்விடுகிறார். டெல்லியின் பிர்மாண்டம், ஜனக்கூட்டம், அங்கே அவர் பெரும் பாடம் ஆகிய எல்லா அனுபவங்களையும் உள்ளடக்கி மகனுக்கு தபாலில் கடிதமாகஅனுப்புகிறார். அந்த பெரிய கடித உறையிலிருந்த ‘காகிதக் கத்தையில் பென்சிலாலும், பேனாவாலும் எழுதியிருந்த தந்தையின் சுயதரிசனத்தை, காலத்தின் அடியை நெஞ்சில் ஏற்றதால் தெற்றுப் பல்லும், மாறுகண் பார்வை கொண்ட அந்த வயோதிகரின் இதயத்திலிருந்து தெறித்து விழுந்த ரகசியமான உதிரத்துளிகளாய் நீண்டிருக்கும் வரிகளை’ மகன் படிக்கிறான்… கதை எழுப்பும் சோகம் வலிது.
‘நிக்கி’ என்று தலைப்பிட்ட ஒரு கதையைப்பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஆமாம், நிக்கி என்பது நாயின் பெயர் தான்; இந்தக் கதையின் நாயகியின் பெயர் தான். ஏன், ஒரு நாய் ஒரு கதைக்கு நாயகியாக இருக்கக் கூடாதா, என்ன?.. ஒரு குப்பத்தில் ஜனித்து, சாக்கடையில் புரண்டு, தெருக்களில் திரிந்து, ஒரு சுற்று வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட்டு, மீண்டும் குப்பத்திற்கே வந்து சேரும் நிக்கியின் கதை உருக்கமானது.
‘மனிதனே ரொம்ப பழைமையான உலோகம் தான்; காலம் தான் அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்பந்ததிற்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள்; வளைய முடியாதவர்கள் உடைந்து நொருங்குகிறார்கள்’ என்பார் தமது புதிய வார்ப்புகளில். பரிதாபப்பட்ட இந்துவின் கதை இது. ‘நீ இன்னா சார், சொல்றே?’,இருளைத் தேடி’ ‘ஒரு பகல் நேர பாஸஞ்சரில்’ ‘இறந்தகாலங்கள்’ ‘முன் நிலவும் பின் பனியும்’, ‘குருபீடம்’ என்று நிறையக் கதைகளைச் சொல்லலாம். ஒவ்வொன்றும் வெவ்வேறான பாடங்களைச் சொல்ல வந்தவை.
அவரது ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’, ‘பாரிசுக்குப் போ’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற புதினங்கள் உலகத் தரம் வாய்ந்தவை. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ அவரது ‘அக்னிபிரவேசம்’ சிறுகதையின் தொடர்ச்சி யாய் எழுதப்பட்டு, ‘கங்கை எங்கே போகிறாள்?’ என்று நீண்டது. இவரது பின்னால் எழுதிய ‘சுந்தர காண்ட’மும் இதன் தொடர்ச்சியோ என்கிற ஒரு மயக்கத்தையும் கொடுக்கும். .’ஒ.ஒ.ஒரு உலக’த்தின் ஹென்றி, ‘பாரிசுக்குப் போ’வின் சாரங்கன், ந.நா.பார்க்கிறாளின் கல்யாணி-ரங்கா, சி.சி.மனிதர்களின் கங்கா– எல்லோருமே வெவ்வேறான வகைத்தவர்கள். அத்தனைபேரிலும் இவர் வாழ்ந்து பார்த்திருக் கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ‘தினமணிக்கதிரு’க்கு சாவி அவர்கள் ஆசிரியரான பொழுது, ‘ரிஷிமூலத்’தைத் தொடர்ந்து ‘சில நேரங்களில் சில மனிதர்களை’ அந்தப் பத்திரிகையில் எழுதினார்.
அவரது மறக்கவே முடியாத ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ பற்றி எவ்வளவு எழுதினாலும் அலுக்காது. அடிப்படை உணர்வுகள் என்பது உயிர்நிலை மாதிரி. எந்த நேரத்தும் யாருக்காகவும் அதை விட்டுக்கொடுக்க இயலாமல் போகும். விட்டுக் கொடுப்பதாக அந்த நேரத்து மனம் பாசாங்கு காட்டினாலும், உள்ளுக்குள் இருந்து கொண்டு அந்தந்த நேரத்து வெளிப்போந்து வேதனை கொடுக்கும். அறிவை நேசித்தவனுக்கும், அழகை நேசித்தவளுக்கும் இடையே முகிழ்த்தக் காதலின் முரண்பாட்டைச் சொல்லவந்த புதினம் தான் ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள’. இந்தநாவலுக்கு எழுத வந்த முன்னுரையில், “காதல் என்பது மிகவும் அற்பமானது; அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்ப காரணங்களே போதும்” என்பார் அவர். ரங்காவுக்கும், கல்யாணிக்கும்–சிலப்பதிகார கோவலனுக்கும் மாதவிக்கும் நேர்ந்தது அதுதான். காதலின் உடன்பிறந்த சகோதரி ஆக்கிரமிப்பு. அன்பும் பாசமும் கொண்டோரிடையே இந்த ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்பு என்கிற உணர்வில்லாமலே யதார்த்தமாக வெளிப்படும். ஜே.கேயின் அந்த நாவலில், அப்படிப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பைச் செய்யத் தெரியாத உயர்ந்த நாகரிகமே கல்யாணியின் குறையாயிற்று. விகடனில் இது வெளிவந்த பொழுது வாராவாரம் இதைப் படிக்கும் அனுபவமே தனி சுகமாகப் போயிற்று.
‘உன்னைப் போல் ஒருவன்’ ‘யாருக்காக அழுதான்’, ‘பிரளயம்’, ‘விழுதுகள்’ ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’ ‘கருணையினால் அல்ல’- -என்று நீளூம் குறுநாவல்களுக் கிடையே, ஒன்று நன்றாகத் தெளிவாகத் தெரிகிறது. ஜெயகாந்த னுக்கு அவரது குறுநாவல்கள் தாம் ஒரு கதையை அவர் எடுத்தாளுகின்ற பாங்குக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. சிறுகதை, குறுநாவல், புதினம் என்பனவற்றுக்கான வரையறைகளெல்லாம் நாம் போட்டுக் கொள்ளும் சட்டமே தவிர வேறில்லை; எழுத்தாளன் தன் மனத்தில் குறுக்கும் நெடுக்குமாக அலைக்கழிக்கும் உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து வெளிப்படுத்துக்கிறான்; வெளிப்பட்டதை என்ன பெயரிட்டு என்ன வரையறைக்கு கீழ் வேண்டுமானாலும் அடைத்துக் கொள்ளுங்கள் என்றால், வகைப்படுத்தும் இந்த மாதிரியான இந்த அளவுகோல்களும் இவர் விஷயத்தில் அடிபட்டுப் போகும்.
குறுநாவல்களில் ஜெயகாந்தன் ஜொலிப்பதற்கு எடுத்துக்காட்டாக, ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’ — ஒன்று போதும். ஜெயகாந்தனின் மாஸ்டர் பீஸ் அது. ஒற்றை வரி கதை தான். காரணம் எதுவுமே இல்லாமல், கணவன் மனைவிக்குள்ளே பிரிந்து விடலாமே என்கிற சிந்தனை கிளைக்கும் பொழுது அந்த தம்பதிகளின் மனவோட்டங்களை எவ்வளவு நேர்த்தியாக சித்தரிப்பார் என்று இந்தக் குறுநாவலை நினைக்கும் பொழுதெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. கதை கிளப்பும் வேதனைக்கு ஊடே, முடிவில்லாத விவாதங்கள் அவர்கள் மனசுக்குள்ளே எழுந்து எழுந்து போக்குக் காட்டும். ‘இது உன்னது, இது என்னது’ என்று ஒவ்வொன்றையும் பிரித்துக் கொள்ளும் பொழுது, அவர்களது அந்த புத்தக அலமாரியைப் பார்த்துத் திகைத்து, இவற்றில் எதை எதை எவர் எவரது என்று எப்படிப் பிரித்துக் கொள்வது என்று அனந்தராமன் தடுமாறும் இடம் அற்புதம்! ஒரு கடிதம் தான் கதையின் ஆரம்பத்தில் தெரியப்படுத்தப்படும்.. ஓடும் ரயிலில் அந்தக் கடிதம் சுக்குநூறாகக் கிழித்து எறியும் பொழுது, அத்தனை மனக்கிழிசல்களையும் கிழித்து எறிந்த உணர்வு நமக்கு ஏற்படும்…
முதலில் இவர் தாம் எழுதப்போவதை நாடக ரூபமாக எழுதிக்கொண்டு, அப்புறம் வேண்டிய உருவத்தைக் கொடுப்பாரோ என்று கூடத்தோன்றும். காட்சியை படிப்போர் கண்ணுக்கு முன்னால் நடப்பதே போன்ற இவரது வர்ணனை அப்படிப்பட்ட எண்ணத்தைத் தோற்றுவிக்கும். அப்புறம் இன்னொன்று. எழுதும் தானே தான் படைக்கும் அத்தனை பாத்திரங்களுக்குள்ளும் கூடு விட்டு கூடு பாய்வது.. அதனால், ஒவ்வொரு பாத்திரத்திற்குமான வாதப் பிரதிவாதங்களை நடத்துவது இவருக்கு வெகு சுலபமாகிப் போகிறது. இந்த விதத்தில், ஜெயகாந்தன் தான் தமிழுக்கு முதல் எழுத்தாளர். படிக்கும் வாசகர் மனத்தில் எழும் எந்த எதிர் கருத்துக்கும் தானே இன்னொரு பாத்திரத்தின் மூலம் பதில் சொல்வது. அவர் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்வதற்கும், படிக்கும் வாசகன் அவர் சொல்வதில் எந்த ஐயமும் இன்றி முழுதாக ‘கன்வின்ஸ்’ ஆவதற்கும் இந்த வாத-பிரதிவாத யுக்தி அவருக்கு எல்லா இடங்களிலும் கைகொடுத்திருக்கிறது.
ஜெயகாந்தன் பெற்ற பாராட்டுகளின் பட்டியல் நீளமானது. திரைப்படங்கள் என்று எடுத்துக் கொண்டால், ‘உன்னைப்போல் ஒருவனு’க்கு இந்திய குடியரசுத்தலைவர் விருதையும்,’சில நேரங்களில் சில மனிதர்கள்’ சிறந்த திரைக்கதைக்கான தமிழக அரசு விருதினையும், ‘கருணை உள்ளம்’ சிறந்த திரைப்பட, திரைக்கதைக்கான தமிழக அரசு விருதினையும் பெற்றிருக்கிறது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ சாகித்ய அகாதமி விருதினையும், ‘இமயத்துக்கு அப்பால்’ புதினம் சோவியத் நாடு நேரு விருதினையும், ‘ஜெய ஜெய சங்கர’ சிறந்த புதினத்திற்கான தமிழ்நாடு அரசு விருதினையும், ‘சுந்தர காண்டம்’ புதினம் சிறந்த புதினத்திற்கான தஞ்சை பல்கலை கழகத்தின் ராஜராஜசோழன் விருதினையும் பெற்றிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டுகிற மாதிரி, 2005-ல் ‘ஞானபீட’ விருதும் இவரைத் தேடிவந்தது. தமிழகத்தைப் பொறுத்த மட்டில் எழுத்தாளர் அகிலனும், ஜெயகாந்தனும் ஞானபீட விருது பெற்றவர்கள்.
தமிழுக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தால் ஒவ்வொரு தடவையும் சர்ச்சை எழுவது வாடிக்கை. ஜெயகாந்தனுக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்த பொழுது, தமிழக எழுத்துலகமே அந்தப் பெருமையை ஏற்றுக் கொண்டது. ஞானபீடப் பரிசும் அவருக்கு வந்து சேர்ந்த பொழுது, ‘ஜெயகாந்தனுக்குப் பரிசளித்து ஞானபீடம் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது’ என்று தமிழுலகே வாழ்த்தியது.
மஹாகவி மேல் மிகவும் பிரேமை கொண்டவர் என்று இவரது எழுத்துக்களிலிரு ந்து தெரியும். கவிதையுள்ளமும் வாய்க்கப் பெற்றவர் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் அறிவர். சில திரைப்பாடல்களையும் எழுதியிருக்கிறார். இரண்டு நூல்களுகளை தமிழில் மொழிபெயர்த்தும் உள்ளார். ஒன்று: ரோமன் ரோலண்டின் ஆக்கத்தை ‘மகாத்மா’ எங்கிற பெயரில். மற்றது, புஷ்கினின் படைப்பை, ‘கேப்டன் மகள்’ என்கிற பெயரில். இவரது சிறுகதைகளும், புதினங்களில் சிலவும் ஆங்கிலம், உக்ரைன் மற்றும் அனைத்திந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ‘Game of Cards’ என்கிற பெயரில் ஆங்கிலத்திலும், ‘அதூரே மனுஷ்யா’ என்கிற பெயரில் ஹிந்தியிலும் இவரது சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
முதலில் ‘ஜெயபேரிகை’, அப்புறம் ‘ஜெயக்கொடி’ என்று இரு நாளிதழ்களுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கிறார். இவரை ஆசிரியராகக் கொண்டு, ‘ஞானரதம்’ எங்கிற இலக்கிய இதழும், ‘கல்பனா’ என்று மாத இதழும் வெளிவந்தது. வெறும் ஆசிரியர் என்கிற அளவிலேயே இந்த இரண்டிற்குமான இவரது பங்களிப்பு சுருங்கிப் போய்விட்டது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
நீண்டகாலமாகவே அவர் எழுதுவதைத் துறந்திருக்கிறார். அதற்கான காரணம் அவருக்குத் தான் தெரியும். இருந்தாலும் பெரிய புத்தக விற்பனைக் கூடங்களில் அவரின் புத்தகங்களுக்காகவே தனியிடம் ஒதுக்கப்பட்டு விரவிக்கிடக்கும் அவரது படைப்புக்களைப் பார்க்கும் நேரங்களிலெல்லாம் ‘ஓ, எப்படிப்பட்ட சாதனை!” என்கிற எண்ணம் நமக்குத் தோன்றாமலில்லை. பள்ளிக்கல்வி கிடைக்காமல் போனவருக்கு, வாழ்க்கை தன் இருகரங்களையும் நீட்டி அழைத்து அள்ளி அணைத்து ஆனந்தப்பட்டிருக்கிறது. கல்வி புகட்டியிருக்கிறது; தாம் பெற்ற கல்வியைத் தான் புரிந்து கொண்ட மாதிரி இவரும் மற்றோருக்கு வாரி வழங்கியிருக்கிறார்.
ஜெயகாந்தனின் ஸ்கூலில் படித்தவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அலசி ஆராயத் தெரிந்திருப்பார்கள். அவை கண்டு மிரளாமல் தீர்வுகாணத் புரிந்திருப்பார்கள். அதனால் தான் அவரது வாசகர்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள்.
நன்றி: http://jeeveesblog.blogspot.com/2010/01/blog-post_25.html