பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் ‘பதிவுகள்’ கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். – பதிவுகள் ]
சித்தார்த்த ‘சே’ குவேரா கவிதைகள்!
1. அப்பா
நீண்ட காலத்தின்பின்
நேற்று அண்ணாந்து
வானம் பார்த்தேன்.
நடு விரலிடை வைத்து
வாய் அகல் V ஆக வளைத்த
நீள்கோடொன்றில் இருப்பதுபோலக்
கிடந்தன இன்றும் அம்மூவுடுக்கள்.
ஆயினும், அப்பா,
நீங்கள் சொன்னதுபோல்,
அவை பின்னாய்,
வானில் இருந்து
ஏது விமானங்களும் இறங்கவில்லை;
விண்ணவர் பெயரில்
வெள்ளிக்கிரகவாசிகளும்
மினுங்கவில்லை.
ஆனால், அவற்றிடை
மங்கிக் கிடந்தது
ம(¨)றந்துபோன
ஒரு முகம்.
மறந்துபோன
பௌதீக இரசாயனச் சூத்திரங்கள்,
ஊக்கி, வெப்பவுள்ளுறை, மாற்றீடு
தேவையின்றி வீதிச்சந்துகளில்
ஊக்காமலே மாற்றீடற்ற
வெப்பம் உள்ளுறை சுடுநீர்க்கிணறென
ஞாபகத்திற்கு வந்திருந்தன.
கூடவே,
வீட்டோரக்குப்பைத்தொட்டி அருகே
குவிந்திருந்த பச்சைமேனிப்புல்லுக்கெல்லாம்
தாவரவியற் பெயர் தேடிக் களைத்திருந்தேன்.
அந்தமுகமும் அதற்குரிய மனிதர் பெயரும்
அதனோடான என் உறவும் மட்டுமே
நினைவுத் துண்டு துண்டாய்
ஞாபகத்திற்கு வந்து விழுந்தன.
துளியாய்க் கீழ் இமையிற்
சில கணம் தொங்கியன.
கடல் நண்டு,
கரை மண் மேல் நின்றுபிடிப்பதும்
நினைவில் எழுந்தது.
அதைக் கூட
மணற் குன்றில் எழுப்பிய
கோட்டையுடன் சேர்த்துக்
கால அலை
கொடூரமாய்க் கொன்று தின்றது.
அன்று
நீங்கள் சொன்னதுபோல்,
என்னை விஞ்சிய
இயற்கையை அஞ்சி
இன்றும் நின்றேன்
நான் மட்டும்,
தனியே இங்கு மிஞ்சி.
தொலைவு நகர்ந்தபோதும்,
என் மேய்ச்சலுக்கான நிலம்,
நூல்நிலையம்,
பழைய நூற்கடை என்றாகிப்
போயிருக்கக் கேட்டீர்கள்.
நூற்கடையில் நேற்று நிற்கையிலே
கூட நின்று கூர்மூக்குள்ள நிழலொன்று நெய்திருந்தது,
நெஞ்சில் நெகிழ் ஆடையொன்று,
முன்னை நினைவெல்லாம்
நெய் ஊசி முனை என் உள்ளம் தைத்திருக்க.
“தூய காரணங்கள்” என்னுட் தோற்கக்கண்டேன்;
துவண்டேன், மீளொரு பையெடுத்து
சனி காலை, சித்திரக்கதைகளும்
சின்ரல்லாச் செருப்புக்களும் உள்நுழைத்து
துவிச்சக்கரவண்டியிலே பின் இருக்க
அவதியிற் துள்ளிக் கிடந்த
ஒரு பையன் நொய்மனத்தே,
நேற்று ஒரு நாள்
பெற்றவன்
அருகே சுற்றி இராக்
குற்றம் தந்த வெப்பம் உட்பிறக்க.
காற்றில் கரியாய்க் கலந்து பாதி,
மீதி கடல் அலையில் கரைந்து ஒளியும்
என்றாகி இயற்கை,
கொடிதாய்ச் சாற்றும் மொழியாப் போனபோதும், போட்ட
நாற்று வளரும் என் நினைவில், செயலில்,
கொடி பந்தலாய்ப் பரவி, மேலும் விதை
போட்டு முளைக்கும் இன்னும் பல பந்தல்
பிறர்க்கு நிழல் பார்த்துக் காத்திருக்க.
அது எண்ணி,
ஊருக்கு உத்தமனாய் வாழ்தலுக்குப் பக்குவம் அற்றாலும்
ஒரு மனிதன் மனம் உணரும் சக மனிதனென
இதுவரை நாள் நிலை தடுமாறா
நேர்கோட்டுப் பாதையிலே நின்றகலா
நிழலாய் நின்று வழிகூட வந்ததற்கு
நன்றிகளுடன்
நான்.
‘பதிவுகள்’ ஆனி 2000; இதழ் 6
2. சித்தார்த்த ‘சே’ குவேராவின் (அ)கவிதைகள்
பழைய தெருவுக்கு மீண்டும் தயிருடன்
கூவிக்கொண்டு வருகின்றான் இடையன்.
கடையக் கடைய வழிந்த வெண்ணெயைத்
தொலைத்தபின்னால், முன்னர் மீந்த தயிரை
பின்னும்
இன்னும்
விற்றுப் பிழைக்கும் கலைஞன்.
தெரு தூங்கிக்கிடக்கின்றது கிடையாய்க் கைவிரித்து,
அடித்தோய்ந்து தூங்கிய அரவச்சாட்டையாய்
செட்டைச்செதில் உதிர்த்தும் உரிக்காமலும்.
மேலே விரலொட்ட வொட்ட விற்றுப் போவான்,
புளி சொட்டிக் கண் சுருக்கும் தயிர் – இடையன்.
வீதிக்கு, வீட்டுக்கு விலைப்படுகின்றபோதும்
இவனுக்கு எண்ணமோ, இன்னும்
கடையச் சடைத்துத் தொலைந்த
கட்டி வெண்ணெயில்.
காலமும்கூடக் கடவாய் கசியக்கசியப்
புசிக்கும்
வெண்ணெய்.
=====
விரல்கள் மட்டுமே இருக்கின்றவர்களுக்கு,
சொற்கள் மட்டுமே தேறும்.
கோர்த்த சொற்களைக் குலைத்து,
குலுக்கிப் போட்டு மீட்டுக் கோர்த்தாலும்
சேர்ப்பது விரல்கள் மட்டுமே என்றானால்,
சொற்கள் மட்டுமே குவியற்கற்களாய்த் தேறும்.
விற்காத சொற்களையும் வினையாத விரல்களையும்
வீணுகு வைத்துக்கொண்டு விளைமீனுக்காய்க்
காத்திருக்கும் கொக்கொன்றினது எனது கால்.
=====
இறந்தபின்,
எனது கடிகாரத்தை முறித்துவிடு
காலம் கடந்தபின் அ·துனக்குக் காட்டப்போவது,
நிழல்களுக்கு மட்டும் நினைவு படரும் நேரங்களை
என்றாகக்கூடும் என்று புரிந்து கொள்கின்றேன்.
நான் கடந்து போனபின்,
காற்தடயங்களை மணலுட் புதைத்துவிடு.
அந்த அடிகளிற் தொலைந்த மணலையெண்ணி
திசையை மறுக்கக்கூடும் என் தேசத்தை
எண்ணிப்பார்க்கமுடிகின்றது எனக்குள் இப்போது.
முடிந்துபோனபின்,
என் முகத்திரையைக் கிழித்துவிடு.
உள்ளுக்குள்ளொரு முகமில்லை,
உறைந்த குருதியும் நிணமும் சதையுமே
உருகி வழியக்கிடந்தது ஒவ்வொருவர்போலவும்
என்று உலகறியக்கூடட்டும் என்றென் விழைவு.
என் முடிவு மூச்சுக்காற்றை
வெளியிலே கலந்ததற்காகக்கூட
கவலைப்படுகின்ற நாட்டார் வாழக்கூடுமானால்மட்டும்,
என் பெயரால் அவர்க்கு உரத்துச் சொல் ஒரு கூற்று,
“கட்டின்றி களிப்பில் புடைத்து அலையும் பொருள்
புவிமேலே என் அடிக்காற்று.”
தேசக்காற்றையும்கூட திசைபற்றித் திருப்பி
இழுத்திறுக்கிக் கட்டவிரும்புகின்றவர்களுக்காக,
நீயும் நானும் கவலைப்படமுடியாது காதலி.
====
மரணச்சாலைக்கு முன்னால் நிற்கும்
மணிக்கூட்டினைப் பற்றி
நான் எண்ணிக்கொள்வதுண்டு.
ஓய்ந்துபோனவர்கள் நிமித்தம்
உள்வாய் கைபொத்தி உறைந்து
கிடக்கும் மரணக்கூட்டு இருட்டில்
ஓடிக்கொண்டிருக்கும்
ஒரு மணிக்கூண்டினைப் பற்றி
நான் எண்ணிக்கொள்வதுண்டு
இல்லாமையைத் தேக்கி நிற்கும் நிலத்திலே
இருப்பில் நிலைத்துப்போன நசிகாலநினைவு,
தனித்திழுத்து ஓசை உச்சந்தலையிடிக்க-
பகைவர்கூட்டத்தின் முன்னர்,
ஒற்றையாளாய் வாளை ஓங்கிக்கொண்ட
ஒரு வீரனின் உயிர்த்துடிப்பாய்
– எண்ணிக்கொண்டதுண்டு
அந்த மணிக்கூண்டை.
வாளெடுத்துப் பொருதும்
வீரர்களும் வயதேறிச்
சாவது வியப்பல்ல.
செத்தபின்னும் சில
சீவிப்பதும் அதுபோல.
====
தொலைவில் நகர்கின்ற புகையிரத்தின் சாளரக்கரையிருக்கும்
பயணிக்குத் தோன்றும் எண்ணங்களைப் பற்றி
என்னிடம் எத்தனை முறை கேட்டிருப்பாய்?
கேட்கின்றபோதிலே, அவன் மனைவியைப் பற்றி,
அவள் குழந்தையைப் பற்றி, அவர் வேலையைப் பற்றி
எதையெதையோ பற்றி என்று சொல்லிக்கொண்டிருக்க
எனக்குத் தெரிந்திருந்து பற்றி என்றைக்கும்
இரதம் கடந்த அடுத்த கணங்களிலே
எண்ணிக்கொண்டதில்லை நான்.
நகரும் புகையிரதத்துக் கரையில் நான் இருக்கையிலே
“என்ன எண்ணுகின்றேன் என்கின்றாய்?” இன்றைக்கும் நீ.
நடைபாதையிலே அவளோடு நகரும் அந்த அவன்
என்ன எண்ணிக்கொண்டிருப்பான் என்றுமட்டும்தான்
எனக்கு எண்ணத்தோன்றுகின்றதென்றதைச் சொன்னால்,
என்ன எண்ணிக்கொள்வாய் நீ?
====
ஒரு கறிவேப்பிலைச்செடியாகப்
நான் உனக்குப் பிறந்துவிட்டதற்காய்
நீ மட்டும்தான் அழுதுகொண்டிருக்கின்றாய்
என்று எண்ணிவிடாதே அம்மா!
நானும் கூடத்தான் தூரத்திலும்கூட
அறையை அவதானமாய்ச் சாத்திவிட்டபின்னர்.
ஊற்ற ஊற்ற துளிர் ஊறாது உற்றுப்போவேன்
என்று பார்த்து, காத்து, பொத்தி முளைக்கு
முலை புகுத்திச் சொட்டுச் சொட்டாய்
உயிர் பருக்கிய மொட்டுக்காலங்களை
நீ எனக்கு சொல்லிக்காட்டப்போவதில்லை
என்றபோதும் தட்டிக்கொண்டேன் இருக்கின்றது
என் நடையொற்றிலும் தடுமாற்றத்தடை.
சடைத்து மணத்துக்கொள்ளமுன்,
உடைத்துச் சிதைத்துப் போனவைக்கும்
தப்பிக் கிடந்து முளைத்து கிளைபெருக்கிச்
சுற்றிக்குட்டி தழைத்துப் போன நேரத்திலும்
அடித்துக்கொள்கின்றது இவர்கள் பறிக்கின்ற
ஒவ்வாரு குருத்திஇலைக்கும் அடிக்குறியென்றால்,
மரத்தை, முடிவாய்த் தொலைத்ததுபோல, காலத்
தொலைக்கு தத்துக்கொடுத்த அம்மா, நினைவில்
அடித்துமட்டுமோ கொள்ளும் உன் அகம்?
====
காலைப்பொழுதில் உருமாறு மீள்வட்டச்செய்கை.
எழுதிய களிமண்பலகை இளக்கிப் பிசைந்து
பிதுக்கிச் சமைத்த எழுதுபலகை.
உருக்கிய இரும்பை கரியுடன் பிணைத்து
உருக்கி உருக்கித் தின்ற உடலின் தொழில்.
தினவட்டத்துள் சலித்துப் புழுக்கும் சிந்தனைகள்;
தின்று மடிந்து மடிந்ததைத் தின்று பிறந்து வளர்ந்து
தின்னவேதுமின்றி இறந்ததைத்தின்று பிறந்து
தினவட்டத்துள் புழுத்துச் சலித்து கலித்துகொட்டும்
சிந்தனைகளும் செயலும் ஒன்றையொன்று வெறுத்திருக்கும்.
பிசையமுடியாப் பிண்டப்பண்டமானபோது,
உருக்க ஒழுகா தடித்த முண்டமானபோது,
உருக்கும் களியும் உருகிக் கழியும்.
ஒரு மாலைப்பொழுதில்,
ஓய்ந்துபோய் முற்றுப் பெறும்
மீள்வட்டச் செதில்.
====
உருவிக்கொள்ளும் தீ பரவித் திரியும்
எரியும் கொள்ளி தேடி.
இறந்த எலிகளுக்கு உயிர்மீள வரம் தருகின்றோம்
எனக்கூவும் பாசிகளின் மேலாகப் படரும்
பாசிசாயத்தாள் நீலமும் செம்மையும்
மாறி மாறிப் படர.
இருக்கின்ற புறாக்களுக்கு ஒரு கரண்டி நீர் வார்க்கமுடியாதவர்கள் ,
இறந்த உடல்களைக் கிண்டிக்கொண்டிருக்கின்றார்கள்,
உயிர்கொடுத்து நடத்தி நாடகம் ஆட்டப் பாவையாக்க.
மரங்களை அறுத்துக்கட்டிய மண்டபத்திலே
வனங்களை வளர்ப்பது பற்றிப் பாடம் நடத்துக்கின்றோம்.
என்னை மூட்டைப்பூச்சிக்குள் முளைக்கவைத்தவனையிட்டும்
இன்றைக்கு நான் கவலைப்படுக்கின்றேன்.
மூட்டைப்பூச்சிகளைப் பற்றி மெத்தைகளோ மனிதனோ
கலைப்படாதது பற்றி நான் கவலைப்படமுடியாது,
அவற்றைப் படைத்திருக்கக்கூடிய அவனே
கவலைப்படாதபோது.
மரங்களும் மூட்டைப்பூச்சிகளும் ஏதோ காராணத்துக்காக
தோல் எரிந்தோ அறுந்தோ உரிந்தோ போகலாம்.
காரணங்கள் தாமாக இருக்கின்றவையல்ல,
திரிந்தலைந்து தேடிக் கண்டு தரப்படுகின்றவை.
எலிகள் உயிர்க்க, இறந்துபோம் மூட்டைப்பூச்சிகள்.
– பதிவுகள் ஜனவரி 2001; இதழ் 13.
3. கிளிப்போர்வீரன்
– சித்தார்த்த ‘சே’ குவேரா –
காலைத்தூக்கத்தின் கடைசியிலே
தனிக்கிளிப்போர்வீரன் கழிசுற்றி
வழிபோகக் கண்டேன் நான்;
அகல விழி கொண்டேன் பின் விரைந்து.
மெல்லாமலே மிரட்டுஞ்சொற்களை,
கூவித்தின்றும் கூட்டித்துப்பியும்
குறுக்கும் நெடுக்கும்
கொண்டுபோனான்;
கொட்டிக் கொட்டிக்
குதறிக்கொண்டும்கூட.
தனக்கு வெந்ததையே மீளமீள வெக்கைப்படுத்திப்போனான்;
சொல் மாளச் சொல் மாள, பையெடுத்துச்
சொன்னதையே வன்கதியிற் சுற்றிப்போனான்.
இல்லாத கேள்விகளுக்கும் இந்தா பதிலென்று
எடுத்தெறிந்தான் இங்குமங்கும்.
எதற்கு இதுவென்றால், அதற்குமோர்
அந்தரத்தே தான் தங்கும் அசிங்கப்பதில் தந்தான்.
வந்ததுவும் போனதும் தன்னடைக்கே தெளிவு என்றான்;
என்னதுவும் உன்னதுவும் எல்லாமே பொய்யென்றான்.
கண்ணைத் திறந்தால் கூர்க்காற்கைகொண்டு பொத்தினான்;
நான் நிலவைக் காணத்தானே தான்
கண்ணைக் கொண்டு பறத்தலென்றான்.
தத்தித்திரிந்தான் முன்னுக்கும் பின்னுக்கும்;
முடுக்கத்தில் முக்கிக் கழித்தான் சொட்டெச்சம்;
முரமுரவென்று மூக்குள் மூச்சோடு முனகினான்.
எந்த வினைக்கும் எதிர்ப்பட்டாரைக் குறை சொன்னான்;
தன் வினைக்கு முன்வினையைத் தானே முன்வைத்தான்.
கழுத்தைச் சுழித்தான்; சரித்தான்; வட்டக்கண்ணைப் படபடத்தான்;
அடர்ந்த அலகைமட்டும் அவதியிலே கொறிக்க வைத்தான்.
இறக்கை தறித்த கிளிப்போர்வீரன் தத்தலுக்கு,
ஏட்டுச்சுவடியினை இழுத்துக் கதை சொல்வதற்கு,
என்னத்தைப் பதிலாக இங்கே எழுதிவைக்க?
“அவதி அலகை மூடிக்கொள்; அறுந்த சிறகை முளைக்கச்சொல்;
விரைந்து பறக்கக்கல்; வெளியை மிதிக்கச்செல்.
கொறித்துக் கொறித்துக் குறை கொட்டித் திரிதலுக்கு,
கொவ்வை ஒன்றை ஒழுங்காய் எடுத்துருட்டி,
உண்டலகு மென்று தின்று மூடிக்கொள் நா”
என்றால் கேட்குமா இறகறுந்த அலகுக்கிளி?
தனிக்கிளிப்போர்வீரனின் போர்வையெல்லாம்
கேட்டலும் கிழித்தலும் பிதற்றலும் பீய்ச்சலுந்தான்.
“கழிசுழற்றும் கிளியெல்லாம்
கிண்ணிக்களி தண்ணீர்ச்சுனை
கண்டால்,கொண்டால்
என்ன செய்யும்?
என்னைப்போல்,
தின்னுமா, குளிக்குமா,
தினவெடுத்துத் திரியுமா?
என்ன சொல்வாய்?”
என்று கேட்டேன்.
பதிலொன்றும் சொல்லாமல்
காலைத்தூக்கத்தின் தனிக்கிளிப்போர்வீரன்
கழிசுற்றி கடந்துவழிபோகக் கண்டேன் நான்;
அசரும் விழி மூடிக்கொண்டேன்.
மோனத்தில் என்னைமட்டும்
மோகித்து மொத்தமாயொரு
வட்ட முடிச்சிட்டிருந்தேன்
மிச்சவிடிநேரத்துக்கு.
பதிவுகள் ஜூலை 2001; இதழ் 19.
4. சித்தாந்த சேகுவேரா கவிதைகள்!
வழுப்படு தலைப்பிலி-I
என்ன சொல்லக்கூடும்?
ஏற்கனவே தெரிந்ததுதான்…
இதற்குத்தானா?
இவ்வளவுதானா?
என்ன செய்யக்கூடும்?
எதுவுமில்லை.
இம்மியளவும் அசையவில்லை,
காற்புல்லும் கைவிரலும்.
என்றாலும் வெளியே
சொல்லிக்கொள்ளமுடியாததென்னவோ,
இழந்த நாளும் இரைந்த எண்ணமும்தான்.
விக்கிரமாதித்தன் தோளிலே ….
….. வேறென்ன?
தோல் திரும்பிப்போட்ட ஆரம்ப வேதாளம்.
அதே!
வழுப்படு தலைப்பிலி -II
அவரவர் வாசலிலே சுடுமரணம் நிற்கிறது.
விரல்களைப் பற்றி விபரித்துக்கொண்டிருக்கிறேன்.
நகக்கண்ணிலே முளைக்கக்கூடிய பருப்புத்தாவரத்தைப் பற்றிய
நொண்டிப்பாட்டாக இருக்கிறது எனது மொழி.
கவரப்பட்டவை பற்றியும் பேசுகிறோம்;
கவர்ந்தவை பற்றியும் கலந்தாலோசிக்கிறோம்.
கொடுமரணம் மெல்ல நிழலுக்குள் முகம் புதைத்து நிற்கிறது.
எல்லாருடைய பெயருக்கும் எழுமூலம் குறித்துக்கொண்டிருக்கிறேன்;
என்னிடம் ஏனென்று கேட்கக்கூடாது –
ஆனால்,ஏற்கனவே இன்னார் இன்னாரென எல்லாம் எழுதியாகிவிட்டது.
மரணம், மதியத்துப்பள்ளிக்கூடப்பிள்ளைகள்போல,
தெருமதிலுக்குப் முன்னாலும் பின்னாலும் முகத்தையும் முதுகையும்
ஆட்டிக்கொண்டிருக்கிறது.
இன்னும் கரைந்து கொண்டிருக்கிறது நேரம்,
சீனி திகட்டத்திகட்ட தேநீர் புகட்டிக்கொண்டு
பேசிக்கொண்டிருக்கின்றோம்
பெருமிதம் பிடுங்கியடுத்த பெரும் பழங்கதை.
மடக்கமுடியாமல் மரணம் தன் மனத்தோடு ல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது.
“எல்லா அத்தியாயங்களும் எப்போதோ எழுதிமுடித்தாகிவிட்டது”
என்று நகர்கின்ற தெருவிலே படரும் யாரோ சொல்லிக்கேட்கிறது.
நாமோ விடுவதாயில்லை விரல்களின் வீரப்பிரதாபங்களின் விபரிப்பை.
செவிக்குள் ஊதுகிறது வெண்சங்கு; சேமக்கலம் சாபம்போட்டதுபோல் சத்தம்.
தருணம் பார்த்து மரணம் தட்டும் முன்வாயில்…..
….. நீ திறக்கிறாயா,
இல்லை,
நான்தான் போகவேண்டுமா?
வழுப்படு தலைப்பிலி -III
எல்லாம் முடிந்தபின்னால்,
கால்களில் நீர் உரசிக்கொண்டோம்;
கைகளைக் கழுவிக்கொண்டோம்.
நகரும் போது நரம்பிலே நன்னியது கொக்கி
சேற்றிலே நனைத்துக்கொள்ளவா பிறந்தன கைகள்?
காற்றைக் கிழித்துக் கரிக்கோட்டைக் கீறிக்கொண்டாலும்,
கலங்கத்தான் செய்கிறது….
மூளியுருவைக் கீறிக் கெட்டது புல்வெளி;
மழுங்குரு உடல் கெளித்தது விழி, கோணியது வாய்.
படைத்த பாவம் புடைத்துப் பருத்து விடை கேட்டு
நகர்ந்தது அலைபாதம்தொட்டுப் பின்னால் நாயாய்
ஒயிலை மழுக்கவா பிறந்தன கரிகிறுக்கும் விரல்கள்?
ஒதுக்கப்பட்ட ஓலைக்கப்பாலான அகல்வெளியில்
தவிர்க்கப்பட்ட மனைகளையும் வரியப்பட்ட வேலிகளையும்
நினைத்தும் உடைத்தும் போன தடங்கள் தளராது; தாளப்பட்டுக் கேட்கும்
விலக்கப்பட்ட நிலங்களை மிதிக்கவா பிறந்தன பாதங்கள்?
எல்லாம் முடிந்தபின்னால்,
இரைத்திறைத்து எல்லாவற்றையும்தான் கழுவிக்கொண்டோம் என்றுதான் பட்டது
இவ்வளவும் எதற்கென்ற எண்ணத்தைத்தவிரவோ??
வழுப்படு தலைப்பிலி – IV
கடக்கும் ஒவ்வொரு நகரத்திலும்
அதே கதையை முகங்கள் பேசிக்கொண்டு நகர்கிறன.
என்ன,
வேகம்தான் நத்தையா நண்டா நரியா என்று திக்குத்திக்காய் தத்தும்..
முகங்களின் கதையேனோ முற்றுமே ஒன்றுதான.
நாடகப்படியொன்றை நாலு குழுக்கள் நடித்ததுபோல,
படிமங்கள் தடித்து கலைந்தலையும் தனித்தனியே
தமக்கான முகங்களின் கட்குழி தேடி….
கதையேதோ அதுவேதான்.
உதிர்க்கும் சிரிப்பு சொல்லும் கதையை
ரௌத்திரம் உதிர்க்கச்சொல்லும்போதும்
தனிப்படத் தன்னைக் காட்டிக்கொள்கிறது கதை….
அதுவேதான்.
வரக்கிடக்கும் நகர்களைக் கடக்கும்போது,
கண்களை மூடிக்கொள்வேன்;
நினைவில் நடித்துப்பார்க்கக்கூடாதோ நான்,
கதைக்கு என்னிற்படுமேதும் இரஸத்தை?
வழுப்படு தலைப்பிலி – V
கிடைக்கும் மூங்கிலெல்லாம் ஊதிக்கொண்டு நகர்கிறேன்…
இன்னும் பிடித்த ஓசை பிறக்கவில்லை.
எறிந்த மூங்கிலையெல்லாம் எவரெவரோ இசைக்கிறார்…
பிறந்து நகர்கிறது பிடித்த பேச்சு.
இருந்தும் மரத்துக்குருத்துமூங்கிலைத்தான் உடைத்துக்கொண்டும் திக்கொண்டும் நரம்பு
விடைத்துப்புடைக்கத்திரியமுடிகிறது.
பிறர் பிடித்தெறிந்த பேச்சுக்களையும் பிடித்துப் போட்டுக்கொள்கிறேன்
வாய்விரித்த சுருக்குப்பைகளெல்லாம்.
கைப்படத்தொட்டவுடன் சுருதிசெத்துச் சரிகிறன.
சொற்களை மட்டும் சுருக்கிக்கொள்கிறேன் பைவயிற்றுள்.
படகுட் பறியோடு, ஆற்றில் தூண்டிலைப் போடாமல்
காட்டுமூங்கிலும் கைப்பையுமாயா நடந்து திரிவான்,
ஒரு கசட்டுமீன்பிடிப்பான்?
வழுப்படு தலைப்பிலி – VI
காவற்காரர்கள் தெருக்குதிரைகளிலே போவதைக் கண்டேன்;
குளத்திலே படகிலே முதலை தேடிக்கொண்டிருந்தார்கள்;
வானத்திலே பறவைக்கு வலைகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆமாம், நான் கண்டேன்தான்.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.
காவற்காரர்கள் கடந்துபோனார்கள்.
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
திருடர்களுக்குத் திருவோடு பிடிப்போரைத் தேட
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
காவலின் கூறு கவனமும் காதும்
கூறெனக்கேட்பதும் கூற்றுவனாகுமோ?
அலைகின்ற நாய்களில் வெறியெது அறியாது.
“திருடர்கள் திரியலாம் திகம்பரர் உருவிலே
திருடர்கள் புரியலாம் தெரிந்தவர் வடிவிலே
திருடர்கள் உறையலாம் தீங்கிலார் மனையிலே”
திரும்பத் திரும்பச் சொன்னார்கள் காவலர்.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.
திருடரும் காவலரும் ஒருமித்த ஜாதி.
வருவார் புரிவார் அகல்வார்
ஆனால், அறியார் எனைப்போல் அரைவௌவால் ஜாதி
திருடர்கள் உருவாய் காவலர் கண்ணில்
காவலர் நாயாய் திருடிகள் முன்னில்
எனக்கென இருப்பது ஏதுமில்லை வடிவு
எனக்கென இருக்கலாது கருத்து…..
“நீ திருடர்கள் தெருவா? காவலர் பிரிவா? எது??”
எனக் கேட்டால், மனை எதுவெனச் சொல்வேன்??
இடையினமேதும் இருக்கலாகாதென்றால்,
இரு வல்லினம் நடுவே மிதிபடு மெல்லினப்புல் நான்.
பதிவுகள் டிசம்பர் 2001; இதழ் 24.
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள்!
1. நந்தவனத்திலோர் ஆண்டி
உலகின் அரும்பூக்கள் பல கோடி
பூத்துக் குலுங்கும் திருப் பூங்காவனம்
உனது.
துலங்கும் அவற்றின் தனிநிறங்களும், நறுமணங்களும்
உயிரைத் துளிர்க்கச் செய்ய
தோட்டமும், தென்றலும் தம்முள் கலந்து
கிளையசைத்துத் தந்தவை சிலவும்
நாட்டம் மிக நான் கொய்தவை சிலவும்
சுடர்க்கொடி யாகி நின்றேன் சூடி.
வாடியழுதாய் நீ வழிதொலைந்ததாய்
அடர்காட்டில்.
‘அடிக்கு அடி ஊற்றுக்கேணி யிருக்கும்
அகன்று படர்ந்த சர்க்கரைத் தேனாற்றில்
அட, ஒரு கை யள்ளினாலென்ன
கொள்ளை போய் விடுமா சொல்?
வெள்ளையாய் கேட்டது உள்.
(வினாவும் விடையும் எல்லாம்
வெறும் பாவனையின்றி வேறில்லை கொள்.)
– கொள் இன்றில் தன் தேடலின்
நல்வரவாய்
இன்னொரு கரம் என் பூவனம் பரவப்
பெறும் பாழ்வெளியில் தன்
கால்மாற்றிக் கொண்டுணரும் உன்
வலியின் கனபரிமாணங்களை.
2. நடை
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக
ஏகும் காலம் சிறிதே தயங்கித் தாண்டிச்
செல்லச் செல்லும் ஏறிறங்கு பாதையில்
மப்பு மந்தார மத்தாப்பு வெளிச்ச மந்த
மாருதமுமாய் அனிச்சப் பூ மனதில் அங்கிங்கே
தைக்கும் முள்ளும் மலரின் நீட்சியாய்
காட்சிரூப நினைவார்த்தமாய்
தலைச்சுமை மறந்து தாளகதியில் நடந்த தெல்லாம்
உள்ளது உள்ளபடி சொல்ல மாட்டாததை
மொழியின் பிழையென ஆற்றிக் கொள் மனம்
காத்திருக்கத் தொடங்கும் அடுத்த நடைத் திறப்புக்காய்.
3. போர்த்திறம்
எரிக்கத்தான் புறப்பட்டேன். பிறகு
எதற்கும் இருக்கட்டும் என்று புதைத்து வைத்தேன்
மனமூலையில் ஒரு குழி பறித்து.
நினைவு தெரிந்த நாளாய்த் தரித்ததைக் கழற்றியதில்
புனையாடை மீறி அம்மணம் பெருக
தழுவும் குளிர்காற்றில் கனிந்திருந்தேன் மிக.
துளிர்த்துப் பொழிந்தது கற்பகத்தரு அருநிழலை.
நிற்பதும் நடப்பதும் நின்னருளாகிய
பிறந்து வந்தேன் பல மறுபடிகள்.பின்
ஒரு காலை இரு கண்ணவிய
இருள் கவியலாக
நிறம் மாறிய நாளை வாள் சுழற்ற
ஊன் அரற்ற உயிரரற்ற
என்மீது நானே படைகொண் டேக
கனவு பறிபோக கையறுநிலை வரவாக
இன்னும் பின்வாங்காது முன்னேறப்
பெறும் செந்நீரில்
முன்கொண்ட கவசகுண்டலங்களைப் பதைபதைத்துத் தேடி
விண்ட மனதின் புதைமூலைக்குச் சிதைந்தோடிக்
கொண்டிருக்கும் நான்.
கால்பதியுமிடமெல்லாம் உனக்கான நன்றிகள்
கசிந்திருக்க…
கழிந்த காலமும் கழியாக் காதலும் வழிமறிக்க….
4. வெளியேற்றம்
இந்தத் தருணத்தை இயல்பாய் எதிர்கொள்ளும்
பிரயத்தனத்தில்
கந்தக உலைக்குள் குளிர்நிலவுவதா யொரு கபடநாடகம்
அரங்கேறியாகிறது.
விழிகளூக்குள்ளாகவே தேங்கிக் கனன்று
அழுகிக்கொண்டிருக்கின்றன கண்ணீர்த் துளிகள்.
இழப்பொன்றுமில்லை என்று உரத்துச் சொல்லிச் சொல்லி
கிழிந்து தொங்குகிறது குரல்வளை.
ஒருவருமறியாதபடி திறம்பட மறைத்து
வழிவிலகலின் பழுக்கக்காய்ச்சிய முட்கம்பிப்
புண்களையும் மறைத்து
புன்னகை நிறைத்து
பாடியாடி பிரமாதப்படுத்துகிறேன்.
எனக்கு நானே கை தட்டித் தட்டி
களைத்துப் போகிறது.
அலைகடலில் நாளும் முழுகிக் குளித்தெடுத்த
முத்துக்களை அளந்து பார்க்க
நிலையழிக்கும் நீராழமும், நீச்சலின்
வரம்பெல்லைகளும்.
அடித்தளம் நொறுங்கிக் கிடக்கும் மனதின்
இடிபாடுகளை
தத்துவம் பேசித் திடமாக்கவும்
பத்திரமாய் ‘விரைந்தொட்டு’பசையால்
ஒருங்கிணைக்கவும் முடியுமானால்
இல்லாதொழியும் இக்கவிதை இப்படி.
5. ஒற்றைச் சொல் பற்றி..
முற்றும் பெறாதின்னு மின்னும் முற்றி பற்றி
யெரிந்த வாறிருக்கு மந்த
ஒற்றை வரியின் ஒற்றைச் சொல் மூட்டிய
விலங்கினங்களும் அலறியும் பிளிரியும் மாட்டிக்
கலங்கி மீள வகையறியாதோடி யபடி நாடும்
பொருளகராதிகள் நெருப்பணைக்க லாகாமல் இப்படி
கலிதீர்க்குமுன் அரவணைப்பில் வலி சற்று நலிந்தாலும்
கனன்றவாறிருக்கும் கங்குகள் அங்கிங் கெனாதபடி
வினாவறியாது விடையும் தெரியாதுடை யும்
அனாதரவானதொன்றன் துணுக்குகள் அடிமனக் குடையக்
கசியும் உதிரத்துளி யொவ்வொன்றும் இசிந்தொலிக்கும்
கூடாது ஈடாமோ மாட்டேனுக் கெனக் கேட்கு
மெனக் கெது தரும் பதிலாகும் பதில் அதில்
ஆட்படுமோ கதிமோட்சம் அன்றி விதிமுடிந்த
தாகிடுமோ உறவுத் தேட்டம் காட்டுமோ
உதய மறுமுனை யந்தியின் பின்னான
அந்தகாரமாய் முந்தியும் பிந்தியும்
பார்த்தும் பாராமலும் புரிந்தும் புரியாமல்
பற்றியும் பற்றாமல் பற்று வைத்துக்
கற்பவை கற்றுத் தேரக் கற்பதே
இற்றைக் குற்றதா யெனக்கு…
‘பதிவுகள்’ நவமபர் 2000; இதழ் 11.
6. வலிவாங்கியும் தாங்கியும்
புழுவா யுணரும் தருணம் புரைக்
கழிவெனக் கனலும் உள்
முள் கால் கிழிக்கச் செல் வழியில்
அடிக்கொரு தரம் திரும்பிப் பார்த்தபடி.
ஆரம்பமாகி விட்டது போல் வெளியேற்றம்
இடம்பெயரல் வழிவிலகல் வேரறுத்தல் ஆன
பல எத்தனையோ காதைகளினூ டாய்
கலங்கி யலைந்து பித்தாகித் தொலையும்
சொந்தம் அனந்தகோடி காலம் இருந்ததுவாய்
இறந்ததுவா யின்று ஓலமிட்டுப் பறக்கு
முயிர்ப் பேதைக் கிளி யிறகுகள்
படபடக்கப் படப் பின்னு மின்னு முயரப்
பறந்து டலை விண்மீன்களுக்குத் தின்னக் கொடுத்து
பதிலுக்குத் தன்
வலிதாங்கிக் கிடைக்கோட்டை மீட்டெடுத்துக்
கொள்ளும்.
7. செலவு
நிறமும் சுவையும் நீள அகலமும் நன்கறிய
நீர்வளம் நலங் குன்றியதாகும்.
மறுபடி கனலத் தொடங்கும் தாகவிடாய் தீராது
தேரோடக் கிளம்பி விடும் குதிரைக் குளம்பொலி
தொலைவாகி வருவதாய்
தளும்பி நலியும் துயர் நெஞ்சில் மண்டும்
பின்னோக்கிய பயணங்களும் பரிநலப் பிரார்த்தனைகளும்
இன்னுமாக இழப்பின் ஆறாக் காரிருட் புதைசேற்றில்
அதிவேகமா யிறங்கும் என்னை இறுகப் பற்றியிழுத்துக்
கரைசேர்க்க ஈராயிரங் கரம் போதா தெனில் உறும்
குறையிரண்டு போதுமாக வரமருள் மாகாளீ..
பதிவுகள் பெப்ருவரி 2002; இதழ் 26.
ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள்! (தமிழில் சி.ஜெயபாரதன்)
1. கீதாஞ்சலி:என் தேசம் விழித்தெழுக !
எங்கே இதயம் அச்சமின்றி இருக்கிறதோ,
எங்கே தலை நேராக நிமிர்ந்து நிற்கிறதோ,
எங்கே அறிவுக்குத் தடைஅரண் இல்லையோ,
எங்கே உலகை, வீட்டின் குட்டிச்சுவர்கள்
தூள்தூளாக உடைக்க வில்லையோ,
எங்கே மொழிகள் வாய்மையின் ஆழத்தினின்றும்
எழுகின்றனவோ,
எங்கே விடாமுயற்சி முழுமையை நோக்கித்
தன் கரங்களை நீட்டுகிறதோ,
எங்கே ஆராய்ச்சி என்னும் தெளிந்த ஆற்றுநீர்
பாழடைந்த பழக்கம் என்னும் பாலை வனத்தில்
வழிதவறி மாய்ந்து விடவில்லையோ,
எங்கே இதயம் பரந்த நோக்கத்திலும்
இயக்கத்திலும் முன்னேற நீ வழி நடத்துகிறாயோ,
அந்த சுதந்திர சொர்க்க பூமியில், என் பிதாவே !
என் தேசம் விழித்தெழுக !
2. என் பிரார்த்தனை
இதுவே என் துதி உனக்கு, என் இறைவா !
அடி ! நெஞ்சில் எழும் என் கீழ்மையின் வேரை
நோக்கி ஓங்கி அடி !
என் இன்ப துன்பங்களை எளிதில் தாங்கிக்
கொள்ள எனக்குப் பொறுமையைத் தா !
பணி புரிகையில் என் பாசம் பயனடைய
எனக்குப் பலத்தைக் கொடு !
ஏழைகளை என்றும் ஒதுக்காமலும், மடமையில்
பலத்தோர் முன் அடி பணியாமலும்
இருக்க எனக்குத் திடனைக் கொடு !
தினச் சச்சரவிலிருந்து விடுபட்டு
எனது நெஞ்சம் உயர்ந்து எழ
எனக்குத் திறனைக் கொடு !
எனது சக்தியைப் பாசமோடு
உனது ஆணைக்கு அர்ப்பணிக்க
எனக்கு உறுதியை அளித்திடு !
3. என் பயணத்தின் முடிவு !
முதுமையில் சக்தி குன்றி, என் பயணம்
முடிந்து போனதோ இறுதியாக ?
இதுவரை நடந்துவந்த என் பாதை
எதிரே மூடப்பட்டு விட்டதோ ?
தேவைக் கிருந்த என்பொருள் யாவும்
தீர்ந்துதான் போயினவோ ?
கண்காணா நிசப்த மூலையில்
காலம் தள்ளும் நேரம் வந்ததுவோ ?
எனக் கலங்கி நின்றேன் !
ஆயின் எனக்கு முடிவில்லை என்பது
உன் நியதி எனக் கண்டேன் !
பழைய பாக்கள் நாவில் அழிந்தபின், நெஞ்சில்
புதிய கீதம் பொங்கின எனக்கு !
பண்டைய தடங்கள் மறைந்த இடத்தில்,
புத்துலகம் பூத்தது, வ்¢ந்தை மிகுந்து
‘பதிவுகள்’ டிசம்பர் 2001; இதழ் 24.
*************************
கானடா நாடென்னும் போதினிலே
– சி. ஜெயபாரதன், கானடா –
கானடா நாடென்னும் போதினிலே, இன்பக்
கானம்வந் தேகும்நம் காதினிலே
தேனினும் இனிய தேசமடா, இதைத்
தேடிப் புகுந்ததெம் யோகமடா
எங்கெங்கு காணினும் ஏரிகளே, திசை
எப்புறம் நோக்கினும் ஆறுகளே
பொங்குநீர் வீழ்ச்சிகள் மேவுமடா, பனிப்
பூக்களை வானமும் தூவுமடா
ஊசி இலைமரக் காடுகளாம், பனி
ஓங்கும் உயர்மலை மேடுகளாம்
வீசிடும் வெப்ப வீடுகளாம், குளிர்
வெப்பம் மாறிடும் நாடுகளாம்.
ஈரேழு மாநிலப் பனிநாடு, சீராய்
இரட்டை மொழிளும் தனிநாடு
நீர்வளம், நிலவளம் மிக்கதடா, பயிர்
நீண்டு விளைந்திடத் தக்கதடா
முப்புறம் சூழ்கடல் முடக்குமடா, பனி
மூடும் துருவம் வடக்கிலடா
கப்பல்நீந் திடும்நீர் மார்க்கமடா, தென்
காவலாய் அமெரிக்க தேசமடா
மேப்பிள் சிவப்பிலைக் கொடிபறக்கும், அருள்
மேவிப் பிறர்க்குக் கொடையளிக்கும்
ஆப்பிளும் பீச்சுப் பழம் பழுக்கும், பல்
ஆயிரம் தக்களிக் காய் தழைக்கும்
தாமிர வைரத் தளங்களடா, ஒளிர்த்
தங்கமும் வெள்ளிச் சுரங்கமடா
பூமியில் புதிய காண்டமடா, இதைப்
போற்றிக் காத்திட வேண்டுமடா.
பதிவுகள் பெப்ருவரி 2002; இதழ் 26.
திலகபாமா (சிவகாசி) கவிதைகள்!
1. தவம்
கிடக்கும் கல்
சாபம் தந்ததாய் உன்
சாணக்கிய சிரிப்பு
கட்டிய தாலிக்காய்
உடைமைப் பொருளாய் எனை
சந்தித்த உன்னிடமிருந்து
விமோசனம் தந்த வரமாய்
என் சிந்திப்பின் தித்திப்பு
காலால் தீண்டி
பெண்ணாய் மாற்றும்
அவதாரம் நாடாது
கலையை நெஞ்சில் கொண்டு
சிலையாய் மாற்றும்
சிற்றுளிக்கும்
தாங்கிய கைதனுக்கும்
காத்திருக்கும் என் தவம்
– பதிவுகள் ஏப்ரல் 2002; இதழ் 28.
2. பிறை நிலவு
நிறைக்கும் இரைச்சலிலும்
தனிமையில் தவிக்கும் மனது
கடல் நீர்த்துளிகளாய்
காணக் கிடந்த முகங்களிருந்தும்
மனம் பார்த்து புன்னகைக்கும்
இதழ் மட்டும் தேடியே
கனக்கும் தனிமையில்
மூழ்கும் மனது
பசியும் தூக்கமும்
பற்றிக் கொள்ள அந்தப் பசியில்
நெஞ்சு நிறைக்க தின்று
நினைவுகளோடு
மூச்சுமுட்டுமென்றுணர்கையில்
உண்பது நிறுத்தி
நினைவு தந்த போதையில்
தூங்குவதாய் பாவித்து
இறுதியில் விழித்திருக்கும் கண்கள்
பசியை கண்டலர
மறைய யத்தனித்து
நிஜத்தில் நிறைந்து நிற்கும்
கரையுமென்றண்ணிய பிறை நிலவாய்
காதலின் அவஸ்தை
– பதிவுகள் மார்ச் 2002; இதழ் 27.
3. திரிசங்கு உலகு
விரியும் இதழ்களை
காணத் தராத மலர் இதழ் விரிப்பாய்
விரிந்து கிடந்தது எனக்குள் ஓர்
திரிசங்கு சொர்க்க உலகு
தங்கச் சருகு தின்று
வண்ண பேதம் தொலைத்து
காத்துக் கிடந்தன
மரங்கள் பச்சையாய்
பனியின் உறைதலும்
கதிரின் உஷ்ணமும்
வேறு பட்டு போகாத உணர்வு தரும்
சாபங்களும் , வரங்களும்
இற்றுப் போன இன்மைகளில்
தானாய் உயிர் பெறும்
அகலிகை கற்களும்
கௌதம கற்களும்
பேசிச் சிரிக்க
காதலில் காமத்தின் வாசம் மறக்கும்
இந்திரன்கள்
கணவனின் குரலுக்கு
கை நழுவ விட்டு வந்த
அதிரும் அரவை இயந்திரம்
தூக்கி யடித்து சிந்திப் போக
என் தன்மானங்களும் கனவுகளும்
வள்ளுவன் குரலுக்கு வாசுகி விட்டு
வந்த வடக் கயிற்றுடன்
தூக்கிலிட்டு கிடக்கும்
இன்றும் விட்டு வர முடியாத
அலுவல்களுடன்
சுருண்டு கொள்கின்றன
நான் விரித்து வைத்த திரி சங்கு உலகு
மக்கிய ஈர நெடியுடனும்
மல்லிகை வாசமுடனும்
நாளை என் மகள்
திணிக்கக் கூடும் தன் கனவு
விரிப்புகளை மெத்தைகளின் அடியில்
எந்த தலைமுறை காணும்
தன் கனவுகள்
பச்சை புல்வெளியாய் விரியும் நாளை
– பதிவுகள் டிசமபர் 2002; இதழ் 36.
4. அர்த்தமிழக்கும் காத்திருப்புகள்
வானம் பார்த்து பழகிய மனது
விதானம் பார்த்து கிடக்கின்றது இன்று
அர்த்தமிழக்கும் காத்திருப்புகள்
விடிந்து விடாத பொழுதுகளால்
தொலைந்து போகும் இரவு பகல்கள்
கரை தொட்டு மீண்ட அலைகள்
இறுகிப் போகின்றன
சலனங்களைத் தொலைத்து
வெளிச்சம் விடாது
மூடிய இமைகளுக்குள் தான்
வண்ண ஒளி கனாக்கள்
வந்து போகின்றன
ஈரேழு கடல்கள் கடந்து விட
முடிகிற எனக்கு
உனக்கான காத்திருப்புகள்
கடந்து விட முடியாதவையாய்
நீளப் போகின்றன
எதை உதறுவது
உனக்கான காத்திருப்பையா இல்லை
உன்னையேவா?
பதிவுகள் ஜனவரி 2004; இதழ் 49.
ரமேஷ் கவிதைகள்!
1. பிரபஞ்சம்
செதுக்க செதுக்க
கலைஞனின் செருக்கென
எழுற்சி கொண்டது சிலை
வடிக்க முடியா பேரெழிலுடன்
பிரபஞ்சம்
எஞ்சிய சிதறல்களில்!
2. பாம்பு போன பாதை
நேற்று பாம்பு போன பாதையை
இன்றும் பயத்துடன்தான் கடந்தேன்!
எதிர் கொண்ட சூட்சம கணத்தில்
மரணத்தை ஒத்திப் போட
எதிர் எதிர் வழிகளைக் கைக்கொண்டோம்
கிலியூட்டும் ஊழித்தீயென
உக்கிரமாய் விரிந்த படத்துடன்
இறந்து பட்டது நாகம்
முதுகெலும்பு சொடுக்கிக் கொள்ள
இன்றும் பயத்துடன் தான் கடந்தேன்
பாம்பு போன பாதையை..
பதிவுகள் ஜூன் 2002; இதழ் 30.
இளங்கோ கவிதைகள்
1. பறவைகள் விட்டுச்சென்ற சுவடுகள்
1.
அர்த்தம் புரியாத்தோத்திரங்களை
அமைதி தழுவவேண்டிய ஆலயச்சுவர்களில்
கொடூரமாய் அறைந்து செப்பி
திசையெட்டிலிருமிருந்து அசுவமேதகுதிரைகளாகி
உயர்குடியின் உறவுகள் கூடிவந்து
யாகம்வளர்த்த நெருப்பின் துளிபட்டு
அமுதப்பால் அருந்தாத
ஞானசம்பந்தரானேன்
நானும் ஓர்பொழுதில்
பின்னர்
அநாதைச் சிறுவர்களுக்காய்
வாசல்களில் நிதிசேகரித்தவர்க்கு
அதட்டிக் குரைக்கும் நாயானேன்
படிதாண்டி
கடவுளை நெருங்கப்பி¡¢யப்பட்ட
ஊனமற்ற பெண்ணிற்கு
தாதாவாயும் விசுவரூபமெடுத்தேன்
மேலாடையின்றி
அக்குளில் பெருகிய
வியர்வையைப் போல..
நிர்வாகத்துள் பரவிய
தாழ்த்தப்பட்ட சாதியினனை
காசைக் கொண்டே துரத்தியபடி
நிதானமாய் விளம்பினேன்
கடவுளின் சந்நிதானத்தில்
அனைவரும் சமமென்று
இவனைப் போல்
இன்னொருத்தனைக் கண்டிலேனென
வார்த்தைகள் இனிக்க
வழமைபோல் நெருக்கமாயின
புலம்பெயர்ந்த பெரிசுகள்
உண்மைமுகம் அறியும் ஆவலற்று
பிறகென்ன
கூத்தும் கும்மாளமடிப்பும்.
பிரியப்பட்டபோது
பட்டமளிப்பும் முதுகுசொரிதலும்
2.
எங்கே போயிற்று
என் ஓர்மம்?
நெஞ்சு திமிறத்திமிற
நியாயம் கேட்டும்
எதி¡¢களும் துரோகிகளும்
பெருகப் பெருக
கரையாமல் எ·குவாகிய சுயம்
சிதறியதெப்போது?
ஏரிக்கரைகளில் புல்வெளிகளில்
காற்றில்கேசம் எதையெதையோ கிறுக்க
து¡ரப்பறந்த பறவைகள்பார்த்து
நாளைகள் பேசிய தோழியர்
காணாமற்போனது எந்தநாழிகையில்
எல்லோரும் இரசித்துச்சுவைக்க
இன்றென் வாழ்க்கை.
கூடுவிட்டுப் கூடுபாயவிரும்பும்
திருமூலா¢ன் காத்திருத்தலைப்போல
உண்மை முகத்தினைதேடி
காலங்கள் மீறியவோர்
சாபம்
எனக்கு இனி.
2. தேடலில்லா கவிதை போல்..
காலந்தவறி அசைந்தாடி வரும்
ஓசி பஸ்சும்
சளைக்காது
மூசிவீசும் குளிர்க்காற்றும்
நெஞ்சினிலுள் இறங்கும்
கோபக் கவளங்களாய்
வெறுப்பும் சலிப்பும்
குழைத்தெறியும்பொழுதில்
என்றேனும் ஒருகால்
உருகாதோ உறைபனி
மதுவருந்தி
மயங்கும் வெள்ளியிரவுகளில்
பலவீனங்களுடன்
மனிதர்களை நேசிக்க
நெஞ்சு கிஞ்சிக்கும்
பாடப் புத்தகங்களின்
பக்கங்களைப் புரட்டவே அலுப்புறும்
நான்
மாந்தர்களைப் படித்தல்
நடவாதென
நினைவு ததும்பிச் சிரிக்கும்
சுரங்கப் பாதையில்
வகுப்புகளுக்காய்
நடக்கையில்
தென்படும் பெண்களெல்லாம்
தேவதைகளாக மிதக்கின்றனர்
அறிவும் தெளிவும்
தெறித்துச் சிதற
அவர்கள் பேசுகையிலும்
ஆண்களுண்டாக்கும்
காயங்களே
பேச்சிடைப் பொருளாகின்றன
முற்போக்குகளின்
பிரதிநிதியாய்
சமரசங்களற்று
அலையும் இளைஞன்,
பட்டத்துடன்
முகவரியற்றுப் போவது
நாளைய விந்தை
அவ்வவ்போது கற்றல்
வன்முறையாய்
சிந்தனையடுக்குகளை
சிதைத்துப்போக
நெருங்குகிறது பா£ட்சை
தேடலில்லா
கவிதை போல்
காலத்தை
அசட்டை செய்து
நகர்கிறது வாழ்வு.
3. ஆற்றாமைகளும், ஆற்றுப்படுத்தலும்
பனியில் மொழியெழுதி
இரவில் விழிநனைத்து
காற்றின் வேகத்தில்
நகரும் பிரிவு நதி
நேசித்து
பிறிதொருபொழுதில்
புறக்காரணிகள் புறந்தள்ள
பொசுங்கிப் போன
ஒரு கோடிக் காதலில்
ஒரு துளி எங்களுடையது
என்னை
நேசிக்காத சனியன்
நீயெனத் து¡ற்றி
நாயகனாக்கும்
முயற்சியல்ல இது
நட்பும் காதலும்
சமாந்தரமாய் நீண்டு
முடிவிலியில் இணைகையில்,
நாங்கள்
காதல் மொழிந்தது
பனிக்குளிரின் கதகதப்பில்
கிறுக்குப் பிடித்தவனாய்
காலவெளி கடக்கவைத்த
காதலின் அற்புதத்தை
இருள்வெளிக்குள் மறைத்தல் தவறு
உணர்வும், வயதும்
கிளர்ந்த பால்யத்தில்
கற்பனைகள் மீதமர்ந்து
காதல்தேரோட்டியது
கனன்றெறிகிறது இன்றும்
கனவுகள் மிகுந்து
நெருடல் விரிசலான
வளரிளம் பருவத்தில்
மனம்விட்டுப் பேசி
பிரியும் சந்தர்ப்பம்..
எத்தனை காதலர்க்கு
இவ்வுலகில் வாய்த்திருக்கும்
எங்களைப் போல்
இணைதலில் மட்டுமல்ல
புரிந்துகொண்டு
பிரிந்துபோதலிலும்
காதலின் உயிர்ப்புளது
என்று சொன்னால்
எவர் நம்புவர்?
பதிவுகள் ஜூன் 2002; இதழ் 30.
‘டாக்டர்’ வை.பாரதி ஹரிசங்கர் மொழிபெயர்ப்புக் கவிதைகள்!
1. என் காதல்
ஊட்ஜரூ நுநுக்கல் (Oodjeroo Noonuccal)
தமிழாக்கம்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்
என்னை அடைவதா? இல்லையில்லை
மற்றவருக்குப் புரிந்த காதலை என்னால் தரமுடியாது.
ஏனெனில் நான் ஒரு இலட்சியத்தை மணந்துள்ளேன்.
மற்றதையெல்லாம் நான் துறக்க வேண்டும்.
நீ என்னை – என் உடல், ஆன்மா, மனம்
அனைத்தும் உனதாகக் கொள்கிறாய்.
என் முதல் அன்பு என் மக்களுக்கே.
அதன் பின். மனித குலத்திற்கு.
ஒரு பிரஜையாக என் தனித்துவத்தை
நான் இழந்து விட்டேன்.
அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை.
ஒருவனால் கொள்ளவும் தனதாக்கவுமுடியாது.
பழைய இன வேற்றுமை என்னைச் சூழந்து கொள்கிறது.
வெறுப்பும் இகழ்ச்சியும் தாக்குகின்றன.
தோல்வியில்லாமல் சண்டையிட நான்
சுதந்திரமாக வேண்டும். நான் பலமடைய வேண்டும்.
சரி செய்ய பழைய தப்புகளுண்டு.
மனிதனின் குரோதத்தை சகிக்க வேண்டும்.
நீண்ட பாதை. தனிமையான பாதை.
ஆனால் இலக்கோ நிச்சயமானது.
2. வேடன்
ஆர்ச்சி வெல்லர் [Archie Weller]
தமிழாக்கம்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்
தனது இரத்தத்தால் பச்சைப் புல்லை சிவப்பாக்கிய
கங்காருவிற்காக ஒரு பாடல் பாடுகிறேன்.
அஸ்தமிக்கும் சூரியனுக்கெதிரில் கருப்பாக
கடைசி சோக நாட்டியம் டியவனுக்காக
பாடுகிறேன். ஏனெனில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இன்றிரவு வேடனின் வயிறு நிறையும்.
வானத்தை நோக்கி எம்பும் தீப்பொறிப்போல
என் குழந்தைகளின் சிரிப்பொலி கேட்கும்.
சிறகசைக்கும் பற்வைகள் போல
குன்றுகள் மீது ஓடும் மழை
நீரோடை போல மகிழ்ச்சியாக
என் தமையனின் கண்ணீரில் நானிருக்கிறேன்.
ஐயோ! தமையனே!
விரிந்த பரந்த நிலத்தில் நடை பயில
தனிமையான வலிமையான மலைகள்
இந்நாட்டை ளுகின்றன.
3. தலைப்பிள்ளைகள்
ஜாக் டேவிச் [Jack Davis]
தமிழாக்கம் டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்
என் தலைப்பிள்ளைகள் எங்கே! பெருமூச்சுடன் கேட்டது அந்தப் பழுப்பு பூமி. வெகு நாட்களுக்கு முன் என் கருப்பையிலிருந்து அவர்கள்
வந்தனர். என் தூசிலிருந்து உருவாக்கப்பட்டனர்- ஏன்? ஏன் அவர்கள் அழுகிறார்கள்? அந்த ஆன்மாக்களின் ஒலிகள் ஏன் மயங்கிக் கிடக்கின்றன?
அவர்கள் சிரிப்பொலியைக் கேட்க என் காதுகளைத் தீட்டிக்கொள்கிறேன். நான் கொடுத்த நீதிகளும் கதைகளும் எங்கே?
என் இளைய பிறப்புக்களே! என்னவாயிற்று சொல்லுங்கள்?
குகைகளில் அவர்களது ஆவிகளே வாழ்கின்றன.
மெளனம். – நீங்கள் பதில் சொல்லக் கூசுகின்றீர்கள்.
முகத்திலறைந்த அறை போல ஒரு கேள்வி உள்ளது.
என் கறுத்த பெருமைமிக்க இனம் – மடிந்து புறக்கணிக்கப்பட்டு இறந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது அங்கே பதிலும் இருக்கிறது.
[ஆஸ்திரேலிய பூர்வீகக் கவிஞர்கள் மூவரின் கவிதைகளைப் ‘பதிவுகள்’ இதழிற்காகத் தமிழாக்கம் செய்து தந்திருக்கின்றார் டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்.]
பதிவுகள் ஜூலை 2003; இதழ் 43.
சாந்தினி வரதராஐன் (ஜேர்மனி) கவிதைகள்!
1. உனக்குமா ?
பனி படர்ந்த மலைகள்
இலைகளை இழந்த மரங்கள்
பகலை மறந்த பனிக்காலம்
நடை பாதையில்
பனிக்குமியலின் இடையில்
என் கணவரின் பாதச்சுவடுகள்
அதன் அருகாமையில்
பெண்ணின் காலடி
குளிர்கண்டு பறந்து
எனை வெறுமையாக்கும்
பறவைக் கூட்டம்
மழை முகம் காணத
சகார பாலைவனம்போல்
சிரிப்பை மறந்த சில முகங்கள்.
அவசரமாய் இயங்கும்
அன்னிய நாடு
வெறிச்சோடிய வீதி
இருளின் பிடியில்
தனை மறைக்கும்
அழகு நிலா
இவை எதுவும்
எனக்கு பிடிப்பதே இல்லை
உனக்கு ?
இன்னும் உயிர்ப்புடன்
இந்த பூமியில் உள்ள
அத்தனை ஆயுதங்களாலும்
பரிசோதிக்கப்பட்டவர்கள் நாங்கள்
ஆனாலும்
துளிர்க்கும் துளிர்களாய்
வேர்தேடும் மரங்களாய்
காற்றிலும் கடலிலும்
வெற்று வெளியிலும்
உணர்வுகளை கொட்டியபடி
இன்னும் உயிர்ப்புடன்
தொப்புள் கொடி என்றும்
இரத்தத்தின் இரத்தமென்றும்
வார்த்தைகளுக்கு
வர்ணம் பூசினார்கள்
விருந்துண்ட வீட்டுக்கு
விஷம் வைத்தார்கள்
கூவிக்களித்த குயில்களின்
குரல்வளை நசித்தார்கள்
முட்களை விதைத்து
நீர் வார்த்தார்கள்
அரும்புகளை மொட்டுக்களை
மலர்களை பழுத்த இலைகளை
கசக்கி முகர்ந்ததை
எப்படி மறப்போம் ?
நாம் எப்படி மறப்போம் ?
அவர்கள் அப்படித்தான்
இரும்புடன் உறவாடி
துருப்பிடித்து போனவர்கள்
ஆனால் நீங்கள்
கடல் அன்னையின் தாலாட்டில்
அலை மகளின் அணைப்பில்
உயிர் வாழ்பவர்கள்
உங்களுக்குமா ?
எங்கள் பட்டினி சாவின்
ஓலம் கேட்கவில்லை.
பதிவுகள் டிசம்பர் 2003; இதழ் 48.
2. யாவும் கற்பனையோ ?
இருண்ட வானம்
மலர்ந்து விரிந்தது
மனுவறியா அந்தக் கிராமத்தில்
பட்ட மரங்களெல்லாம்
துளிர்க்கத் தொடங்கின
கோயில் மணி கேட்டு
கோபுரப் பறவைகள்
கூடு தேடி பறந்து வந்தன.
இனி பா¢தியின் வரவு கண்டு
பாங்கொலியும் இணைந்து ஒலிக்கும்
இரும்புக் காலடியின் சுவடுகளை
கோழிகளும் குஞ்சுகளும்
அழித்துக் கொண்டிருந்தன.
எங்கேயோ தூரப்பிரிந்துபோன
குயில்களெல்லாம் மறுபடியும்
உறவுகளை கூவி அழைத்தன.
கந்தகத்தை காவிக் காவி
களைத்த காற்று
எழுந்து எட்டிப் பார்த்தது
என்ன நடந்தது இக்கிராமத்திற்கு ?
என வியந்து விளித்தது.
பாம்பும் பூரானும்
பதுங்கிய வீடெல்லாம்
பூக்களும் மொட்டுக்களும்
மணம் பரப்பின
காற்று நினைத்தது
இனி இந்தக் கிராமத்தில்
இடி இடிக்காது
ஒப்பாரிப்பாடல் ஊரில் எழாது
ஓ வென்ற குளறல்
இனி காதில் விழாது
பூக்களையும் பிஞ்சுகளையும்
இனி எந்தக் கைகளும்
பறித்து முகர்ந்து கசக்காது
காற்று மெதுவாக எட்டிப் பார்த்தது
வீடெல்லாம் சிரிப்பொலி
வீதியெல்லாம் புலிக்கொடி
வா வா என்றது.
வாசல் கதவுகள்
அகலத்திறந்து கிடந்தன
வாயில் படிகளில் பல முகங்கள்
நீட்சியான பாதையில்
விழிகளை வீசியபடி
சொல்லாமல் போன புதல்வர்களுக்காய்
காற்றும் வழி பார்த்து பார்த்து களைத்தது
அவர்களும் வந்தார்கள்
இலைககளெல்லாம் எட்டி எட்டி பார்க்க
கிளைகளெல்லாம கை தட்டி தட்டி வரவேற்க
புல்லெல்லாம் பூத்திருக்க
பூந்தோட்டமே சிரித்திருக்க
வானம் மகிழ்வில் மண்ணை நனைக்க
அவர்களும் வந்தார்கள்
தம் தோளில் சுமந்த சிலுவையை
ஒரமாய் சாய்த்துவிட்டு
தம் தாயின் மடியில்
ஒரு முறை தலைசாய்த்து
துயில் கொண்டார்கள்.
காற்று மெதுவாக படர்ந்தது
பின் முகம் கறுத்தது
இனியும் என் மீது கந்தகம் மணக்குமோ ?
என்னை உரசியபடி குண்டுகள் சீறுமோ ?
காற்று பதிலுக்காய் காத்திருந்தது.
பதிவுகள் நவம்பர் 2003; இதழ் 47.
3. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
விழியினை விழித்து ஆதவன் எழுந்து
இருட்டு அரக்கனை கரங்களால் விரட்ட
புள்ளினம் எழுந்து இசையினை மீட்ட
உயிரினம் அனைத்தும் விடியலை நோக்க.
விடியல் காட்சியை கண்டு களித்த
விழிகள் இரண்டும் நீரினை சொரிய
விழுந்த கண்ணீர் மண்ணை நனைக்க
எழுந்த புழுதியில் என் மனம் மகிழ
வெள்ளை மல்லிகை படர்ந்த பந்தல்
வெண்பனி பூக்களை தடவும் தென்றல்
சின்ன மழலையாய் சிரிக்கும் மலர்கள் -என
எத்தனை அழகாய் அமைந்த வீடு
அத்தனையும் இழந்தும் அமைதி காக்க
வயது முற்றிய மாமரம் மட்டும்
குனிந்த என் நலம் கேட்டு சிலிர்க்க.
நீண்டு வளர்ந்த தென்னை மரமும்
நிமிர்ந்து நின்ற ஆலமரமும்
வானை முட்டிய பலா மரமும்
வரும் விருந்தினரை வரவேற்ற வாழை மரமும்
வாழ்ந்த இடத்தில் வேர்கள் மட்டும்
அழுது வடித்து அகதியாய் நிற்க
சிட்டுக் குருவிபோல் பறந்து திரிந்து
சிந்திய சிரிப்பொலி நினைவில் மோத
காயாத கனவுடன் வாழ்ந்த என்வீடு
காதல் நினைவுடன் நான் வாழ்ந்த கூடு
அத்தனை மகிழ்வினையும் இழந்த காடாய்
இத்தனை நாளாய் எங்கிருந்தாயென ?
ஏக்கத்துடனே என்னை நோக்க
இலையினை உண்டு இனங்களை பெருக்க
உதவிய மரத்தின் இடரினைக் கண்டும்
உயிரினை பெரிதாய் என்னியே பிரியும்
புழுக்களின் இனமே நானும் என்றேன்
4. நாளைய அஸ்தமனத்துக்காய்
கார் முகில்களின் விலகல்
மகிழ்வின் பிரகாசம்
ஏவாளின் குழந்தையின்
முகத்தில்
அப்பிக் கிடக்கின்றது
சாத்தனின் புத்திரனோ
விழித்தபடி
சாம்பல் மேடுகளை காணாமல்
தவிக்கின்றான்.
எங்கேயாவது
ஒரு மின்னல்
ஒரு இடி
அல்லது சிறுமழை
சூறாவளிக்காய்
விழித்தபடி
காத்துக்கிடக்கின்றான்
சூரியனின் ஊர்வலத்தை
தடுப்பதற்காய்.
பதிவுகள் செப்டம்பர் 2003; இதழ் 45.
மதுமிதா கவிதைகள்!
1.கவனிக்கப்படா உண்மைகள்…
மேடும் பள்ளமுமான
வாழ்க்கையில்
மேண்மைமிகு உண்மைகள்
மண்ணில் உதிரும்
இலையை
மரம் கவனிப்பதில்லை
விண்ணில் சேரும்
உயிரை
உலகம் கவனிப்பதில்லை
புயலில் அலையும்
மலரை
புவியும் கவனிப்பதில்லை
கண்ணில் காணா
அழகை
எண்ணம் கவனிப்பதில்லை
கருத்தில் சேரா
கவிதையை
இலக்கியம் கவனிப்பதில்லை
கடலினுள் அமிழ்ந்த
கல்லை
கடலும் கவனிப்பதில்லை
– பதிவுகள் ஜனவரி 2004; இதழ் 49.
2. தொலைந்தது மனம்…
எதிர்பார்த்திருந்தாலும்
எதிர்பாரா தருணத்தில்
அழைத்தாய்
என்னபேச இயலும்
என்னால்
உன் முன்னால்
எனக்கே எனக்கானஅழைப்பு
உன் தூக்கம்
தொலைந்த கணத்தில்
வருடிக் கொடுக்கும்
குரல்
ஆன்மாவைத்தொடும்
இப்போது
இரு விழிகளும்
இழந்தன பார்வையை
தொலைத்தன உறக்கத்தை
தொலைந்தது மனமென
அறியாது…
– பதிவுகள் ஏப்ரல் 2004; இதழ் 52.
3. அவரவர் மனது!
சண்டைகள் தொடரும்
வெடிகுண்டுகளோடு
அல்லது
வெற்று வார்த்தைகளோடு
சர்ச்சையே எங்கு சென்றாலும்
விவாதமே எங்கு பார்த்தாலும்
அவரவர் கருத்துக்கள்
அவரவர் நியாயங்கள்
அவரவர் நியமங்கள்
அவரவர் தர்மங்கள்
அவரவரைத் தொடர
அவரவர் மனசாட்சி மட்டும்
அவரவரைத் தொடர்வதில்லை
அவரவர் தெளிவடையும் வரை
அல்லது
அவரவர் காலம் முடியும்வரை
அவரவரின் அன்பு மட்டும்
அலறிக்கொண்டிருக்கும்
அவரவரின் மனதினுள் ஒளிந்தபடி
அவரவர் மனதை மறைத்தபடி
பதிவுகள் ஆகஸ்ட் 2005; இதழ் 68.
நாகூர் ரூமியின் கவிதைகள்!
1. மௌனக் குதிரையின் குளம்படிச் சத்தம்!
நீ பதுக்கி வைத்திருக்கும் பொக்கிஷங்கள்
என் கற்பனைக்கு எட்டாதவை
உன் நாணப் போர்வையின் அழகு
கிறங்க வைக்கிறது என்னை
உன் அசைவுகளில் தோற்றுப் போகின்றன
அகராதிகள்
மௌனத் தாய்ப்பால் குடித்து
மௌனச் சோற்றையே உண்டு வளர்ந்த உன்
சிப்பி பூட்டிய எண்ண முத்து ஒன்றை எடுப்பதற்குள்
ஓராயிரம் சிப்பிகளை நான் உடைக்க வேண்டியிருந்தது
பிறகு வந்த அந்த மாலைக்கும்
அந்த குளிருக்கும்
என் முகம் புதைக்க அனுமதித்த
உன் கழுத்துக்கும்
எப்படிச் சொல்வேன் நன்றி?
உன் கழுத்தின் கதகதப்புப் புதையல்
கடுகளவும் தீரவில்லை
காலம் காலமாய்
நட்சத்திரங்கள் உறங்கின
என் முத்தத் தாலாட்டில்
மூடிய உன் இமைகளின் கீழே
ஒரு நாள்
தொழுது முடித்தவுடன்
நீ தந்த முத்தத்தில்
இறைவனின் வாசனை இருந்தது
இந்த உலகம் ஊமையாகிப் போனது
நீ கால் கொலுசைக் கழட்டியபோது
உன் கொலுசைக் கையிலேந்தி
மெருகேற்றிக் கொண்டிருந்தவனின்
கையை வெட்ட வேண்டும்போல்
இருந்தது எனக்கு
நிசப்த மரத்தின் கீழ் அமர்ந்து
மறுபடியும் ஏன் மௌனப்பால் குடிக்கிறாய்?
நீ பேசமாட்டாய்
நான் அழமாட்டேன்
இந்த போட்டி இன்னும் எத்தனை காலத்துக்கு?
வேண்டாம்
கண்ணீர்த்துளிகளால் உன் கன்னங்கள் காயமடைவதை
இனியும் அனுமதிக்க முடியாது என்னால்
நானே அழுதுவிடுகிறேன்
என் சாலையில் இப்போதெல்லாம்
கேட்டுக்கொண்டே இருக்கிறது
நீ பவனி வரும் உன்
மௌனக் குதிரையின் குளம்படிச் சத்தம்
அடிக்கடி கனைக்கிறது அது
என் வீட்டு வாசலில் நின்று
தடவித் தடவிக் கொடுக்கிறேன்
அதன் கழுத்தை நான்
மௌனமாகிப் போகாதா என்ற ஏக்கத்தில்
என் இடது காது வலிக்கவலிக்க
தொலைபேசியில் இன்பித்த உன்
குரலுக்கான நப்பாசையில்.
– (11-01-2004)
2. நிம்மதி
பஞ்சடைத்த விழிகளுடன்
பிச்சைக்கார தாடியுடன் இருந்த
ஈராக்கின் வாயைத் திறக்கச் சொல்லி
பேரழிவு ஆயுதங்கள் மறைந்துள்ளனவா என
ஈறுகளைப் பரிசோதிக்கிறது
க்ளோவ்ஸ் அணிந்த கைகளுடன்
டார்ச் அடிக்கும் அமெரிக்கா.
— (11-01-2004)
பதிவுகள் ஜனவரி 2004; இதழ் 49
பாரதி (ஜேர்மனி) கவிதைகள்!
1. இழந்த சுகங்கள்!
மஞ்சள் நிலவொன்று மண்ணில் உலவியதோ?
பஞ்சு விரல்களிலே பாசம் தூவியதோ?
சங்கு கழுத்தெனக்கு சாந்தி தருமிடமோ?
நெஞ்சம் முழுவதும் உன் நேசம் தழுவிடுமோ?
மஞ்சுத் திரை விலக்கி கொஞ்சும் பரிதியினால்
மங்கை நீலப் பெண்ணாள் தங்கச் சிவப்பழகோ?
மதியின் முத்தமதில் மயங்கி இதழ் விரித்து
நதியில் சிலிர்த்திருக்கும் அல்லிப் பெண்ணழகோ?
இன்னும் நினைவினிலே இனிக்கும் காலமது.
இன்றும் கனவினிலே இணையும் காட்சியது.
இதயம் கனமாகும். இருவிழியும் மழையாகும்.
இழந்த சுகங்களை நான் இனியும் காண்பேனோ?
மொட்டவிழ்ந்த முல்லை முன்னிரவில் வரவேற்கும்.
கட்டிக்கொள் என்று கைகள் நீட்டிச் சிரித்திருக்கும்.
கொட்டிக்கிடக்கும் குண்டு மல்லி மணம் மயக்கும்.
தொட்டு முகரென்று தொடர்ந்து நாசி சொல்லும்.
கருவண்டுக் கண்களிலே களிப்புக் கூத்தாடும்.
தெருவெல்லாம் சிரிப்பலையில் தினமும் தோய்ந்திருக்கும்.
பருவப் பறவைகள் எம் சிறகை உடைத்தவர் யார்?
உருவம் வளர்ந்த பின்னும் உள்ளம் தேடி அழுதிடுதே.
அதிசயம் ஆனால் உண்மை!
விண்ணைக் கிழித்து விரைந்திடுவேன் விடிகாலை என்றானே.
மண்ணைப் பார்த்தபடி மனம் கூம்பிச் சோர்வுடனே…
காதலனைக் காணாது கமலப் பெண்ணாள் வாடிநிற்க
கதிர்(க்)கையை நீட்டி …அவள் மலர் முகத்தைச் சீண்டி நிற்க
நாணமதில் சிவந்தவளை செந்தாமரை என்றழைத்தனரோ?
அந்திப் பொழுது மதி அழகு உலா பவனிவர
அல்லி மகள் ஆசையுடன் அவனுக்காய்ச் சிரித்திருக்க
திங்களவன் அல்லியுடன் தினம் இரவில் மகிழ்ந்திருந்து
ஞாயிறைக் கண்டவுடன் நாணி ஓடி மறைந்திடுவான்.
நில்லாய்! நில்லாய்! என்று நித்தம் அல்லி அழுத குரல்
நிலா! நிலா! என்று எம் செவிக்குள் விழுந்ததுவோ?
– பதிவுகள் பெப்ருவரி 2004; இதழ் 50.
2. மகளிர் தினமாமே!
அன்பினிய தோழி1 உனக்கொன்று தொ¢யுமா?
பங்குனி எட்டு மகளிர்தினமாமே1
மனிதரெலாம் குரல் உயர்த்தி உரைக்கின்றார் கேட்டாயா?
குனியவைத்து குசினிக்குள் உலகமைத்து
பணியவைத்து பாவையர் படியடைத்து
விழி சுமந்த கனவுகளைக் கலையவைத்து அவள்
மொழி உ¡¢மை பறித்தவர்கள் மொழிகின்றார் மகளிர் தினமென்று1
உருவான கருவொன்று பெண்ணென்று அறிந்தாலே
கலக்கமின்றிக் கலைக்கவைத்து காரிகையின் கண்ணீ¡¢ல் குளிக்கின்ற
கனவான்கள் சொல்கின்றார் மகளிர்தினமாமே1
மகவொன்று இல்லையெனில் மலடியென ஒதுக்கிவைத்து
மறுதாரம் கைப்பிடிக்கும் மரியாதைக்குரியவர்கள்
மடிசுமக்க மனை சிறக்க மனக்கவலை அது துடைக்க
கைப்பிடித்தவனின் கா¡¢யங்கள் அத்தனையும் கைகொடுக்க
மண்மீது பெண்ணாக மாதவம் செய்து பிறந்ததற்காய்
மடலோடு வரைகின்றேன் மகளிர் தின வாழ்த்துக்கள்!\
– பதிவுகள் மார்ச் 2004; இதழ் 51.
ப.வி.ஸ்ரீரங்கன் கவிதைகள்!
1. தொப்புள் கொடி!
கனவுகளின் எச்சமாக
சோகம் கப்பிய மங்கலான
நினைவுகளினது நிழல்கள்
தேகமெங்கும் தன் இருள் படர்ந்த விரல்களைப் பரப்பியபடி
அன்னை!
அடுப்பினில் புகையும் தென்னம் பாளையும் ,
அதனருகினில் வேகும் அந்த அற்புத உயிரும்
மப்புக் கரைந்த மந்தாரமாய்
வெறுமையின் நீண்ட கரங்கள் பிடரியைத் தடவ
உணர்வினது சூனிய வெளியில் அந்தரத்தில் தொங்கும் அன்னை,
நொண்டிக்காகமும் சொண்டுக்கிளியும்
நொந்து போக வைக்கும் நெருங்கிய தோழமையின் இழப்பாய்
நெஞ்சத்து மூலையில் மோதியபடி
கனவுகளைக் கருக்கிய பனிக்காலக் காற்றின் ஓலம்
சிகற்சுவரின் மோறையில் அறைந்து காலத்தில் அமிழ்ந்தது
எழுந்து சென்று பார்த்திட கால்களை அசைக்க
முதுகினது பின்புறமிருந்து மோதிய அதிகாரத் திமிர் இரும்புச் சுவராய்
நேரம் நெருங்குகிறது!
ஒர கால அவகாசம் கோவணம் கழன்ற கதையாக
மோப்பம் கொண்ட வெறி நாயோ வெல்வதற்குத் தயாராகும்
கோபுரத்து உச்சியில் தவமிருந்த கொக்கு பறப்பதற்கு இறக்கை விரிக்கும்
இங்கு காத்துக்கிடக்குமிந்த நடை பிணம்
கஞ்சல் பொறுக்கியபடி
அன்னையின் மடியும் அவித்துண்ணும் பனங்கிழங்கும்
அற்புதமான நிகழ்வாகிப் போச்சு!
தெருவோர வேப்பமரமும் வைரவ சூலமும்
முற்றத்து முல்லையும் பனையும்
முந்திய காலத்துதுச் சுவடாய்
கருச்சுமந்த அந்தக் காதலி கால் நீட்டிட
துணியினால் பிணை படும் அவள் விரல்கள்
என் முனகலில் கிழிபடக் காத்துக்கிடக்கும்
எனக்கு நரையேற்றும் காலமோ தன் கொடுங் கரம் கொண்டு
ஓங்கி உச்சியில் குத்த ஒப்பாரியாய் விரியும்
குடும்ப அகழியும் ஆழப் புதைக்கும் அன்னை மீதான பரதவிப்பை
என்றோ அறுபட்ட தொப்புள் கொடி
இதுவரை ஆறுதலளித்த ஆத்தை
இருண்டுவிடப் போகுமிந்த யுகம்
விழி நீரின் வெடிப்பில் அமுங்கும்.
– பதிவுகள் மார்ச் 2004; இதழ் 51
2. அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…
அன்புக் குழந்தைகளே!
நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும்
என்னிடமில்லை,
கவித்துவமற்ற மொழியூடு
வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை
வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர
நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி
ஒளிமிக்க நம்பிக்கையை கொணர்வதற்கு
எம்மிடம் எந்த மந்திரமுமில்லை
இரண்டும் கெட்டான் பொழுதுகளை
மெல்ல விரட்டி பொழுது புலர்வதற்குள்
ஒரு அழகிய தீவை உங்கள் முன் சமர்ப்பிக்க முடியவில்லை
நீங்கள் கிரகணத்தின் மெல்லலுக்குள் நீண்ட நாட்களாகச் சிக்கியுள்ளீர்கள்
முகட்டு உச்சியில் குண்டொலிகளையும்
தரைகளில் மோதும் அபாயகரமான மரணத்தையும் செவிகளால் கேட்கிறீர்கள்
நெருப்பில் வேகும் தும்பிகளின் மரிப்பையும்
குளிரல் கூனிக் குறுகும் காக்கையின் அச்சத்தையும்
என் செவிகளினு}டாகவும் கேட்கிறேன்
கண்கள் விரிகிறது
அவற்றைப் பார்த்துவிட,
எதிர்த்து தாக்குவதற்கு, வெறுமை!
ஓலமும் எங்கோ நெடும் தொலைவில்
பரிகாசிகின்ற இதழ்கிளிலருந்து மெல்லிய “ச்சீ” ஒலி
இந்த உலகத்தின் அனைத்து மூலையிலும் சாவினது நிழல் விழுந்து கிடக்கிறது
அதனது நீண்ட விரல்கள் எனதருகில் புதையும்படி
எப்படி இந்தக் குழந்தைப் பருவம்…
கண்களை இறுக மூடிப் பெருமூச்சு விடுவதைத்தவிர
வேறெதையும் என்னால் செய்ய முடியாது,
அன்னையை இழந்த சேயும்,
சேயை இழந்த அன்னையும் சில காலத்து சோகச் சுவட்டில்,
அதுவரையும் இந்த பயங்கர உலகத்தை துடைத்தெறிந்து
புதிய ஆறுதலைப் பிரகாசிக்க வைப்பதற்கான
எல்லாக் காரியத்தையும் நீங்களே கைகளிலெடுங்கள்
எனது மெழுகு திரியோ
மிகவும் தன்னையுருக்கி கீழ்விழுந்தெரிகிறது!
ஆழிப் பேரலை கூத்தாடிக் குடித்த உங்கள் பள்ளித் தோழர்களுக்காவும்
எனக்காகவும்,
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்
ஒரு விடியலிலாவது இந்த வடுவைத் தொலைத்த நாளாக
புதிய பொழுது மலராது போய்விடுமோவென்ற
நெஞ்சத்து ஏங்கலில் ,
உங்கள் தோளோடு கைகோர்த்து தும்பி பிடித்திடவும்,
பள்ளியிலிருந்து தேவாரம் பாடவும்…
பார்க்கின்ற இடமெல்லாம் பால்ய காலத்து சிவாவும்,
கெளரியுமாக நீங்களும் நானும்,இன்னும் பலருமாய்…
மேகங்களுக்குப் பின்புறம்
எங்கோ நெடும் தொலைவில் நாம் புதிய மனிதர்களாக
மண்டியிட்டுக் கிடக்க
இந்த உலகத்து மானுடர்களெல்லாம் நமக்காக பிராத்தனையிலீடுபட
அனைத்து நித்யங்களும் மெளனித்துக் கொள்கின்றன
இனி எவரும் வரமாட்டார்கள்
இந்த அற்ப உலகத்து நியமங்களை உங்கள் முதுகினிலேற்றி
நாளைய தமது சுகத்திற்கான கனவுகளாக விதைத்து
அறுவடை செய்வதற்கான முனைப்புடன்
மேசைகளில்”மற்றவர்களினது தவறுகளாக”கொட்டி
கடைவிரிதவர்கள் இப்போ
அவற்றைக் குருதியால் எண்ணிக்கொள்ள அவர்களும்,நீங்களும்,
மற்றவர்களுமாக புதைகுழி நிரம்பிக் கொள்கிறது
என்றபோதும் ,
குழந்தைகளே இன்னுமொரு முறை சொல்வேன்:
நம்பிக்கைதரும் எந்த அழகிய வார்த்தைகளும் என்னிடமில்லை.
– பதிவுகள் மார்ச் 2005; இதழ் 63.
3. ஆவீன மழைபொழிய இல்லம் வீழ…
(சின்னக் கதை)
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ….
இங்கு எதுவும் ஈனவில்லை. கடும் மழையும் பொழியவில்லை. எனினும்
என் வீடு வீழ்ந்தது. சிதறுதேங்காய் போன்று சிதறியபடியே கற்கள்
உருண்டன.
கூடவே கோதாரி புடிச்ச உடம்பும் சிதறிப் பிய்ந்தது.
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ…
நாசியேவ குண்டு பொழிய இல்லம் வீழ மெய் சிதற
அகத்தடியாள் விம்மியழ வாரிசு வதங்கித் துவள….
இருப்பைக் காக்கத்தான் யாவும்.
ஈழத்தை விட்டு ஜேர்மனியில் வாழ்வதும் சாவதும் இருப்பைப் பற்றிய
கனவின் உந்துதலால்தாம்.
நீண்டு வளையும் உணர்வுகளுக்கு குறியீடு எதுவுமில்லை.
சிதறிய கற்களுக்குள் சின்னதாய் முனகல்.
மனைவி.
ஒலி.
எதிரொலி!
என் செவிப்பறை இரைச்சலில் வலுவிழந்தது.
பிரபஞ்ச இரைச்சல்.
ஒலியைத் தவிர வேறெதுவுமில்லை. அத்வைதம் மனதில் விரிந்தது.
ஒலியே அநாதி!
சற்றுமுன் வெடித்த குண்டின் ஒலி எனக்கு அநாதியாகவே பட்டது.
ஈழத்துப் பிரஜை என்ற உந்துதலோ என்னவோ!
அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக….
என் அகத்தடியாள் அழுதாள்.
மெய் நோக நோக விம்மி விம்மியழுதாள்.
அடிமை?
இவ் லோகத்தின் அடிமை??
தான் அடிமையென்று உணர்வதற்குள்ளேயே அடிமை செத்தது.
என் வீரியத்தின் மகுடம் துவண்டு கிடந்தது. மூச்சில்லை.
முகங்கற்குவியலுக்குள்.
நாடி நரம்புகள் வலுவிழக்க என்னால் அவனைப் பார்க்க
முடியவில்லை.
உச்சியிலிருந்து குருதி கசிந்தது.
அவன்மீது கட்டப்பட்ட கனவுகள் கோடி. தவிடுபொடி யாவும்.
என் மீது நான் கொள்ளும் பச்சாதாபம் அவனுருவில் வலிமை சேரும்.
எனக்காக எதிர்காலம் முற்றுப்புள்ளியாய் போனபோது, அவன் எனக்கு
ஆரம்பத் தொடரானான். இதற்குக் குண்டு முற்றுப்புள்ளி வடிவில்
வந்து சேர்ந்தது.
இயலாமை மீண்டும் உச்சியில் ஏறியமர்ந்து ஊனப்படுத்தியது
என்னை.
அவன் மனிதத்தை(சஞ்சிகை) இறுகப்பற்றியிருந்தான்.
குருதியினால் அiதைத் தூய்மைப்படுத்தவா…?
போன கிழமைதாம் அது தபாலில் வந்தது. சுவிசிலிருக்கும் சில தமிழ்
நண்பர்களின் முயற்சி அது.
மனிதம் மீது கவிந்த வெறுப்புத்தானே குண்டுகள் வடிவில்
குடிகளுக்குள் வருகின்றன?
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள….
இருப்பதே வாடகைக்குடியில் இதற்குள் விளைவிப்பதற்கேது நிலம்?
ஒரு
நாளைக்கு உடம்புக்கு முடியாது போனால் வாடகைவீட்டு ஞாபகம்.
கிருஷ்ணனின் பிரமாண்ட காட்சியில் வாயில் விரியும் கோறையாக….,
அதற்குள் மானுடம் புழுவாக நெளியும் காட்சியாக விரியும்.
நேற்றும் வேலைக்குப் போனபோது என்னுடன் வேலைபார்க்கும் என்
நண்பன் ஞானத்தின் பெயரை நேர அட்டவணையில் இருந்து
நீக்கியிருந்தார்கள். போனமாதம் வேறொரு தொழிலாளியை வீட்டுக்கு
அனுப்பியபோது தட்டந்தனியனாக நின்று எதிர்த்தவன்.
டொச்சில்’Ausbeutung Systeme” (சுரண்டல் பொறிமுறை)
என்று கோசம் போட்டவன்.
நேற்று….
இன்று நான், என் குடும்பம் வெடிகுண்டுப் புகைக்குள் குருதி சிந்தி….
உயிர் கொடுத்து….
இடிபாடுகளுக்குள் இருந்து என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.
வேலைக்குப்போக முடியாமல் நேர்ந்ததையெண்ண அது பயமாகி என்
வீட்டு இழப்பைக்கூட மறக்கடிக்கிறது சில விநாடிகள்.
டொச்லாண்ட் புகைகளின் பின்னே…
எனக்கு ஈழம் இப்போ சிறப்பானதாகப்பட்டது.
யுத்தத்தை மறுத்து,
தூக்கம் வரும்போது தூங்கி, பசி வரும்போது
கொட்டாவி விட்டு மிஞ்சினால் மூக்கறச்சிக் கீரையுடன்
காலந்தள்ளி…. அமைதியாய் உடல் அசைந்து உயிர்தாங்கும்.
டொச்லாண்ட் எனக்கு எல்லாம் வழங்கி இருந்தது. ஆனால் குண்டை
எப்போது வழங்குமென்று தெரியாமற்போய்விட்டது! தெரிந்திருந்தால்….
என்வீரியம்…. என் கனவு…. என் மனைவி….
நான் அகோர இடிபாடுகளுக்கிடையில் இருந்து என்னை விடுவித்து, என்
மனைவியை…. என் மழலையை அண்மிக்க முயற்சித்து தோற்றேன்.
சில நிமிடங்கள் கழிய…. கீக், கீக் ஒலி செவிகளில் பட்டுத்
தெறித்தன.
இது எனக்கு அதே குண்டு வெடிப்பின் ஒலியை ஞாபகமூட்டியது.
நான் பிரபஞ்ச இரைச்சலுக்குள்….
இப்போது அத்வைதம் அம்மணமாய் எனக்குள் சதிராடியது.
சிவப்பு வான்களில் வந்தவர்கள் ஓடியடித்து எமை அண்மித்தனர்.
அவர்கள் Notruf காரர்கள் (அவசர அழைப்புக்காரர்கள்)
கற்குவியல்களுக்குள்ளிருந்து என் மழலையை இழுத்தெடுத்தார்கள்.
அது துவண்டுவிட்டது.
நான் அப்பன் என்று கூறிக்கொள்ள இயலவில்லை. அப்பனுக்குரிய
முறையில் அவனைப் பார்க்கவில்லை. அவன் வாழ்நாளில் பல மணி
நேரங்களை நான் அவனுக்காகச் செலுத்தாமல் புத்தகங்களுடன்
செலுத்தினேன். மழலையொலி கேட்டு ஆனந்தமடையாமல் நூ
ல்களுக்குள் புழுவாகிப் போனதாலேயோ என்னவோ அவன்
என்னைவிட்டு இப்போது வெகுதூரம் சென்றுவிட்டான். நான் எனக்குள்
நொந்து வெதும்பினேன்.
இனி இங்கு எந்த சவக்காலையில் நிம்மதியைத் தேடுமோ?
நான் இதையறியேன்.
ஏதோவொரு மூலையில் உணர்வு மரத்தவளாய் மனைவி.
அவள் விழிகள் வீங்கி நீர் சுரந்து…. அகோரமான வாழ்வுப் படலத்தை
சொல்லாமற் சொன்னது.
இருவிழி சிந்தும் நீரைப் பாராதே என்
இதயம் மகிழ்வதைப்பார்! என்று அவைகள் கூறவில்லை.
இயற்கை வலிமையுடையது.
சூட்சுமமாக சிலவற்றைச் சொல்லும்.
மனைவியின் விழிகள் எனக்கு இப்படியே பட்டது.
தன் தொப்புள் கொடியுடன் இணைத்து வைத்த இயற்கை, தற்போது
தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகப் பிதற்றினாள். துவண்டதை
அணைத்து மூர்ச்சையானாள்.
அவள் உடலெங்கும் இரத்தக் காயங்கள். தலையிலிருந்து குருதி
வடிந்து அவள் கூந்தலை சிவப்பாக்கியது.
என் குழந்தையின் பால்போச்சி ஒரு மூலையில் சிதறாமல் கிடந்தது.
என் குழந்தையும் இப்படி….
என் விழிகள் பனித்து மீசை வழியாக உதட்டை அடைந்தது.
உப்புநீர், சீதை சிந்திய கண்ணீர் மலைபோன்ற எதனூடோ சென்று
எங்கோ அடைந்ததாம். எனக்குள் ஒரு கம்பன் இருந்தால் எப்படி
வர்ணிப்பானோ தெரியாது.
ராமாயணத்தை சுவைபட விளக்கிய ஆசிரியர் சபாரட்ணம் என்
விழிமுன் வந்து போனார்.
எல்லாம் கனவுபோல் விரிந்து கொண்டன.
என் மனைவியையும் என் மழலையையும் கிடத்தியும் எடுத்தும்
சென்றார்கள். என்னைக் கைத்தாங்கலாய் கூட்டிச் சென்றார்கள்.
நேரம், அதிகாலை நான்கை நகர வைத்தியசாலை காட்டியது.
எனக்கு மருத்துவ விடுப்புத்துண்டு பத்து நாளைக்கு எழுதப்பட்டது.
கூடவே உடற் சிராய்ப்புக்கு பத்துக்கள் போடப்பட்டது.
மனைவியை விபத்து வாட்டில் போட்டு குருதியேற்றினார்கள். அவள்
கடுமையாகக் குண்டடிபட்டுவிட்டாள்.
நான் என் பிள்ளையை எங்கு எடுத்துச் சென்றார்களோ என்று
ஏங்கித் தவித்தேன்.
மனைவியின் உடல்நிலை இன்னும் பெரிய பேரிடியை எனக்கு
வழங்கிற்று. இவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ள எனக்கு
உணர்வும் உடல் இயக்கமும் இருந்தது.
என்ன பாவம் செய்தேனோ தெரியாது!
புண்ணியம் செய்திருந்தால் நானும் கூடவே போயிருப்பேன். இப்போது
நான்…
இருள் விடிந்து காலை மணி ஏழாகியது.
என் உடலில் வலுவிருந்தது.
வேலை ஞாபகத்திற்கு வர மருத்துவ விடுப்புத் துண்டு
வழி வகுத்தது.
அத்துடன் வேலைத்தலம் நோக்கிப் போவதாக டாக்டரிடம் கூறி,
மனைவியைப் பார்த்து மனம் நொந்து வேலைத்தலத்திற்குச்
செல்லக் கிளம்பினேன். வழியில் ஞானம் எதிர்ப்பட்டான்.
என்ன மச்சான் உடம்பெல்லாம் கட்டுக்கள்
நான் மௌனமாகியிருந்தேன்.
மச்சான் போன மாதம் வேண்டிய ஆயிரத்தையும் தாவன்ராப்பா.
வீட்டுக்காரர் கொழும்பிலை வந்து நிற்கினம். இப்ப அவையளோடை
ரெலிபோன் கதைச்சிட்டு வரேக்கைதான் நீயும் கடவுளேயெண்டு
நேரிலை வாறாய். காசைத் தாவன்ரா.
ஆவீன மழை பொழிய இல்லாம் வீழ
அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள….
வேலை போகுதென்று மருத்துவ விடுப்புக் கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ளச்
சாவீடு என் வீட்டில் நிகழ
நான் விழி பிதுங்கி நிற்க…
ஞானம் என் நிலைமைகளை அறியும் நிலையிலில்லை.
பத்தாண்டுகளுக்குப்பின் பெற்றோர்களுடன் உறவாடிய நினைவில்
அவன் தன்னை மறந்திருந்தான்.
பின்னேரம் உம்மைச் சந்திக்கிறேன் என்றேன்.
சரி மச்சான்’ ஏதோ சிந்தனைவயப்பட்டவனாய் விடைபெற்றான்.
அவனைப் பிரிந்து கிளம்பினேன்.
வானம் அழத்தொடங்கியது.
எனக்காக…?
குண்டுச்சிராய்ப்பினால் ஏற்பட்ட காயங்கள் வலியை அதிகமாக்கின
எனக்கு.
நிம்மதி இல்லை.
என் மழலை பற்றிய கனவுகள்.
வாழ்வின்மீது வெறுமை கவ்வியது.
வேலை ஏன்?
மருந்து விடுப்பேன்?
எல்லாம் போனபின் இவையிருந்து இலாபமென்ன?
பொன் எழில்கொள் மேனியைக்
கண்ணீரினால் கழுவி ஆறுவேனோ?
மீண்டும் வைத்தியசாலை நோக்கி ஓடினேன்.
இடையில் விம்மி விம்மி அழுது வீங்கினேன்.
என் செல்வத்தின் எழில் முகத்தைப் பார்க்க மனம் அவாப்பட்டது.
அவன் பொங்கி எழும் முழுநிலவுக்கு ஒப்பானவன். ஆனால் அகதி.
கண்கள் மீண்டும் பனித்தன.
விழிநீரினூடே அவன் மலர்ந்தான்.
விழி நீரிலாட அவன் மலர்ந்தான்.
குயிலும் கரும்பும் செழுந்தேனும்
குயிலும் யாழும் கொழும்பாகும்
அயிலும் அமுதம் சுவைதீர்த்த
மொழியைப் பிரிந்தான் அழியானோ…!
சீதைக்கும் ராமனுக்குமா இது பொருந்தும்….?
எனக்கும் தாம்!
என் மழலையை எந்தச் சவக்காலைக்கு
எடுத்துச்
சென்றிருப்பார்கள்…?
மனைவியின் நிலை எப்படியோ? கேள்விகள் நீண்டன.
இரத்தம் ஏற்றினார்கள். எய்ட்ஸ் இரத்தம் வேண்டாம். பிளாஸ்மா
மூலம் வைத்தியம் பார்க்கச் சொன்னேன்.
டாக்டர்கள் கேட்கவில்லை.
அவள் நிலைமையை நானறியேன்.
ஓடினேன். ஓடினேன். என் குழந்தை நினைவால்.
அவள் நினைவால். வைத்தியசாலை அண்மித்தது.
என்னவளின் கட்டிலைச் சுற்றி பத்துக்கு மேற்பட்ட கருப்புத்
தலைகள் தென்பட்டன.
என்ன தம்பி உமக்கு இப்படி…? பெரியவர் ஒருவர் நா தளதளக்க
கேள்விக்குறியால் ஆறுதல்படுத்தினார்.
ஞானமும் மௌனமாகித் தலைகுனிந்து அவர்களுள் நின்றான்.
மனைவி கோமாவில் இருந்தாள்.
நான தலைமை வைத்தியரிடம் என் மழலைபற்றிய விபரம் அறியச்
செல்வதாய் அவர்களனைவருக்கும் கூறிச் சென்றேன்.
என் மழலையைப் பார்க்க யாவரும் வருவதாய்ச் சொன்னார்கள்.
பதில் கிடைத்தது.
தென் சவக்காலையில் மழலையின் உடலிருப்பதாய் பதில் வந்தது.
ஓடினேன் மீண்டும்.
அவர்களும் பின் தொடர்ந்தார்கள்.
பஸ், டிராம், கார் யாவுமே மெதுவாகச் செல்வதாய் உணர்ந்தேன்.
இதனாற் கால்களினால் ஓடினேன். ஓடினேன்.
பின் தொடர்ந்தவர்கள் எவரையும் திரும்பியபோது காணவில்லை.
இடைவழியில் களைப்புற்று வீதியோரம் வீழ்ந்தேன்.
இதயம் பலமாக அடித்தது. நெஞ்சு வலியெடுத்தது.
‘மண் சுழன்றது. மால்வரை சுழன்றது,
மதியோர் எண் சுழன்றது, சுழன்றது
அவ்வெறி கடல் ஏழும்
விண் சுழன்றது ,விரிஞ்சன்
கண் சுழன்றது,சுழன்றது
கதிரொடு மதியும்…. ‘என்று கம்பன் சொன்னதுபோல் நான் சுழன்றேன்.
வாய்மட்டும் அசைந்தது.
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்து வர சர்ப்பந்தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே எனப் புலம்பினேன்.
எனக்கு நீர்த்தாகம் எடுத்தது. நா வரண்டு கண்கள் இருண்டன.
சாவோலை கொண்டு யாரும் எதிரே தோன்றவில்லை. அது என்
வீட்டிலேயே நிகழ்ந்தது.
அகதி வாழ்வில் விருந்துக்கு வர யாருமில்லை.
கோவேந்தர்கள் கடமை கேட்க வந்தார்கள் குருக்கள் வடிவில் போன
கிழமை.
அவர்கள் அவசரகால யுத்தநிதி என்
விருப்பை அறியாமலே ஐந்நூறு
மார்க் என எழுதி ரசீது தந்தார்கள்.
இவை யாவும் காட்சியுருவாகின.
கண்களை இருள் முழுமையாக கவ்வியது.
நான் மூர்ச்சையானேன்.
நினைவு திரும்பியபோது ஒரு வைத்திய சாலைக்கட்டிலில் கிடப்பது
புரிந்தது.
கண்ணெதிரே என் மழலை ஓடியாடுவது புலப்பட்டது.
விழிகளைக் கசக்கி மீண்டும் பார்வையைக் குவித்தேன்.
கண்ணீர் மட்டும் நிஜமாகிது.
விழிகளை இறுக மூடினேன்.
மனைவியின் ஞாபகம் பின் தொடர்ந்தது.
அகத்தடியாள் மெய்நோக…
அவள் இறக்கமாட்டாள் தன் மழலையின் உடலைப் பார்க்கும்வரை.
வைத்தியசாலைக் கட்டிலைவிட்டு எழ முயன்றேன். முடியவில்லை.
உடல் பலவீனப்பட்டுப் போய்விட்டது.
மீண்டும் என் மழலையின் பேச்சொலி செவிகளிற் பட்டுத் தெறித்தது.
இப்பேது கண்களில் இருந்து நீர் வரவில்லை.
வரண்ட பார்வையை சாளரத்துக்கூடாக வெளியில் செலுத்தினேன்.
வானத்தில் முழுநிலவு வட்டமிட்டது. அது என் மழலையின்
நிர்மலமான தோற்றத்தை உரித்து வைத்தாற்போல காட்டி நிற்க.
என் வாய்மட்டும் ஆவீன மழை பொழிய இல்லம் வீழ…? என
முணுமுணுக்க விழிகள் பனித்தன.
– பதிவுகள் மே 2005; இதழ் 65.
பா.தேவேந்திரபூபதி கவிதைகள்!
1. பார்த்துக் களித்திடவே!
இலக்கியங்களின்
கர்ப்பப்பையே
எழுந்து வா !
உன் மீது
பாரம் சுமத்தியே
சோர்ந்து போனது
எங்கள் உடலும் மனமும் !
நீ மட்டும்
உனது பாரச் சிலுவைகளின்
உSணமறியாமல்
போலிக் களிப்பில் உனை மறந்த படியே !
மாரீச மான்களின்
போலி வேடங்களில்
ஏமாற்றப் பட்டாய்
உன்னை
சீதையென்று போற்றினோம் !
துச்சாதன விரல்கள்
உன்னில்
அக்னிக் கணைகள் வீசி
டை அவிழ்க்கையில்
பாஞ்சாலி என்று பரவசப் பட்டோம் !
அகலிகையாய் நீ
கல்லாய்ப் போனதில்
கையாலாகாத
கௌதமன் நாங்கள்
சாபம் கொடுத்து சந்தோசப் பட்டோம் !
எலும்பைத் தின்னும்
எச்சில் லத்திகள்
உன்னில் கருத்தரிப்பு
நடத்தையில்
கண்ணியம் பேசி
ஊர்வலம் நடத்தினோம் !
உன் மீது பாரம் சுமத்தியே
சோர்ந்து போனது
எங்கள் உடலும் மனமும்
நீ மட்டும்
பாலூட்டுதலில் பரவசமடைந்த படியே
காலையில் வீடு திரும்பும் கணவனுக்கும்
காத்திருக்கும் அனுசூயையாய் .. .. ..
உணர் !
பழைய படியே
மீண்டும் வேலெடு
உனது வேடையாடுதலில்
உனை மறுக்கும்
அனைத்தும் மடியட்டும் !
இல்லையேல்
மீண்டும் ஒரு முறை
பார்த்துக் களித்திடவே
வேண்டும் வரம் கேட்போம்
காளியிடம்
– பதிவுகள் ஏப்ரல் 2004; இதழ் 52.
2. இடம் கொண்டு விம்மி!
இல்லையென்றறிந்த
பின்பும்
சிதம்பர ரகசியம்
தேடித் திரிந்த படியே
இதயங்கள்!
வானுக்கும் கடலுக்கும்
வரைமுறை கண்ட பின்னும்
இலக்கணங்களுக்குறா
ஆட்படாதபடி மனிதம்!
விரும்பியபடி
எதையும் மாற்ற முடியும்
வேண்டாமென்ற
வேலையில்
மதமும் சாதியும்
வேலையாய் மாறி
மாற்றத்திற்கு மாற்றம்
தரும்!
அறிவின் பெயரால்
பேதங்களை எழுப்பினோம்
செய்கை
எதனோடும் சேராதபோது
அதையே
புரட்சியாக்கினோம்!
ஆக்கிரமிப்புகளின்
அவசரத்தில்
அவரவரைபறி கொடுத்தோம்
அடுத்தவனை பறித்த
ஆனந்தத்தில்
அனைத்து இழந்த படி நாம்!
உச்சி வானின் சுய நிழல்
நம்மை மறைக்க
நாமே அஸ்தமனமானோம்!
குற்றம் மறைக்க
குற்றம் நாடி
குற்றமே நியதியானது
முடியாதவரை
முடியாதவை
முடிந்த பின்
பிரிதொன்றாய்
முடியாதபடி!
முற்றுப் புள்ளிகள்
புதிய வாக்கியத்தின்
தொடக்கம்!
– பதிவுகள் மே 2004; இதழ் 53.
3 இங்கு எதுவும் நிகழவில்லை!
தாவிக் குதித்து ஓடிவந்து
படரும் மனது
தடைகளைத் தாண்டி
வெளிக்குத் தெரியாமல்
ஆக்கிரமிக்கும் வேர்களாய்
இருப்பினும்
இடம் பெயரா விருட்சம் போல
வீட்டின் கதவை திறந்த படியே நீ
வா என்று அழைத்து செல்லும்
உன் செய்கைக்குள்
மறைந்து கிடக்கின்றன
ஆயிரம் வினாக்கள்
ஏன் வருகிறான் என்ற
விசாரிப்புகளை உள்ளடக்கி
உன் வசதியை வெளிப்படுத்த
ஏதேதோ செய்கிறாய்
எனக்கு
பெயர் தெரியாதவற்றையெல்லாம்
பரிமாறுகிறாய் உண்ணச் சொல்லி
என் மகிழ்ச்சியை
உறுதிப்படுத்திக் கொள்கின்றாய்
திருவிழாக் கூட்டத்தில்
அவசரகதியில்
பலூன் ஊதிக் கொண்டிருக்கிறான்
பலூன் வியாபாரி
அவசரத்தில் காற்று சற்று அதிகமாகி
விநாடிக்குள்ளான தருணத்தில்
ஒலியெழுப்பி வெடித்தது
என்னிடம் மறைக்க விரும்பும்
உன் விழியின்
ஒரு கண்ணீர் துளி
விடை சொல்லி புறப்படுகிறேன்
அனைத்தும் நிகழ்ந்த களிப்பில் நீ
4. தானாகிய அது!
எதுவும் ந்¢கழ முடியாத
அத்துவான வெளியில்
குடியிருக்கும், என்னை
என்ன செய்து விடப் போகிறது
உன்
உச்சமும் ,நீச்சமும்!
விநோதங்கள்
விளைவிக்க கூடிய
விதையை
தேடியலையும் நான்
நிபந்தனைகளுக்குட்பட்டு
பேரத்தைத் துவக்கினாய்
உவர் நிலமாயினும் பரவாயில்லை
நன்னீர் ஊற்றச் சொன்னாய்
காற்று சற்று தாராளமாய்
இருக்கட்டும் என்றாய்
விளைவு உடனே தெரியாதென்றாய்
கண் விழித்து பார்க்கக்
கூடாதென்றும் கட்டளையிட்டாய்
விற்பனை ஒப்பந்தத்தில்
இருவரும் கையெழுத்திட்டோம்
விளைவிக்க வேண்டிய
ஆயத்தங்களோடு புறப்பட்டு
என் விளை நிலமே
உனதானதறிந்தபின்
விளைவிக்க இடந்தேடி
வினோதங்களை விளைவிக்கும்
விதையை
விற்பனை செய்யப்புறப்பட்டேன்
எதுவுமறியாமல்
கூடவே வந்து கொண்டிருக்கிறது
இமை விளிம்பில்
தூக்கத்துக்கேங்குமென்
ஒற்றை முடி
– பதிவுகள் ஜூலை 2004; இதழ் 55.
5. கரும்பனையும், ஆலமரமும்!
போதி சத்துவரின் வெளியில்
வீசி எறியப் பட்டு
மறைக்கப் பட்டு வைத்ததை
உண்டு பசியாறிணார்கள் இருவரும்
பிரவாகத்தின் ஆட்கொள்ளலில்
மறு பிறப்பின் நினைப்பின்றியே
மூழ்கிப் போனார்கள்
எழுச்சியும் வீழ்ச்சியும்
சந்தித்த புலத்தில்
உண்டானது அது
கூடவே அமிர்த கலசமும்
பீறிட்டு வந்ததாயும் கேள்வி
அழகியலும் துன்பமும்
கூடவே வந்தன
அவற்றிற்குத் துணையாய்
வளர்ந்த வேளையில் காற்றை கூட
விட்டு வைக்கவில்லை அது
முட்டைக்கள் பெரிதாகி
பிரபஞ்சம் மறைக்கையில்
ஒருவரை ஒருவர்
பார்க்கக் கூடவழியின்றி
பிரிந்து போயினர்
ஒருவர் கரும் பணையாயும்
மற்றொன்று ஆலமரமாயும்
– பதிவுகள் செப்டம்பர் 2004; இதழ் 58.
நா.முத்து நிலவன் கவிதைகள்!
1. எங்கள் தேசம் இந்திய தேசம்!
(NCERTவெளியிட்டுள்ள ‘ஜிந்த் தேஷ்கீ நிவாஜி’ எனும் இந்திப்
பாடலின் ‘இசைபெயர்ப்பு’ )
பல்லவி
எங்கள் தேசம் இந்திய தேசம்
வாழ்க வாழ்க வாழ்கவே!
இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள்
எல்லாரும் சகோதரர்கள்!
சரணங்கள்
வேறு வேறு வண்ணப் பூக்கள்
சேர்ந்த வாச மாலை நாங்கள்!
வண்ணம் வேறு வேறென் றாலும்
வாசம் நெஞ்சில் ஒன்றுதான்! (எங்கள் தேசம்…
சிந்து கங்கை பிரம்ம புத்ரா
கிருஷ்ணா காவேரி
சென்று சேரும் கடலில் என்றும்
நீரின் தன்மை ஒன்றுதான்! (எங்கள் தேசம்…
பேசும் மொழியும் வாழும் இடமும்
வேறு வேறு னால் என்ன?
பாச உணர்வும் பண்பும் அன்பும்
தேசம் முழுதும் ஒன்றுதான்! (எங்கள் தேசம்…
இமயத் தலையில் பனிப்பூ மேகம்
குமரி அலையில் கொலுசுகள் நாதம்
குஜரத் வங்கத் தோளில் மோதும்
கொஞ்சும் தாயின் ஒற்றுமை கீதம்! (எங்கள் தேசம்…
(இந்தப் பாடல், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., தமிழ் இலக்கிய வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டுள்ள கவிஞரின் “புதிய மரபுகள்” எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அருப்புக்கோட்டை ம.தி.தா. தேவாங்கா அரசுக் கலைக்கல்லூரி மாணவர்களால் பாடப்பட்டு, அனைத்துக்கல்லூரிப் பாடல் போட்டியில் முதல் பரிசு பெற்று, மதுரை வானொலியின் தேசபக்திப் பாடல் வரிசையில் அடிக்கடி இசைக்கப்பட்டு வருகிறது)
2. வறண்டது காவிரி மட்டுமா?
வறண்டது காவிரி மட்டுமா? – மக்கள்
வாழ்க்கை நெறியும்,பண் பாடும்கிழிந்ததே ஒட்டுமா?
இருண்டது போலவும் தோணுதே! -அட
ஈராயிரத் தாண்டு, பாரம்பரியமும் நாணுதே!
எங்கெங்கு காணினும் சூழ்ச்சியா! – அதில்
ஏழை நிலைமையை மூடி மறைத்திடும் வீழ்ச்சியா!
அங்கங்கும் ‘ஒளிர்கிற’ காட்சியா! -அவை
அப்பாவி மக்களின் அம்மணத்தை விற்ற சாட்சியா!
அறிவியல் வளர்ந்ததே போதுமா? – அவை
அடிமட்ட ஏழையை அப்படியே விடல் நீதமா?
பொறியியல் வளர்ந்தென்ன லாபம்? – ஒரு
போக்கிலா மாந்தர்க்குப் புகலிடமில்லையே பாவம்!
பாவேந்தன் பாரதி தாச! – உன்
பாட்டு வழிஎங்கள் நாட்டுவழி’ எனப் பேச -பல
நாவேந்தர் எம்மிடம் உண்டு!- எனில்
நாவேறு! செயல்வேறு என்பதே எம்மனோர் தொண்டு!
மலைவாழைக் கல்வி’யை உண்டோம்! – அறிவு
மட்டும் வளர்ந்தது, நாட்டையே காடாகக் கொண்டோம்!
விலைபேசி வாங்கினோம் வம்பை – உள்ள
வேற்றுமை யைஊதிப் பெரிதாக்கி விடுகிறோம் அம்பை!
கல்வியில் லாததோர் பெண்ணை – நீ
களர்நில மேயெனக் கவிபுனைந் தாய்,தஞ்சை மண்ணை
புல்விளை யாததோர் புதராய் – நாங்கள்
போட்டுவைத் தோம்,பெண்ணைப் போற்றிவைத் தோம்ஒருபுதிராய்!
‘உலகமே உண்ண உண்’ என்றாய்! – ‘இந்த
உலகையே நானெடுத்(து) உண்பேன் தனியாக’ என்றார்,
கலகமே நடத்திய போதும் -அதைக்
‘காவல் பணி’யெனக் காட்டுவதே எங்கள் வேதம்!
வறண்டது காவிரி மட்டுமா? – இல்லை
வளத்தமிழ் நாட்டினில் பண்பாடும் கிட்டுமா?
இருண்டது போலவும் தோணுதே! – இதை
எப்படியும்,இனி மாற்றிடவே வழிகாணுவோம்!
– பதிவுகள் ஆகஸ்ட் 2004; இதழ் 56.