மெய்யியல் கற்றல் கற்பித்தல்- 1

– ஆதவன் கதிரேசர்பிள்ளை என்னும் பெயர் ஆதவன் என்னும் பெயரில்  தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாக ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான பெயர்களிலொன்று. பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியற் துறையில் நிரந்தர விரிவுரையாளராக , 1981-1983 காலகட்டத்தில் பணி புரிந்தவர். கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், சினிமா, தத்துவம் எனப்பல்துறைகளிலும் தன் பங்களிப்பினைச்செய்து வருபவர். தத்துவம் பற்றிய இவரது கருத்துகளைத் தொடர்ந்தும் ‘பதிவுகள்’ இணைய இதழில் பகிர்ந்து கொள்வார்.


மெய்யியலை எவ்வாறு கற்பிக்கலாம்?

சரி,

பிரச்சனைகளிலிருந்து ஆரம்பிக்கலாம்.

உங்களுக்குத் தெரிந்த…உங்களால் -பிரச்சினை- என்று கருதப்பட்ட ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள்.

மறந்தும் -என்றால் என்ன?- என்கிறதும், -எங்கே?- என்பதுமான கேள்விக்கு விடையளிக்க எத்தனிக்க வேண்டாம்.

நீங்கள் இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்க எத்தனிக்கும் போதே.. அக்கணத்தில் மூளைச் சலவை செய்யப்பட்டுவிட்டீர்கள் நீங்கள் அறியாமலேயே.

உதாரணம்:

 

1. புவியீர்ப்பு என்றால் என்ன?

2. கடவுள் எங்கே இருக்கிறார்?.

உதாரணம் இரண்டிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு விடையளிக்க எத்தனிக்கும் போதே ..நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டுவிட்டீர்கள். அதாவது…ஒன்றின் -இருப்பு- நீங்கள் அறியாமலே -இருப்பு- உங்கள் மேல் சுமத்தப்பட்டது.

இது போலவே மனம் எங்கே இருக்கிறது? என்ற கேள்விக்கும் விடையளிக்கும் போதே..-மனம்-என ஒன்று உண்டென்றும் அதன் இருப்பையும் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம்.இனி, என்றால் என்ன? என்ற கேள்வியை எடுத்தால்…..உதாரணமாக… -அ- என ஒரு விடயம் இருக்கின்றது. –அ- விற்குள் 1——10 விடயங்கள் இருக்கின்றன எனக் கொண்டால், -அ- என்றால் என்ன என்பதற்கு 10 விடயங்களையும் கூறுதல் வேண்டுமல்லவா? 10 விடயங்களையும் ஒருவர் அறியாமலேயே –அ- பற்றிச் சொல்லுதல் முழுமையான அறிவில்லையல்லவா? 10 விடயங்களையும் முழுமையாக அறியமுடியுமா எனும் கேள்வியும் இங்கே எழுகிறது அல்லவா?

ஆகவே என்றால் என்ன?  எங்கே இருக்கிறது? போன்ற கேள்விகள் உண்மையான அறிவாகுமா? என்ற கேள்வியை மெய்யியல் கேட்டது; கேட்கிறது.-

கேள்வி மீதும் கேள்வி எழுப்புகிற ஒரே துறை மெய்யியலாகும்- என்று தத்துவஞானிகள் பெருமை கொள்வர்.