மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன் பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். – வ.ந.கிரிதரன் –
அத்தியாயம் ஆறு: தமிழகத்துப் பாதிரியார் ஏபிராகாமின் வருகை!
ஒவ்வொரு நாளையும் ஒரு புது நாளாகக்கருதி , எங்கள் தடுப்புமுகாம் வாழ்வை மறக்க எண்ணி, ஏனையவற்றில் கவனம் செலுத்த முயன்றுகொண்டிருந்தபோதும் முற்றாக எங்களால் அவ்விதம் செய்ய முடியவில்லை. எத்தனை நேரமென்றுதான் தொலைக்காட்சி பார்ப்பது? ‘டேபிள் டென்னிஷ்’ விளையாடுவது? தேகப்பயிற்சி செய்வது? சுதந்திரமற்ற தடுப்பு முகாம் வாழ்வின் கனம் இடைக்கிடை எம்மை மேலும் மேலும் அமுக்கத்தொடங்கிவிடும். இத்தகைய சமயங்களில் படுக்கைகளில் வந்து புரண்டு கிடப்போம். இதே சமயம் வெளியில் இல்லாததைவிட அதிக அளவில் உள்ளே எங்களுக்கு ஒரு வசதி இருக்கத்தான் செய்தது. உலகின் எந்த மூலை முடுக்கில் உள்ளவர்களுடனும் தொடர்பு கொள்ள எங்களால் முடிந்தது. சட்டவிரோதமாகத்தான். பெரிய பெரிய நிறுவனங்கள் பலவற்றின் தொலைபேசிக்குரிய கடனட்டை இலக்கங்கள் ஏதோ ஒரு வழியில் முகாமில் உள்ளவர்களுக்குக் கிடைத்தவண்ணமிருந்தன. எப்படிக்கிடைத்ததோ அவர்களுக்கே வெளிச்சம். யாரோ ஒரு மேற்கு இந்தியன் ஒருவனின் பெண் நண்பர் தொலைபேசி நிறுவனமொன்றில் ‘ஒபரேட்டரா’க வேலை செய்வதாகவும், அவள் மூலம் அவன் பெற்றுக்கொள்வதாகவும் கதை அடிபட்டது. அத்தொலைபேசி இலக்கங்களை அவன் அங்குள்ளவர்களுக்கு குறைந்த அளவு பணத்துக்கு விற்றுக்கொண்டிருந்தான். சிலருக்கு இலவசமாகவும் கொடுத்தான். இவ்விதம் கிடைக்கும் இலக்கங்களைக்கொண்டு உலகின் மூலை , முடுக்குகளையெல்லாம் தொடர்புகொள்ள முடிந்ததால், தடுப்பு முகாம் வாசிகள் தம் நாடுகளிலுள்ள தம் உறவினர்கள், நண்பர்களுடன் நாள் முழுவதும் உரையாடிக்கொண்டிருப்பார்கள். இவ்விதமாக யாழ்ப்பாணத்திலுள்ளவர்களுடன் கூடத்தொலைபேசி மூலம் கதைக்கக்கூடியதாகவிருந்தது. ரவிச்சந்திரனின் வீட்டில் தொலைபேசி வசதி இருந்தது. ஓரிரு சமயங்களில் காலை ஏழு மணிக்குப் பொங்கும் பூம்புனலைத்தொலைபேசியினூடு கேட்டுக்கூட மகிழ்ந்ததுண்டு. இச்செயலில் சட்டவிரோதத்தன்மை எம் தடுப்பு முகாம் வாழ்வின் உளவியல் வேதனையின் முன்னால் உருண்டோடிவிட்டது.
இவ்விதமாகக்கிடைக்கும் தொலைபேசி இலக்கங்கள் விரைவிலேயே செயலற்றுப் போய்விடும். அவற்றுக்குரிய நிறுவனங்கள் தம் தொலைபேசி இலக்கங்களைப்பாவித்துப் பலர் கதைப்பதை அறிந்ததும், அவ்விலக்கங்களைத் தடை செய்து விடுவார்கள். இவ்விடத்தில் புதிய இலக்கங்கள் கிடைத்து விடும். பழையன கழிதலும், புதியன புகுதலுமாக எங்களது சர்வதேசத்தொலைபேசி உரையாடல்களும் நீண்டுகொண்டே சென்றன.
இதே சமயம் ஆரம்பத்தில் எம் விடயத்தில் அக்கறை செலுத்திய பொஸ்டன் தமிழ் அமைப்பின் அக்கறை சற்றே குறைந்தது. அவர்களில் சிலர் நியூயார்க் வந்து போயிருந்தார்கள். ஆனால் எங்களை எட்டிப்பார்க்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அதே சமயம் ஓரிரு நல்ல உள்ளங்களும் இல்லாமலில்லை. ஒருநாள் எங்களைச் சந்திக்க யாரோ பார்வையாளர்கள் வந்திருப்பதாக அறிவித்தார்கள். எங்களுக்கு வியப்பாகவிருந்தது. எங்களைத்தேடி விருந்தாளிகளா? யாராகவிருக்குமென்று மண்டையைப்போட்டு உடைத்துக்கொண்டோம். கட்டையான உருவம். கனிவான குரல் வளம். அவற்றுக்குச் சொந்தக்காரரான, தமிழகத்தைச்சேர்ந்த ஆனால் தற்போது நியூயார்க்கிலுள்ள கிறிஸ்த்தவ ஆலயமொன்றில் பணி புரியும் பாதிரியார் ஏபிரகாம்தான் எங்களை அவ்விதம் எங்களைச்சந்திக்க வந்திருந்தார். எங்களுக்கு வாசிப்பதற்கென்று பத்திரிகைகள் சிலவற்றையும் கொண்டு வந்திருந்தார்.
தடுப்பு முகாமில் விருந்தினர்களைப்பார்ப்பதற்கு ஒரே சமயத்தில் இருவரை அனுமதிப்பார்கள். விருந்தினரையும், எம்மையும் கம்பி வலை பிரித்திருந்தது. சந்திப்பதற்கு நானும் , இராஜசுந்தரத்தாரும் சென்றிருந்தோம். சுதந்திரமற்ற சிறை அனுபவத்தால் விரக்தியுற்றிருந்த நிலையில். பாதிரியார் ஏபிரகாமின் சந்திப்பு ஆறுதலாக , இதமாகவிருந்தது.
“ஏதாவது என்னால் முடியக்கூடிய உதவிகள் ஏதுமிருந்தால் கூறுங்கள்” , பாதிரியார்தான் கேட்டார்.
எங்களைப்பொறுத்தவரையில் முதலாவது பிரச்சினை தடுப்பு முகாமை விட்டு எவ்விதம் வெளியேறுவது என்பதுதான். ஏற்கனவே தடுப்பு முகாம் வாழ்வனுபவத்தால் கலங்கிப்போயிருந்த இராஜசுந்தரம் கூறினார்:
” ஃபாதர் என்ற மனுசி , பிள்ளைகளை ஊரிலை விட்டு வந்திருக்கிறன். இவங்கள் அறுவான்கள் இப்பிடியே உள்ளுக்கையே வைத்திருப்பான்கள் போலைக்கிடக்குது. வெளியிலை போறதுக்கு ஏதாவது வழிபற்றி விசாரித்தீங்களென்றால் நல்லது. “
“ஒன்றுக்குமே கவலைப்படாதீங்க. எனக்குத்தெரிந்த கிறிஸ்த்த அமைப்பொன்றில் வேலை செய்கிற லாயர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் விசாரித்துப்பார்க்கிறேன். உங்களுக்கும் என்ன தேவையென்றாலும் தொலைபேசியில் அழையுங்கள். முடிந்தால் உதவி செய்வேன்”
இவ்விதம் பாதிரியார் ஏபிரகாம் கூறினார். உண்மையில் பாதிரியாருடனான சந்திப்பு கடலில் அகப்பட்டுத்தத்தளித்துக்கொண்டிருப்பனுக்குத் துரும்பொன்று அகப்பட்டதைப்போன்று எங்களுக்குப் புதிய நம்பிக்கையினைத்துளிர்க்க வைத்தது. பாதிரியார் ஏபிரகாமுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு மீண்டும் எம் படுக்கைகளுக்குத்திரும்பியபொழுது , சிவகுமார், அருள்ராசா ஆகியோர் எம்மைச்சூழ்ந்து கொண்டார்கள். பாதிரியாருடனான சந்திப்பு பற்றிய விபரங்கள் முழுவதையும் , ஒரு சொல் விடாது, ஞாபகப்படுத்துக்கூறும்படி கேட்டுத்துளைத்து விட்டார்கள்.
“இளங்கோ, பார்த்தியா! யாரோ முன்பின் தெரியாத ஃபாதர், அதுவும் எங்கடை நாட்டைச் சேராத , இந்தியாவைச்சேர்ந்த ஃபாதர், பேப்பரிலை எங்களைப்பற்றிய விபரங்களைப்பார்த்து விட்டு ஆறுதல் கூற வந்திருக்கின்றார். ஆனால், எங்கடை பிரச்சினையிலை தலையைப்போட்ட எங்கடை ஆட்கள் நாங்கள் எப்படியிருக்கிறமென்று கூடப்போன் அடித்துப்பார்க்கவில்லை.”
சிவகுமாரின் குரலில் சலிப்புத்தட்டியது.
“தமிழ் அமைப்பைச்சேர்ந்தவர்களெல்லாரும் இந்த நாட்டிலை எஸ்டாபிலிஸ்ட் பண்ணிய சிட்டிசன்காரன்கள். நாங்களோ இந்த அரசுக்கு வேண்டாத விருந்தாளிகள். நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விட்டார்கள் போலை.” அருள்ராசா இவ்விதம் கூறியதும் ஒருவிதத்தில் சரியாகத்தானிருந்தது. இந்தச் சூழலில்தான் பாதிரியார் ஏபிரகாமின் வருகையின் முக்கியத்துவம் எங்களுக்கு விளங்கியது. பாதிரியார் ஏபிரகாமைப்பொறுத்தவரையில் எங்கள் விடயத்தில் பெரிதாகக் கவனமெடுத்திருக்கத்தேவையில்லை. அவ்விதம் கவனமெடுத்து, எம்மை வந்து சந்தித்து. ஒன்றிரண்டு ஆறுதல் வார்த்தைகள் கூறிச்சென்றார்களே! அவ்விதம் அவர்கள் எம்மை வந்துச் சந்தித்துச்சென்றதே எவ்வளவொ மேல் என்று பட்டது.
இதன் பிறகு எங்கள் கவனம் பாதிரியார் ஏபிரகாம் கொண்டுவந்திருந்த பத்திரிகைகளின் பக்கம் திரும்பியது. எங்களைப்பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்த பல்வேறு நாடுகளைச்சேர்ந்த பத்திரிகைகள் அவை. பொஸ்டன் குளோப், சிலோன் டெய்லி நியூஸ், ஏசியன் மொனிட்டர், மற்றும் மத்திய கிழக்கைச்சேர்ந்த ஹல்ப் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளே அவை. இதில் ஹல்ப் டைம்ஸ்ஸில் வந்திருந்த செய்தி எமக்குச்சிரிப்பினைத்தந்தது. இரண்டு வாரங்களில் எமக்குத்தீர்வு கிடைக்குமென்னும் கருத்துப்பட , அமெரிக்க அரசதிணைக்கள அதிகாரியொருவர் கூறியிருந்தது பிரசுரமாகியிருந்தது. அதில் பொஸ்டன் குடிவரவு அதிகாரி ஒருவர் , திமோதி லீலன் என்பது அவரது பெயர், தாம் மத்திய அரசிடம் எங்களது வழக்கைத்துரிதப்படுத்துமாறு கேட்டுள்ளதாகவும், இரண்டு வாரங்களில் முடிவு கிட்டலாம் எனக்கூறியிருப்பதும் கூட அப்பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. டெய்லி நியூசில் பொஸ்டனிலிருந்து , நியூயார்க்குக்கு நாம் மாற்றப்பட்ட விடயமும், பொஸ்டன் தமிழ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் எங்களுக்காகச் சட்டத்தரணியொருவரை அமர்த்தியுள்ள விடயமும் பிரசுரமாகியிருந்தன. இவ்விதம் எங்கள் விடயத்தில் பெரிதாகத்தலையிட்ட பொஸ்டன் தமிழ் அமைப்பினர் பின்னர் ஏன் பின் வாங்கினார்கள் என்பதற்கான காரணம் மட்டும் சரியாகத்தெரியவில்லை.
பாதிரியார் ஏபிரகாம் எங்களைச்சந்தித்துப்போனபின் இரண்டு நாட்களின் பின் வேறிரண்டு எதிர்பாராத விருந்தாளிகள் எங்களைச்சந்திக்க வந்திருந்தனர். ஸ்பார்ட்டசிஸ்ட் அமைப்பினைச்சேர்ந்த ஒலிவர், இங்கிரிட் ஆகிய இருவருமே அவர்கள். ‘ஸ்பாட்டசிஸ்ட்’ கட்சியினரைப்பொறுத்த அளவில் அவர்கள் ட்ரொஸ்கியைப் பின்பற்றும் மார்க்சியவாதிகள். இவர்கள் பத்திரிகையில் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினை பற்றிய கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் ஜே.ஆரின் அமெரிக்க சார்பு அரசுக்கெதிராகத் தமிழ், சிங்களப்பாட்டாளிகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்தது. எங்களை ஏதோ புரட்சிகரப்போராளிகள் போல் உருவகித்துக்கொண்டு, எங்கள் பிரச்சினைகளுக்குத்தீர்வு சிங்கள, தமிழ் பாட்டாளிகளின் ஒன்றிணைந்த போராட்டத்தில்தான் தங்கியுள்ளதென்பதை அடிக்கடி எடுத்துக்கூறினார்கள். அமெரிக்க அரசு எங்களை நடத்தும் விதம் பற்றிக்கவலைப்பட்டுக்கொண்டார்கள்.
இவர்களைப்பற்றி இராஜசுந்தரத்தாருக்கும், சிவகுமாருக்கும் நல்ல அபிப்பிராயமில்லை. “இவங்களெல்லாரும் சி.ஐ.ஏ.காரங்கள். எங்களை நாடி பிடித்துப்பார்க்க வாறாங்கள். ” என்று இராஜசுந்தரத்தார் கூறியபொழுது , அவரது குரலில் ஒருவித எச்சரிக்கை உணர்வு தென்பட்டது.
[தொடரும்]
ngiri2704@rogers.com