அபிநயக் கணகளால்
கவிநயம் பேசிவிட்டு
காதல் நயம் தேடாது
தொலை தூரம் நிற்கிறாய்!
கண்ணடித்துக் கைதொட்டு
உன்னடியில் வீழவைத்து,
காணாதது போலின்று
ஏனோ நீ ஏய்க்கிறாய்!
மலைத்தேனது வாலிபத்தேன்!
வலை விரித்தால் வயோதிபம்
வாலிபத்தேன் தொலைந்திடும்!
காலியாகு முன்னர் களித்திடு! மன்மத இளமையின்
கன்னல் காதல் வயல்.
மின்னி மறையும்
பின்னல் காதல்நிலா.
தேர்ந்திட்ட காதல் நூலகத்தில்
கண்களே கருமூலம்.
காதலின் கருவூலம்
ஒருமித்த இதயங்கள்.
நதிமூலம், ரிஷிமூலம்
குருமூலமற்ற மந்திரம்.
போதனைகளற்ற வசீகரம்.
சாதனையூன்றுகோல் காதல்.
கடலளவு உள்ளத்தில்
கையளவு ஆசையேன்!
நேசநறும் தேனருவியை
வாசமாய் ஓடவிடு!
2. வாழ்வியற் குறட்டாழிசை: இறை சிந்தனை.
அமைதியான இடத்தில் அமர்ந்து இறைவன்
அருகே செல்ல முயல்.
ஆண்டவன் சந்நிதியின் அமைதி ஒருவன்
மீண்டெழுந்திடும் மனவியல் வழி.
தெய்வ வழிபாடின்றேல் உலகில் மனிதன்
உய்வது, உயர்வது எங்ஙனம்!
துர்க்குணங்களை அழிக்க இறை சிந்தனை
துப்பாக்கியாகும், வாழ்வு ஒளிரும்.
குறைகளை மானசீகமாக இறையிடம் கொட்டு
கறைகள் காணாமற் போகும்.
இரவும் பகலும் இறையை நினை.
வரமாகும் நிறை நிம்மதி.
நெஞ்சுரம், நீதி, இறை சிந்தனையால்
வஞ்சமில்லா வாழ்வு பெறலாம்.
பஞ்சமா பாதகங்களை இறை சிந்தனை
அஞ்சி ஓடச் செய்யும்.
ஆதவன் கண்ட பனி நீர் தான்
மாதவன் நினைவில் துன்பம்.
தும்பிக்கையானைத் துதித்தால் தினமும் நம்பிக்கை
நல்ல எண்ணம் பெருகும்.
7-3-2011.
kovaikkavi@gmail.com