தமிழர் பண்பாடு உலகில் உள்ள ஏனைய பண்பாடுகளோடு ஒப்புநோக்கும்போது காலத்தால் முந்தியது எனக்கொள்ள பல்வேறு சான்றுகளை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். ஐயாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்து எனக்கருதப்படும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனப்படுகின்றது. அதற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவ தெய்வ வழிபாடு, கொம்புகளை உடைய மாட்டின் முகத்தினைக் கொண்ட நந்தி ஈஸ்வரர் வழிபாடு என்பன நடைமுறையில் இருந்துள்ளன என்பனவற்றிற்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. சங்க காலத்தை கி.மு. 2000 ஆண்டுகள் தொடக்கம் கி.பி. 600 ஆண்டுகள் வரையும் எனக் கணிப்பீடு செய்வோரும். அதற்கு முந்திய நெடுங்காத்திற்கு முன்பே தமிழ் இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன என்ற கருத்தினைக் கூறுவோரும் உள்ளன. முச்சங்கம் எனப்படும் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பன இருந்துள்ளன. கடல்கோள் கொண்ட தென்மதுரையிலும், கபாடபுரத்திலும், மதுரையிலும் இச்சங்கள் இருந்துள்ளன. இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பே தலைச்சங்கம் எனப்படும் முதற்சங்கம் இருந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை சங்க இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு நிறுவுகின்றனர் ஆய்வாளர்கள். அவற்றில் ஆயிரக்கணக்கான புலவர்கள் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. சங்க இலக்கியத்தில் பல்வேறு தெய்வங்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன. புத்துப்பாட்டு எட்டுத் தொகை நூல்களில் இறைவணக்கம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று தொல்காப்பியம் போன்றவற்றிலும் இடம்பெற்றுள்ளன.
சங்க இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கை முறைகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. மக்கள் வாழும் இயற்கைக்கேற்ப அவர்களின்வாழ்வியல் மாறுபட்டுக் காணப்பட்டதை தங்கள் பாடல்களின் மூலம் புலவர்கள் கையாண்டுள்ளனர். அக்காலத்தில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்னும் ஐவகை இயற்கைப் பிரிவுகள் இருந்தன. குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த பகுதியாகும். முல்லை காடும் காடு சார்ந்த பகுதியாகும். மருதம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதி. நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதி. பாலை, மணலும் மணல் சார்ந்த நிலப்பரப்பு. அந்தந்த நிலத்து மக்கள் அவரவருக்குரிய தெய்வங்களை வழிபாடு செய்து வந்தனர் என்பதனை பண்டைத் தமிழ் இலக்கியங்களின் வாயிலாகவும் அவற்றிற்கு இலக்கணமாக விளங்கும் தொல்காப்பியம் வாயிலாகவும் அறியக்கிடக்கின்றது. குறிஞ்சிக்கடவுளாக முருகப்பெருமானும், மருதநிலத்துக் கடவுளாக இந்திரனும், நெய்தலில் வருணனையும், பாலை நிலத்தில் கொற்றவையையும், முல்லை நிலத்தில் திருமால் எனப்படும் மாயோனையும் வழிபாடு செய்யப்பட்டுள்ளமை சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு பயின்று வந்துள்ளமையை காணமுடிகின்றது.
முதற் சங்கம், மற்றும் இடைச் சங்க காலத்தில் இறைவழிபாடு எவ்விதம் பின்பற்றப்பட்டதற்குப் போதியளவு ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை, ஆனால் நடுகல் வழிபாட்டிற்கான ஆதாரங்களை புற நானூறு குறிப்பிடுகின்றது. எனவே ஆதித் தமிழர்கள் நடுகற்களைத்தான் தெய்வமாக வணங்கியுள்ளனர் என்பது சிலரது கருத்தாக அமைகின்றது. நடுகல் நினைவுச் சின்னமாக வைக்கபட்டதா அல்லது வழிபாடு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.
சங்கச் செய்யுள்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில் அணங்கு என்னும் சொல் வழிபாட்டிற்குரியதாக இடம்பெற்றுள்ளது. பேயின் வழிபாடு பற்றி பின்வரும் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளமை வழிபாட்டினை பண்டைய தமிழகம் கொண்டிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.
கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்
வென்றி யல்லது வினையுடம் படினு
மொன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக்
கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ
செல்வர் செல்வ செருமேம் படுந
வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர்க் கொன்ற
பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்குத்
தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி . . . .460
இதனைவிட பட்டினப்பாலையிலும் பேயின் அல்லது ஆவியின் வழிபாடுபற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.
கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவரான கபிலர் அவர்களால் யாக்கப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது என்னும் நூலில் முதலாவதாக கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு முக்கண்ணர் பற்றிய குறிப்பும் அவரை வணங்குவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளமை இ;றைவழிபாட்டினை எடுத்துக்காட்டுகின்றது.
முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை@ யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னாமூ வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.
என்னும் செய்யுளால் தமிழகத்தில் சிவவழிபாடு நிலைத்திருந்துள்ளது என்பதற்கான ஆதாரங் காணப்படுகின்றது. அத்தோடு சங்கு சக்கரத்தை உடையவன் தாழ் தொழாதார், சக்கியை வணங்காதாருக்கு இன்னா விளையும் என்பதிலிருந்து இறைவணக்தின் இன்;றியமையாமையை கபிலர் குறிப்பிடுகின்றார். மூன்று கண்களையுடைய இறைவனது திருவடிகளை வணங்காதர்க்கு துன்பம் நேரும், அழகிய பனைக் கொடியையுடைய பலராமனை உள்ளத்தால் உள்ளாது இருப்போர்க்கு துன்பம் உண்டாகும், சங்கரமுடைய மாயோனை மறந்தார்க்கு துன்பமுண்டாகும், சக்தியின் வேற்படையை உடையவனாகிய முருகப்பெருமானின் திருவடிகளை வணங்காதர்க்கும் துன்பம் உண்டாகும் என்பதனைச் சங்கச் செய்யுள் எடுத்தக்காட்டுகின்றது என்பதன் வழி இறைவழிபாடு அங்கு இருந்துள்ளது என்பதனைத்தானே காட்டுகின்றது.
திருக்குறளில் முதலாவது குறளே இறைவனே மூலகாரணர் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்ற குறளுக்குப் பல்வேறு பொருள்கள் கொடுக்கப்படுகின்றன. எனினும் உலகியற்றியான் என்ற கருத்தையும் வள்ளுவர் இன்னோரிடத்தில் கொடுப்பதில் அவர் இறைவழிபாடு அக்காலத்திருந்துள்ளது என்பதனை எடுத்துக்காட்டுவதாகவே அமைகின்றது.
முக்கண்ணன், மணிமிடற்றான், ஆதிரையான், மாயோன், சேயோன் என்றெல்றெல்லாம் சங்க இல்கியங்கள் காட்டும் சிவன், திருமால், முருக வழிபாடுகள் சங்கச் செய்யுள்களால் அறியமுடிகின்றது.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும் (தொல்காப்பியம்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் இறைவழிபாடு பற்றி தொல்காப்பியர் விளக்கியுள்ளார். காடும் காடுசார்ந்த இடமக்களின் தெய்வமாக மாயோனையும், குன்றுகள் நிறைந்த பிரதேசத்து மக்கள் வழிபாட்டுத் தெய்வமாக சேயோனையும், கடலும் கடல் சாந்த இடமக்களின் தெய்வமாக இந்திரனையும், மணல் நிறைந்த (பாலை நிலப்) பிரதேசமக்களின் வழிபடு தெய்வமாக வருணனையும் எடுத்துக் காட்டுகின்றார்.
சங்க நூலான பரிபாடலில் பக்தி வெளிப்பாடு இறைவனை வேண்டும் வரமாகவே காணப்படுகின்றது. குடுவன் இளவெயினார் அவர்களால் யாக்கப்பட்ட இப்பாடலில்
யாம்அம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் முன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ராயோ.
கல்லினுள் மணியும்நீ, சொல்லினுள் வாய்மைநீ,
அறத்தினுள் அன்பு நீ, மறத்தினுள் மைந்து நீ,
வேதத்து மறை நீ, பூ தத்து முதலும் நீ,
வெஞ்சுடர் ஒளியும் நீ, திங்களும் அளியும் நீ
அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும்நீ.
-கடுவன் இளவெயினனார்
என்னும் அடிகளால் இறைவனைப் போற்றிப் பக்தி நிலையை உணர்த்தும் நிலை தெரிகின்றது. இவை 13 புலவர்களால் யாக்கப்பட்டுள்ளன. இவை ஆற்றுப்படை என அழைக்கப்படுகின்றன. போன் பொருள் வேண்டி அரசரையும் கொடை வள்ளல்களையும் பாடிவந்த நிலை மாறி முருகன் அறுபடை வீடுகளக்குடு ஆற்றுப்படுத்தும் செய்யுள்களாக இவை நிலை பெற்டுறுவிட்டன. நுக்கீரனின் திருமுருகாற்றுப் படையிலும் முருகனிடம் செல்லும் வழி அவனின் அருளைப் பெறும் வழி என்பன முன்வைக்கப்பட்டுள்ளன. இறையருள் வேண்டிப் பாடப்பட்டவை ஆற்றுப்படை நூல்கள்.
தொல்காப்பியத்தில் ஒரு முயற்சிக்கு குற்றம் இல்லாதொழிவதற்கு கடவுள் வாழ்த்து முக்கியமானது என்பதனை வரைவிலக்கணப்படுகின்றது.
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன முன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.
சுங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் சிவபெருமானுக்குச் சிறப்புடையதாக திருவாதிரைத் திருநாள் சிறப்புடையதாக எடுத்துக்காட்டப்படுகின்றது. சிவபெருமானுக்கு விழாக்கள் எடுத்துக் கொண்டாடும் வழக்கம் பற்றி எட்டுத் தொகையில் குறிப்புக்கள் உள. இதனைப் பரிபாடலிலும் காணமுடிகின்றது.
எனவே சிவன் சைவத்தின் முழுமுதற்கடவுள் என்பதனைத் தமிழரின் வழிபாட்டு முறைகள் எடுத்தியம்புகின்றனட. அதனாலன்றோ தென்னாடுடைய சிவனே போற்றி என திருவாசகம் எடுத்தியம்புகின்றது. வடக்கில் அமைந்த சிவதலங்களைவிட தெற்கில் சிவதலங்கள் அதிகம். சங்க இலக்கியங்களில் சிவன் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லையாயினும் முக்கண்ணன், நீல மிடற்றன், கண்டங் கரியன் என்னும் பதங்கள் சிவனையன்றி வேறு யாரைக் குறிப்பதாக அமையும். அத்தோடு சிவன் சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு என்பவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளன:
கண்ணி கார் நறுங்கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை;
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப்
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர் அறவு அறியாக் கரகத்து
தாழ் சடை பொலிந்த அருந்தவத்தோற்கே
என்னும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தும், கீழ்க்காணப்படும் அகநானூறு கடவுள் வாழ்த்தும் சான்று பகர்கின்றன:
கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு அத் தோலாதோற்கே!
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே;
செவ்வான் அன்ன மேனி; அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை;
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி;
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்
வரி கிளர் வயமான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்
தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே!
இவற்றைவிட பல்வேறு இடங்களிலும் சிவனைப் பற்றிய பாடல்கள் உள. எனவே சங்க காலத்தில் நடுகல் வழிபாடுதான் இருந்தது என்று துணிந்து கூறுவதற்க்pல்லை. போர் முடிவடைந்ததும் போரில் மாண்ட வீரர்கள் வீர சொர்க்கம் சேர்ந்தவர்கள். இவர்களை நினைவிருத்தி கடவுளராக நடுகல் நட்டு வழிபட்ட முறைகளும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. ஆனால் அது தான் தமிழரின் வணக்கமுறை என்றோ நடுகல்லைத்தான் வழி பட்டனர் என்றோ துணிதலாகாது.
சிந்துவெளி நாகரிக கால புதைபொருள் ஆய்வின் வழி திராவிட நாகரிகம் பழமை வாய்ந்தது என்பதும் அங்கு சிவலிங்க வழிபாடு இருந்துள்ளது என்பதற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன. எனவே சங்கத்தமிழன் தினயே நடுகல்லை மட்டுந்தான் வணங்கினான் என்பதற்கில்லை. நடுகல் வழிபாடு கிரேக்க, உரோம நாகரிகங்களிலும் இருந்துள்ளன. உருவ வழிபாட்டிற்கு முன்னர் இத்தகைய நடுகல் வழிபாடு தோன்றியிருத்தல் கூடும். இலங்கையை ஆட்சி செய்த எல்லாள மன்னனுக்கு நடுகல் வைத்து வழிபட்டான் துட்டகாமினி என்பது மகாவம்சம் தரும் வரலாறு. எனவே நடுகல்வழிபாடு சங்க காலத்திற்குப் பின்னரும் இருந்துள்ளது. இன்றுங்கூட இணுவில் பிரதேசத்தில் இளந்தாரி என்னும் வீரனை நடுகல் வைத்து வழிபட்டு வருகின்றனர் அவ்வூர் மக்கள். ஆகவே சங்ககாலத்தில் மட்டுந்தான் நடுகல்வழிபாடு இருந்துள்ளது என்று ஆணித்தரமாகக் கூறவிளைவோர் சங்க இலக்கியங்களை மேலும் ஆழமாக ஆராய்ந்தறிதல் வேண்டும்.
இந்திய உபகண்டத்தில் தோன்;றிய வாழ்வியல் தத்துவம் அனைத்தையும் இணைத்து அதனை இந்து மதம் என்ற அடையாளமிட்டு ஒரு சமயமாகக் கருதுகின்றனர். ஆனால் இந்து மதம் என்று அதனை மதப்பிரிவினுக்குள் அடக்கிவிட இயலாதவாறு அதன் தத்துவம் வாழ்வியல் நெறியோடு இணைந்த மிக ஆழமான பல்வேறு நிலைகளையும் விளக்கி மனித ஈடேற்றத்திற்கு வழி சமைத்து நிற்கின்றது என்பதனைப் பல ஆய்வாளர்களும் அறிஞர்களும் எடுத்துரைக்கின்றனர். சுவாமி விவேகானந்தர், ரமணமகரி~p, ஸ்ரீராமகிரு~;ண பரமஹம்சர் போன்றோரின் விளக்கவுரைகளை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இதனைப் பன்நெடுங் காலத்திற்கு முன்பே ஞானிகள், ரி~pகள் எனப்படும் அறிஞர்கள் எடுத்தியம்பியுள்ளர். அவற்றில் பொதிந்துள்ள உண்மைகளை இன்னும் பகுத்துணரமுடியாத ஆழ்ந்த அறிவுக்கடலாக அது அகண்டு விரிந்து செல்லும் தன்மையுள்ளமையை ஆழமாக நோக்குமிடத்து அறியமுடிகின்றது. அறியமுடிகின்றது. இந்திய மண்ணில் தோன்றிய ஞானிகளின் அறிவாற்றலும், ஆழ்கடல் முத்தும் இன்னும் ஆய்ந்தறியப்படவேண்டிய மெய்ஞானமாக உள்ளமை கண்கூடு.
avan.siva55@gmail.com