ரிஷி’யின் ஐந்து கவிதைகள்:

(1) 24 x 7 + மையங்கள்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

இரவு பகல் எந்நேரமும் திறந்திருக்கின்றன.
மும்முரமாய் கூவிக்கூவி வியாபாரம் நடந்தவாறு.
டாஸ்மாக் கடைகள் கூட நள்ளிரவைத் தாண்டி ஏதோவொரு சமயம்
மூடிவிடுவதாகக் கேள்வி.
ஆனால், இந்த விற்பனை மையங்களோ
ஒரு நாளின் 60,000 மணிநேரமும் ஓய்வின்றி இயங்கியபடியே….
வகைவகையாய்க் கொட்டிக்கிடக்கின்றன அதிகார மையங்கள்.
வகைக்கிரண்டாய் பொறுக்கிப்போட்டு
கூறுகட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும்
கொள் பொருள் அளவுகள்.
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் _
சனாதனம், இனமானம், இந்துமதம் _
பௌத்தம், கிறித்துவம், கவித்துவம் _
முற்போக்கு, பண்பாடு, கலாச்சாரம் _
விளையாட்டு, வீரம், தீரம் _
காரம் சாரம் வாரம் சோரம் பேரம்……..
அமோகமாய் நடக்கிறது வியாபாரம்.
அள்ள அள்ளக் குறையா லாபம்.

(2) கண்காட்சி

பாவம், ஏனோ தெரியவில்லை – சாக்கடைக்குள் நின்றபடி
அந்தப் போக்கத்த பித்துக்குளிப் பேதைக் கழுதை
தன்னைப் படைப்புக்கடவுளாகக் கூவிக்கூவி விற்கும் எத்தனத்தில்
எழுதுகோலைப் பின்னங்காலாக்கிக்கொண்டு
அவரிவரெவரொருவரையும் விடாமல்
எட்டியுதைக்கப் பிரயத்தனப்பட்டுக்கொண்டேயிருக்கிறது….
மனதின் நோய்மை எலும்பு மஜ்ஜை வரை பரவி
பலவீன நோஞ்சானாயிருக்கும் தன்னை மாபெரும் பயில்வான் என்று
கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாய் நம்பச் சொல்லி
ரம்பக் குரலில் கத்திக்கொண்டு புரண்டு விழுந்து எழுந்தழுதபடி
பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறது.
‘கரெண்ட்’டில் கைவிட்டதுபோல் வரட்டு வரட்டென்று
வாய்கோணக் கத்தும் அதை பார்த்து
கடந்து செல்பவர்கள் எல்லாம்
கழுதையல்லாக் கழுதை இஃதென்ன விசித்திரப் பிராணி
என்று விசனத்தோடு உச்சுக்கொட்டியபடி
தம் வழியேகிக்கொண்டிருக்கிறார்கள்.

(3) உளவியல் சிக்கல்

ஒரு மண்புழு
தன்னை கட்டுவிரியன் பாம்பு என்று எண்ணிக்கொண்டுவிட்டது.
வந்தது வினை.
புலியை அடித்துக்கொல்லச் சென்றது;
முடியவில்லை.
சிங்கத்தை விழுங்கித் திங்கப் பார்த்தது
முடியவில்லை.
யானையை
கரடியை
மாடை ஆடை முயலை கிளியை _
எதுவுமே முடியாமல் போனதில்
எந்த வியப்புமில்லை.

ஆம், மண்புழுவும் அன்புக்குரியதுதான் –
உண்மையானதெனில்!

4.திடக்கழிவுகள்

குட்டி வாயும் குண்டுமணிக் கண்களுமாய்
படுசுட்டியாய்ப் பாய்ந்தோடும் சுண்டெலி தனி அழகுதான்.
ஐந்தறிவுள்ள அந்தச் சுண்டெலிக்குத் தெரியும்
அதன் வாழ்வெல்லைப்பரப்பின் நீள அகலங்கள்;
தனக்குப் பாதுகாப்பான பொந்து;
உணவு கிடைக்கக்கூடிய மூலைகள்….

ஆனால், ஆறறிவுள்ள சில அற்பச் சுண்டெலிகள்
ஆங்காலம் போங்காலம்
கிலி பிடித்தாட்ட,
தங்களைச் சிறுத்தைப்புலிகளாக ‘பாவ்லா’ காட்டி
இக்குணூண்டு கூட இல்லாத வாலை சுழற்றி
பொக்கைவாயின் சொத்தைப்பற்களே வளைநகங்களாய்
கெக்கேபிக்கேவென்று
கம்மிய குரலில்
சதா கீச்சுக்கீச்சென்று உறுமிக்கொண் டிருப்பதைக் கேட்க
உண்மையிலேயே கண்றாவியாக இருக்கிறது.

5. சூழல் மாசு

காறித் துப்பத் தயாராய் வன்மம் நிறை வார்த்தைகளை
யெப்போதும் குதப்பியவாறிருக்கிறாய்
தப்பாமல் கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பித் துப்புகிறாய்;
கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பித் துப்புகிறாய்;

காழ்ப்பேறிய உன் நுரையீரல், உணவுக்குழாய்,
குரல்வளை யெங்கிலும்
பரவிக்கொண்டிருக்கும் குரோத நஞ்சு.

நீ அப்பிக்கொள்ளும் பவுடர்,
வெட்டிக்கொள்ளும் புருவங்கள்,
கன்னத்து ரூஜ்,
உதட்டுச்சாயம்,
இன்னும் பலவற்றை மீறி
அகத்தின் அழுகல் முகத்தில் தெரிகிறது பார்.

உடல் பொருள் ஆவியாகும்
அகங்காரம், ஆங்காரம் கொப்பளிக்க
ஆங்காலம் போங்காலம் உன்னிலிருந்து கிளம்பும்
காறித்துப்பல்களில்
கணிசமாய் உன் மீதே பட்டுப் படர்ந்திருப்பதை
என்றேனும் உன்னால் உணரமுடியுமோ? சந்தேகம்தான்.

உன்னிடம் ஒரேயொரு வேண்டுகோள்:
நீ எதிரே வந்தாலே நாசியைப் பொத்திக்கொண்டு
நீங்கிச் செல்பவர்களை ‘நாசமாய்ப் போக’
என்று ஏசுவதற்கு பதில்
உன் ஊத்தை உள்ளிருப்பில் எங்குபார்த்தாலும்
சிதறிக்கிடக்கும்
மாசுகளை  சுத்தம் செய்யச்
சிறிதேனும் முனைப்பு காட்டு;

ramakrishnanlatha@yahoo.com