ஆய்வு: பாரதியின் பெண்ணுரிமைக் கவிதைகள்!

-பேராசிரியர் கோபன் மகாதேவா -- பேராசிரியர் கோபன் மகாதேவா | திருமதி சீதாதேவி மகாதேவா -(இக் கட்டுரை என் அண்மையில் மறைந்த மனைவியார் வைத்தியை சீதாதேவியுடன் செய்த ஒரு கூட்டு இலக்கிய முயற்சியே.  பாரதியார், பெண்ணுரிமை எனும் விடயத்தில் என்னவெல்லாம் எழுதியுள்ளார் என ஒரு வாரமாகக் கூடி ஆராய்ந்து, ஆணுரிமையையும் விட்டுக் கொடுக்காமல் தர்க்கித்தே முடிவுகளை எடுத்தோம்.  — கூட்டாசிரியர்  கோ-ம.)

சுப்பிரமணிய பாரதியார் பெண் உரிமையை ஆதரித்துப் பாடி இந்தியாவில் ஆர்ப்பாட்டம் செய்த புலவர்களுள் ஒரு முன்னோடி எனலாம்.  இன்றிருந்து கிட்டத் தட்ட ஒருநூற்றாண்டு காலத்தின் முன் எழுதப்பட்ட பாரதியாரின் பெண்ணுரிமைப் பாடல்களில்: மனைத் தலைவிக்கு வாழ்த்து, பெண்விடுதலை, பெண்விடுதலைக் கும்மி, புதுமைப்பெண், பெண்மை, எனும் பாரதியின் தனிப் பட்ட, குறுகிய நேரடிக் கவிதைகளை நாம் விசேடமாகக் குறிப்பிடலாம். அத்துடன், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, எனும் நீண்ட கதைக் கவிதைகளிலும் அன்று பெண்கள், ஆண் ஆதிக்கத்தால் பட்டு வந்த பிரச்சினைகனை மறைமுகமாகப் பாரதியார் விளக்கி இருக்கின்றார்.  மேலும் அவரின் கண்ணம்மா கவிதைகள் மூன்றிலும், மகாகாளி, முத்துமாரி, கோமதி, மகாசக்தி, எங்கள் தாய், தமிழ்த் தாய், பிஜித்தீவிலே  ஹிந்து ஸ்திரிகள், தாய் மாண்பு, அம்மாக் கண்ணுப் பாட்டு, வள்ளிப்பாட்டு, ராதைப்பாட்டு, கண்ணம்மா என் குழந்தை, என்னும் கவிதைகளிலும், பெண்மைக் குணங்களை மனதாரப் போற்றி இருக்கின்றார். மனப் பெண் என்னும் ஒரே ஒரு கவிதையில் மட்டும் பெண்களின் மாறிடும் மனோநிலை பற்றி அவர் கிண்டல் செய்திருக்கின்றார். இந்தக் கட்டுரையில், பெண் விடுதலைக் கும்மி எனும் ஒரேயொரு கவிதையை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து, விளக்கி, பாரதியாரின் பெண்ணுரிமைத் தொண்டினை ஆராய்ந்து மதிப்பிடுகிறோம். முதலில், இதோ, சந்தம் பிரிக்கப் பட்ட அக் கும்மிக் கவிதை:
பெண்கள் விடுதலைக் கும்மி

காப்பு: பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம் பாடக்

கண்களிலே ஒளி போல, உயிரில்

கலந்து ஒளிர் தெய்வ நற் காப்பாமே.
1.  கும்மியடி, தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக், கை கொட்டிக், கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின,
நன்மை கண்டோம், என்று கும்மியடி!      (கும்மி)

2.  ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமைஎன்று
எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்,
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.             (கும்மி)

3.  மாட்டை அடித்து, வசக்கித், தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டுவந்தே,
வீட்டினில் எம்மிடம் காட்டவந்தார், அதை
வெட்டிவிட்டோம் என்று கும்மியடி!              (கும்மி)
4.  நல்ல விலைகொண்டு நாயை விற்பார், அந்த
நாயிடம் யோசனை கேட்பது உண்டோ?
கொல்லத் துணிவின்றி, நம்மையும் அந்நிலை
கூட்டி வைத்தார், பழி கூட்டிவிட்டார்.           (கும்மி)

5.  கற்பு நிலை என்று சொல்லவந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்,          (கும்மி)

6.  பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்
இளைப்பு இல்லை, காண் என்று கும்மியடி!     (கும்மி)

7.  வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோம் என்று கும்மி அடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம், தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.                         (கும்மி)

8.  காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கை கொடுத்து,
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி  பெறச் செய்து வாழ்வமடி!                         (கும்மி)                   

இக் கவிதையை எம் நாயகர் சுப்பிரமணிய பாரதியார் 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் அளவில் எழுதினார்.  தமிழ்ப் பெண்களுக்கு ஏற்கெனவே விடுதலை கிடைத்து விட்டதாகவும் அதைக் கொண்டாடுவ  தாகவும் கற்பனித்து இக் கும்மிப் பாட்டைப் பாரதி எழுதினார்.
இக் கவிதையில் விசேடமாக நாம் நோக்க வேண்டிய அம்சங்கள் எவை?  16 அம்சங்களை நாம் கண்டுபிடித்தோம்.

1. பெண்கள், தாம் புதிதாகப் பெற்ற விடுதலையை மகிழ்வுடன் சேர்ந்து கூடிப் பாடி ஆடிக் கொண்டாடுகின்றனர். இவ் வரிகளைப் படிக்கும்போது, பெண்கள் எல்லாரும் தனியாக, அதாவது ஆண்களின்றித் தனித்துக் கூடித் தம் பாலின வர்க்கத்தின் ஏதேனும் வெற்றிகளை அதற்கு முன் கொண்டாட ஆண் வர்க்கம் விட்டிருக்க மாட்டாது, அன்று வரை விடவேயில்லை, என்னும் கருத்தும் இங்கு மறைமுகமாகத் தெரிகின்றது.

2. தமிழ்நாடு முழுதும் குலுங்கிடப் பெண்கள் கை கொட்டிக் கொண்டாட்டம் நடத்துகின்றனர். அதாவது, பெண்கள், தமது குடும்பங்களிலும் கிராமங்களிலும் மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதிலும், பிரதேச ரீதியாக, தம் பாலினத்தினருடன் தொடர்பு கொண்டு, கூடிச் சேர்ந்து ஒழுங்கு செய்து, தம் விடுதலையை, நாடும் நிலமும் குலங்கிடச் சத்தம் செய்து, பாடிக் கும்மி அடித்துக் கை கொட்டி ஆடுகின்றனர் எனும் கருத்தும், பாரதியாரின் மேற்படி வரிகளுள் பின்னணியாக மறைந்து நிற்கின்றது.

3. பெண்கள், தம்மைப் பிடித்த பிசாசுகள் போயின என்று கொண்டாடுகின்றனர். அவர்களைப் பிடித்த பிசாசுகள் யாவர் எனும் கேள்விக்கு, அதன் பின் வரும் வரிகளில் விடைகள் கிடைக்கின்றன. நாமும், அவர்கள் யார்யார் என்பதைப் பின்னர் பார்ப்போம். அத்துடன், பிசாசுகள் போயின என்றே அல்லாமல், பிசாசுகள் இறந்தன என்று சொல்லப்படவில்லை.

எனவே, பெண்கள் கவலையீனமாக இருந்தால், போனபிசாசுகள் திரும்பவும் வரக்கூடும் எனும் கருத்தும் அவ்வடிகளில் உள்ளது என்பது எம் சிந்தனை.
4. பெண்கள் ஏட்டைத் தொடுவது கூட, அதாவது சாதாரணக் கல்வியை எட்டிப் பார்ப்பது கூட, முன்னர் பெண்களுக்கு, பல்லாண்டுகளாகத் தீமை என மறுக்கப் பட்டது என்பதும்,

5. அதனால் பெண்கள் வீட்டிற்குள் அறியாமையுடன் பூட்டி வைக்கப் பட்டார்கள் என்பதும்,

6. மாடுகளைத் தொழுவங்கங்களில் அடித்து வசக்கிக் கட்டி வைப்பதைப் போல் பெண்களையும் நடத்த எத்தனித்தவர்களை வென்று, பெண்கள் கூட்டாக அவ் வழக்கத்தை ஒழித்து விட்டார்கள் என்பதும் இக் கவிதையில் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறிய அடிகளில் விசேடமாகக் கவனிக்க வேண்டியவைகளில், கல்வி ஊட்டுதற்குப் பனை-ஓலை ஏடுகள் பாவித்து வந்த பழங்காலம் தொடக்கம் பெண்களுக்குச் சாதாரண கல்வியே மறுக்கப் பட்டு வந்தது மட்டுமல்ல, பெண் கல்வி தீமையானது என்றும் பலரால் கருதப்பட்டு வந்தது என்றும், அதனால், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்க வேண்டும் எனும் விந்தையான கருத்தைப் பலர் கொண்டிருந்தனர் என்பதும், மாடுகளை அடித்துக் கயிறுகளால் தொழுவங்களில் கட்டி வளர்த்து, காளைகட்கு மூக்கைத் துளைத்து நாணயக் கயிறு போட்டுக் கட்டுப் படுத்தி வேண்டியவாறு வேலைகள் பெறுவதும், பசுவின் இனத்திலிருந்து பாலும், கன்றுகளும் பெறுவது போல, பெண்களிடமிருந்து கட்டாயப் படுத்திப் பலன் பெற அவர்கள் முயற்சித்தார்கள் என்றும், ஆனால் அண்மையில் அந்த வழக்கங்கள் எல்லாவற்றையும் பெண்கள் வெட்டி நிறுத்தி, அவ் வெற்றியையே கும்மி அடித்து இன்று கொண்டாடுகின்றனர் என்று சொல்லியிருப்பதும், விரிவான விளக்கம் பெறுகின்றன என எமக்குத் தோன்றுகிறது.

இந்தக் கருத்துகளை மேலும் ஆராயும் போது, பழங்காலத்தில் சமூகப் புகழடைந்த பெண் கல்வியாளர்களான வெவ்வேறு காலத்திலிருந்த, ஏழோ எட்டோ ஒளவையார்களையும், காரைக்கால் அம்மையார் போன்றோரையும், பாரதி தன் கவிதையில் சாடியுள்ள அதே தமிழ்ச் சமுதாயங்கள் தானே வாழ விட்டு வளர்த்தும் விட்டன எனும் உண்மை மனதில் வந்தாலும், ஆனால், அப்படியான, கற்ற, ஒரு சில பெண்கள், தாம்பத்திய வாழ்க்கையைத் துறந்தே, அதுவும் முதுமையிலேயே, மிதந்து மேலேறினர் என்பதையும் நாம் நினைவு கூருகிறோம்.

ஆய்வுக்குரிய இன்னுமொரு விடயம், பெண் இனத்தைப் பூட்டி, வசக்கிக் கட்டி வைத்தவர்கள் யார் என்பதாகும். பாரதியார், பொதுவாக, எண்ணியிருந்தவர், விந்தை மனிதர், காட்ட வந்தார், என்றே கூறி இருக்கிறார். இதிலிருந்து, அவர் சொன்ன விந்தையர் அன்றைய சமுதாயத்தில் இருந்த எல்லா மட்டங்களில் இருந்தும் வந்தனர் என்பதையும் அப்படியானவருள் பெண்கள் கூட (அதாவது, நாங்கள் அப்படித் தான் நடத்தப் பட்டோம், எனவே எங்கள் மகள்மாரையும் மருமகள் மாரையும் அப்படித் தான் நடத்துவோம், அதுவே முறை, அதில் பாவமில்லை என்று சிந்தித்த மூத்த, கல்வியற்ற, மனம் விரிவடையாத மகளிரும்) அடங்கினர் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனி, பாரதி தன் கவிதையில் மேலும் என்ன சொன்னார் எனப் பார்ப்பதைத் தொடர்வோம்:

7. அடுத்து, நாய்களைப் போல் பெண்கள் சீதன விலை கொண்டு அவர்களின் கலந்தாலோசனை இன்றியே விற்கப் பட்டார்கள் என்பதும், ஆனால் மணத்தின் பின்னர் ஓரளவாவது வீட்டுப் பிரச்சினைகளில் அவர்களின் யோசனைகள் கேட்கப் பட்டன என்றும்,

8. ஆண்கள், பெண்களை, வசதி வந்தால் கொன்றேயிருப்பர் என்றும், ஆனால் அதற்கு துணிவு இல்லாமலே விட்டு விட்டார்கள் என்றும் இக் கவிதையில் கூறப் பட்டிருக்கிறது.

9. அத்துடன் பெண்களுக்கு மட்டுமே, கற்பு நிலை வேண்டும். ஆண்கள் எத்தனை பெண்களையும் காதலிக்கலாம், கூடி வாழலாம், என்றவாறு நடந்து வந்தார்கள் என்றும்,

10. பெண்கள், தங்களுக்கு விரும்பிய காதலரையும் கணவன் மாரையும் தெரிவு செய்யச் சுதந்திரமின்றி, அவர்களின் பெற்றோர்களும் ஆண் சகோதரர்களும் தெரிவுசெய்தவர்களையே முற்காலத்தில் மணம்செய்யவேண்டி இருந்தது என்றும்,

11. இப்படியான தீய வழக்கங்களில் இருந்து விடுதலை பெற்ற பெண்களே இன்று கொண்டாடுவதுமாக, இந்தக் கவிதையில் பாரதியார் கற்பனை செய்து பாடியிருக்கிறார்.

இக்கட்டத்தில், இன்னும் சில விளக்க ஆய்வுகளுக்குச் சந்தர்ப்பம் உண்டு. முதலில், நாய்களைப்போலப் பெண்கள் விலை கொடுத்து விற்கப் பட்டார்கள் என்னும் பாரதியின் சொற்கள் எமக்கு ஏற்புடையவையாக இல்லை. இன்று கூட, தமிழ்நாட்டில் நாய்களைப் பணம் கொடுத்துப் பெறும் வழக்கம் மிக மிக அரிதாகவே உள்ளது என்பதே உண்மை.

கிராமங்களில், நாய்கள், தன்னிச்சையாக, அவைகளின் பருவ வசதியின் படி, சோடிகள் தேடித் தம் இனத்தை விருத்தி செய்து, உணவு கிடைக்கும் வீடுகளுக்கும் பொது நிலையங்களுக்கும், அடித்துக் கலைத்தாலும் திரும்பத் திரும்பப் போவதும், தாமாகவே இடம் தேடிக் குட்டி போடுவதும், அண்மையில் குடியிருக்கும் மனிதர்கள் அக் குட்டிகளுள் தகுதியான கடுவன்களை மட்டுமே தெரிந்து எடுத்து வீடுகளில் வளர்ப்பதும், மிகுதியான பெண் குட்டிகளைத் தெருக்களிலேயே விட்டுச் செல்வதும், அல்லது ஒரு சமூகசேவை போலக் கருதி, அவைகளைப் பிடித்துத் தண்ணீரில் அமுக்கிச் சாகடிப்பதுமே, சர்வ சாதாரணமான வழக்கம் என்பதையும் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.

எனினும், தேவை இல்லாத பெட்டை நாய்களைக் கொல்லும், அந்த, நன்மை-தீமை தர்க்கிக்கக் கடினமாகிய, வழக்கத்தை எண்ணியே, அடுத்தடுத்த வரிகளில், பாரதி, பெண்களை: எமைக் கொல்லத் துணிவின்றி, நம்மையும், முன்கூறிய நிலைகளில் கூட்டிவைத்தார் என்றும், அப்படிச் செய்து தம் பழிகளையும் கூட்டிவிட்டார் என்றும் சொல்ல வைத்தாரோ எனவும் தோன்றுகிறது. நாய் ஒரு பொருந்தாத உருவகம் என்பதே எங்கள் ஏகமனதான கருத்தும் தீர்ப்பும்!

அத்துடன், தம் ஒடுக்கப்பட்ட முந்திய நிலையில் தம்மை வைத்திருப்பதிலும் பார்க்க, தம்மைக் கொன்றிருந்தால், ஆண்களின் பாவமும் பழியும் குறைந்தே இருக்கும் என்றும் பெண்கள் சொல்லுவதைப் போலவும் எழுதி இருக்கின்றார்.

மேலும் தம்மைக் கற்புடன் வாழ விரும்பிய பழைய சமுதாயம், ஆண்களின் வேலி-பாய்தல் விளையாட்டுகளைப் பொறுத்தும் ஆதரித்தும் வந்து, தம் (அதாவது மணப்பெண்களின்) விருப்பப்படி தம் மணாளரைத் தெரிந்து எடுக்கத் தம் குடும்பத்து ஆண்கள் விடவில்லை, ஆனால் இன்று அத் தீய வழக்கத்தில் இருந்தும் விடுதலை பெற்றுவிட்டோம், அவ் விடுதலையைப் போற்றிக் காப்போம் என்றும் பெண்கள் கொண்டாடுகிறார்கள், என்கிறார் பாரதி.  எனவே,

12. இந்தப் புதிய திருப்பங்களால் பெண்கள் ஊக்கம்அடைந்து உந்திக்கப் பட்டு…

13. வீட்டிலும் நாட்டிலும் ஆட்சிப் பட்டங்களைப் பெற்றுப்  பணிகள் செய்வதற்கும், சட்டங்கள் ஆக்குவதில், ஆண்களுடன் சம பங்கு கொண்டு சமூக சேவை செய்வதிலும்,  

14. கல்வியையும் அறிவையும் பெறுவதிலும், ஆணுக்குப் பெண்கள் சரி நிகர் சமானம் ஆனவர்கள் என்னும் புதிதாகப் பெற்ற அறிவுடனும், கடமை உணர்ச்சியுடனும்,

15. வேதங்கள் படைப்பதிலும் நீதி நிறுவனங்களைப் பரிபாலனம் செய்வதிலும் சம பங்கை ஏற்கத் தாம் தயாராக இருக்கின்றார்கள் என்றும் கூடிப் பாடிக் கும்மியடித்து உறுதி கூறிப் பெண்கள் ஆடுகின்றனர் என்றும் பாரதி தன் கவிதையில் சொல்லுகிறார்.

பாரதியின் கவிதையிலே இந்தக்கட்டத்தில், பெண்கள் ஆக்கப்பூர்வமாக முன் நோக்குகின்றனர். அதாவது, வீட்டில் பெற்ற சுதந்திரத்தைத் தம் வீட்டுக்கும் நாட்டுக்கும் பலன் கொடுக்கக் கூடிய முறையிலே, புதிய சட்டங்கள் செய்து நாட்டைப் பரிபாலிப்பதிலும், கல்விகற்பதிலும் மட்டுமல்ல, கல்வியூட்டி அறிவைப் பெருக்குவதிலும், மேலும், சமயமார்க்க வேதங்களை ஆக்குவதிலும், தாங்கள் ஆண்களுக்குச் சமமாகப் பொறுப்பெடுத்துச் சேவைகளை ஆற்றுவோம், என்றும் பெண்கள் சபதமும் பிரசாரமும் செய்கின்றனர்.  அத்துடன்,

16. இவற்றை எல்லாம் செய்துகொண்டு, ஆண்கள் சாதாரணமாகச் செய்யாத, செய்ய விரும்பாத, அல்லது செய்ய முடியாத வேலைகளாகிய: உணவாக்கிப் படைத்தலையும், குழந்தைகளைப் பெற்று, தெய்வங்களின் நற் குணங்களும் ஆற்றலும் கூடிய ஒரு தெய்வச் சாதியாகிய தமிழ்ச் சந்ததியை உருவாக்கும் கருமங்களையும், தாம் விரும்பித் தொடர்ந்து செய்வோம் என்றும், மேலும், ஒவ்வொருவருடைய தனித்துவமான சொந்த விருப்பு வெறுப்புகளின் படி பூரண சுதந்திரத்தினுடன் தங்கள் காதலர்களையும் கணவன்மாரையும் தாமே தேடித் தெரிந்து கைப்பிடித்து மணந்து, அவர்களின் நற்செயல்களை ஊக்கி, உதவி செய்து, முற்காலத்தை விடக் கூடிய அளவில், பெண்களின் விசேட கடமைகளை ஆற்றி, பெண்மையை மாட்சி பெறச் செய்வோம் எனப் புது நம்பிக்கையுடன் பறை சாற்றித், தாம் அண்மையில் பெற்ற சுதந்திரத்தைப் பெண் விடுதலைக் கும்மி அடித்துக் கொண்டாடுவதாக, முன்னோடியாகக் கற்பனை செய்து, பாரதியார், நாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பெண்கள் விடுதலைக் கும்மி எனும் கவிதையில் பாடியுள்ளார்.

எம் ஒட்டுமொத்தக் கணிப்பும் முடிவும்

நாம் ஆராய்ந்த மேற்கூறிய கற்பனைக் கவிதையைப் பாரதியார் அண்ணளவு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருந்தாலும், இன்று பெண்களின் நிலைமை ஓரளவு உயர்வு அடைந்துள்ளது எனினும், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கூடிய அளவிலும், ஓரளவு குறைந்த மட்டில் ஈழத்திலும், இன்றும், பல பகுதிகளில், பெண்கள் சுதந்திரம் குன்றி, இன்னல்களை அனுபவிக்கின்றனர், என்பதும் மறுக்க முடியாத ஓர் உண்மை.

அத்துடன், பெண்களின் சமத்துவத்தையும் விடுதலையையும் பற்றி மிகவும் உணர்ச்சியுடன் உருக்கமாகப் பாடி, கொள்கை ஆர்ப்பாட்டம் செய்த பாரதி, தன் சொந்த வாழ்க்கையில் மனைவியையும் இரு மகள்மாரையும் நடை முறையில் பொருளாதாரச் சுதந்திரத்துடன் வாழ வைக்க முடியவில்லையே என்றும், குடும்பத்தைப் பெருமளவு மறந்தும் துறந்தும், தேசிய அரசியலிலும், இலட்சியக் கற்பனை வாழ்விலும் ஈடுபட்ட பாரதி, பொறுப்புக் கூடிய ஒரு கணவனாகவும் தகப்பனாகவும் வாழ்ந்து தனது பெண்களின் வாழ்க்கையை இன்னலின்றி வளம் பெறச் செய்யத் தவறிய பச்சைத் தண்ணீர்ப் புலவனாக, செயல்வீரன் அல்லாத சொல்வீரனாகவே  இன்றையபெண்கள் சிலரால் கணிக்கப் பட்டால், அதையும் குறைகூற முடியாது. எனினும், குற்றம் பார்க்கிற் சுற்றம் இல்லையே!

முடிவில், பாரதி ஒரு தெய்வீகக்கவிஞன். தமிழ்த் தாய் பெற்ற தவப் புலவன். சக ஆண்களையும் சமுதாயத்தையும் சம்பிரதாயங்களையும் பல சந்தர்ப்பங்களில் எதிர்த்த, எதிர்க்கும் துணிவும் வீரமும் படைத்த, இயற்கையின் ஓர் ஆண்மகன்.

பின்னர், தனக்கு வீட்டில் ஓர் ஆண் வாரிசு இல்லாமலும், மனைவியும் இரு மகள்மாரும் ஆகிய மூன்று பெண்களுடனே பிற்காலத்தில் நெருங்கி வாழ்ந்து, வாழும்போது அவர்கள்பட்ட இன்னல்களையும் கண்ணீரையும் கண்டிருக்கிறார்.

மேலும், அரசியல் ஈடுபாட்டினால் அரசாங்க ஆதிக்கத்துக்குப் பயந்து ஓடி ஒளிந்ததாலும், மனத்தணிவுப்பண்பும், சிற்சில பெண்மைக்குணங்களும், பெண்களில் கூடிய கருணையும் பெற்று, அவற்றைப் பெற்றதனால், தனது பிற் காலத்தில் தன் முக்கிய பெண்ணுரிமைப் பாட்டுகளை எழுதினார் எனவும் கூறலாம்.

பெண்கள் விடுதலைக் கும்மி உட்பட்ட அவரது பெண்ணுரிமைக் கவிதைகளை, ஆர்ப்பாட்டத் திறமையுடனும், உணர்ச்சியுடனும் உண்மை நோக்குடனும், எம் பாரதியார் எழுதினார் என்பதைப் பற்றிப் பொதுவாகப் பெண்கள் மிக மகிழ்ச்சியும் பெருமையும் அடைய வேண்டும்.  எனினும் கவி என்றபடியால், தம் கட்சிக்காரர் பிரச்சினைகளை ஓரளவில் மிகைப் படுத்தி வாதாடும் சட்டத்தரணிகளைப் போலவே, பெண்களின் தாழ்ந்த நிலையை, ஓரளவு மிகைப் படுத்தியே, தன் கவிதைகளில், பாரதி பாடியிருக்கிறார் என்பதும் மிகையாகாது.

மேலும், முன்குறிப்பிட்ட, கீழேவரும் மனப்-பெண் என்னும் கவிதையைச் சிரமம் எடுத்துக் கவனமாகப் படிப்பவர்களுக்குப் பாரதியார் பெண்ணினத்தினர் இயற்கையாகக் கொண்டுள்ள, எவராலும்மறுக்கமுடியாத, பரவலான, முக்கிய சில பலவீனங்களை நன்கு அறிந்து, அவற்றால் தன்சொந்தவாழ்வில் பாதிக்கப்பட்டும் இருந்திருக்கிறார் என்பதும் விளங்கும். மேலும், நாங்கள், அதாவது, பாரதிகூறிய இரு கட்சியினருமாகிய ஆண்களும் பெண்களும், மற்ற, எதிர்ப்-பாலினத்தினரின் இயற்கைகளையும் விளங்கி அறிந்து, கணித்து, மதித்து, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், நடைமுறைச் சமத்துவத்துடன் சந்தோசமாகக் கூடிவாழலாம், வாழ முடியும், என்பதையும் எம் அனுபவத்திலிருந்து சுட்டிக் காட்டி, முடிக்கிறோம்.  

இணைப்பு: மகாகவி பாரதி எழுதிய மனப் பெண் கவிதை
மனம் எனும் பெண்ணே! வாழி, நீ கேளாய்! ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய், அடுத்து அதை நோக்கி அடுத்து அடுத்து உலவுவாய். நன்றையே கொள் எனில், சோர்ந்து கை நழுவுவாய். விட்டுவிடு என்றதை, விடாது, போய் விழுவாய். தொட்டதை மீள, மீளவும் தொடுவாய், புதியது காணில், புலன் அழிந்திடுவாய். புதியது விரும்புவாய், புதியதை அஞ்சுவாய். அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்,  பழமையாம் பொருளில் பரிந்து போய் வீழ்வாய்.  பழமையே அன்றிப் பார்மிசை ஏதும் புதுமை காணோம், எனப் பொருமுவாய், சீச்சீ! பிணத்தினை விரும்பும் காக்கையே போல அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய இழி பொருள் காணில், விரைந்து அதில் இசைவாய்.  அங்ஙனே… என்னிடத்து என்றும் ஆறுதல் இல்லா அன்புகொண்டு இருப்பாய், ஆவி காத்திடுவாய். கண்ணின் ஓர் கண்ணாய், காதின் காதாய்,  புலன் புலப்படுத்தும் புலனாய், என்னை  உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்.  இன்பு எலாம் தருவாய், இன்பத்து மயங்குவாய்.  இன்பமே நாடி, எண்ணிலாப் பிழை செய்வாய். இன்பம் காத்துத் துன்பமே அழிப்பாய், இன்பம் என்று எண்ணித் துன்பத்து வீழ்வாய்.  தன்னை அறியாய், சகத்து எலாம் தொலைப்பாய்.  தன்-பின் நிற்கும் தனிப் பரம்பொருளைக் காணவே வருந்துவாய். காண், எனில் காணாய். சகத்தின் விதிகளைத் தனித் தனி அறிவாய், பொது நிலை அறியாய், பொருளையும் காணாய். மனம் எனும் பெண்ணே! வாழி, நீ கேளாய்! நின்-ஒடு வாழும் நெறியும், நன்கு அறிந்திட்டேன். இத்தனை நாட்போல், இனியும் நின் இன்பமே விரும்புவன்.  நின்னை மேம்படுத்திடவே முயற்சிகள் புரிவேன். முத்தியும் தேடுவேன். உன் விழிப்படாமல், என் விழிப்பட்ட  சிவம் எனும் பொருளைத் தினமும் போற்றி,  உன் தனக்கு, இன்பம் ஓங்கிடச் செய்வேன்.

prof.kopanmahadeva@yahoo.co.uk