பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களை முதன்முதலில் அவரது இலக்கியப் படைப்புக்கள் மூலமே அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஞானம் சஞ்சிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவரைச் சிறந்த படைப்பாளியாக எனக்கு அறிமுகப் படுத்தியிருந்தன. சென்ற 10-10-2015 அன்று டென்மார்க்கில் இடம்பெற்ற ஏழு சங்கங்கள் இணைந்து நடத்திய கலைவிழாவில் பிரதம அதிதியாக நானும் எனது மனைவியும் அங்கு சென்றபோது, பேராசிரியரும் அவ்விழாவிலே சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ள வந்திருந்தார். அவ்வேளையிலேதான், 1974ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலகத் தமிராய்ச்சி மகாநாட்டின் பிரதம செயலாளராகச் செயலாற்றிய கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவாதான் அவர் என்பதும், அவரே தொடர்ந்து தற்போது கோபன் மகாதேவா என்ற பெயரில் பிரபல்யமாகி பல்துறைச் செயற்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு இயங்கிவருகிறார்; என்பதும் தெரியவந்தது.
யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த முடியாது என்றும் கொழும்பிலேதான் அது நடத்தப்பட வேண்டும் என்றும் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மந்திரிசபையில் தீர்மானித்திருந்த வேளையில் கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவா சிறிதும் தளராமல் தனது திறமையைப் பயன்படுத்தி சிறிமா அம்மையாருடன் வாதாடி யாழ்நகரிலேயே அந்த மாநாட்டை நடத்த அனுமதிபெற்றவர் என்பதும் என் நினைவில் வந்தது.
டென்மார்க்கில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக்கிடைத்தது. அவர் எமக்கு அன்பளிப்புச் செய்த நூல்கள் மூலமும் அவரது சமகாலப் பணிகளையும் அறிய முடிந்தது.
தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான அனுமதியை சிறிமாவிடம் வாதிட்டுப் பெற்றார் என்பதை விளக்குவதாக டென்மார்க்கில் நடைபெற்ற கலைவிழாவில் அவரது உரை அமைந்திருந்தது. பின்னர் நான் அவரிடம் இது தொடர்பாக ஞானம் சஞ்சிகையில் வெளியிடுவதற்கென ஒரு நேர்காணலையும் பெற்றுக்கொண்டேன். கோபன் மகாதேவா அவர்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டில் உள்ள மட்டுவில் தெற்கு கிராமத்தில் 05-01-1934ல் கந்தர் வேலாயுதர் கோபாலபிள்ளைக்கும் அப்பா பொன்னம்மா அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் தனது சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவரது தாய் மாமனாராகிய வைத்தியர் அப்பா வெற்றிவேலு அவர்களும் பெரிய தந்தை கந்தர் வேலாயுதர் கந்தையா அவர்களும் இவரைத் தமது பிள்ளைபோல் வளர்த்து கல்வியூட்டி ஆளாக்கினார்கள்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை கைதடிநுணாவில் சித்திவிநாயகர் இந்து கலவன் பாடசாலை, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி ஆகியவற்றிலும் இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரி, யாழ்.மத்திய கல்லூரி ஆகியவற்றிலும் பெற்று இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவனாகச் சேர்ந்து தனது பட்டப்படிப்பை 1955ல் நிறைவு செய்து ஒரு பொறியியலாளரானார்.
பாடசாலைக் காலத்தில் உயரம் பாய்தலிலும், கைப்பந்தாட்டத்தில் பல்கலைக் கழகத்திலும், பங்குபற்றி பரிசில்களும் பெற்றுள்ளார். 1961 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியாவில் உள்ள பேர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் தனது பட்ட மேற்படிப்பை மேற்கொண்டு முதுமாணிப்பட்டம், கலாநிதிப்பட்டம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து எந்திரவியல், முகாமையியல், தொடர்பான ஏழு உயர் பட்டயங்களைப் பெற்றார். இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய இடங்களில் பொறியியலாளர், ஆராய்ச்சி ஆசிரியர், கைத்தொழில் ஆலோசகர், இயக்குநர், பேராசிரியர் ஆகிய பதவிகளில் பணிபுரிந்த இவர், தனது வாழ்நாளில் சிறுவயது முதல் 1961வரையிலும் பின்னர் 1966 முதல் 1978 வரையிலும் இலங்கையில் வாழ்ந்தார். ஏனைய காலங்களில் மேற்கிந்திய தீவுகளிலும் பெரும்பகுதியை பிரித்தானியாவிலும் வாழ்ந்து அந்தந்த நாடுகளில் பணிபுரிந்தார். இங்கிலாந்தில் 41 வருடங்கள் வாழ்ந்துள்ளார்.
இவர் இங்கையில் இருந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்க சேவையில் பணியாற்றி களனி, பாணந்துறை, ஆகிவற்றில் அமைந்துள்ள பெரிய பாலங்களையும், மட்டக்களப்பு விமான நிலையத்தையும் கட்ட உதவினார். ‘மைற்’ என்ற தாபனத்தை உருவாக்கி யாழ்ப்பாணம், சுன்னாகம் ஆகிய இடங்களில் மாதிரி நவீன சந்தைகளைக் கட்டிக் கொடுத்துப் பலரது பாராட்டையும் பெற்றார்.
இலங்கையில் இருந்த காலத்தில் இலங்கை கலாசார அமைச்சின் தமிழ் நாடகக் குழுவின் அங்கத்தினராகவும் மகாவலித்திட்ட விசாரணைக்குழுவில் அங்கத்தவராகவும், இலங்கை கைத்தொழில் சபை, இலங்கை அரசாங்கக் கூட்டுத்தாபனங்களின் முகாமைத்துவக் குழுவின் அங்கத்தினராகவும், வட இலங்கை வர்த்தகர் -கைத்தொழிலாளர் சம்மேளனத்தின் (1970-78) நிறுவுதலைவராகவும் பணியாற்றினார்.
1960-1970 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்துச் சமகாலக் கல்விமான்கள் பலரால் ‘ஒரு யாழ்ப்பாணத்து மூளை’ என்ற பாராட்டைப் பெற்றார்.
பேராசிரியர் கோபன் மகாதேவா தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். இவர் தனது பதின்னான்காவது வயதில் யாழ். மத்திய கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் ‘மகாத்மா காந்தி’ பற்றி ஒரு ஆங்கிலக் கவிதையை எழுதியதன் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து இவரது ‘விண்வெளி ஆராய்ச்சிக்’ கட்டுரைகள் வீரகேசரியில் பிரசுரமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கில தமிழ்க்கவிதைகளை இவர் எழுதியுள்ளார். நான்கு ஆங்கிலக்கவிதை நூல்களையும் ஒரு தமிழ்க்கவிதை நூலையும் இவர் வெளியிட்டுள்ளார்.
இவரது ‘வாழ்க்கையும் கவிதையும்’ என்ற தமிழ்க்கவிதை நூலில், இலங்கைக் கவியரங்குகளில் பாடப்பட்ட பல்வேறு கவிதைகளும் தமிழ்ச்சஞ்சிகைகளில் பிரசுரமான கவிதைகளும் அடங்கியுள்ளன.
இவரது பரிசோதனை முயற்சியாக சில ஆங்கில ‘Nursery Rhymes’ என்னும் குழந்தைப் பாடல்கள் சிவற்றை தமிழாக்கம் செய்திருக்கிறார். இவருடைய ‘Life in Nutshells’ ஆங்கிலக்கவிதைத் தொகுப்பு 1997ல் பிரித்தானியாவின் கவிதை நூல்கள் போட்டியில் முதலாவது பரிசைப்பெற்றது. இவரது மூன்று நீண்ட ஆங்கிலச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியொன்றும் வெளியாகியுள்ளது.
பொறியியல், விஞ்ஞானம், பரிபாலனம், தொழில் அபிவிருத்தி, கல்விமுறை, பயிற்சிக்கலை, ஈழத்து அரசியல் போன்ற துறைகளில் பலநூறு கட்டுரைகள் எழுதியுள்ளார். தனதும் மற்றவர்களினதுமாக 30 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவருடைய இல்லத்தில் மாதம் ஒருமுறை ‘இலக்கியக் களம்’ நிகழ்வு இடம்பெறும். இங்கு பயனுள்ள விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு எழுத்துருவாக்கப் பட்டபின் கருத்துப்பரிமாறல்கள் இடம்பெறும். அவை பின்னர் நூலுருவம் பெறுகின்றன.
பிரித்தானிய ஈழவர் இலக்கியச்சங்கம் (ELAB) என்ற அமைப்பினை 2006 ஆம் ஆண்டில் நிறுவி அதன் தலைமைப் பதவியை ஏற்று மாதந்தோறும் இரண்டாவது புதன் கிழமைகளில் கூடி ஆக்க பூர்வமான செயற்பாடுகளை நடத்திவருகிறார். இதில் தமிழ் ஆங்கில மொழிகளில் சமகாலம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் கவிதைகளும் சமர்ப்பிக்கப்பட்டு கருத்துரைகள் பரிமாறப்பட்டு ‘பூந்துணர்’ (Perceptions) என்னும் நூல் தொகுதிகளாக வெளிவருகின்றன. இத்தகைய பூந்துணர் தொகுதிகள் 2007, 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.
இவரது மறைந்த மனைவி வைத்திய கலாநிதி சீதாதேவி மகாதேவா அவர்களும் ஓர் இலக்கிய ஆர்வலர், எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கோபன் மகாதேவாவின் பணிகளுக்குப் பெரும் உந்து சக்தியாக விளங்கியுள்ளார். இவர்களின் உமா, உஷா, லவன், உலா எனும் வளர்ந்த முதுபட்டதாரி மக்கள் லண்டனில் குடும்பமாகிப் பணிபுரிகின்றனர்.
நாங்கள் இலண்டனில் இருந்த காலப்பகுதியில் ஒரு காலைவேளை பேராசிரியர் எம்மைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்தார். பேராசியரின் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு அவரது இல்லம் ஒரு சிறிய நூலகம் போலக்காட்சி அளித்தது. தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இலக்கியம், கவிதை, சமயம், நாடகம், அரசியல், மருத்துவம் பொறியியல் ஆகிய துறைகளில் நூல்களைக் காணக்கூடியதாக இருந்தது. இரண்டு கணினிகளும் பாவனையில் இருந்தன.
பேராசியர் அவர்கள் ஒரு சிறந்த நடிகனுமாவார். அவர் எழுதித் தயாரித்து நடித்த குறும்படங்களாக ‘திருக்குறள் தாத்தா’, ‘செல்லாச்சிப்பாட்டி’, ‘தாய்மை’ ஆகியவை விளங்குகின்றன.
1974ல் இடம்பெற்ற அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பெரும் குழப்பத்தில் முடிவுற்று 11 உயிர்களையும் காவுகொண்டது பலருக்கும் ஞாபகத்தில் இருக்கலாம். அதுபற்றி ஞானம் சஞ்சிகைக்கான நேர்காணலில் நான் வினவியபோது அவர் பின்வருமாறு கூறினார்: ‘ மகாநாட்டில் அரசியல் கலக்கப்பட மாட்டாது என்று நான் சிறிமா அம்மையாருக்குக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே அந்த மகா நாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அம்மகாநாட்டுக்கு இலங்கை அரசு விசாவழங்காத நிலையில் மாறுவேடத்தில் தமிழக அரசியல் வாதியான மறைந்த இரா. ஜனார்த்தனம் கள்ளத் தோணியில் வந்து அந்த மாநாட்டின் இறுதிநாளில் மேடையில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்காரணமாகவே பொலிசார் அங்கு வரவும் அதைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் உணர்ச்சிவசப்பட்டு பொலீசாரை எதிர்க்கவும் அதனால் ஏற்பட்டகுழப்பத்தினாலேயே மின்கம்பிகள் அறுந்து வீழ்ந்து அதில் சிலர் சிக்குண்டு இறக்கவும் நேர்ந்தது’ என விளக்கம் கொடுத்தார்.
தற்போது தனது 81 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி பலதரப்பட்ட சமூகப் பணிகளிலும் இலக்கியப் பணிகளிலும் ஈடுபட்டுவரும் பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களது செயற்பாடுகள் மேல்மேலும் சிறந்தோங்க வேண்டும் என ஞானம் வாழ்த்தி மகிழ்கிறது.
– இக்கட்டுரை ஞானம் சஞ்சிகையில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியானதென்பது குறிப்பிடத்தக்கது. -அனுப்பியவர்: பேராசிரியர் கோபன் மகாதேவா.-