[ ஈழத்துத்தமிழ் நாடக உலகைப்பற்றி எழுதும் எவரும் அறிஞர் அ.நகந்தசாமியின் ‘மதமாற்றம்’ நாடகத்தை மறக்க முடியாது. 1967இல் கொழும்பில் லும்பினி அரங்கில் நான்கு தடவைகள் மேடையேறி மிகுந்த வரவேற்பினைப்பெற்ற நாடகம் மட்டுமல்ல , அதன் கூறு பொருள் காரணமாகப் பலத்த சர்ச்சைக்குமுள்ளாகிய நாடகமும் கூட. எழுத்தாளர் காவலூர் இராசதுரையின் தயாரிப்பில், நடிகவேள் லடீஸ் வீரமணியின் நெறியாள்கையில் கொழும்பில் அரங்கேறிய நாடகமான அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’ நாடகத்தில் ஆனந்தி சூரியப்பிரகாசம், சில்லையூர் செல்வராசன், வீ.எஸ்.இரத்தினம், சங்கரசிகாமணி, சிவபாதசுந்தரம், மஞ்சுளாதேவி, கிறிஸ்டி இரத்தினம், முத்தையா இரத்தினம், சுரேஷ் சுவாமிநாதன், லடீஸ் வீரமணி, மஞ்சுளாதேவி, பத்மநாதன் மற்றும் சங்கர வேலுப்பிள்ளை ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நாடகத்தைப்பற்றி நூலின் முன்னுரையில் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பின்வருமாறு கூறியிருப்பார்: “சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னாரின் அறிவையும் இந்நாடகத்தில் காணலாம். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந்நாடகத்தில் சாடி இருப்பது இந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம்மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப்பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தனை மூலம் அறிவர். கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப்பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத்தழுவி காதலைக்கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவானபோதும் ‘மதம்’, ‘காதல்’ என்ற பொய்மையை கந்தசாமி சாடும் திறமை அபாரம். ‘மதமே பொய், ஒருவரும் பொய்களை நம்புகிறார்கள். ஆனால் வெவ்வேறு பொய்கள்.’ – கந்தாசமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகின்றார்.”
.
‘மதமாற்றம்’ நாடகத்தைப் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரிக்க முடிவு செய்திருக்கின்றோம். அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’. மேலதிகள் விபரங்கள் இங்கே. – பதிவுகள் -]
காட்சி 1
யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமம். மானிப்பாய் என்று வைத்துக்கொள்வோம். ஒரு பெரிய அரசாங்க உத்தியோகத்தர் வீடு. சைவ மணமும், கொழும்பின் நவநாகரீக மணமும் வீசும் ‘ட்றாயிங் றூம்’, சுவரிலே தலைப்பாகை கட்டிய ஒருவரின் படம். வீட்டுச் சொந்தக்காரரின் தகப்பனாயிருக்கலாம். ஆனால் அந்தத் தலைப்பாகைக்காரரிலும் பார்க்கச் சபையைக்கவர்வது பெரிய பிள்ளையார் படமும், அதற்குப் பக்கத்தில் விடையேறிய சிவபிரானின் படமுமாகும். சரசுவதி படமும், இலட்சுமி படமும் கூடக் காணப்படுகின்றன.
சிறிது முன்னே மேடையின் முன்புறத்தில் ஒரு ‘ட்றாயிங் ரூம் செட். ரேடியோவில் மெல்லிய வாத்திய சங்கீதம் இசைக்கிறது. ‘ட்றாயிங் ரூம் செட்டிற்கு’ அருகாமையில் சிறிய எழுதும் மேசை. அதற்கு முன் ஒரு நாற்காலி. இவை தவிர பெரிய பித்தளைப்பூச்சட்டிகளைத் தாங்கிய இரு உயர்ந்த ‘ஸ்ராண்டு’கள் பொருத்தமான இடங்களில் இருக்கின்றன.
திரை நீங்கும் போது மேடை வெறிச்சென்றிருக்கிறது. ஒரு வினாடி கழிய மீனா என்னும் 18 வயதுப் பெண் மேடையில் பிரவேசிக்கிறாள். பாவாடையும் சட்டையும் அணிந்திருக்கிறாள். ஓரளவு அழகிதான். அப்பொழுதுதான் குளித்துவிட்டு தலையிலுள்ள நீரைத்தட்டியவண்ணம் பிரவேசிக்கிறாள். பிள்ளையார் படத்தின் முன் திருநீறும், குங்குமமும் இருக்கிறது. அவற்றை அணிந்து கொண்டு ரேடியோவை நிறுத்துகிறாள். பின்னர் “பித்தாப்பிறை சூடி” என்ற தேவாரத்தை மெல்ல முணுமுணுக்கிறாள். ரேடியோச் சத்தத்தில் கடவுளுக்குத்தேவாரம் கேட்காது என்ற அச்சத்தினால் அவள் அப்படிச்செய்திருக்க வேண்டும்.
[பாட்டை முணுமுணுத்த பின் மேடையின் முன்புறத்துக்கு வருகிறாள்.]
மீனா: (மெல்லிய குரலில், நாக்கை நீட்டிப் பற்களால் ஒரு தரம் நாக்கைக்கடித்து உள்மூச்சு இழுத்தவண்ணம் – மறந்துபோன ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்த மெய்ப்பாடு) மறந்தே போயிட்டுது. ஜோவுக்கு இன்டைக்கு எப்படியாவது கடிதம் எழுதவேணும். ஆனால் இந்த வீட்டிலை இருக்கிற சனியன்கள் அதற்கு விட்டால்தானே. எழுதிறத்திற்கு உட்கார்ந்தால் அம்மாவோ, அப்பாவோ சிவபூசையிக்கை கரடி வந்தமாதிரி வந்திடுகள். நான் கடிதம் எழுதாவிட்டால் அந்த ஜோ என்ன நினைப்பாரோ? சில வேளை வேறை பெட்டையளிலை கண் போட்டாலும் போட்டிடுவார். … சீ சீ!… இன்டைக்கு எப்பிடியும் கடிதம் எழுதிப்போடவேணும். (மேசையை விட்டு உள்ளே போய், ஒரு பெரிய புத்தகத்துடன் மீளுகிறாள். புத்தகத்தின் பெயர் ‘மெய்கண்ட சாஸ்திரம்’., ‘சைவசித்தாந்த தீபம்’ , ‘அருணந்தி சிவாசாரியார் அருள் மொழிகள்’ போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம். அதற்குள் இருந்து ஒரு தபால் உறையைத் திறந்து ஒரு கடிதத்தை எடுக்கிறாள். அதைத் தன் இரு அதரங்களாலும் முத்தமிட்டுத் தன் நெஞ்சோடு அணைக்கிறாள். பின் அதை வாசிக்க ஆரம்பிக்கிறாள்.) என் அன்புக்கனியே! ஆசைக்கிளியே! .. காதல் தெய்வமே மீனா…. ஆஹா… ஜோவுக்கு என் மீது எவ்வளவு காதல். எவ்வளவு அழகாக எழுதுகிறார். … நான் இதுக்கு என்ன பதில் எழுதுவது. (இந்நேரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரவேசிக்கிறாள். அவளைக்கண்டதும் மீனா மிரண்டுபோய் , கடிதத்தை இரவுக்கைக்குள் திணிப்பதில் இருந்து, அந்தப்பெண் மீனாவின் தாயாகத்தான் இருக்க வேண்டுமென்று தெரிகிறது. நரை மயிர் எட்டிப்பார்க்கும் தலை, திருநீறு பூசி பொட்டிட்டிருந்த நெற்றி.).
செல்லாச்சி: மீனா, மீனா…. என்னடி செய்யிறாய்? … பிறகும் படிக்கத் துவங்கியிட்டியோ? லீவு நாளையிலை கொஞ்சம் ஓய்ந்து இருக்காமல் படித்துக்கொண்டிருந்தால் உடம்பு என்னத்துக்காகும்? அதுதான் என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறுதில்லை. எலும்புந்தோலுமாய்ப் போய்க்கொண்டிருக்கிறாய்… அதிருக்கட்டும், இதென்னடி பென்னம்பெரிய புத்தகம்?
மீனா: உங்களுக்கென்ன கண் தெரியாதே?… இதுதான் ‘சைவசித்தாந்த தீபம்’.
செல்லாச்சி: நல்ல சைவமும், சித்தாந்ததும்.. நீயும் , உன்ரை செல்ல அப்புவும், இந்தச்சித்தாந்ததைப் படிச்சதுதான் இந்த உலகத்திலை கண்ட மிச்சம்… எண்டாலும்.. உன்ரை அப்பா என்னைக் கலியாணம் பண்ணின காலத்திலை உந்தச் சித்தாந்தம் ஒண்டும் பேசியில்லை. நி பிறந்த பிறகுதான் ராமையாச் சாமியார் என்று ஒரு சாமியார் இந்தியாவிலை இருந்து வந்தார். அவர்தான் உன்ரை அப்பாவுக்குச் சைவ சித்தாந்தம் சொல்லிக் குடுத்தவர். .. அப்ப.. நீ.. ஒரு மாதக் குழந்தையடி.
வேலாயுதம்: அப்பிடிச் சொல்லுங்கோ.. அம்மா இப்பெல்லோ எனக்கு விசயம் விளங்குது.
செல்லாச்சி: என்ன விசயம்…
வேலாயுதம்: இல்லை… மீனாத் தங்கச்சிக்கு ஏன் சகோதர பலன் இல்லாமல் போனதெண்டு.. இப்பெல்லே தெரியுது.. அந்தச் சாமியார் ஒரு அஞ்சாறு வரியம் சென்டு வந்து சைவசித்தாந்தம் படிப்பிச்சிருக்கக் கூடாதே? அப்படி என்டால், மீனா தங்கச்சிக்கு இரணு மூண்டு தம்பி தங்கச்சிமார் பிறந்திருப்பினமெல்லே.
செல்லாச்சி: போடா மடையா, உன்னட்டை எத்தனை தரம் சொல்லிறது குறுக்கை பேசாதை என்டு… நீ என்ன நினைத்தாய்? இப்ப ஊரிலை பேசினமே குடும்பக்கட்டுப்பாடென்று.. சைவசித்தாந்தத்தை என்ன அந்த மருந்தென்டு நினைச்சியே?
[மீனா விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.]
செல்லாச்சி: அவ சிரிக்கிறதைப் பார்.. நீ பெரிய கிழடியாயிட்டாய் என்ன? எல்லாம் விளங்குதுபோல…
மீனா: சும்மா போங்க (செல்லக் கோபம்) அம்மா.
செல்லாச்சி: அது இருக்கட்டும். மீனா.. இந்த சைவசித்தாந்தத்திலை.. உனக்கும் அப்பாவுக்கும் என்ன அவ்வளவு ருசி?
மீனா: உங்களுக்குச் சொன்னால் விளங்கப்போகுதேயம்மா… சைவசித்தாந்தத்திலை மூண்டு விசயங்களைப்பற்றிச் சொல்லியிருக்குது. பதி, பசு, பாசம். அதை விட மூண்டு மலங்களைப்பற்றியும் சொல்லியிருக்கிறது.
செல்லாச்சி: இதிலை பசு ஒன்டு மட்டுந்தான் எனக்கு விளங்குது.
வேலாயுதம்: ஓமம்மா, எனக்கும் அதுதான் விளங்குது.
மீனா: என்ன விளங்குது?
வேலாயுதம்: பசு
மீனா: பசு எண்டால் என்ன?
வேலாயுதம்: மாடு. நாம்பன் மாடில்லை… மற்ற மாடு.. பசு மாடு.
[மீனா விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.]
செல்லாச்சி: என்ன சிரிக்கிறாய்? அவன் சொல்லிறது சரிதானே?
மீனா: (மேலும் விழுந்து விழுந்து சிரித்தபடி) சைவசித்தாந்த கேசரி சிவப்பிரகாசம் பிள்ளையக் கலியாணம் செய்திருக்கிற உங்களுக்கே பதி, பசு, பாசம் என்றால் விளங்கவில்லையே? பசு என்றால் ஆத்மா.
வேலாயுதம்: ஆத்மா என்டால்..?
மீனா: ம்… பசு
வேலாயுதம்: பசுமாடு… அதுதான் நான் அப்பவே சொல்லிப்போட்டனே.
செல்லாச்சி: என்னவோ எனக்கு ஒன்டும் விளங்கயில்லை. உங்க அப்பாயிட்டையும் முந்தி நான் உப்பிடிக் கேள்வியள் கேட்கிறனனான். அவரும் உப்பிடித்தான். சொல்லித்தரத் தெரியாமல் புலுடாப் பண்ணுவார். சிவதீட்சை கேட்காதவைக்கு இதுகளைச் சொல்லிக் கொடுக்கக்கூடாதாம். … சரி இனி என்ன செய்யிறது? நானும் கிழவியாய்ப்போனேன். நீ படி. நான் போய்ச்சமைக்கிறன். வேலாயுதம் அந்த விறகைக்கொத்து உலை வைக்க வேணும்.
[ செல்லாச்சி போகிறாள். வேலாயுதம் தயங்குகிறான். ]
மீனா: என்ன வேலாயுதம் மசங்கிறாய்? அம்மா சொன்னது காதிலை விழயில்லையோ? உனக்குச் சொன்னால் காது கேட்காது அப்பிடித்தானே..?
வேலாயுதம்: இல்லைத்தங்கச்சி, எனக்குத் தீட்சை கேட்க வேண்டும் என்று ஆசை. ஐயா போன மாசம் கொழும்பு சைவ வாலிப சங்கத்திலை நூறு பேருக்குத் தீட்சை செய்விச்சு வைச்சவை.. அப்பாவிட்டை சொல்லி எனக்குந் தீட்சை வைப்பிச்சு விடுங்கோ தங்கச்சி.
மீனா: அதை பிறகு பாப்பம், நீ இப்ப போய் விறகைக்கொத்து. நான் படிக்கப்போறன. ஒரு மணித்தியாலத்துக்கு ஒருத்தரும் இந்தப்பக்கம் வந்து குழப்பக்கூடாது. சொல்லிபோட்டன். அம்மாவிட்டையும் போய்ச்சொல்லு. போ. (வேலாயுதம் வெளியேறுதல்)
மீனா: (தனி மொழி) என்ன சங்கடமப்பா இது? இந்த வீடு ஒன்டுக்கும் சரியில்லை. (ஜோவுக்கு ஒரு சின்னக் காதல் கடிதம் எழுத நான் படுகிற பாடு… அதுக்கிடையிலை எனக்குத் தம்பி தங்கச்சி இல்லையென்டு அழுகுது வேலாயுதம்.) அதுதான் இப்ப குறை.. அதுகளும் இருந்தால் நான் ஜோவுக்குக் கடிதம் எழுதினமாதிரிதான். சரி, ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு சனியனும் வராது. இனிக் காகிதத்தை எழுதுவம்.. (ஜோவின் கடிதத்தை றவுக்கைக்குள் இருந்து எடுத்து ஒன்னொரு தடவை முத்தமிட்டு, விட்டு எழுதும் மேசையில் உட்கார்ந்து காகிதம் எழுது ஆரம்பிக்கிறாள்.) எப்பிடித் தொடன்கிறது?… பாட்டாக எழுதுவமோ? ஓ.. அதுதான் சரி எப்பிடி?…
அன்பே, எந்தன் ஆருயிரே!
அழகா, தினமும் உன்னுடைய
பொன்னார் உருவம் உள்ளத்தினிலே
புதிது புதிதாய்த் தீட்டல் அலால்
என்னே, வேறு பணி யெனக்கே?
எந்தன் இன்பக் காதலரே,
மன்னும் ஜோசப் எனும் பெயரோய்
மங்கை மீனா கடிதமிதே.
[ யோசித்து, யோசித்து வெட்டி எழுதி உரக்க வாசிக்கிறாள்..
[இப்பொழுது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு யுவதி அங்கு பிரவேசிக்கிறாள். நெத்தியிலை பொட்டில்லை. ஒரு குரூசுடன் சங்கிலி ஊசலாடுகிறது. அவளைக் கண்டதும் மீனா ஜோவின் கடிதத்தையும், தனது கடிதத்தையும் சைவ சித்தாந்த தீபத்துள் அடக்கம் செய்கிறாள்.]
மீனா: ஓ.. தெரசாவா? என்ன திடீரெண்டு என்னைத்தேடிப்புறப்பட்டு வந்திட்டாய்… வா, வா.. இரு
தெரேசா: ஓ! ஓ! அது இருக்கட்டும். என்ன என்னைக் கண்டதும் ஒரு மாதிரிக் கலங்கிப்போனாய்?… உதென்ன பெரிய புத்தகம?
[புத்தக்த்தில் கையை வைக்கிறாள்.]
மீனா: (புத்தகத்தைத் தன் பக்கம் இழுத்து) இது தெரியாதே? எங்கடை சைவப்புத்தகன், .. உனக்கெதுக்கு?
தெரேசா: இல்லை ஒருக்கால் பார்த்தால் என்ன? தாவன்.
மீனா: இப்ப, புத்தகத்தை நீ கையிலை எடுத்தாயோ நாங்கள் கதைக்க முடியாது. தெரேஸ். சரி.. வந்த விசயத்தைச்சொல்லன்.
தெரேசா: புத்தகத்தை ஒருக்கால் தந்தால்தான் வந்த விசயத்தைச் சொல்லுவன். … ஆரை ஏமாத்தப் பார்க்கிறாய் மீனா.. எனக்கு விளங்காதென்டு நினைக்கிறொயோ?.. புத்தகத்துக்குள்ளை என்னத்தை ஒழிச்சனி? எனக்குத்தெரியும்.. லவ் லெற்றர் போலை கிடக்குது.
மீனா: லவ்வாவது , மண்ணாங்கட்டியாவது. என்னை ஆர் லவ் பண்ணப்போகினம்? சும்மா கிட…
தெரேசா: (இராகத்துடன்) மீனா.. மீனா உப்பிடிச் சொல்லி என்னை ஏமாத்தலாம் எண்டு நினைக்கிறியோ? .. நீ சொல்லுறது உண்மையாயிருந்தால் புத்தகத்தைத் தருவியே. (புத்தகத்தை எடுக்க முயல்கிறாள். இருவரும் இழுபறிப்படுகிறார்கள். முடிவில் தெரேசா கடித்ததை எடுத்துக்கொண்டு மேசையின் முன்புறத்துக்கு ஓடிவருகிறாள்,
தெரேசா: (கடிதத்தை விரித்து வாசிக்கிறாள்.) என் அன்புக் கனியே.. ஆசைக்கிளியே// காதற் தெய்வமே மீனா. ‘அடி சக்கை. உன்ர காதலன் சரியான ஆளாய்த்தான் இருப்பான் போலைக்கிடக்குது. (கடிதத்தின் அடிப்பக்கத்தைப்பார்க்கிறாள்.) இப்படிக்கு, உன்னையே நினைத்து வாடும் காதலன் ஜோசெப்”
மீனா: ( கடிதத்தை விரித்து வாசிக்கிறாள்.) என் அன்புக் கனியே.. ஆசைக்கிளியே.. காதற் தெய்வமே மீனா… ‘அடி சக்கை உன்ர காதலன் சரியான ஆளாய்த்தான் இருப்பான் போலக்கிடக்குது. நான் உன்னோடு கோபம். கடிதத்தைத் தா.
தெரேசா: நான் கடிதத்தைத்தாறன் மீனா. .. ஆனால் நீ உன் காதல் விசயத்தை எல்லாம் எனக்கு விபரமாய்ச் சொல்லுறனென்டு வாக்களி…. அப்படி என்றால் தான் தருவன்.
மீனா: ம்… (என்று ஒப்புக்கொள்கிறாள் புன்சிரிப்புடன்.)
தெரேசா: இந்தாடி அம்மா உன்ரை காதல் கடிதம். (சிரித்துக்கொண்டே கொடுக்கிறாள். ) சரி, இந்த யோசப்பை எங்கேயடி சந்தித்தாய்?
மீனா: என்னாலை சொல்ல முடியாது. வெட்கமாய் இருக்கு.
தெரேசா: ஓமோம். வெட்கம் வரும். அது காதல் நோய்க்குள்ள குணங்களிலை ஒண்டெல்லே>
மீனா: காதல் நோய். போடி திரேஸ். நான் எந்த நோயுமில்லாமல் நல்ல சுகமாய்த்தான் இருந்தன். கிட்டடியிலைதான் இந்த நோய் தொத்தி இருக்குது. பொல்லாத தொத்து நோய்.
தெரேசா: என்ன, காதல் தொத்து நோயா? ஆரிட்டையிருந்து உனக்குத்தொத்தினது..?
[தொடரும் ]
அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’. மேலதிகள் விபரங்கள் இங்கே.
அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் இங்கே