ஒரு குறிப்பிட்ட பிரதேச எல்லைக்குள் வாழ்கின்றவர்கள் என்ற வகையிலும், அவ்வாறு வாழும்பொழுது, பொதுமைப்பாடுடைய பல்வேறு தொடர்புகளையும், உறவுகளையும், ஊடாட்டங்களையும் தமக்கிடையே மேற்கொண்டுள்ளவர்கள் என்ற வகையிலும், அக்குழுமத்தினரை ‘ஒரு சமூகம்’ என அழைத்தல் மரபு. பாரம்பரிய தமிழ்ச் சமூகத்தில், மிக நீண்ட காலமாக, இந்த மனித உறவுகளையும் தொடர்புகளையும் ஊடாட்டங்களையும் நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக, உடல் இருந்து வந்துள்ளது.
இவ்வாறான சமூக நடத்தைகளின்போது, உடலை மையமாக வைத்து, சமூக உறுப்பினர்கள் ஒருசாரார்மீது, ‘பாகுபாடு’ பேணப்பட்டு வந்துள்ளமைக்கு, ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள. ஒரு மனிதனின் உடல், இன்னொரு மனிதனால் தீண்டப்படுதலை, தடுத்து நிறுத்துவதற்கு வழிவகுத்த, இந்தப் பாகுபாட்டுக்கு, குறிப்பாகப் பெண்களும், இயற்கையாகவே உடலில் குறிப்பிட்ட குணாம்சங்களையோ அல்லது குறைபாடுகளையோ கொண்டவர்களும், சாதி என்ற பெயரால் தாழ்த்தப்பட்டவர்களும் இலக்காகி வந்துள்ளனர்.
மனித வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு, உடல் வலுவின் அடிப்படையில், பெண்ணினத்திலும் வலுவான சக்தியாகக் கணிக்கப்பெற்ற ஆணினமானது, சமூகத்தின் சகல மட்டங்களிலும், தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொண்டது. பெண்ணினத்தை இரண்டாந்தர சக்தியாக, அடையாளப்படுத்திக்கொண்டது. இது போதாதென்று, கற்பு என்ற பொன் விலங்கை, பெண்களின் கரங்களில் பூட்டிக்கொண்ட தமிழ்க் கலாசாரம், ‘மாதவிலக்கு’ என்ற இயற்கையான உடலியல் செயற்பாட்டின்போதும், ‘தீட்டு’ என்ற பெயருடன் பெண்களின்மீது தீண்டாமையைத் திணித்துக்கொண்டது.
அடுத்து, இயற்கையாகவே உடலியல் மாற்றங்களுக்குள்ளாகி, அண்மைக் காலம்வரை அரவாணிகள் எனும் அருவெருக்கத்தக்க பெயரால் அழைக்கப்பட்டு வந்த திருநங்கையரை, சங்க இலக்கியங்களும், அறநூல்களும், பக்தி இலக்கியங்களும், காப்பியங்களும் ‘அச்சுமாறிகள்’ என்றும், ‘ஆண் பெண்ணாகிகள்’ என்றும், ‘பரத்தையருக்கு ஒப்பானோர்’ என்றும், ‘அலிகள் – ஊனங்கள் – பேடிகள்’ என்றும் குறிப்பிட்டு, அவர்களை இழிவானவர்களாகவும் கேள்விக்குரியவர்களாகவும் ஒதுக்கிய வரலாறு இற்றைவரை தொடர்கிறது. அனைத்து மாற்றுத் திறனாளிகளது நிலைமையும் எமது சமூகத்தில் இவ்வகைப்பட்டதே! மேலும், கறுப்பு நிறமுடையவர்களாகப் பிறந்த தமிழ்ச் சமூகத்தினர், அழகற்றவர்களாகவும், ஆளப்படுபவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னங்களாகவும் கருதப்பட்டு வருகின்றமைக்கான ஆரம்ப விதை, தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதியிலேயே நாட்டப்பட்டுவிட்டது.
இவ்வகைப்பட்டவர்களை உடலால் தீண்டுதல் ‘தீட்டுத் தன்மையது’ என்பதாக – ‘தீண்டாமையாக’ தமிழ்ப் பண்பாட்டுணர்வு நீண்ட காலமாக வலியுறுத்தி வந்துள்ளது. இந்தத் தீட்டுக் கருத்தியலின் முக்கிய வகையான சாதி ஒடுக்கு முறையின் மூலங்களையும், அது வரலாற்றுப் போக்கில் எய்திய பரிமாணங்களையும் மட்டுமே இங்கு கருத்தில் எடுத்து, தமிழிலக்கிய நிலைப்பட, சான்றுகளின் துணையுடன் அடையாளம் கண்டு, ஆய்வுக்குட்படுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பண்பாட்டு வரலாற்றைக்கொண்ட தமிழச் சமூகமானது ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ எனக் கூறிக்கொண்டே, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தைக் காலந்தோறும் உருவாக்கி வந்துள்ளது. ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற பரந்த சிந்தனையை சங்ககாலப் புலவர்கள் ஒருசிலரிடம் காணமுடிகின்ற போதிலும், அச்சிந்தனை வீச்சு சங்க இலக்கியங்களின் அடிநாதமாகவோ, அடிப்படைப் பண்பாகவோ இருந்ததாகச் சொல்வதற்கில்லை. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்ற சிந்தனையை வெளிப்படுத்துவதாகவே, பெரும்பாலான சங்க இலக்கியங்கள் காணப்படுகின்றன.
தமிழர் பண்பாட்டில், அன்றைய காலத்திலிருந்தே பாணர், பறையர், துடியர், கடையர் என்ற பிரிவினைகள் இருந்துள்ளதைத் தொல்காப்பியம் உறுதி செய்கின்றது. சங்க இலக்கியத்தில் பாணர், விறலி, கூத்தன், கூத்தி, புலையன், புலைத்தி போன்ற சொற்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்பதற்கு, ஆற்றுப்படை இலக்கியம் சான்றாக இருக்கின்றது.
‘பசைகொல் மெல்விரல் பெருந்தோட்
புலைத்தி துறை விட்டன்ன தூமயி ரெகினம்’
என்ற நற்றிணைப் பாடலொன்றும்,
‘துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை’
என்று புறநானூற்றில் வரும் பாடலொன்றும் இவற்றிற்கான இரு உதாரணங்கள் மட்டுமே.
எனவே, சங்க காலத்தில் தமிழ் நாட்டில் சாதியில்லை என்றும், ஆரியரின் வருகையின் பின்னர் புகுத்தப்பட்ட வருணாசிரம முறையே சாதியத்தைப் புகுத்தியது என்றும், கூறப்பட்டு வருகின்றபோதிலும், சங்ககாலச் சமூகத்தினை அதன் இலக்கியச் சான்றுகளோடு பொருத்தி ஆராய்ந்து பார்த்தால், மக்கள் பிறப்பின் அடிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலும் சுட்டப்பட்டிருக்கின்றார்கள் என்றும் – உடல் தீண்டப்படுதலுக்கு உரியவர் அல்லர் என, இம்மக்களில் ஒரு பகுதியினர் இழிவுபடுத்தப் பட்டிருக்கின்றார்கள் என்றும் அறியமுடிகின்றது.
நிலவுடைமைப் பண்பாட்டின் விளைச்சல்களான காப்பியங்கள் உருவாக ஆரம்பித்த சங்கமருவிய காலத்தில், ஊர் அமைப்பிலும் வருண வேறுபாடு புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தீண்டாமை ஆரம்பமாகிவிடுகின்றது. பெருங்குடி-சிறுகுடி, கருமை-வெண்மை, ஊர்-பட்டினம் என்ற இருமை எதிர்வுகள்கூட, இக்காப்பிய காலத்தில்தான் கட்டமைக்கப்பட்டன. வணிகர் போற்றும் இந்தப் புத்தசமயக் காப்பியங்கள் வேடர், எயினர், மறவர், குறவர் என்றெல்லாம் சுட்டப்படும் மக்களது செயலை இழிவாகக் காட்டுகின்றன.
‘அருந்தவர்க்காயினும் அரசர்க்காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த
குறியவு நெடியவுங் குன்று கண்டனன்
சுடுமணோங்கிய நெடுநிலைக் கோட்டமும்’
என்று தீண்டாமையைச் செயற்படுத்தும் களமாக இடுகாடும் அமைவது இந்த மணிமேகலைப் பாடல் மூலம் தெரியவருகின்றது.
‘ஊனொடு தேனுங் கள்ளு முண்டுயிர் கொன்ற பாவத்
தீனராய் பிறந்த திங்ஙனி யிவை யொழின்’
என்ற பாடலின் ஊடாக ‘இழிகுலத்தில் பிறந்தது முன்வினைப் பயன்’ என்று சீவகசிந்தாமணி கூறுகின்றது.
இவ்வாறாக, இலக்கியங்கள் வழியிலான சான்றுகள் கைக்கெட்டிய சங்க காலம் துவக்கம், தமிழ்ச் சமூகத்தில் சாதிவேறுபாடு நிலவி வந்துள்ளபோதிலும், கி.பி. 6ம் நூற்றாண்டை அடுத்த பக்தி இலக்கிய காலத்திலேயே, இதன் ஒடுக்குமுறை அம்சங்கள் துலக்கமாகத் தெரியலாயின. கடவுளின் பெயரால் கட்டமைக்கப்பட்ட சமயக் கருத்தியல்களின் ஒருவகையின, சமூகத்தின் ஒரு பகுதியினரைப் புறக்கணிப்பதற்கும் அடக்கி ஒடுக்குவதற்கும் உபயோகிக்கப்பட்டன என்ற உண்மையை, இந்தப் பக்தி இலக்கியங்கள் நிரூபிக்கின்றன. இறையடியார்கள் என்ற பொது அடையாளங் கொண்டவர்களான நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோருள் சிலர், அப்பொது நிலைக்கு மேலாக, அவர்களது பிறப்பு, தொழில் ஆகிய அம்சங்களின் அடிப்படையில், தனி அடையாளங்களுடன் சுட்டப்பட்டதையும், அந்நிலையில் புறக்கணிக்கப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டதையும் பக்தி இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
புலையரான நந்தனார், இடையரான ஆனாயர், நுளையரான அதிபத்தர், வேடரான கண்ணப்பர், பாணரான திருநீலகண்ட யாழ்ப்பாணர், இடையரான திருமூலர் போன்ற நாயன்மார்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களாகவே சேக்கிழாரின் பெரிய புராணத்தில் இடம்பெறுகின்றனர். ‘திருநாளைப் போவார்’ எனப்பட்ட நந்தனார், தீக்குளித்ததாகச் சொல்லப்படும் பெரியபுராணச் செய்தியானது, அக்காலச் சமூகத்தின் உடல்சார் ஒடுக்குமுறைக்கான உதாரணமாகக் கூறப்படும் ஓர் இலக்கியப் பதிவாகும்.
விசேடமாக வடக்கு வாசல் ஒன்று அமைத்துத்தான், இசைக் கலைஞரான திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருவாரூர் திருத்தலத்தினுள் வரவழைக்கப்பட்டார் என்றும், ‘பிராகாமியம்’ எனும் சித்தியினால் சிவயோகியார் ஒருவர்தான், பாம்பு தீண்டி இறந்த இடையனான மூலனின் உடலில் புகுந்து, திருமந்திரம் எனும் அருமந்திரம் தந்த திருமூலராய் வந்தார் என்றும், உள்ளார்ந்த இறை அன்பினால், ஊனையும் தேனையும் படைத்து, இறைவனை வழிபட்ட கண்ணப்பரின் வழிபாட்டை ‘அனுசிதம்’ என – அதாவது ‘பழுதானது’ எனக் குறிப்பிட்டு, ‘பழுது புகுந்தது தீரப் பவித்திரம் செயல் புரிந்து’ புனிதமாக்கிக் கொண்டார் என்றும் புராணக் கதைகள் கூறும் செய்திகளின் உள்ளார்ந்த நோக்கங்கள் உணரக் கூடியனவே. சாதி குறைந்தவர்களை அறிஞர்களாகவோ, இறைபக்தர்களாகவோ அல்லது கலைஞர்களாகவோ ஏற்க மறுக்கும் மேலாண்மை மனோபாவத்தின் வெளிப்பாடுகள்தான் இவை என்பது வெளிப்படை.
இதேவேளை, தாம் வாழ்ந்த சமூகத்தின் சகல தரப்பினரையும், சமநோக்குடன் தழுவிச் செல்லும் அணுகுமுறையைக் கையாண்ட, சமயப் பெரியோரும் அக்காலத்தில் வாழந்துள்ளார்கள் என்ற உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை. உதாரணமாக, திருநீலகண்ட யாழ்ப்பாணரை, தமது தொண்டர் கூட்டத்தில் ஒருவராக்கியதுடன், அந்தணராகிய திருநீலநக்கரின் இல்லத்தில் ஒருமுறை அவர் தங்குவதற்கும் ஏற்பாடுசெய்து உதவிய திருஞானசம்பந்தர், ஒரு சிவபக்தராகவும், பக்தி இயக்கத் தலைவராகவும் மட்டுமல்லாமல், சமூக சமநோக்குடைய மனிதநேயப் பண்பாளராகவும் காணப்படுகின்றார்.
ஆனால் இதே காலப்பகுதியில் தோன்றிய சித்தர்களோ, சாதிப் பிரிவினைக்கு எதிராகக் குரல் எழுப்பிய கலகக்காரர்கள் என்பதனால், இவர்கள் இலக்கியத்திலும் சரி, ஆன்மீகத்திலும் சரி, பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டனர் என்பதும், இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
‘சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்’ என்று பாம்பாட்டிச் சித்தரும்,
‘சாதி பேதங்கள் சொல்கிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ‘ என்று கொங்கண நாயனாரும்,
‘ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்ப தெக்காலம்’ என்று பத்திரகிரியாரும்
மனம் நொந்து பாடியிருப்பவை, அக்காலகட்டத்துச் சாதிபேதத்தின் வழித்தோன்றலான, உடல் தீண்டாமைக் கொடுமைக்கான சான்றுகளாகும்!
நாயக்கர் காலத்தில் எழுந்த சிற்றிலக்கியங்களில், ஒடுக்கப்பட்டோர் நிலைபற்றி, விரிவான தகவல்கள் பெருமளவில் இல்லாத போதும், அவர்கள் குறித்த பார்வையைப் பள்ளு, குறவஞ்சி ஆகிய இரண்டிலும் காணலாம். இவையிரண்டும், ஒடுக்கப்பட்டோர் என்று சொல்லப்படுகின்ற தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிப் பேசுகின்றன. பள்ளர்கள் ஆதிக்க சக்திகளால் அடக்கப்பட்டனர் என்பதற்குரிய ஆதாரங்களை, பள்ளு இலக்கியத்தின் மூலமாகவும், அதில் இடம்பெறம் ஏசல்கள் மூலமாகவும் உணர்ந்துகொள்ள முடிகிறது. புறம்தள்ளி வைக்கப்பட்டவர்களான குறவனின் வேட்டைத் தொழிலும், குறத்தியின் குறிசொல்லும் தொழிலும், இழிவான தொழில்களாகவே நாயக்கர் காலத்தில் கருதப்பட்டுள்ளன என்பதை, குறவஞ்சி இலக்கியத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.
இத்தகைய வரலாற்றுப் போக்கினுக்கு மாறாக, தம்மீது திணிக்கப்பட்ட சாதி ஒடுக்கு முறையை எதித்து, தாழ்த்தப்பட்டோரே கலகக் குரலெழுப்பி, கேள்விக் கணை தொடுத்த காட்சிப் படலங்களும் பழந்தமிழ் இலக்கிய காலங்களில் இடம்பெற்றுள்ளன. சங்கமருவிய காலத்து மணிமேகலையின் ஆபுத்திரன் கதையும், நாயக்கர் காலத்து கபிலரகவல், மற்றும் உத்திர நல்லூர் நங்கை பாடல் என்பனவும், இதற்கான நல்ல உதாரணங்களாகும்.
இவை இவ்வாறிருக்க, ஐரோப்பியரின் வருகையின் பின்னர், தமிழ்ச் சமூக வரலாற்றின் மறுகட்டமைப்புக்கான பணிகள், ஊக்கம்பெறத் தொடங்கின. இந்த மாற்றங்கள், தமிழச் சமூகத்து ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தின. ஆங்கில ஆட்சிச் சூழுலில், கல்வி வாய்ப்பு அனைத்துத் தமிழ்ச் சமூகத்தினருக்கும் திறந்து விடப்பட்ட வரலாற்றுக் காலகட்டத்திலிருந்தே, சமூக இயக்க நிலைச் செயற்பாடுகள் தோன்றின.
இப்பின்னணியில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், மார்க்சிய சிந்தனையாளர்களின் வழிநடத்தல்களால் தீவிரமடைந்த தீண்டாமை எதிர்ப்புணர்வு, இவ்விரு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சமூகத்திலும், வெவ்வேறு தன்மையதாக வளர்த்தெடுக்கப்பட்டன. ஈ.வே. ராமசாமிப் பெரியாரின் பகுத்தறிவு இயக்கமும், இடதுசாரி இயக்கங்களும் ஏற்கனவே தமிழ் நாட்டில் தீண்டாமைக்கு எதிராகக் குரலெழுப்பிய போதிலும், இந்திய தலித் இயக்கதின் முன்னோடியான, டாக்டர் அம்பேத்காரின் நூற்றாண்டு நிகழ்வுகளை ஒட்டியே, 1990 – 91 காலப் பகுதியில் தலித் இயக்கம் தமிழ் நாட்டில் புத்துணர்ச்சியுடனும் புதுவேகத்துடனும் செயற்படலாயிற்று.
கலை இலக்கிய இதழ்கள், ஆக்க இலக்கியங்கள், நாடக அரங்கியற் செயற்பாடுகள், கருத்தரங்குகள், ஆய்வுநூல் வெளியீடுகள் போன்ற பல்வகைத் தொடர்பு ஊடகங்கள் மூலமாகவும், தலித்தியம் தமிழகத்தில் தன்னை ஒரு முக்கிய சமூக சக்தியாக இனங்காட்டலாயிற்று. அ. மார்க்ஸ், பொ. வேல்சாமி, ரவிக்குமார், ராஜ்கௌதமன், பாமா, இமயம், சிவகாமி, டாக்டர் ஏ. குணசேகரன், சமுத்திரம், விழி. பா. இதயவேந்தன், அபிமானி, அழகிய பெரியவன், ராசமுருகு பாண்டியன், குருசு சாக்கிரடீஸ், ஸ்ரீதர கணேசன், அறிவழகன் போன்ற ஏராளம் தலித்திய படைப்பாளிகளுடன், டாக்டர் வீ. அரசு, எஸ். வீ. ராஜதுரை, வ. கீதா, கருணாமனோகரன் போன்ற பலரது ஆய்வுகளும், தமிழ் நாட்டில் தலித்தியப் போராட்டங்களுக்கு ஊட்டமளித்து வந்துள்ளன.
இந்திய மண்ணுக்கே சிறப்பாக உரிய இந்தச் ‘சாதி ஏற்றத் தாழ்வு’ என்ற சமூக வியாதியை எதிர்கொள்வதற்கு ஒரு தனிநிலை இயக்கச் செயற்பாடு அவசியமாகிறது என்பதே இந்த தலித்தியத்தின் நிலைப்பாடாகும். இவ்வகையில் மார்க்சியம் கூறும் ‘வர்க்கப் போராட்டத்திற்கு’ முன்னர் நிகழ்ந்து முடியவேண்டிய ஒரு ‘பண்பாட்டுச் செயற்பாட்டை’ முன்னெடுப்பது தலித்தியரின் நோக்கு நிலையாகும். பாரம்பரியமாக நிலவிவரும் பண்பாட்டு விழுமியங்களை, முற்று முழுதாக எதிர்த்து நின்று, மாற்றுக் கலாசாரம் தேடும் பண்பாட்டுச் செயற்பாட்டையே அவர்கள் தமது ‘கலகப் பண்பாடு’ என்பர்.
இலங்கையைப் பொறுத்தவரை, 1925இல் எழுச்சியுற்ற யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் மாநாடு, காத்திரமான சமூக வரலாற்றுச் சுவடுகளைப் பதித்துச் சென்றுள்ளது. அதன் சாதியத் தகர்ப்பு, மற்றும் பெண் விடுதலைச் சிந்தனைகள், பின்னாளில் அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை முன்னெடுத்த, கம்யூனிஸ்ட கட்சியினால் கையேற்கப்பட்டது. இந்த எழுச்சியோடு, சாதியத் தகர்ப்புப் போராட்டங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் தாமாகவே முன்னெடுத்தபோது, இடதுசாரி உணர்வு படைத்த உயர்சாதியினர் உட்பட, அனைத்து சாதியினரும் ஐக்கியப்பட்டு, அதன் வெற்றிகளுக்குத் தோள் கொடுத்தனர். வர்க்க உணர்வோடு, அனைத்துச் சாதியினரையும் ஐக்கியப்படுத்தி, தீண்டாமைக்கு எதிராகப் போராடுவது என, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இயங்கியபோது, சகல சாதியினரையும் அணிதிரட்ட முடிந்தது.
இத்தகைய சாதகமான பின்னணியில் ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை,’ மற்றும் ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ போன்ற அமைப்புக்கள், தத்தமக்கே உரிய போராட்டங்கள், செயற்பாடுகள் ஊடாக, ஒடுக்கப்பட்டோருக்கான வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில், ஓரளவு வெற்றி கண்டிருந்தன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இந்த வெற்றிக்குத் துணையாக இருந்து வந்தள்ளது. தமிழ் நாட்டில் தலித்திய எழுச்சிக்கு வித்திட்டவராகவும், பஞ்சமர் இலக்கியங்களின் பிதாமகராகவும் மதிக்கப்படும் ஈழத்து எழுத்தாளர் கே. டானியல் மற்றும் டொமினிக் ஜீவா, என். கே. ரகுநாதன், சுபத்திரன், பெனடிக்ட் பாலன், தெணியான் ஆகியோருடன், செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், சுபைர் இளங்கீரன், அகஸ்தியர் போன்ற பலரும், இலங்கையில் தீண்டாமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய, குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் ஆவர்.
இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பமான காலகட்டத்திலிருந்து, இன்றுவரை, தீண்டாமைக்கெதிரான போராட்டம், திசை திருப்பப்பட்டிருக்கின்றதே தவிர – தீண்டாமையின் தீவிரம், சற்றுத் தணிந்திருப்பதான தோற்றமாயை ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றதே தவிர – அங்கு இன்னமும் தீண்டாமை செத்துவிட்டதாகச் சொல்வதற்கில்லை! வெளித் தெரியாப் புற்றுநோயாக, சாதிப் பாகுபாடும், அதன் தொடர்ச்சியான தீண்டாமையும், அங்கு இன்னமும் விரவிப் பரவிக் கிடக்கின்றன என்பதுதான் உண்மை!
இவ்வாறான வரலாற்றுப் போக்கினைக்கொண்டதும் – தமிழர்தம் சமூக ஊடாட்டங்களை நெறிப்படுத்தும் வல்லமைகொண்டதுமான – தீண்டாமையானது, இந்திய உபகண்டத்துக்கு மட்டுமே உரிய, சில பொதுப் பண்புகளைக் கொண்டதோர் சமூக ஒடுக்கு முறையாகும்.
அப்பொதுப் பண்புகளாவன –
1.வர்க்க ஒடுக்குமுறை என்பது பொருளாதாரச் சுரண்டல், அரசியல் உரிமை மறுப்பு, பண்பாட்டு ஒடுக்குமுறை என்பவற்றை உள்ளடக்கும். ஆனால் தமிழ்ச் சமூகத்தின் தீண்டாமை என்ற கருத்துநிலையோ, வர்க்க வேறுபாடுகளுக்குள் அடங்கமறுக்கும் – பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் – ஒரு மாறுபட்ட ஒடுக்குமுறையாகும்.
2.கடவுளின் பெயரால் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் இத்தீண்டாமையானது, ஆதிக்க சக்திகளின் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதிகாரமும் மதமும் கைகோர்த்துப் பெற்றெடுத்த காரணத்தினாலேயே, இத்தீண்டாமையின் ஆணிவேரை இனங்கண்டு பிடுங்கி எறிவதில், இக்காலம்வரை சிரமங்கள் இருந்து வருகின்றன.
3.புறக்கணிப்புணர்வையும் அடக்கி ஒடுக்கும் மனப்பாங்கையும் உள்ளடக்கிய தீண்டாமைக் கருத்தியல்களுக்கு முரணாக, சமரசப் பாங்குகொண்ட முயற்சிகள் பல, பக்தி இலக்கிய காலம் முதல் இன்றைய காலம்வரை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இவற்றை, தீண்டாமை அடக்கு முறைகளுக்கு எதிராக எழுந்த, கிளர்ச்சிகளின் தீவிரத்தைக் குறைப்பதற்கான தணிப்பு முயற்சிகள் என்றும் – அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள், பிற சமயங்களை நோக்கிச் செல்வதைத் தடுப்பதற்கான, அரசியல் நோக்கிலான உத்திகள் என்றும், கொள்ளவேண்டுமே தவிர, தீண்டாமைக் கொடுமைக்கெதிரான, இதய சுத்தியுடன்கூடிய எத்தனங்கள் எனக் கூறிவிட முடியாது.
4.தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகுவோரான, அடிநிலை மக்களது வாழ்வியல் நியமங்கள், தரமுயர்த்தப்படுதற்கான சகல தரப்பு முயற்சிகளும் வேண்டப்படும் இத்தருணத்தில், அவர்களைக் கொடுமைக்கு ஆளாக்குவோரும், தத்தமது மனச்சாட்சியின் நியமங்களை, பரஸ்பரம் தரமுயர்த்திக்கொள்ள வேண்டியதும் தர்மம் ஆகும்.
மனிதனை மனிதனாக மதித்தலே தர்மங்களிலெல்லாம் தலையாய தர்மம்!
சான்றாதாரங்கள் –
1.விழி. பா. இதயவேந்தன், ‘தலித் அழகியல்,’ காவ்யா வெளியீடு, சென்னை 2002
2.க. பூரணச்சந்திரன் (பதிப்பாசிரியர்), ‘தலித் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் மேம்பாடும்,’ அகரம், தஞ்சாவூர் 2004
3.ந. இரவீந்திரன், ‘அம்பேத்காரும் எம். சி. சுப்பிரமணியமும்,’ மல்லிகை, ஜனவரி 2010
4.தெணியான், ‘சமூக சமத்துவக் குரலாக ஒலிக்கும் சித்தர் பாடல்கள்,’ ஜீவநதி, ஆவணி 2010
5.கலாநிதி நா. சுப்பிரமணியன், ‘நால்வர் வாழ்வும் வாக்கும்,’ கலைஞன் பதிப்பகம், சென்னை 2002
6.தி. பெ. கமலநாதன், ‘தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்,’ எழுத்து, மதுரை 2009
’மல்லிகை’ ஜனவரி 2012, 47வது ஆண்டுமலரில் பிரசுரமானது.