அன்ப! அண்மையில் வெளிவந்த தமிழர் தகவல் மலரில் நான் எழுதிய. ‘கனடாவில் தமிழ் இலக்கியம்! வரலாறு மற்றும் வளர்ச்சிநிலைகள் தொடர்பான சில அவதானிப்புகள்’ என்ற தலைப்பிலான கட்டுரை தொடர்பான தங்களது 22 மற்றும் 26 திகதியிட்ட பதிவுகளை வாசித்தேன்.
எனது அக்கட்டுரை . ஆய்வுச்சிறப்பு மிக்கதாக விளங்குகின்றது எனவும் எதிர்காலத்தில் இத்துறை பற்றிய ஆய்வுகளுக்கு உசாத்துணையாக விளங்கக்கூடிய முக்கியத்துவமுடையது எனவும் மதிப்பிட்டிருந்தீர்கள். தங்களது அம்மதிப்பீடு எனக்கு மன நிறைவைத்தருவதாக அமைந்தது என்பதை முதலில் நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அக்கட்டுரையிலுள்ள முக்கிய குறைபாடுகள் எனதாங்கள் கருதுவனவற்றையும் நீங்கள் எடுத்துக்காட்டியிருந்தீர்கள். விடுபட்டமுக்கிய தகவல்களையும் பொறுப்புணர்வுடன் சுட்டியிருந்தீர்கள். அவ்வாறாக நீங்கள் கருதக்கூடிய குறைபாடுகள் மற்றும் விடுபாடுகள் என்பவற்றுக்கு வேறு யாரும் பொறுப்பல்ல என்பதையும் நான் மட்டுமே பொறுப்பாவேன் என்பதையும் உங்களுக்கும் இவ்விணையதள வாசகர்களுக்கும் தெரிவிக்கவேண்டியது எனது உடனடியான கடமையாகிறது.
’ கனடாவில் எழும் தழிலக்கியமானது புலம்பெயர் இலக்கியம் என்பதான பொது அடையாளத்திலிருந்து கனடியத்தமிழிலக்கியம் என்பதான தனி அடையாளத்தை நோக்கி மாற்றமெய்தத் தொடங்கியுள்ளது’ என்பதை உணர்த்தும் வகையில் ஒரு கட்டுரை எழுதுவதே எனது பிரதான நோக்கம். அவ்வாறான வரலாற்றுப்போக்கினை அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கான முக்கிய அம்சங்களை மையப்படுத்தியே அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அவ்வாறானகட்டுரையமைப்புக்குத்தேவையான தகவல்களை எனது தொகுப்பிலிருந்து பயன்படுத்திக்கொண்டதோடு மேலதிகமான் சில தகவல்களைத் தொலைபேசி உரையாடல்களூடாக எனது இலக்கிய நண்பர்களிடம் பெற்றுக்கொண்டேன். எனது தகவல்களோடு அவற்றை இணைத்து நோக்கி ஒரு வரலாற்றுபோக்கை இனங்காட்ட முயன்றுள்ளேன். தகவல்களைத் தந்தவர்களுக்குரியதான நன்றிக் குறிப்புகளையும் பதிவுசெய்தேன். அவ்வளவே.
நான் எவரிடமும் தகவல்களை எழுத்து நிலையில் கோரிப்பெறவில்லை. அதற்கான கால அவகாசமும் எனக்கு இருக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு தலைப்பை மையப்படுத்தி , குறித்த ஒரு அணுகுமுறையூடாக ,குறிப்பிட்ட கால எல்லைக்குள்ளும்குறித்த பக்கங்களின் அளவுக்குள்ளும் ஒரு கட்டுரையை எழுத முற்படும்போது சில முக்கிய தவறுகள் மற்றும் விடுபாடுகள் எம்முடைய கவனத்தையும் மீறி நிகழ்ந்துவிடுகின்றன. இவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு மனப்பூர்வமாக நண்றி தெரிவிக்கிறேன். எனவே எனக்குத்தகவல் தந்தவர்களில் எவரையும் இக்கட்டுரையிலுள்ள விடுபாடுகளுக்குப் பொறுப்பாக்கவேண்டாம் என்பதையும் நட்புணர்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் தெரிவித்தவற்றை நான் நகலெடுத்துப்பேணிவைத்துவிட்டேன். மேற்படி எனது கட்டுரையை விரித்தெழுதும் எண்ணம் உளது. அவ்வேளை அவற்றைக் கவனத்திற்கொள்வேன்.
இத்தொடர்பிலே மேலும் ஒரு குறிப்பு. மேற்படி எனது கட்டுரை தொடர்பாக நீங்கள் சுட்டியவற்றைவிட வேறு வகையான மதிப்பீடுகளும் வரலாம். விடுபட்டவை தொடர்பான புதிய தகவல்களைச்சிலர் சுட்டிக்காட்டக்கூடும். முக்கிய மானவர்கள் எனக்கருதப்படும் பல படைப்பாளிகளின் ஆக்கங்கள் அக்கட்டுரையிலே கவனத்தைப்பெறவில்லை என்ற வகையான விமர்சனங்களையும் சிலர் முன்வைக்கலாம். அத்தகைய புதிய தகவல்களையும் விமர்சனங்களையும் நன்றியுடன் எதிர்கொள்ளவேண்டியதும் பேணிக்கொள்ளவேண்டியதும் பொருத்தமான விடையளிக்க வேண்டியதும் எனது கடமையாகும். கனடியத் தமிழிலக்கியம்தொடர்பான நிறைவான வரலாற்றை உருவாக்க அத்தகைய மதிப்பீடுகள் அவசியமாகும்.
இது ஒருவருடைய தனி முயற்சியில் நடைபெறக்கூடியதன்று; பலர் கூடி இழுக்கவேண்டிய தேர்.
நன்றி.
நா, சுப்பிரமணியன்
enmugavari@gmail.com