வாசிப்பும், யோசிப்பும் 163: அம்மாவின் நினைவாக…;தமிழ்வாணன்: தன்னம்பிக்கையின் சிகரம்!:கவிதைப்பிரியர்களுக்கோர் சஞ்சிகை: மகாகவி!

திருமதி நவரத்தினம்1. அம்மாவின் நினைவாக…

அவர் ஓர் ஆசிரியையாக விளங்கியவர். யாழ் இந்துக்கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகா வித்தியாலயம் மற்றும் அராலி இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியையாகக் கடமையாற்றியவர். ‘நவரத்தினம் டீச்சர்’ என்றால் தான் அவரைப் பலருக்குத்தெரியும். யாழ் இந்து மகளிர் கல்லூரிக் காலகட்டத்தைச்சேர்ந்த அவரது சக ஆசிரியர்களுக்கு அவரை ‘மங்கை’ அல்லது ‘மங்கையற்கரசி’ என்றால்தான் தெரியும். அதுதான் அவரது வீட்டுப்பெயர். ஆனால் அவரது இயற்பெயர் மகேஸ்வரி. அது யாருக்குமே தெரியாது. கண்டிக்கவே தெரியாத ஆசிரியர்களில் அவருமொருவர். புவியியல், ஆங்கிலம் மற்றும் Home Science ஆகிய துறைகளில் பாடங்களை அதிகமாகக் கற்பித்தவர்.

வவுனியாவில் இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலைகளில் நேரத்துடன் எழுந்து, அனைவருக்கும் உணவு தயாரித்து, மதிய நேர உணவினை அனைவருக்கும் தயார் செய்வார். அதிகாலைகளில் நாங்கள் குழந்தைகள் அனைவரும் அவர் பின்னால் கோழிக்குஞ்சுகளாகச் சென்ற காலைகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. மாலை நேரங்களில் வீடு திரும்பும்போது நான் என் நண்பர்களுடன் திரும்பி விடுவேன். ஆனால் காலைகளில் பாடசாலை செல்லும்போது அவருடனேதான் செல்வதுண்டு.

நன்கு பாடும் திறமை மிக்கவர். சிறுவயதில் அவர் பாடும் பாரதியார் விடுதலைக்கீதங்களை (குறிப்பாகத் ‘தாயின் மணிக்கொடி பாரீர்), ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படப்பாடலான ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’ ஆகிய பாடல்களை அவர் அவ்வப்போது பாடக்கேட்டு இரசித்திருப்பதும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.

அவரும் வாசிப்புப் பழக்கம் மிக்கவர். ஆனால் பெரும்பாலும் ஆழ்ந்த வாசிப்பு மிக்கவர் அல்லர். மணியனின் ‘நெஞ்சோடு நெஞ்சம்’, ‘உன்னை ஒன்று கேட்பேன்’ , கலைமணியின் (கொத்தமங்கலம் சுப்பு) ‘மிஸ் ராதா’ போன்ற ஆனந்த விகடன் தொடர்களுடன், மில்ஸ் அன் பூன் ((Mills and Boon) ஆங்கில ஜனரஞ்சக நாவல்களுடன் அவரது வாசிப்பு நின்று விட்டது. ஆனால் அவர் மு.வரதராசனின் நாவல்களை வாசித்திருக்கின்றார். வவுனியா மகா வித்தியாலய நூலகத்திலிருந்து பல மு.வ.வின் நாவல்களை இரவல் வாங்கிக்கொண்டு வருவார். மு.வ.வின் ‘கரித்துண்டு’, ‘நெஞ்சில் ஒரு முள்’, ‘கள்ளோ காவியமோ’, ‘பெற்ற மனம்’, ‘அகல் விளக்கு’ , ‘அல்லி’, ‘மண்குடிசை’ ஆகிய நாவல்களை என் வாசிப்பின் ஆரம்பக் காலகட்டத்தில் அப்பொழுதுதான் வாசித்திருக்கின்றேன். எனது பன்னிரண்டு வயதிலேயே நான் மு.வ.வின் நாவல்களை வாசிக்கத்தொடங்கி விட்டிருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் மு.வ.வின் தூய தமிழ்ச் சொற்களை உள்ளடக்கிய நாவல்கள் வாசிப்பதற்குச் சிறிது சிரமத்தைத்தருவது வழக்கம். அவர் ‘வேண்டாம்’ என்று எழுத மாட்டார். ‘வேண்டா’ என்றுதான் எழுதுவார். உண்மையில் ‘வேண்டாம்’ என்பது இலக்கணத்தின்படி பிழையானது. ‘வேண்டா’ என்பதுதான் சரியானது. அதனால்தான் அவர் அவ்விதம் எழுதுகின்றாரென்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்.

என் பல்கலைக்கழக நாள்களில் எதிர்பாராமல் வீடு திரும்பும் என்னைப்பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைவார். இட்லி, தோசை என்று எங்களுக்குப் பிடித்த உணவு வகைகளை அதிகம் தயாரித்து எங்களைத்திக்கு முக்காட வைத்து விடுவார். மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பும்போது பெரும்பாலும் அதிகாலை யாழ்தேவியில்தான் நான் திரும்புவது வழக்கம். அந்நாள்களில் நேரத்துடன் எழுந்து, உணவு தயாரித்துத்தருவார். விடைபெறும்போது சிறிது சோகத்துடன் காட்சியளிக்கும் அவரது முகம் இன்னும் ஞாபகத்திலுள்ளது.


2. தமிழ்வாணன்: தன்னம்பிக்கையின் சிகரம்!

சிறு வயதில் ஒரு காலகட்டத்தில் நான் தமிழ்வாணனின் மர்மக்கதைகளை வாசிப்பதில் ஆர்வமாகவிருந்தவன். சித்த வைத்தியம், தன்னம்பிக்கையின் அவசியம், சங்கர்லால் துப்பறியும் / தமிழ்வாணன் துப்பறியும் மர்ம நாவல்கள் எனப்பல்துறைகளிலும் தன் கை வண்ணத்தைக் காட்டியிருப்பார் தமிழ்வாணன் தனது ‘கல்கண்டு’ சஞ்சிகையில். அவர் தன்னையே துப்பறிவாளராகக்கொண்டு ‘தமிழ்வாணன் துப்பறியும்’ நாவல்கள் பலவற்றை எழுதியவர்.

இவரது புனைகதைகளிலெல்லாம் வரும் பாத்திரங்களின் பெயர்கள் சுத்தத் தமிழ்ப்பெயர்களாகவிருக்கும். காவேரி, மணிமொழி இவ்வாறாக அவரது பாத்திரங்களின் பெயர்களிருக்கும்.

தமிழ்வாணன் தன்னை, தன் திறமையை மட்டுமே நம்பியவர். அந்த அவரது நம்பிக்கையும், அவரது படைப்புகளும் சிந்தைக்கு எப்பொழுதும் இன்பமளிப்பவை.

வாசிப்பும், யோசிப்பும் 153!


3. கவிதைப்பிரியர்களுக்கோர் சஞ்சிகை: மகாகவி!

ஓவியா பதிப்பக வெளியீடாகப் பல ஆண்டுகளாக வெளிவரும் சஞ்சிகை ‘மகாகவி’. எழுத்தாளரும் , ஓவியா பதிப்பக உரிமையாளருமான வதிலைப்பிரபாவை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் இந்த இதழின் பொறுப்பாசிரியராக அ.தமிழ்ச்செல்வனும், ஆசிரியர் குழுவினராக வலங்கைமான் நூர்தீனும், ராஜேஸும் இருக்கின்றார்கள்.

அண்மையில் ‘மகாகவி’ சில இதழ்களை வதிலைப்பிரபா அனுப்பியிருந்தார். பக்கங்கள் குறைவாக இருந்தாலும், வாசிக்கும்போது நிறைவைத்தருமொரு சஞ்சிகை ‘மகாகவி’ பெயருக்கேற்ப சஞ்சிகையும் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை, சஞ்சிகை முழுவதும் விரவிக்கிடக்கும் பல்வகைக்கவிதைகளும் புலப்படுத்துகின்றன. மேலும் முதல் பக்கம் ஆசிரியர் பக்கமாகவும், கடைசிப்பக்கம் ஆசிரியரின் ‘குறிப்புகள்’ பக்கமாகவும் விளங்குகின்றன. ஆசிரியர் வதிலைப்பிரபாவின் பல்வகை விடயங்களைப்பற்றிய ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தும் பக்கங்கள் இவை.

பல்வகைக்கவிதைகளும் வாசிக்கையில் நெஞ்சையள்ளும் சொல் வளமும், பொருள் வளமும் கொண்டவையாக விளங்குகின்றன. பெரும்பாலான கவிதைகளை ஓவியங்கள் மேலும் அழகு படுத்துகின்றன.

ஹைக்கூக்கவிதைகளுக்கு அதிக பக்கங்களை சஞ்சிகைக்குழுவினர் ஒதுக்கியிருக்கின்றனர். இவை தவிர சினிமா, சமூகம், சூழல் பாதுகாப்பு, நூல் அறிமுகம் எனச் சமூதாயப்பிரக்ஞை மிக்க விடயங்களைத்தாங்கிய கட்டுரைகள், சிறுகதைகளுக்கும் சஞ்சிகையில் இடம் ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

இதுவரையில் எங்குமே நான் வாசித்திராத வடிவத்தில் புதுவகையான கவிதை வடிவமொன்றினை ‘மகாகவி’யில் வாசித்தேன். அது ‘தந்திக்கவிதைகள்’ என்னும் தந்தியைப்போன்ற சொற் சிக்கனம் மிகுந்த கவிதை வடிவமாகும். பேராசிரியர் ஜி.வில்சன் அமல்ராஜ் எழுதிய நான்கு தந்திக்கவிதைகள் ‘தந்திக்கவிதைகள்’ என்னும் பெயரில் ‘மகாகவி’யின் திசம்பர் 2004 இதழில் வெளியாகியுள்ளன. ‘தந்திக்கவிதைகள்’ பற்றி அவற்றை எழுதிய கவிஞர் ‘தந்தியானது மூன்று வார்த்தைகளில் ஒரு பெரிய விசயத்தைச்சொல்லும்போது மூன்று வார்த்தைகளில் கவிதைகளை ஏன் எழுதமுடியாது?’ என்று கேள்வி எழுப்புகின்றார். நியாயமான கேள்வி. மேலும் அவர் ‘என்னைப்பொறுத்தவரை கவிதைகளுக்குச் சொற்கள் தான் முக்கியம். வரிகள் அல்ல. பத்திகள் அல்ல. தமிழ் மிகவும் நுட்பமான மொழி. அதனது சொற்கள் அழகானவை; ஆழமானவை. எனவே மூன்றே வார்த்தைகளில் சில கவிதைகளை எழுதியுள்ளேன்’ என்று கூறியதுடன் நான்கு தந்திக்கவிதைகளையும் எழுதியிருக்கின்றார். அவற்றில் சிலவற்றை நீங்களும் சுவைத்துப்பாருங்களேன்:

1.உதயம்

பனித்துளி
பகலொளி
புல்வெளி

2. பரிணாமம்

சக்கரம்
பானை
வெப்பம்

3. கல்வி

காசு
மாசு
தூசு

4. சீரியல்

டி.வி
அழுதார்
கேவி

5. கொடுமை

சாதி
சாதி
சாதி

6. இப்போது

தேமா
புளிமா
சினிமா

கவிஞர் விக்கிரமாதித்யன் நம்பியின் ‘தங்கமான ஜனக்கூட்டம்’ (ஆகஸ்ட் 2015 இதழ்) என்னும் கவிதை சிந்தனையைத்தூண்டும் கவிதைகளிலொன்று.

தங்கமான ஜனக்கூட்டம்!

– விக்ரமாதித்யன் நம்பி –

அவன் தலைவன்
அவன் வார்த்தையை
மீற முடியுமா?

அவன் தலைவன்
அவனை எதிர்க்க முடியுமா?

தலைவனவன்
தலைவனை எப்படி விமர்சிப்பது?

அவன் தலைவன்
அவன் மனசு போல்தான் எதுவும்.

தலைவனவன்
மாளிகையெல்லாம்
தலைவனுக்குத்தான்.

அவன் தலைவன்
அவன் பெயரில்தான்
அன்னதானம் குடமுழுக்கெல்லாம்

தலைவனவன்
தள்ளி வைக்க இயலுமா தலைவனை.

அவன் தலைவன்
அவன் புகழ் பாடுவதே புலவர் தொழில்.

தலைவனவன்
தலைமையை
விட்டுக் கொடுப்பானா தலைவன்?

அவன் தலைவன்
மாலை மரியாதை பரிவட்டமெல்லாம்
தலைவனுக்குத்தான்.

தலைவனைக்கொண்டாடும்
வெள்ளந்தியான் தொண்டர் குழாம்.

தலைவனை அறியும்
தங்கமான ஜனக்கூட்டம்.

‘மகாகவி’ சஞ்சிகையைப்பெற்றுக்கொள்ள விரும்பினால் கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்:

ஆசிரியர் ‘மகாகவி’
17-16-5A , கே.கே,நகர்
வத்தலக்குண்டு – 624 202
தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி:
+91 04543 – 262686

அலைபேசி:
+91 766 755 7114
+ 91 96 296 526 52

மின்னஞ்சல்”
vathilaipraba@gmail.com

mahakavimonthly@gmail.com

ngiri2704@rogers.com