அயல் மொழிச்சிறுகதை: நெய்ப்பாயசம்

கமலாதாஸ்நவீன முறையில் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு அலுவலக நண்பர்களுக்கு நன்றி கூறியபின் இரவு நேரத்தில் வீடு திரும்பிய அவனை நாம் ‘அச்சா’வென்று அழைக்கலாம்.என்ன காரணமெனில் நகரத்திலுள்ள மூன்று குழந்தைகளுக்குத்தான் அவனது மதிப்புத்தெரியும். அந்தக்குழந்தைகள் அவனை ‘அச்சா’வென்று அழைப்பார்கள். பஸ்ஸில் அறிமுகமாகாத புதியவர்கள் மத்தியில் அமர்ந்துகொண்டு அவன் அந்த நாளின் ஒவ்வொரு கணத்தினூடாகவும் பயணித்தான். அந்நாளின் ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்துப்பார்த்தான்.காலை நேரத்தில் எழுந்ததிலிருந்தே அவளது குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. “உன்னி அப்படியே படுக்கையில் உருண்டுகிட்டே  இருக்க முடியுமா? இன்னிக்கு திங்கட்கிழமை இல்ல?” அவள் அவளது மூத்த மகனை எழுப்ப முயன்றாள். அழுக்குப்படிந்து கசங்கிய வெள்ளைச்சேலையைக் கட்டிக்கொண்டு சமையலறையில் வேலையைத்தொடங்கினாள். ஒரு பெரிய கப்பில் அவனுக்குக் காபி கொண்டுவந்தாள். அதன் பின்… என்னவெல்லாம் நடந்தது.மறக்கவே முடியாத சொற்களை ஏதாவது அவள் பேசினாளா?.எவ்வளவுதான் நினைவுக்குக் கொண்டு வந்தாலும் அதன் பின் அவள் சொன்னதாக எதுவும் நினைவில்லை.அந்த வார்த்தைகள் தான் எண்ணத்தில் அலைமோதுகின்றன. “உன்னி அப்படியே படுக்கையில் உருண்டுகிட்டே  இருக்க முடியுமா? இன்னிக்கு திங்கட்கிழமை இல்ல?”  அவன் அந்த வாக்கியத்தை ஒரு மந்திரத்தைப்போல உச்சரித்தான். அந்த வார்த்தைகளை மறந்துவிட்டால் அவனது இழப்பு திடீரென விஸ்வரூபம் எடுத்து தாங்க முடியாததாகிவிடும். அலுவலகம் கிளம்பும்போது குழந்தைகளும் அவனுடன் வந்தார்கள். குழந்தைகளுக்குப் பள்ளியில் சாப்பிட உணவு தயாரித்துக் கொடுத்திருந்தாள் அவள். அவளது வலதுகரத்தில் குங்குமப்பூத் துகள்கள் எஞ்சியிருந்தன. அதன்பின் அலுவலகத்தில் ஒருமுறைகூட அவளை நினைக்கவில்லை. ஓரிருவருடங்கள் காதலித்ததன் விளைவாக அவர்களது திருமணம் நடந்தது. குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. அதற்காக இவர்கள் வருந்தவில்லை. பணத்தேவை, குழந்தைகளின் உடல் நலக்குறைவு போன்ற சிக்கல்கள் உடலளவில் அவர்களைப் படிப்படியாக பலவீனர்களாக்கியது. சிரத்தையாக ஆடை அணிவதுகூட அரிதாகிப் போனது அவளுக்கு.மறுபுறம், அனிச்சையாக உரத்துச்சிரிப்பதைக்கூட அவன் விட்டிருந்தான். இருப்பினும் இந்தச்சூழல் அவர்களைப் பெரிதாக பாதிக்கவில்லை. அவர்களிருவரும் ஒருவரையொருவர் காதலிக்கவே செய்தனர்.அவர்களுடைய மூன்று குழந்தைகளும் அவர்களை மிகவும் நேசித்தனர்.மூத்த மகன் உன்னிக்கு 10 வயது, இரண்டாவது மகன் பாலனுக்கு 7வயது, மூன்றாவது மகன்  ராஜனுக்கு 5 வயது.அக்குழந்தைகளின் முகத்தில் எப்போதும் சளியுடன் அழுக்கும் படிந்திருக்கும். அவர்கள் அழகானவர்களாகவோ சொல்லிக்கொள்ளும்படியாக புத்திசாலிகளாகவோ இல்லை.ஆனால் பெற்றோர் இருவரும் “உன்னி நல்ல எஞ்சினியரா வருவான்.அவன் எப்பவும் எதையாவது செய்துகிட்டே இருக்கான். பாலன டாக்டருக்குப் படிக்க வைக்கணும். அவனோட முன் நெற்றியப்பாருங்க, பெரிய முன் நெற்றி புத்திசாலித்தனத்தின் அடையாளம்.ராஜன் இருட்டுல நடக்க பயப்பட மாட்டான். அவன் தைரியசாலி. ராணுவத்துல இருக்கறமாதிரித்தான்” என்று மெச்சிக்கொள்வார்கள்.அந்த நகரத்தில் நடுத்தரவர்க்கத்து மக்கள் வசிக்கும் சிறிய தெருவில் அவர்கள் குடியிருந்தார்கள். முதல் மாடியில் மூன்று அறைகளுடன்கூடிய வீடு அவர்களுடையது. அறையின் முன்புறம் நடைபாதை அமைந்திருக்கும். அதில் இரண்டுபேர் அருகருகே நிற்கலாம். அங்கேதான் தொட்டியில் ரோஜா பூச்செடி இருந்தது. அதற்கு அம்மா தினமும் தண்ணி ஊற்றுவாள். ஆனால் அந்தச்செடி இன்னமும் பூப் பூக்கவேயில்லை. சமையலறை சுவரில் உள்ள கொக்கிகளில் செப்புப் பாத்திரங்களும் கரண்டிகளும் தொங்கிக்கொண்டிருந்தன. அடுப்புக்கு அருகில் அம்மா வழக்கமாக உட்காரும் சிறிய தேய்ந்துபோன முக்காலி இருக்கும். அப்பா அலுவலகத்திலிருந்து திரும்பும்போது அவள் அங்கே அமர்ந்து சப்பாத்தி சுட்டுக் கொண்டிருப்பாள். பஸ் நின்றது. இறங்கியவுடன் அவன் முட்டி லேசாக வலித்தது. அவனுக்கு முடியாமல் போனால் குழந்தைகளை யார் பார்த்துக்குவாங்க? அவன் உடனடியாக உடைந்துபோய் அழ ஆரம்பித்தான். தனது அழுக்குக் கைக்குட்டையால் முகத்தைத்துடைத்துவிட்டு வீட்டுக்கு வேகமாக நடக்க ஆரம்பித்தான். “குழந்தைங்க தூங்கியிருப்பாங்களா? அவங்க ஏதாவது சாப்பிட்டிருப்பாங்களா இல்ல அழுதழுது களைத்துப்போய் தூங்கியிருப்பாங்களா? அவங்களுக்கு அழுகை வராமலிருக்கக்கூட முன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியிருக்கிறது. மூத்த மகன் அவள டேக்ஸிக்கு எடுத்துட்டு வந்தபோது அழாம வெறிச்சுப்பார்த்தான். சின்னவன் மட்டும்தான் அழுதான்.அதுவும் டேக்ஸியில ஏறணும்னு பிடிவாதம் பிடிச்சுத்தான்.குழந்தைகள் நிச்சயமாக இறப்பின் விளைவுகளைத் தெரிஞ்சிருக்க மாட்டாங்க. அவன்கூட அதை உணர்ந்திருந்தானா? இல்லை. வீட்டில் இருந்த அவள் ஒரு மாலைப்பொழுதில் ஒருவரிடமும் சொல்லாமல் விளக்குமாறுக்கு அருகில் வீழ்ந்து இறந்துபோவாளென்று நினைத்தாவது பார்த்திருந்தானா. அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் சன்னல் வழியாக சமையலறையைப் பார்த்தான்.அவளை அங்கே பார்க்க முடியவில்லை.

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் சத்தம் பெரிதாகக் கேட்டது. உன்னி ‘நல்லா அடிச்ச’ என்று பாராட்டிக்கொண்டிருந்தான். அவன் சாவியை எடுத்து முன் கதவைத்திறந்தான். அந்த இடத்தில்தான் தரையில் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் லேசாக வாயைத்திறந்தபடி அவள் படுத்திருந்தாள். அவனாகவே முணுமுணுத்துக்கொண்டான், ‘ அவள் அந்தப்பக்கமாகத் திரும்பினபோதுதான் கீழே விழுந்திருக்கணும்’. மருத்துவமனையில் டாக்டர், ‘ஹார்ட் அட்டாக், இறந்துபோய் அரைமணிநேரம் ஆச்சு’ என்று உறுதி செய்திருந்தார்.

அவன் திடீரென உணர்ச்சிவயப்பட்டான்! பைத்தியகாரத்தனமாக அவள் மீது கோபப்பட்டான், ‘எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாம அவளோட பொறுப்புகளை யெல்லாம் என்மேல திணிச்சிட்டு வாழ்க்கையை விட்டுட்டுப்போய்ட்டா’ என்று கோபித்தான். “இப்ப குழந்தைகளுக்கு யாரு குளிச்சுவிடுவா? அவங்களுக்கு யாரு ருசியா சமைத்துக்கொடுப்பா? அவங்களுக்கு உடம்பு சரியில்லாமப்போனா யார் பார்த்துப்பா?” ‘என் மனைவி இறந்துட்டா’ என்று முணுமுணுத்தான். “என்மனைவி இதயத்தாக்குதலினால் எதிர்பாராமல் இன்று இறந்துவிட்டதால் எனக்கு இரண்டு நாட்கள் விடுப்பு தேவை’ அந்த விடுப்பு விண்ணப்பம் எப்படியிருந்தது.என் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றுகூட இல்லை.என் மனைவி இறந்துவிட்டாளென்று.  மேலதிகாரி என்னை அவரது அறைக்கு அழைத்து, “நான் ரொம்ப வருத்தம் தெரிவிச்சுக்கறேன்’ என்றார். “அவருடைய சோகம்…அவருக்கு அவளைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அவளுடைய அலைபாயும் கூந்தலையோ; சோர்ந்துபோன புன்னகை யையோ; வேகமும் மெதுவுமான அவளுடைய நடையையோ! எதுவுமே தெரியாது.

இவையெல்லாம் அவனுக்கு மட்டுமே இழப்பு.

கதவு திறந்தவுடன் இளையவன் ஓடிவந்தான், ‘அம்மா இன்னும் வரலை’ “அவங்க நடந்த எல்லாத்தையும் இவ்வளவு சீக்கிரமாகவா மறந்துட்டாங்க?டேக்சியில் எடுத்துட்டுபோன உடல் அதுவாகவே திரும்பிக்கும்னு நினைச்சாங்களா?” அவனுடைய மகனின் உள்ளங்கையைத் தனதுகரத்தில் தாங்கிக்கொண்டே சமையலறையை நோக்கி நடந்தான். “உன்னி” என்றழைத்தான். ‘என்ன அச்சா’ உன்னி படுக்கையிலிருந்து எழுந்து வந்து, ‘பாலன் தூங்கிட்டான்’ என்றான். ‘ம் ம்… நீங்கெல்லாம் ஏதாவது சாப்பிட்டீங்களா?’ ‘இல்ல’ மகன் பதிலளித்தான். சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களின் மூடிகளை அவன் திறந்து பார்த்தான். அவள் சமையல் செய்து வைத்திருந்தாள். சப்பாத்திகள், சாதம், உருளைக்கிழங்குவறுவல், சேனைக்கிழங்கு வறுவல், தயிர் எனவும் குழந்தைகளுக்கு எப்போதாவது செய்யும் நெய்ப்பாயஸமும் கண்ணாடிப்பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. மரணத்தின் நிழல் படிந்திருந்த உணவுகள். அவற்றைச்சாப்பிடக்கூடாது.

‘இதெல்லாம் ஆறிப்போயிடுச்சு. நான் கொஞ்சம் உப்மா செய்யறேன்’ என்றான் அவன். ‘அச்சா’ உன்னி அழைத்தான், ‘ம்ம்..’ ‘அம்மா எப்ப வருவாங்க? அவங்களுக்கு இன்னும் சரியாகலையா?’. உண்மை இன்னும் ஒருநாள் பொறுத்திருக்கட்டும்’ என்று நினைத்தான் . இன்று இரவு குழந்தைகளைச் சோகத்தில் ஆழ்த்துவதால் எதுவும் நடக்கப்போவதில்லை, ஆகவே அவன், ‘அம்மா வருவாங்க’ என்றான். தட்டுக்களைக் கழுவி தரையில் கவிழ்த்து வைத்தான்.இரண்டு தட்டுக்கள். ‘பாலன எழுப்ப வேண்டாம். அவன் தூங்கட்டும்’ என்றான். ‘அச்சா நெய்ப்பாயஸம்’ என்றான் ராஜன். அவனுடைய விரல் அந்தப்பாத்திரத்தைச் சுட்டிக்காட்டியது. அவன் அவனுடைய மனைவி பயன்படுத்தும் சிறிய முக்காலியில் அமர்ந்தான். “உன்னி அவனுக்கு சாப்பிடப் போட்டுத்தருகிறாயா, அப்பாவுக்கு ரொம்ப தலைவலிக்குது” . அவங்க சாப்பிடட்டும். அவள் தயாரித்த உணவை அவங்க இனி எப்பவும் சாப்பிடப்போறது இல்ல. அவன் பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் அமர்ந்திருந்தான். சில நிமிடங்கள் கழித்து, ‘உன்னி, உனக்குச்சாதம் வேணுமா?” ‘இல்ல பாயஸம் போதும். ரொம்ப ருசியாயிருக்கு” ஒரு சிரிப்புடன் ராஜன் சொன்னான், “அம்மா ரொம்ப ருசியா நெய்ப்பாயஸம் செஞ்சிருக்காங்க”. குழந்தைகளிடம் கண்ணீரை மறைப்பதற்காக அவன் உடனடியாக எழுந்து குளியலறைக்கு ஓடினான்.

பூலோக வாசிகள்
வானளாவி நிற்கும் கட்டிடக்கூரைகள்
பிரபஞ்சவெளிக்குச் செய்தியனுப்புகின்றன
தார்ச்சாலைகளில் பாய்ந்துசெல்லும் மகிழ்வுந்துகளில்
உறுமும் புலிகள் பயணிக்கின்றனவாம்
பலதரப்பட்ட மலைப்பாம்புகள் அவற்றைச்சாகசத்துடன்
ஓட்டுகின்றன என்பதும் குறிப்பு
கவனிக்க…
பயணத்தின்போது சில இடங்களில்
நாசுக்கும் அழகும் மிளிரும் மான்தென்படும்
பாம்பு அதனிடம்
கண்சிமிட்டிக் கரம் குலுக்கி நகரும்..
ஒதுக்கப்பட்ட தவளைகளைக்கண்டால்
பாம்புக்குக் கொண்டாட்டம்
வயிற்றை நிரப்பிக்கொள்ளும்
விழுங்கும் சிங்க ராஜாக்களைக்கண்டால்
கீழ்நோக்கிய பார்வையுடன் பாதம் பணியும்
அதன் பாசாங்கில் ஏமாந்த சிங்கம் மந்தகாசம் புரியும்
வெள்ளந்தி முயல்களைக்கண்டால்
மலையனுக்கு அறவே பிடிக்காது
விஷம் உமிழும்
கழுத்தை நெறிக்க மலையத்துவசன் மகள் இல்லாத்தால்
விஷத்தில் மாளும் முயலின் குருதியும்
பாம்பைப்பெருகச்செய்யும்
ஏகபோக ராஜாக்களும் அசுரப்புலிகளும் உள்ளவரை
அரவுகளின் பயணம் இனிதே தொடரும்
மீண்டும் ஒரு முறை
புசித்துவிடலாம் அறிவுக்கனியை
கிடைத்துவிடலாம் ஒருவேளை
மேடுபள்ளங்களற்ற உலகமும்
சாத்தான்களற்ற ஓவியமும்.

smekala10@gmail.com