‘தம்பி, இது நல்ல விறுத்தம். பாக்கிறதுக்குத் திறமாய் இருக்குது. இப்பிடி ஒண்டை இந்தப் பக்கத்திலை, நானெண்டால் ஒரு நாளும் காணேல்லை. இதுக்கு என்ன பேர், தம்பி?’
‘இதை வொக்சோல் வெலொக்ஸ் எண்டு சொல்லறது, பெரியையா!’
‘நல்ல விசாலமான கார் தான், ஒரு சப்பறம் மாதிரி. கண்ணைப் பறிச்சுக் கொண்டு மினுங்குது. அதோடை, கதவைத் திறந்த உடனை சடார் எண்டு மூக்குக்கை வந்து அடிக்கிற இந்த வாசனையையும் நான் வேறை ஒரு வண்டிலிலும் காணேல்லைத் தம்பி . . . அங்கை! ஏதோ தூசி மாதிரி இருக்குது. துடையும்!’
‘ஓம் பெரியையா. இதைப் புதிசாய்த் தானே வாங்கின நான். அது தான் பளிச்செண்டு மினுங்குது, நல்லாய் மணக்குது.’
‘இங்கையும் வைச்சு ஓடுறாங்கள், இரண்டு கசவாரங்கள். முந்தி உனக்கு கார் பழக்க மறுத்த மருதங்குளத்துச் சின்னராசன்ரை ஒசுட்டின் ஏ-போட்டியும், கண்சிமிட்டிக் கதிரவேலன்ரை படான் போட்டும், உன்ரை இந்த வொசுக்கோல் காரிட்டைப் பிச்சை எடுக்க வேணும் தம்பி. உன்ரை இந்தக் கார் எந்த ஊரிலை தம்பி செய்தது?’
‘இதுகும் அவையின்ரை போட்டு, ஏ-போட்டி, மொறிசைப் போலை இங்கிலாந்திலை தான், பெரியையா.’
‘அதுதானே நானும் பாத்தன். இங்கிலீசக் காறர், அவங்கள் வெள்ளையங்கள் எல்லே. எப்பிடியும் கெட்டிக்காறர் தான்!’
‘ஓம் பெரியையா, அவையிட்டை நாங்கள் படிக்கிறதுக்கு எத்தினையோ விசயம் இருக்குது தான். எண்டாலும் நாங்களும் முன்னேறி வாறம் தானே? நாங்களும் இப்ப இப்ப நல்ல வடிவான கட்டிடங்கள், பாலங்கள், பெரிய தார் றோட்டுகள் எல்லாம், கொழும்பிலையும் மற்றஇடங்களிலையும் கட்டுறம் தானே?’
‘அது சரி ராசா. அது தானே உன்னைக் கோபாலுத் தம்பியும் நானும் எஞ்சினியருக்குப் படிக்க வைச்ச நாங்கள், உன்ரை கொம்மா செத்தாப்போலை. உனக்குத் தெரியுமோ தெரியாது, கோபாலு வருத்தமாய் யாழ்ப்பாணம் திரும்பி வர முன்னம், குருநாகல், குளியாப்பிட்டியா, தண்டகமுவவிலை எட்டுக் கடையள் எல்லாம் வித்துப் போட்டுக் கொந்துறாத்து வேலை செய்ததெல்லே, புத்தளம், சிலாபம் பகுதியிலை. அப்ப கோபாலு சந்திச்ச ஆகப் பெரிய உத்தியோகத்தர், ஒரு எஞ்சினியர் தான். அது தான், அவரைப் போலை உன்iயும் படிப்பிக்க வேணுமெண்டு . . . . . இப்ப சரி. தூசி போட்டுது. ‘
‘ஓம் பெரியையா. ஐயா செத்து இந்த ஆண்டு பன்ரண்டு வருசமாகுது. உங்கள் இருவருக்கும் பெரிய மாமாவுக்கும், நானும் அண்ணரும் பெரிய கடமைப் பட்டிருக்கிறம். ஓரு நாளும் மறக்க மாட்டம். அதோடை தம்பியன் இன்னும் படிக்கிறான் தானே. அவனும் வளந்து வந்து ஆளானாப் போலை மறக்கான். ‘
‘சீச்சீ. அப்பிடி எல்லாம் சொல்லாதை தம்பி. நாங்கள் என்ன, எங்கடை கடமையைத் தானே செய்தம். நீங்கள் உங்கடை காலத்திலை கலியாணம் செய்து பிள்ளையள் குட்டியள் பெத்து அதுகளைப் படிப்பிச்சுக் கரையேற்ற வேணும். அதுதான் உங்கடை கடமை! . . .
‘அதோடை தம்பி, நாங்கள் இண்டைக்கோ இல்லை நாளைக்கோ எண்டு இருக்கிற ஆக்கள். எங்களுக்குச் சன்மானம் ஏன்? ஒண்டுமே திருப்பித்தர வேண்டாம், என்ன! ‘
‘இதைத் தான் மாமாவும் சொல்லுறார் பெரியையா. தனக்கும் ஒரு சதமேனும் தர வேண்டாமாம். அது சரி, நாளைக்கு ஒருக்கால் யாழ்ப்பாணம் போட்டுவருவமே, என்ரை புதுக் காரிலை? எனக்கும் கச்சேரியிலை ஒரு சின்ன வேலை இருக்குது. அதோடை, முந்தநாள் நான் கொழும்பிலை இருந்து வரையுக்கை, உங்களைப் பக்கத்திலை முன்னுக்கு வைச்சுக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கும், பிறகு சாவச்செரிக்கும் ஓடித் திரிய வேணும் எண்ட ஆசையோடை தான் வந்தநான். நீங்கள் தானே முதலிலை எனக்குக் கார் ஓடப் பழக்குவிச்சுத் தர இஞ்சை எத்தினையோ தரம் தெண்டிச்சனியள், பெரியையா? ‘
(அடுத்த நாள் காலை பத்து மணிக்குப் பெறாமகன் கால்சட்டை சேட்டுடனும், பெரியையா புது வேட்டி உடுத்துச் சால்வையால் உடம்பைப் போர்த்திக் கொண்டும் இன்னுமொரு துண்டால் ஒரு தலைப்பாகை கட்டிக் கொண்டும், கைதடி நுணாவிலிலிருந்து கதைத்துக் கதைத்துக் கொண்டே காரில் கைதடியையும், செம்மணியையும் தாண்டி யாழ்ப்பாணம் செல்கின்றனர்.)
‘பெரியையா, பயமில்லாமல் வசதியாய் இருங்கோ. நான் உங்கடை பக்கத்தின் கதவைச்; சாத்திச் சிக்காராய்ப் பூட்டியும் விட்டிருக்கிறன். ‘
‘எனக்கென்ன பயம் தம்பி, உன்னோடை வாறத்துக்கு? நீர் கொழும்பிலை முறையாய்ப் பழகி லைசென்சும் எடுத்ததெண்டு சொன்னநீர் தானே? இங்கை தான் அந்த இரண்டு அறுவான்கள் கதிரவேலனும் சின்னராசனும் உனக்குக் கார் பழக்காமல் எத்தினை சாட்டுச் சொன்னவங்கள். போன வருசத்துக்கு முந்தின வருசம், நீர் படிப்பு முடிக்க முந்தி, நான் அவங்களை எவ்வளவு மண்டாடிக் கேட்டநான். ‘
‘அதுகள் எல்லாம் இப்ப ஏன் பெரியையா? அவைக்கும் வேறை பிரச்சினையள் எத்தினை இருந்து இருக்கும். நீங்கள் இப்ப வடிவாய் இருங்கோ, அக்கம் பக்கத்திலை கையை வைச்சுக் கொண்டு. ‘
‘நான் வலு சோக்காய் இருக்கிறன், தம்பி. நீர் முன்னுக்குப் பாத்து ஓடும். அங்கை லொறி ஒண்டு வருகுது. அவங்கள் கொழும்புக்குப் போறவங்கள். வெங்காயமும் மிளகாயும், சில வேளை யாழ்ப்பாணச் சுறுட்டும் ஏத்திக் கொண்டு அந்தரத்திலை, அரைக்கரைவாசி நித்திரைத் தூக்கத்திலை, கண்ணும் மண்ணும்; பாராமல் சைட்டும் தராமல் அமத்திக் கொண்டு போறவங்கள். எங்கடை இந்த றோட்டும் அவ்வளவு அகலமில்லைத் தானே! ‘
‘ஓம், பெரியையா. கொழும்பு-காலி றோட்டு, கொழும்பு-கண்டி றோட்டுகளைப் போலை இது அகலம் இல்லை. தமிழரின்ரை யாழ்ப்பாணம்-கண்டி றோட்டுத் தானே எண்டாக்கும்!
‘அதோடை, றோட்டை அகலமாக்கிறது எண்டால் அக்கம் பக்கத்திலை இருக்கிற காணியளை அரசாங்கம் வாங்க வேணும். பல இடங்களிலை பாருங்கோ கல் வீடுகள் வரிசையிலை றோட்டுக் கரையிலை கட்டியிருக்கினம். அதோடை எங்கடை ஆக்கள் சுயநலக் காறர் தானே. அதிலையும் சிலர் பிரக்கிராசிமார். தங்கடை காணியளை விட்டுக் குடுப்பினமே? எதுக்கும் நான் வலு கவனமாய்ப் பாத்து, மெல்ல ஓடுறன், பெரியையா. ‘
‘நீ சொல்லுறது சரிதான் தம்பி. இஞ்சை, ஒருக்கால் அங்கை அதிலை பார், இடது பக்க வேலியை. அந்தப் பூவரச மரம் ஞாபகமாய் இருக்குதே? . . . ‘பத்தோ பன்ரண்டு வருசங்களுக்கு முன்னை, அப்ப நீ சாவச்செரியிலை இங்கிலீசு படிக்கேக்கை, ஒருநாள் என்ன நடந்ததெண்டு ஞாபகமே? ‘
‘அதையும் நான் மறப்பனே பெரியையா, நீங்கள் மறந்தாலும்? நீங்கள் எனக்குச் சைக்கிள் ஓடப் பழக்கேக்கை விசையாய்த் தள்ளி விட்டியள். நானும் உழக்கத் துவங்கி வேகமாய் ஓடிப்போய் அந்தப் பூவரச மரத்திலை அடிபட்டு விழுந்து, துடையிலை காயப்பட்டதைப் பற்றித் தான் சொல்லுறியள். என்ன? ‘
‘ஓம் தம்பி, இப்ப நல்லாய்ப் பாக்கட்டும் அந்தக் கிழட்டு மரம், நீ புதுக் காரிலை ராசா மாதிரி ஓடிப் போறதை. சரி, துடையிலை அண்டைக்கு வந்த அடையாளம் இப்பவும் இருக்குதே தம்பி? ‘
‘சைய். அழிஞ்சுட்டுது. அது சரி பெரியையா, ரவுணிலை உங்களுக்கு என்ன செய்ய விருப்பம்? நான் என்ன வேண்டித் தாறது உங்களுக்கு? சம்பளம் எடுத்துக் கொண்டு தான் வந்தநான். ‘
‘காசை உன்ரை சிலவுகளுக்கு வைச்சிரு தம்பி. எனக்கு ஒண்டும் வேண்டாம். ஆனால் முனியப்பர் கொயிலையும், கச்சேரியையும், மணிக்கூட்டுக் கோபுரத்தையும், பெரிய ஆசுப்பத்திரியையும் மற்றது நீர் படிச்ச சென்ர்றல் கொலிச்சையும், டச்சுக் கோட்டையையும், நீதி மன்றத்தையும் காட்டி விட்டால் போதும். சாக முந்திப் பாத்திட்டுச் சாவம். ஊரிலை இருக்கிற ஆக்கள் எல்லாம் அதுகளைப் பற்றி எப்பவும் கதைக்கிறவை. ‘
‘சரி ஐயா. நீங்கள் சொன்னது எல்லாம் கிட்டக் கிட்டத் தான். முதலிலை, கச்சேரியோடை துவங்குவம். அது போற வழியிலை. என்ரை வேலையையும் ஒரேயடியாய் முடிச்சிடலாம். பிறகு, காரை நாங்கள் ஒரு இடத்திலை விட்டிட்டு, நீங்கள் சொன்ன மற்ற சில இடங்களை, நடந்து போயும் பாக்கலாம். பிறகு, பெரியையா, கோட்டைக்கு உள்ளாலை காரிலையே ஓடிப் போவம். இறங்கத் தேவையில்லை. அத்தோடை, யாழ்ப்பாண ஆசுப்பத்திரிக்குப் போற வழியிலை தான் மணிக்கூட்டுக் கோபுரமும். கோட்டைக்குக் கிட்ட முனீசுவரர் கொயில். எல்லாம் முடிச்சிட்டுப் பெரியகடையுக்கை உங்களுக்கு வருசத்துக்கு, ஒரு சோடி வேட்டி-சால்வையும் இரண்டு வெள்ளை பெனியனும் வேண்டிக் கொண்டு, ஆஸ்பத்திரிக்கு முன்னாலை இருக்கிற சைவக் கடையிலை சாப்பிட்டுட்டு, ஒரேயடியாய் வீட்டை போவம். என்ன? ‘
‘உனக்கு வீண் கரைச்சலும் சிலவும் தாறன் போலை இருக்குது தம்பி. உன்ரை வசதியின்படி ஏதோ விருப்பத்துக்குச் செய் தம்பி. எனக்கு எதுவும் சரிதான். உன்னை இனி . . . எப்ப . . . நான் காணப் போறனோ? ‘
(யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, தங்கள் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு மேலதிகமாக நல்லூர் கந்தசாமி கோவிலையும் தரிசித்து விட்டு இருவரும் ஆறுதலாகக் கதைத்துக் கொண்டே வீடு திரும்புகிறனர்.)
‘இந்த நல்லூர் கந்தசாமி கொயில் முன் பக்கம், இப்ப நல்லாய்க் கட்டியிருக்கினம், என்ன தம்பி? நான் முந்திப் போகேக்கை உப்பிடி இல்லை. ஆனால் றோட்டுகள் எல்லாம் படான் போலை இருக்குது. இங்கை இருக்கிற எஞ்சினியர் மார் சரியில்லைப் போலை இருக்குது. அல்லது . . . றோட்டுத் திருத்த எண்டு குடுக்கிற காசிலை, அரைக்கரவாசி தங்கடை பையளுக்கை போடீனமோ? ஏன் தம்பி, எங்கடை நல்லூர் கொயிலைப் போலை, எங்கடை றோட்டுகளையும், அப்பப்ப திருத்தி, முறையாய் வைக்கேலாது? ‘
‘அதிலை எத்தினையோ விசயம் இருக்குது பெரியையா. கொயில், சனங்களாலை காசு போட்டுப் பாக்கிற விசயம். அதோடை நம்பிக்கை, நேர்த்திக் கடன் எண்டும் மனம் சம்பந்தமான பயங்களும் இருக்குது தானே? . . .
‘றோட்டுத் திருத்த, கவுண்மேந்து தான் காசும் குடுக்க வேணும். சரியான அளவிலை காசு கிடைக்காட்டில் எஞ்சினியர் மாரோ ஓவசியர் மாரோ ஒண்டும் செய்ய ஏலாது. உங்களுக்கும் தெரியும்தானே, அரசியல் பிரச்சினையளைப் பற்றி.
‘அந்தச் சிங்களப் பெரும்பான்மை ஆக்கள் நடத்திற அரசாங்கங்கள் இப்பிடியான புனருத்தாரணம், கட்டுமானம், அபிவிருத்தி வேலையளுக்காக, தமிழ்ப் பகுதியளுக்கு, எப்பவுமே போதிய பணம் தருவதில்லை. எம் சுதந்திரத்தின் பிறகு, நடந்த எட்டு வருசங்களையும் பாத்தால், சிங்களப் பகுதியளுக்கு நன்மை செய்து, எமக்கு ஓரவஞ்சனையாயே நடந்திருக்கினம். ‘
‘எனக்கு உதுகளெல்லாம் விளங்காது தம்பி. நான் ஒரு பேப்பரும் படிக்கிறதில்லை. ஆனால் என்ரை அனுபவமும் உள்மனமும் சொல்லூது, தமிழ் ஆக்களைத் தமிழர் தான் தமிழிலை ஆளுறது நல்லது எண்டு. ஏன், எங்கடை ஆக்கள் என்ன குறைவே? இதைத்தானே செல்வநாயகம் பிரக்கிராசியும் மெல்ல மெல்லமாய்ச் சொல்லித் திரியுது எண்டு கேள்விப்பட்டன், எங்கடை இலெக்சன் பேச்சுகளிலை. ‘
‘அவர் அப்புக்காத்து, பெரியையா! பிரக்கிராசி மாருக்குக் குரு!! இப்ப என்னெண்டால், இளைப்பாறீட்டு அரசியலிலை எங்களுக்காகக் களத்திலை இறங்கி வந்திருக்கிறார். அவரை அரசியலுக்கு அழைச்ச பொன்னம்பலம், சிங்களவரோடை சேர்ந்து நடந்து கொண்டு ஒவ்வொரு ஏதும் கட்டத்திலையும் இலங்கை முழுதிலும் தமிழர் சமவுரிமைக்குச் சண்டை பிடிக்க வேணும் எண்ட கொள்கை. செல்வர் சொல்லுறார், இல்லை, எங்கடை தமிழ்ப் பகுதியளிலை எங்கடை உரிமையளை எழுத்திலை வேண்டிக் கொண்டு இரண்டு பகுதியும் இலங்கையிலை ஒற்றுமையாய் இருப்பம் எண்டு. அதுதான் இப்ப பிரிஞ்சிட்டினம். ஒருதருக் கொருதர் போட்டியாய் தேர்தலிலையும் ஆள் போடீனம். ‘
‘நீரும் இலெச்சன் நடத்தத் தானே இந்தமுறை இங்கை வந்தநீர். அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லும் தம்பி. ‘
‘கனக்கச் சொல்ல இல்லை ஐயா, அதிலை. நாளையிண்டைக்குத் தானே தேர்தல். நான் சங்கத்தானை இந்துக் கல்லூரியிலை இருக்கிற வாக்கீடு நிலையத்துக்குப் பிரதம தேர்தல் அதிகாரியாய்ப் பொறுப்புத் தந்திருக்கினம். ‘
‘வேறை, என்னோடை வேலைக்கு, ஒரு உதவி அதிகாரியும் இரண்டு லிகிதர்களும். அவை தங்கடை பாட்டிலை நேரை அங்கை வருவினம். சில இடாப்புகளும் மற்றச் சாமான்களும் என்ரை பொறுப்பிலை தந்து, நான் என்ரை காருக்கை, பின்னாலை, பூட்டி வைச்சிருக்கிறன். நாங்கள் எல்லாரும் அங்கை முதல் நாள் இரவே போய்ப் படுத்திட்டு வெள்ளண எழும்பி ஆயத்தப் படுத்தி வாக்காளர் வர முன் நிலையத்தைத் திறந்து வைக்கவேணும். இரவே இரண்டு பொலிசுக்காறர் வந்திடுவினம், பாதுகாப்புக்கு. சில சாமான்களை அரசார் நேரை தந்திட்டுப் பிறகு எடுப்பினம். நான் ஒரு பியோன் மட்டும் கொண்டு போக வேணும். ‘
‘தம்பி, நான் உன்ரை பியோனாய் வரட்டே? எனக்கும் உதுகள் எல்லாம் பாக்க நல்ல ஆசை. அதோடை நானும் ஒரு நாளாவது கவுண்மேந்தின்ரை சின்ன வேலை எண்டாலும் செய்தால் கொஞ்சம் பெருமையாய் இருக்கும் தானே? ‘
‘எனக்கு நம்பிக்கையான, இளம் பொடியன் எண்டால் தான் நல்லது, பெரியையா. நான் தம்பியனைக் கூட்டிக் கொண்டு போகத்தான் இனைச்சது. ஆனால் நீங்கள் விரும்பினால் சில நிபந்தனையளோடை வரலாம். அப்பிடி உங்களுக்குச் சரிவருமோ தெரியாது. நான் சொல்லுறன். விருப்பம் இல்லாட்டில் அந்த எண்ணத்தை விட்டிடுவம். இது பொது மக்களின்ரை விசயமெல்லே? கவனமாய் இருக்க வேணும். முதலிலை நீங்கள் ஒரு சவரம் செய்து சட்டை போட்டுக் கொண்டு விறுத்தமாய் வரவேணும். . .
‘. . .
மற்றது நான் அங்கை உங்களைப் பெரியவர் எண்டு தான் கூப்பிடுவன். பெரியையா எண்டு சொல்லவே மாட்டன். மற்றவையும் சும்மா உங்கடை பேரை மட்டும் தான் சொல்லிக் கூப்பிடக் கூடும், பியோன் பொடியள்மாரைக் கூப்புடற மாதிரி.
‘. . . அதோடை, நீங்கள் வாக்குப் பெட்டியள் போன்ற சாமான்களைத் தூக்கிக் கச்சேரி வானுக்கை வைக்க வேண்டி வரும், பெரியையா. ‘
‘அதெல்லாம் என்னாலை செய்ய முடியும் தம்பி. நான் கவுண்மேந்துக்கும் உனக்கும் தானே வேலை செய்யப் போறன். அதிலை குறை என்ன? ‘
‘இன்னும் ஒண்டு பெரியையா . . .
‘உங்கடை சொந்த வோட்டு, மாமான்ரை சித்தி விநாயகர் பள்ளிக்கூட நிலையத்திலை எண்டு நினைக்கிறன். என்னோடை வாறதெண்டால் உங்கடை வோட்டுப் போடேலாது. அதோடை இந்த இலெக்சனிலை போட்டி போடுற குமாரசாமியையும் நவரத்தினத்தையும் உங்களுக்கும் நல்லாய்த் தெரியும். சங்கத்தானையும் இந்த ஊரும் ஒரே தொகுதி. அப்ப அங்கை நாங்கள் வேலை செய்யேக்கை அவையள் அங்கை வரவும் கூடும். இவருக்கோ அவருக்கோ பாரபட்சமாய் எப்பவும் ஒண்டுமே கதைக்கப் படாது. நடு நிலைமையிலை நாங்கள் நிண்டு நீதவான்கள் போலை வேலை செய்ய வேணும். சரிதானே? ‘
‘அது எல்லாம் சரி தம்பி. எங்கடை வீடும் கிட்டீட்டுது. அப்ப நாளை இரவு தானே சங்கத்தானைக்குப் போய்ப் படுக்கப் போறம். என்ன? நாளைக் காலமைதானே சாவச்செரிக்குப் போறதெண்டு சொன்னநீர்? ‘
‘நீங்கள் பிறகு என்னோடை இலெக்சன் வேலைக்கு வாற படியால் நாளைக்காலமை வெள்ளெண, நாங்கள் சாவச்செரிக்குக் கெதியாய் ஓடிப்போட்டு வருவம், மத்தியானச் சாப்பாட்டுக்கு முன்னம். என்ன பெரியையா? ‘
‘எல்லாமே சரி தம்பி. எல்லாம் விளங்குது. எனக்கு எல்லாமே சரி. நீர் பக்கத்திலை காரை நிறுத்திக் கதவைத் திறந்து விடுமென். நான் இறங்கிச் சடக்கெண்டு தட்டியைத் திறந்து விடுறன். நீர் காரை வளவுக்குள்ளை விட்டிட்டுக் குளிச்சுப் போட்டு, கெதியாய் வாரும். ஏதும் தேத்தண்ணி குடிச்சிட்டுக் கொஞ்சம் ஆறுவம். காலமை போய், இப்ப தானே வாறம். நாங்கள் மத்தியானம் சாப்பிட்டாலும் இரண்டு பேரும் நல்லாய்க் களைச்சிட்டம். என்ன? ‘
(அடுத்த நாள் இருவரும் அதே புதுக் காரில் சாவகச்சேரிக்குச் சென்றனர். திரும்பும் வழியிலே முந்திய நாளைப் போல, இருவரும் பத்தையும் பலதையும் பற்றிக் கதைத்துக் கொண்டு செல்கின்றனர்.)
‘தம்பி, நாங்கள் சாவச்செரி மாக்கெற்றிலை வாங்கின காய்கறி எங்கள் ரண்டு பேருக்கும் போதும், என்ன சொல்லுறீர்? ‘
‘மீனும் வாங்கினது தானே. போதும் எண்டு நினைக்கிறன், பெரியையா. இப்ப வேறை ஒண்டு கேக்கப் போறன். கேக்கட்டே?
‘ஐயா, நாங்கள் அப்போதை வாற வழியிலை புறக்ரற் கந்தசாமிக்கு நாங்கள் முந்தி வித்த நுணாவில் சந்தியில் வளவைச் சுத்திப் போட்டிருக்கிற மதிலைக் காட்டினியள் எல்லே? அதுக்கு ஆரிட்டை அனுமதி எடுத்திருப்பர் அவர், கந்தசாமி? இங்கத்தையில் கிராமச் சங்கத்திட்டையோ? யாழ்ப்பாணம் கச்சேரியிலோ? அல்லது பெருஞ்சாலைத் திணைக்களத்திலையோ? ‘
‘அவர் ஆரிட்டையும் அனுமதி கேக்காமல் கட்டினாரோ தெரியாது. ஆனால் கிராமச் சங்கம் தான் அதைக் கண்காணிக்கிறது முறை எண்டு நான் நினைக்கிறன். ஏன் தம்பி கேட்டனி, அதைப் பற்றி? ‘
‘இல்லை ஐயா, உங்களுக்கும் அப்பிடி ஒரு மதில் கட்டித் தர எனக்கு விருப்பம். இப்ப யோசிச்சு வைச்சால் நான் அடுத்த முறை வரேக்கை கட்டலாம். கட்ட ஒரு கிழமை தான் எடுக்கும். ‘
‘அதைப் பற்றி ஆற அமர இருந்து யோசிப்பம் தம்பி.
‘எனக்கெண்டால் கிடுகு அல்லது பனை ஓலையோ கிஞ்ஞாக் கம்போ பாவிச்சுப் போடுற வேலியிலும் நன்மையள் இருக்குது போலைத் தெரியுது. ஏனெண்டால் ஒண்டு, பச்சைக் கதியாலுகளாலை வளவும் நல்ல குளிர்மையாய் இருக்கும். தோட்டம் செய்யிறதுக்குக் குழையும் வரும். மற்றது லொறிக்காறர் தற்செயலாய் உடைச்சாலும், திருத்திறதும் சுகம், எண்டு இனைக்கிறன். நீர் என்ன நினைக்கிறீர் தம்பி, அதைப் பற்றி? ‘
‘சரி, யோசிப்பம் பெரியையா. அங்கை, பொலீஸ் ஸ்ரேசனுக்கு முன்னாலை ஒரு லொறி நிக்குது. என்னவாக்கும்? ஏதும் கள்ளச் சாமான் கொண்டு போய்ப் பிடிபட்டினமோ? நான் மெல்லப் போறன். நீங்கள் ஒருக்கால் உற்றுக் கவனமாய் பாத்துக் கொண்டு வாருங்கோ பெரியையா. எனக்கு நிக்கவும் விருப்பமில்லை. பிராக்கும் பாக்கக் கூடாது எண்டதும் என்ரை பழக்கம். ‘
‘தம்பி, அது ஏதோ அக்சிடன்ர்ற் போலை இருக்குது. லொறியின்ரை இடது பக்கம் நெளிஞ்சிருக்குது. பொலிசின்ரை மதிலும் உடைஞ்சிருக்குது.’
‘அப்ப, நீங்கள் நேற்றும் இண்டைக்கும் சொன்னதிலை எவ்வளவோ உண்மையள் இருக்குது தான். எங்களுக்கு மதில் வேண்டாம். இருக்கிற மாதிரி கிடுகு வேலியோடை வைச்சிருப்பம்! ஐயா, அது தானே நாகலிங்கத்தார் வீடு, ஒம்பதாம் கட்டைக்குப் பக்கத்திலை?
‘.அவற்றை மக்கள் வெளியிலை ஒவ்வொரு திக்கிலை வேலை எண்டு அறிஞ்சன். இப்ப ஆர் உதுக்கை இருக்கினம்? ‘
‘நீர் சொன்னது சரி, தம்பி. மகன்மார் ஒருத்தர் டாக்குத்தர். மற்றவர் பிரக்கிராசி. இரண்டு பேரும் வெளி நாட்டிலை. மகள்மார் எல்லாம் கலியாணம் செய்து அங்கை அங்கை புருசன் மாரோடை. கடைசியான் பிள்ளை தான் இருக்குதாக்கும், இங்கை, இப்ப. அல்லது வாடைக்குக் குடுத்திட்டினமோ தெரியாது. ‘
‘பெரியையா, அங்கை கொஞ்சம் பாருங்கோ, முன்னுக்கு இடது பக்கம் இருக்கிற பலசரக்குக் கடையை இப்பவும் கனகர் தான் நடத்திறாரோ? அல்லது அவற்றை பிள்ளையளோ? ‘
‘அவர்தான் நடத்துறார் தம்பி. பிள்ளையள் இருந்திட்டு உதவியாக்கும்! ஆனால் அவருக்கு அதுதான், சீவியத் தொழில். ஊர் ஆக்களுக்கும் அவர் கையாலை சாமான் வேண்டுறது தான் விருப்பமாம். ‘
‘பெரியையா, அங்கை பாருங்கோ, வலது பக்கத்திலை. நாங்கள் இப்ப கதைச்சது இங்கை கூட நடந்திருக்குது போலை கிடக்குது. கந்தசாமியற்றை மதிலுக்குள்ளையும் ஒரு கார் அடிபட்டுக் கொண்டெல்லே நிக்குது, சத்தாருக்கு. ஒரு பழங்காலத்து போட் கார் போலை தெரியுது. எங்களுக்கு மதில் வேண்டவே வேண்டாம், பெரியையா. வேலி போதும்! ‘
‘ஓம் தம்பி. பக்கத்திலை கார்க்காரச் சின்னராசன் நிக்கிறான். என்னையும் கண்டுட்டுக் கையையும் காட்டுறான், சின்னராசன். கொஞ்சம் நில்லு தம்பி, ஒரு பக்கத்திலை. என்னெண்டு கேட்பம். ஆனால் உது கண்சிமிட்டிக் கதிரவேலன்ரை காரெல்லோ, அடி பட்டு நிக்கிறது? அதை மருதங்குளத்துச் சின்னராசன் ஏன் காவேந்து பண்ணிறான்? வேண்டீட்டானோ? எண்டாலும் போய்ப் பாப்பம் தம்பி.’
(காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி றோட்டுக்கு மற்றப்பக்கம் செல்கின்றனர். ஓடிவந்த மருதங்குளச் சின்னராசன் இவர்களுடன் கதைக்கத் தொடங்குகிறார்.)
‘அண்ணை! அண்ணை! அண்ணை! கடவுள் மாதிரி வந்திருக்கிறியள். எனக்கு உதவுறதுக்கு! இதார், உங்கடை பெறாமகன், எங்கடை எஞ்சினியர் தம்பி போலை எல்லோ இருக்குது?
‘அவற்றை புதுக்காராக்கும். இவன் கதிரவேலன்ரை காரிலை நான் தொத்திக் கொண்டு சாவச்சேரிப் பக்கம் நாங்கள் போகேக்கை பின்னாலை இருந்து ஒரு லொறி வந்து எங்களை அடிச்சு இந்த மதிலுக்கை தள்ளிப்போட்டு நில்லாமல் ஓடீட்டான். காரோட்டி வந்த கதிரவேலு மூச்சுப் பேச்சில்லாமல் இருந்து இப்ப எழும்பிக் காரின்ரை பின் சீற்றிலை படுத்திருக்கு. ஒருக்கால் அவனை ஆசுப்பத்திரிக்கும் பொலீசுக்கும் கொண்டு போக முடியுமே அண்ணை? உங்கள் இரண்டு பேரையும் காலிலை விழுந்து மண்டாட்டமாய்க் கேக்கிறன் அண்ணை, எங்கடை கதிரவேலுவுக்கும் எனக்குமாக. முந்தி எத்தினை தரம் நீங்கள் மாறி மாறிக் கேட்டபோது கார் பழக்கித் தராதது எல்லாத்தையும் மன்னிச்சிட்டு எங்களுக்குத் தயவுசெய்து உதவுங்கோ அண்ணை! தம்பி! ‘
(பெரியையாவும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். ஒரு தயக்கமும் இருவரின் முகத்திலும் இல்லை. உடன் முடிவு. கார் திரும்பியது. கதிரவேலுவை ஆஸ்பத்திரியிலும் சின்னராசனைப் பொலிசிலும் விட்டு விட்;டு வீடு சென்றனர். பெரியையாவின் முகத்தில் பெருமிதம் தாண்டவமாடியது. அதைப் பெருமூச்சு ஒன்றுடன் கவனித்த மகன், தேர்தல் வேலையை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பினார். அவர் மறுமுறை கைதடி நுணாவிலுக்கு வந்தது அடுத்த ஆண்டு, பெரியையாவின் மரணக் கிரிகைகளுக்கு!)