எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருபவர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியிலும் எழுதும் ஆற்றல் உடைய சிங்கையின் முன்னணி எழுத்தாளர். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழவேள் விருது கொடுத்து சிறப்பித்து வருகின்றது. இவ்வாண்டு எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் எழுதும் இவரது ஆற்றலுக்கும், சிறுகதைகள், நாடகங்கள், [வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள், ] எழுதி இயக்கிய இயக்குனராக, ஆய்வுக்கட்டுரையாளராக, நூலாசிரியராக, தமிழுக்கு இவர் ஆற்றிய இலக்கிய அர்ப்பணத்துக்கு, தமிழவேள் விருது, தங்கப் பதக்கமும், மற்ற சிறப்புக்களுடன் நாடாளுமன்ற திரு விக்ரம் நாயர் தலைமையில் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இவரை கெளரவித்தது. ‘தமிழ் ஆதர்ஸ்.காம்’ அகில் சாம்பசிவம் அவர்களால் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் காணப்பட்ட நேர்காணல் இது.


அகில்: உங்களைப்பற்றிய சிறிய அறிமுகத்தோடு நேர்காணல தொடங்கலாம் என்று நினைக்கிறேன், முதலில் உங்கள் எழுத்துலக தொடக்கம் பற்றி சொல்லுங்கள்?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்:  கேரளத்தைச்சேர்ந்த ஒற்றப்பாலம் குருப்பத்த வீடு எனும் தேவி நிவாஸ் தரவாட்டைச் சேர்ந்தவர் தந்தை. அம்மாவும்  பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் படித்து வளர்ந்த நான், குழந்தையிலிருந்தே, குடும்ப  தரவாட்டுப் பெருமையைப் பெற்றோர் சொல்லிச்சொல்லி கேட்டு வளர்ந்ததால், எந்நேரமும் மலையாளமே என் முதல் மொழியாக உணர்ந்து வளர்ந்தவள்.ஆனால் கற்ற ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் எனக்கு தமிழ் கற்பிக்க வந்த ஒரு தமிழாசிரியரின் ஊக்கத்தால், தமிழ் மீது அபாரக்காதல் உண்டானது. எனது கட்டுரைகளை எல்லாம் அவரே தமிழ் நேசன் சிறுவர் அரங்கத்துக்கு அனுப்பினார்.கட்டுரை பிரசுரமாகும் போது பள்ளியில் கிட்டிய அங்கீகாரம்,ஆசிரியர்களின் பாராட்டு, அதனாலேயே, இன்னும் முனைப்பாக எழுதவேண்டுமே  எனும் ஆசை –இப்படியாகத்தான் எழுதத் தொடங்கினேன். தமிழ்நேசன், தமிழ்முரசு, தமிழ் மலர். மயில், பத்திரிகைகள் மட்டுமின்றி, மலேசிய வானொலியில் அந்த சின்ன வயதிலேயே சிறுவர் நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.கவிதை, சிறுகதைகள், தொடர்கதைகள், என என்னை எழுதவைத்ததே அன்றைய பத்திரிகையாசிரியர்கள் எனக்குத் தந்த ஊக்கத்தால் மட்டுமே.

அகில்: உங்களை எழுதத்தூண்டியது எது?

 

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: மொழி மீது ஏற்பட்ட அபாரக் காதல் தான்.ஆங்கிலப்பள்ளியில் படித்தாலும் வீட்டில் மலையாளம் மட்டுமே பேசும் குடும்பம் எங்களுடையது.என்றாலும் ஆங்கிலத்தில் அன்றைய ஷெல்லி, கீட்ஸின் கவிதைகள் கவர்ந்தது. மலாய் மொழி பள்ளியில் கட்டாயப்பாடமாக இருந்த்தால்,மலாய்மொழியில் அந்த சின்ன வயதிலேயே இதழ்களில் கவிதைகள் எழுதியிருக்கிறேன்.

அகில்: உங்களுக்கு முகவரி தந்த படைப்பு, எப்படிஉருவானது? அது முற்றிலும் புனைவா? அல்லது உங்கள் வாழ்வனுபவத்திலிருந்து உருவானதா?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்:  புனைவு தான் .சிறுவர் அரங்க கட்டுரைகளிலிருந்து ஞாயிறு இதழில் மகளிர் அரங்க பகுதியில், சங்க இலக்கியக் கட்டுரைகள்,கவிதைகள், எனத் தொடங்கி, பிறகு சிறுகதை எழுதத் தொடங்கினேன். தமிழ்நேசனில் வெளிவந்த விலாசினி என்ற சிறுகதை தான் நான் எழுதிய எனது முதல் சிறுகதை. ஆனால் 45 ஆண்டுகட்கு முன்பு முகவரி தந்த முதல் படைப்பு, எனது ’இது தான் சொர்க்கம் ’எனும்  சிறுகதை தான்.அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக தேர்வு பெற்ற கதை அது.

அகில்:    உங்களுடைய கதைக்கரு எப்படி உருவாகிறது? கிடைத்த கருவை எப்படிக்கதையாக்குகிறீர்கள்?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: அன்றாட வாழ்வியலில் நான் சந்தித்த நிதர்சனங்கள் சிலவற்றை கதையாக்கியுள்ளேன் .என்றாலும், களப்பணி செய்தும் கதைகள் எழுதுகிறேன். சிறுகதைக்கான களன்களை மனது உள்வாங்குவதை விட, சமுதாய பிரக்ஞை அவ்வப்போது உரமூட்டுவதால் கவனமும் பொறுப்பும் எழுத்தில் தீவிரமாகிட பாடுபடுகிறேன்.சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த பரிச்சயமுண்டு. இன்றும் நான்  , மயங்கி, உருகி படிக்கும்  சங்க இலக்கிய ஏக்கத்தாலேயே சங்க மொழித் தலைப்புக்களில் கதைகள் எழுதுகிறேன்

அகில்: வாசிப்பு – எழுத்தாற்றலின் உந்தலுக்கு உள்ள உறவை எப்படிப்பார்க்கிறீர்கள்?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு, மட்டுமே ஒரு படைப்பாளியை முழுமையாக்குகிறது என்பதை அழுத்தம் திருத்தமாய் நம்புபவள் நான். தமிழ்மொழி பேசாத குடும்பத்தில் பிறந்த நான் தமிழ்  எழுத்தாளரானதே எனது தீவிர வாசிப்பால் மட்டுமே. தமிழ், மலையாளம் ஆங்கிலம் , மலாய் ,என நான்கு மொழிகள் சரளமாக எழுத பேசத்தெரியும் .   இப்பொழுது இன்னுமொரு தேசிய மொழியும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எல்லாமே எனது இலக்கிய பயணத்துக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது, .பிறமொழி இலக்கியங்களில்
உள்ள விரிவாக்கம் ஒவ்வொரு முறையும் என்னை பிரமிக்க வைக்கிறது, செகாவ், டால்ஸ்டாய், மாப்பாசான், கார்க்கி, என படிக்கத்தொடங்கிய பிறகே புத்திலக்கிய சிந்தனையே என்னுள் மூட்டம் கண்டது.

அகில்: எழுதுவது, வாசிப்பது ஆகியவற்றில் தற்போது எதில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள்?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: இரண்டுமே என்றாலும் , அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு ஓய்விலிருக்கவேண்டிய கட்டாயம் , அதனாலேயே அதிகமும் வாசிப்பில்தான் என் நேரம் கழிகிறது . பொன்னான , புதையல் போன்ற புத்தகங்களை நிதி கிட்டினாற்போல் நெஞ்சிலணைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்றாலும் நீண்ட எனது படைப்பு ஒன்றையும் அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். அண்மையில் மிகப்பெரிய பொறுப்பான எழுத்துப்பணிக்கான வேலை என்னை வந்தடைந்துள்ளது.அதற்கான களப் பணியினைத் தொடங்க வேண்டும்

அகில்: நீங்கள் எதிர் கொண்ட சவால்கள்?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: நான் தமிழ் எழுத வந்ததே எனக்குப்பெரிய சாதனைதான் ,இதைவிட சவால் வேறில்லை.வீட்டில் , சுற்றுவட்டத்தில் என நான் முழுக்க முழுக்க மலையாள உலகில் வாழ்பவள் . தமிழ் எழுத வந்ததற்கான  ஒரே காரணம் தேன் மதுரத் தமிழ் மொழியின் மீது எனக்கேற்பட்ட அபாரக் காதலால் தான்.அதற்கான எனது முதல் ஆசான் மஹாகவி பாரதியார் மட்டுமே.தமிழ் அற்புதமான மொழி, தெய்வீக மொழி , என 40 வருடங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்த அன்று மிகக் கடுமையாக எதிர்ப்பு இருந்தது. தாய்மொழியும் எழுதத்தெரியும் என்று நிரூபிக்க மலையாளத்திலும் இலக்கியம் படைத்தேன், விருதுகள் பல பெற்றேன் , இப்போது அந்த அலையெல்லாம் இல்லை.

அகில்: இன்றைய மலையாள இலக்கியப் போக்குகள் குறித்த உங்களது அபிப்பிராயம் என்ன?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: அற்புதமாக இருக்கிறது. பின் நவீனத்துவம் பற்றிய சிந்தனை, பரீட்சார்த்த முறையில் கதைகள் புனைவது என அபாரமாய் போய்க்கொண்டிருக்கிறது.போட்டி, பொறாமை , என எந்த தொல்லையும் அங்கில்லை.

அகில்: உங்களை கவர்ந்த சிறந்த மலையாள படைப்பாளிகள் யார்? அவர்களின் படைப்புக்கள் தமிழ்மொழியில் வந்திருக்கிறதா?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: பலர் இருக்கிறார்கள் , ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவர்களை மிஞ்சி  புதியவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். தகழி, காரூர் நீலகண்டன் பிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் , ஆற்றூர் ரவிவர்மா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, வைக்கம் முகம்மது பஷீர்,என பட்டியலிட்டால் நீண்டுபோகும்.
இவர்களில் பலரின் நூல்களும் தமிழில் சுலபமாகக்கிட்டும் .ஆனாலும் இன்று புதிதாக எழுத வந்தவர்கள் சொக்க வைக்கும் நடை மட்டுமல்ல. ஆச்சரியமூட்டும் நடையால் , கருவால், மொழியால் திகைக்க வைக்கிறார்கள்.

கமலாதேவி அரவிந்தன்அகில்: பன்மொழிப் புலமை உள்ளவர் நீங்கள். உங்களுடைய அப்புலமை நீங்கள் பலபடைப்புக்களை வெளிக்கொண்டுவருவதற்கு காரணம் என்று சொல்லலாமா?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: என்னை அப்படி நான் நினைத்ததே  இல்லை.பல பிறமொழி இலக்கியங்கள் படிக்கும் பேறு கிட்டியது  இறைவன் எனக்களித்த கொடை. ஒரு இலக்கியவாதிக்கிருக்கவேண்டிய முக்கியமான பொறுப்பு, எழுதும் துறை அது சிறுகதையாகட்டும் , நாவலாகட்டும் , நாடகங்களாகட்டும், அந்தந்த துறைக்கான உழைப்பு என்ன என்பதை முழுமையாக அறிந்தவள் நான். அதற்கான எழுத்துப்பயிற்சியை முறையாகப் படித்தவள் நான் . சிங்கையில் மேடை நாடகத்துறையில் முக்கியமான சில விருதுகள் பெற்றபோது சென்னை கூத்துப்பட்டறையில் ந.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளிடம் போய் நவீன இலக்கியம் பயின்றேன், சிறுகதைக்கான, ஆய்வுக்கட்டுரைகளுக்கான மொழியியல் கோட்பாடுகள் வரை முறையாகப் படித்திருக்கிறேன். இன்றும் கேரளம் சென்றால் ஒரு பள்ளி மாணவியின் ஆர்வத்தோடு பயிற்சி வகுப்புகளில் சென்று பயில்கிறேன்

அகில்: ஒரு கதைக்கான கருவை எந்த மொழியில் சிந்திக்கிறீர்கள்? ஒருமொழியில் சிந்தித்து வேறு ஒருமொழியில் கொண்டுவருவது இலகுவனதாகுமா? அப்படிக்கொண்டுவருவது வலிந்து கொண்டுவரப்படுவது ஆகாதா?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: என் தாய்மொழி மலையாளம் .காலையிலிருந்து இரவு வரை நான் சுழலும் மொழி மலையாளம். அப்படியிருக்க மலையாளத்தில் தானே சிந்திக்க முடியும்.மலையாளத்திலும் நான் எழுதுவதால் மலையாளத்தில் சிந்தித்து, மலையாளத்திலேயே,வடிவமும் கொடுத்த பிறகே, அதை தமிழ் படுத்துகிறேன் , அதில் எந்த சிரமமும் நான் உணர வில்லை.

அகில்: மொழிபெயர்ப்பில் உங்களுடைய கோட்பாடு என்ன?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: கதைக்கருவைச் சிதைக்காமல், மொழியை கடினமாக்காமல் ,வாசகன் மிக இயல்பாக வாசித்துச் செல்லும்
நடையில் கதையோட்டத்தைக் கொண்டு போவதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அமரர் நா.கோவிந்தசாமியின்   திசைகள் , ம.சண்முகசிவாவின் , ஒரு கூத்தனின் வருகை, சிவகாமியின் , க.பாக்கியத்தின், என சிலரின் கதைகள் எனக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது

அகில்: பெண் கவிஞர்களின் பெண்ணியம் மற்றும் பெண் உடல்,,மொழியை அடையாளப்படுத்துதல் என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அது இயல்பானதுதானா, அல்லது வலிந்து சொல்லப்படுவதா?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: பெண்ணியம் பற்றி பேசும் தகுதியே எனக்கில்லை.கணவர் கிழித்த கோடு தாண்டாதவள் நான். இதைச்சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அருமையான மனிதர் என் கணவர். என் இலக்கிய வாழ்வுக்கு , எங்கள் தாம்பத்யத்தில் என் விருப்பத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் கணவரின் விருப்பத்தை மீறி நான் வாழ்ந்ததில்லை. அதற்கான கட்டாயமே எனக்கு வந்ததில்லை.ஆனாலும் ஒன்றை மட்டும் கூற முடியும். உடல்மொழி குறித்து எழுதுகிறார்கள் என்றால் அது அவர்கள் சுயம் . அது குறித்து விருப்பு , வெறுப்பு கூற நாம் யார் ?

அகில்: இது வரை உள்ள உங்கள் இலக்கிய வாழ்வில் நீங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்கள்  ஏதேனும் உண்டா  ?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: நான்கு ஆண்டுகளாக என் கதைகளை நூலாக்கம் செய்ய என் பின்னால் அலைந்து, கதைகள் கைக்கு வந்தவுடன், என் எழுத்து, என் உழைப்பு, என் கண் முன்னாலேயே எப்படி வியாபாரமாக்கப்பட்டது என்பதை கற்பித்த ஒரு கசடனைப்பற்றி  மட்டுமே சொல்லமுடியும். ஆனாலும் இந்த அனுபவம் கூட இல்லையென்றால் பிறகு மனிதர்களைப்பற்றிய புரிதல் தான் என்ன? வருத்தம் தானே தவிர கோபமில்லை.

அகில்: ஒரு எழுத்தாளன் பிறக்கிறனா?  உருவாக்கபடுகின்றானா?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: இதுவும் அவரவர் இயல்பினாலேயே உருவாகிறது. நான் உருவாக்கப்படவில்லை.நான் மலாய் மொழி ஆசிரியையாக வருவேன் என்றுதான் இளம் வயதில் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு இலக்கியவாதியாவேன் என்று என்று என்னுடைய 18ம் வயதில் கூட , [இத்தனைக்கும் அன்று நான் எழுதிக்கொண்டிருந்தேன்] நினைக்கவில்லை. ஆனால் இலக்கியம் மட்டுமே எனது சுடரொளி என எனக்கு உணர்த்தியவரே என் கணவர் தான். கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு வானொலியில் டிஸ்கஷனுக்கு கணவரோடு போயிருக்கிறேன். வானோலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள், என பொறி பறக்க எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் முரசு ஆசிரியர் அரசு சார், ஒருநாள் மலையாள அமைப்புக்கே வந்து என்னை தமிழ் முரசுக்கு கதைகள் அனுப்புமாறு கூறினார்.சிறுகதைகள், தொடர்கதைகள் என மீண்டும் இன்னொரு சுழற்சி. இதில் உருவாக்கல் என்ன , உருவாக்கப்படல் என்ன? வாசகர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

அகில்: டில்லி புத்தகக்கண்காட்சிக்கு போய்வந்த அனுபவத்தை விவரிக்கமுடியுமா?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: அற்புதமான அனுபவம்.பல மொழி இலக்கிய நூல்களை  ஆசை தீர வாங்கினேன் . அருமையான இலக்கியவாதிகள் பலரை சந்தித்தேன் , மிகச்சிறந்த நாடகங்கள், கலாச்சார நடனங்கள், முற்றிலும் புதிய
நவீனத்துவ கண்காட்சிகள், நடக்க நடக்க தீராத புத்தக அரங்குகள்,டெல்லி தமிழ்ச்சங்கத்துக்கு என்னை  அழைத்துச்சென்ற பென்னேஸ்வரன் தம்பதிகள், புதுடெல்லிக்கே உரித்தான அந்த குளிர்கால சீதோஷ்ணம், என மறக்க முடியாத பல அனுபவங்கள், எவ்வளவு எழுதினாலும் தீராது.

அகில்: உங்களுடைய எழுத்துப்பயணம் உங்களுக்கு நிறைவைத்தந்திருக்கிறதா?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: நிறைவு மட்டுமல்ல. என்னுடைய எழுத்தில் எனக்கு பெருமிதமே உண்டு. ஆனாலும்  என் தேடல்
இன்னும் ஓயவில்லை.  களப்பணி செய்தும் , கடுமையாக உழைத்தும் தான் எழுதுகிறேன், பொழுதுபோக்குக்காகவோ, புகழ் போதைக்காகவோ எழுத வந்தவளல்ல நான். தமிழை ஆழமாக நேசித்து, தமிழ்மொழி மீதுள்ள மாளாக் காதலாலேயே இலக்கிய உலகில் நுழைந்தவள். ஒருகதை எழுதிவிட்டு, 25 அல்லது 30  முறையாவது திருத்தியபிறகே பிரசுரத்துக்கு அனுப்புவேன் அதனாலேயே ஒரு இலக்கியவாதியாக என்னை அடையாளம் காட்டப்படுவதையே விரும்புகிறேன்

அகில்:  விமர்சனங்கள், அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி  பார்க்கிறீர்கள் ?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: தரமான இலக்கிய விமர்சனம் என்றால் தலை வணங்கி ஏற்பேன். என் பிழைகளை திருத்திக்கொள்ளவும் தயங்க மாட்டேன். ஆனால் சிறுகதை இலக்கணம் என்றால் என்னவென்று கூடத்தெரியாத, அரை வேக்காடுகளின் புலம்பல்களுக்கு நான் மதிப்பு கொடுப்பதில்லை. புனைவில் தோற்றுப் போன சிலருக்கும் விமர்சனம் எழுதுகிறேன் பேர்வழி , என்பது,  ஒரு தினவுத் தீனியாகப் படுவதால் ,அது குறித்து ஒற்றை வரியில் சொல்ல விரும்புவது—காச் மூச் கபர்தார் !

அகில்: நிறைவாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: கனவாய், மழையாய் உதிப்பது இலக்கியம், கதைகள் படைப்பதொன்றும் சுலபமல்ல.பட்டாம்பூச்சியின் அழகில் கவர்ச்சி உண்டென்றால் கொட்டும் மழைச்சாரலில் அபார அழகுண்டு. அண்மையில் டெல்லி புத்தக விழாவுக்குச்சென்றபோது ,விடியற்காலைக்குளிரில் எங்கள் ஹோட்டலுக்கு அருகிலுள்ள சிறு கோயிலுக்குள் நுழைந்தபோது அங்கு காட்சியளித்த கடவுளர்கள் என்னை பிரமிக்க வைத்தார்கள், மெய்ம்மறந்து வணங்கியபோது பரவசத்தில் அழுகை வந்தது. இன்றும் அன்று கண்ட அம்பிகையை மானசீகமாகத் தேடுகிறேன் . ஸ்ரீ சக்ரத்தின் அழகில் மனம் பாகாய் கரைகிறது. இப்படித்தான் இலக்கியமும் நம்மை ஆட்கொளல் வேண்டும். சிங்கப்பூர் இலக்கியத்தில் என்னை நான் கரைத்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு சுகமான அனுபவம்.


 

மேலும் இவரைப்பற்றி தமிழ்ஆதர்ஸ்.காம்மின் எழுத்தாளர் பகுதியில் இருந்து………

படைப்புகள்:
சிறுகதை தொகுப்பு:
நுவல் – 2011 – (தமிழிலும் ஆங்கிலத்திலும்)
சூரிய கிரஹணத்தெரு – 2013
கரவு – 2014

நாடக நூல்
நிகழ்கலையில் நான் – 2014

ஆய்வுநூல்:
சிறுகதை இலக்கியத்தில் மலேசியப்பெண்ணிலக்கியவாதிகள் – 2013

விருதுகள்:
சிங்கப்பூர் கலைஞர் சங்கத்தின் சிறந்த நாடகாசிரியர் விருது
தமிழர் சங்கத்தின்  வாழ்நாள்   சாதனை விருது
ஞயம் பட உரை, சிறுகதை – மலையாளத்தில் கேரளப்பல்கலைக்கழகத்தில் comparative story writing எனும் உத்தியின் கீழ் தெறிவு செய்யப்பட்ட கதை.
வானொலி நாடகத்துறையில் மலேசிய, சிங்கை வானொலியின் பலமுறை பரிசுகள்.
மலையாள மொழியில் 3 விருதுகள்–சிங்கையின் சிறந்த நாடகாசிரியர் சிறந்த பெண் எழுத்தாளர் சிறந்த இயக்குனர்
சிலந்தி வல எனும் முழுநீள மலையாள  ஆய்வு நாடகத்தை எழுதி இயக்கிய சிங்கையின் முதல் பெண் எழுத்தாளர்.
theory of modern short stories  – எனும் உத்தியின் கீழ் பெற்ற விருது.
நுவல் சிறுகதைத் தொகுப்பு  – தஞ்சைப்பல்கலைக்கழக கரிகாற்சோழன் விருது – 2013
சிங்கை தமிழ் மொழி பண்பாட்டுக்கழகத்தின் 2013ம் ஆண்டின் பாரதியார் -பாரதிதாசன் விருது

இவரின் ‘நுவல்’ சிறுகதைப் புத்தகம் மலயாப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.(இளங்கலை)
பட்ட மாண்வர்களுக்கு பாடத்திட்ட நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. Fiction of singapore 2014 ன், 4 மொழித்தேர்வில், தமிழில்  சூரிய கிரஹணத்தெரு நூல் தெரிவு செய்யப்பட்டது. 2014 ல், சிங்கப்பூர் எழுத்தாளர் வாரத்தின் சிறப்புத்தேர்வில், சிங்கையின் சிறந்த நன்கு மொழி சிறுகதைகளில், தமிழில் விருதுபெற்ற நுவல் நூலின் ,முகடுகள் எனும் சிறுகதை, குறும்படமாக இயக்கப்பட்டு வெளியீடு கண்டது.

தமிழ் ஆதர்ஸ்.காம்: http://www.tamilauthors.com/writers/singapore/Kamaladevi%20Aravindan.html

‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான கமலாதேவி அரவிந்தனின் சிறுகதைகள் சில:
சிறுகதை: திணைகள் கமலாதேவி அரவிந்தன் –
சிறுகதை– ”கண்ணி நுண் சிறுத்தாம்பு” – கமலாதேவி அரவிந்தன் –
சிறுகதை: தெற்றுப்பல் – கமலாதேவி அரவிந்தன்
சிறுகதை: சுடுதண்ணிப்பாசா – கமலாதேவி அரவிந்தன் –
சிறுகதை: திரிபு _கமலாதேவி அரவிந்தன் –
சிறுகதை: ஒரு நாள் ஒரு இரவு – கமலாதேவி அரவிந்தன் –

சிறுகதை: எங்கேயும் மனிதர்கள் : கமலாதேவி அரவிந்தன்

சிறுகதை: இட்டிலி – கமலாதேவி அரவிந்தன் –
சிறுகதை ”சார்! சார்! ஒரு கதை கேளுங்க சார்!
சிறுகதை: புரை
சிறுகதை: சூரியகிரஹணத்தெரு