– வாசித்தவை, யோசித்தவை மற்றும் வாசித்து யோசித்தவை ஆகியவற்றின் பதிவுகளிவை. –
தமிழ்ப்படைப்புகள் பலவற்றை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்புச்செய்து , தமிழ் இலக்கியத்தை உலகளாவியரீதியில் அறிமுகப்படுத்தும் பணியினைச்செய்த திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோம் தனது எண்பதாவது வயதில் இலண்டனில் மறைந்ததாகச்செய்திகள் தெரிவிக்கின்றன. இவரது இழப்பு முக்கியமானதோரிழப்பு. ஆனால் தனது மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஆற்றிய இவரது சேவையினைத்தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும். அதே சமயம் இவரது மறைவு பற்றிய செய்தி சில நினைவுகளை மீண்டும் அசை போட வைத்து விட்டது.
தமிழ் இலக்கியத்தோட்டம் வருடா வருடம் வழங்கும் இயல் விருதான 2007ற்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருது மொழிபெயர்ப்பாளரான திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோமுக்குக் கிடைத்தது. அந்த வருடத்துக்குரிய சாதனையாளரைத்தேர்வு செய்யும் தெரிவுக்குழுவில் ஒருவராக நானுமிருந்தேன். ஏனையவர்களாக பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி, கவிஞரும், எழுத்தாளருமான மு. பொன்னம்பலம் ஆகியோரிருந்தனர்.
நான் இவரைத்தெரிவு செய்திருந்ததற்கு முக்கிய காரணம் இவரது மொழிபெயர்ப்புச்சேவைதான். இன்றைய உலகில் சுமார் எண்பது மில்லியன் தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் சிதறி வாழ்ந்திருந்தும் உலக இலக்கிய அளவில் தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவம் இன்னும் பூரணமாக அறியப்படவில்லை. இந்நிலையில் தமிழ்ப் படைப்புகளை ஆங்கில மொழி மாற்றம் செய்து, அதன் மூலம் தமிழ் இலக்கியத்தின், மொழியின் பங்களிப்பை உலக இலக்கிய அரங்கில் நிறுவும் வேலையினைத் தனியொருவராக நின்று இவர் ஆற்றிவந்ததற்காகவும், தமிழ் இலக்கியத்தின் பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை, நவீனப் படைப்புகளை, தமிழின் நவீன நாடக முயற்சிகளை, பெண்ணியம் மற்றும் தலித் இலக்கியப் படைப்புகளையெல்லாம் ஒரு பரந்த அளவில் மொழிபெயர்த்ததன் மூலம் தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தை ஒரு பரந்த அளவில் சர்வதேசமயப்படுத்தியதன் மூலம் இவர் ஆற்றியுள்ள பங்குக்காகவும் இவரது மொழிபெயர்ப்புப்பணி என்னைப்பொறுத்தவரையில் முக்கியமாகப்பட்டது.
மேலும் நவீன மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து (இளங்கோ, சீத்தலைச்சாத்தனார் தொடக்கம் புதுமைப் பித்தன், சு.ரா, மெளனி, அசோகமித்திரன், நா.முத்துசாமி, பாமா என நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் வரை) அவ்வப்போது படைப்புகளை மொழிபெயர்த்துத் தமிழ் இலக்கியத்துக்குச் சேவையாற்றிவந்த திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ட்ராமின் பங்களிப்பு தமிழ்ப் படைப்பாளிகளின் பங்களிப்புக்கு எந்தவகையிலும் குறைவானதல்ல என்பது என் கருத்து. பாமாவின் ‘கருக்கு’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக திருமதி லக்சுமி ஹோல்ஸ்ட்ராம் 2000ஆம் ஆண்டிலும் , அம்பையின் ‘காட்டில் ஒரு மான்’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக 2006 ஆம் ஆண்டிலும் Crossword விருதினைப் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவரது தெரிவு காரணமாக இயல் விருது எழுத்தாளர் ஜெயமோகனின் பலத்த கண்டனத்துக்கு அச்சமயம் உள்ளாகியது. அதனைத்தொடர்ந்து இணையத்தில் இயல் விருது என்றொரு பெரியதோரு விவாதமே நடைபெற்று இறுதியில் அவரது ‘இயல் விருதின் மரணம்’ என்னும் கட்டுரையுடன் ஓய்ந்தது. இவையெல்லாவற்றையும் திருமதி லக்சுமி ஹோல்ஸ்ட்ரோமின் மறைவுச்செய்தி மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டது.