முன்னுரை
தமிழ்மொழி மிக பழமைவாய்ந்த மொழியாகும். திராவிட மொழிகளில் தலைமையானது தமிழ்மொழி. தமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்கள் யாவும் அந்தந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. தமிழில் முதன்மை இலக்கியமாக கருதப்படும் சங்க இலக்கியம் காதலையும் வீரத்தையும் இரண்டு கண்களாக கொண்டு இயற்றப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த காலக்கட்டத்தில் இயற்றப்பட்ட சங்க மருவிய இலக்கியங்கள் அறகருத்துகளை கூறும் நோக்கில் இற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் மனிதனை அறநெறியில் வாழ வலிவகுக்கிறது. இவை பதினெட்டு நூல்களை கொண்டவை. அவற்றுள் அறநூல்கள் பதினொன்றும் அக நூல்கள் ஆறும் புறநூல் ஒன்றும் அமைந்துள்ளன. அறநூல்களில் காணப்படும் தாய்மை குறித்த செய்திகளை ஆராய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சங்க மருவிய இலக்கியத்தில் அற நூல்கள்
திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, சிறுபஞ்சமூலம், நான்மணிக்கடிகை, திரிகடும், ஏலாதி, ஆசாரக்கோவை என்ற பதினொறு நூல்களும் அறநூல்கள் எனப்படுகின்றன.
தாய்மை – விளக்கம்
தாய்மை என்பதற்கு, செந்தமிழ்ச் சொற்ப்பிறப்பியல் பேரகரமுதலி, ‘அருகுபோல் தழைத்து ஆல்போல் வேரூன்றி, பல்கிப் பெருகி வளவாழ்வு வாழ்வதற்கு மூலமாயுள்ள, முதல்நிதி’1 (396) என்று பொருள் தருகிறது. தாய் என்ற சொல்லுக்கு ‘முதன்மை’ என்று பொருள் தருகிறது கௌரா தமிழ் அகராதி’2 (410). தமிழ் அகராதி அண்ணன்றேவி, ‘அரசன்றேவி, ஊட்டுந்தாய், குருவிறேவி, கைத்தாய், செவிலித்தாய், தன்றேவயையின்றாள், நற்றாய், பாராட்டுந்தாய், மாதாவின் சகோதரி, முதல் முதற்றாம் முதன்மை’3 என்று தாய் என்ற சொல்லிற்கு பொருள் தருகிறது.
மெய்யப்பன் தமிழ் அகராதி ‘குழந்தைபெறும் நிலை, கருப்பம்’4 என்று தாய் என்ற சொல்லிற்கு பொருள் தருகிறது.
தாய்மையின் சிறப்பு
மனித வாழ்வு உறவுகளால் சூழப்பட்ட நிலையில் அமைந்துள்ளது. இவற்றில் எல்லா உறவுகளும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இருப்பினும் தாயின் உறவு தனிச் சிறப்பு வாய்ந்தவை. அதனை அற இலக்கியம் பதிவுச் செய்துள்ளது. ……என் செயினும்
தாயின் சிறந்த தமரில்லை ( நான். 35: 1-2)
என்ற வரிகள் தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய தாயை விடச் சிறந்த உறவு வேறில்லை என நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது.
ஒரு தாய் தன் குழந்தையை நன்முறையில் வளர்க்க எண்ணுவதால் குழந்தை தவறு செய்யும் போது அடிக்கின்றாள் இருப்;பினும் குழந்தை தாயை நோக்கியே செல்லும் இதுவும் தாய்மைக்கு இருக்கும் தனிச்சிறப்பாகும். இதனை,
………குழவி அலைப்பினும்
அன்னே என் றோடும் சிலைப்பினும் (நான். 25.1-2)
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
இக்கருத்தையை குறுந்தொகையும்,
‘நனைமுதிர்……..
தாய்உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு
அன்னாய் என்னும் குழவி’5 (குறுந்.397)
என்று குறிப்பிடுகிறது.
தாய் குறிக்கும் சொற்கள்
ஒரு சொல் பல பொருள் குறிப்பதை போன்று, பல சொற்கள் ஒரு பொருளை குறிக்க கூடியதாக, தமிழ்மொழியில் சொற்கள் அமைந்துள்ளன. தாயை குறிக்க கூடிய வகையில் தமிழில் பல சொற்கள் அமைந்துள்ளன. முதன்மை இலக்கியமாக கருதப்படும் சங்க இலக்கியத்தில் ஆய், ஞாய், அன்னை, நற்றாய், ஈன்றாள், என்ற பெயரில் தாய் அழைக்கப்பட்டிருக்கிறாள். அதே போல் அற இலக்கியங்களிலும் தாயார், ஈன்றாள், அன்னை என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறாள்.
தாய்ப்பாலின் சிறப்பு
தாய்ப் பாலே ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு அடிப்படை தேவையாகும் என்றால் அது மிகையாகாது. குழந்தை உடல் அளவிலும், மன அளவிலும் சிறப்பானதொரு வளர்ச்சியை அடைவது தாய்ப்பாலின் மூலமே. தாய்ப்பால் இல்லாமல் வளரும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் வளர்கின்றன என்று ஆய்வுகள் வெளியாகி உள்ளன.
…………….வயிறாத்
தாய்முலை யுண்ணாக் குழவியும்
நல்குரவு சேரபட் டார் (திரி.84:1-2)
என்ற வரிகள் வயிறு நிரம்ப பால் அருந்தாத குழந்தைகள் வறுமையில் வாடுவதாக குறிப்பிட்டுள்ளது. தாய் குழந்தையை அழைத்து பாலூட்டுவது தாயின் கடமையாக கூறப்பட்டுள்ளது. இதனை பழமொழி நானூறு,
மலைத்தழு துண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப்பால் பெய்து விடல் (பழ.363)
என்னும் வரிகள் உணர்த்துகின்றது. இக்கருத்திற்கு வலூசேர்க்கும் விதமாக,
‘உண்ண உண்ண தெவிட்டாதே – அம்மை
உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்’
என்ற பாரதியாரின் பாடல் அமைகிறது.
குழந்தைக்கு உணவூட்டல்
ஒரு குழந்தைக்கு உணவு ஊட்டுவதில் தாய்க்கு நிகரானவர் எவரும் இல்லை. இதனை பழமொழி நானூறு, குழந்தை உணவு உண்ண மறுக்க போது, சந்திரனை காட்டியும் விளையாட்டு காட்டியும் தாய் உணவு ஊட்டுவர் என்பதை,
………வறிதுரைத்துப்
ஒள்ளியகாட் டாளர்க் கரிது (பழ.264:2-4)
என்ற அடிகள் புலப்படுத்துகின்றன.
தாயின் துயரம் நீங்கல்
ஒரு பெண் தான் கருவுற்றிருக்கும் காலத்தில் உடலால் பல துன்பங்களை அடைகின்றாள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தை மழலை முகம் பார்த்து தன் துன்பத்தை மறந்துவிடுகின்றாள். இதனை,
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு (நாலடி.201:1-2)
என்ற அடிகள் உணர்த்துகினறன.
தாய் – வருந்துதல்
ஒரு தாய் தன் குழந்தை சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்று ஆவள் கொள்வாள். ஒரு குழந்தை உடல் அளவில் மட்டும் அல்லாமல் பகுத்தறிவிலும் சிறப்புற்று இருக்க வேண்டும் என்றே இச்சமூகம் எதிர்பார்க்கிறது. நாலடியாரில், அறிவற்றவன் பொருள் அறியாத ஒன்றை மனப்பாடம் செய்து உரை கூறும் போது அதை சான்றோர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இருப்பினும் அவனை பெற்றெடுத்த தாயை எண்ணி அவனை ஏதும் கூறாது விட்டுவிடுவர் என்று குறிப்பிடுகிறது. இதனை,
பாடமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால் – கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை
ஈன்றாட் கிறப்பப் பரிந்து (நாலடி.316)
என்னும் வரிகளின் மூலம் அறிய முடிகிறது. இப்பாடலின் மூலம் தாய்மைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை இந்நூல் பதிவு செய்துள்ளது.
ஒரு தாய் குழந்தையை பெற்று நல்முறையில் வளர்த்து அதை நல்முறையில் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறாள். அவ்வாறு இருக்கும் சூழலில் தன் பெண் உடன்போக்கு மேற்கொள்வதும் அதை கண்ட தாய் வருந்துவதையும் பண்டைய இலக்கியம் பதிவு செய்துள்ளது. அவ்விலக்கியங்களின் தாக்கம் அற இலக்கியங்களிலும் காணப்படுகிறது.
முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் – கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
தீம்பாவை செய்த குறி (நாலடி.399)
என்ற நாலடியாரின் பாடல் மான் கூட்டங்கள் வேங்கைக்கு அஞ்சி சிதறி காட்டுப் பகுதிக்கு செல்லவே, என் மகள் நேற்று தன் மார்பும் முத்துவடமும் அழுத்தும்படி என் உடம்பு முழுமையும் அணைத்துக் கொண்டு படுத்து இருந்தாள், அவள் உடன்போக்கு செல்ல தான் அவ்வாறு இருந்தாள் என்பதை அறியாமல் போனேன் என்று தாய் வருந்துவதாக அமைந்துள்ளது.
இக்கருத்திற்கு வலூசேர்க்கும விதமாக தொல்காப்பியர்,
‘இயற்கைளும் தெளிவும் கிளக்குங்காலை’ 7 (வினை:48)
என்ற செய்யுள் அமைந்துள்ளது.
மேற்கண்ட பாடல் மகள் உடன்போக்கு சென்றதை எண்ணி வருந்துவதாக உள்ளது பின் வரும் பாடல் உடன்போக்கு சென்ற மகளின் நிலையை எண்ணி வருந்துவதாக அமைகிறது,
அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ – அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப்பின் வாங்கும் அடி (நாலடி:396)
என்னும் பாடல் வரிகள் செந்நிறம் பொருந்திய ஆம்பல் மலரைப் போல நறுமணத் தோன்ற கூடிய வாயை உடைய நம் மகள், அவள் காலில் செம்பஞ்சிக் குழம்பைப் பஞ்சினால் தடவினால் கூட அதன் வலியை தாங்காமல் மெதுவாக மெதுவாக என கூறுவாள், அத்தகைய மென்மையான கால்களை உடைய நம் மகள் தலைவனுடன் உடன்போக்கிற்காக பரற்கற்களையுடைய கானகத்திற்கு சென்றுள்ளா என வருந்துகிறாள்
தாயை தெய்வத்திற்கு நிகராக போற்றுதல்
மனித உறவுகளில் தலைச்சிறந்த உறவாக போற்றப்படுவது தாய்மை. இதை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. ஒரு குழந்தையை இச்சமுதாயத்திற்கு அடையாளம் காட்டுவது தாய். அவளின் வளர்ப்பு மூலம் அக்குழந்தை நற்பண்புகளை பெற்று திகழ முடியும். அதன் காரணமாக தான் அவள் தெய்வத்திற்கு நிகராக கருதப்படுகிறாள். இதனை நான்மணிக்கடிகை,
……ஈன்றாளோடு
எண்ணக் கடவுளும் இல் (நான்.57:3-4)
என்ற அடிகள் ஒருவருக்கு தாயை விட சிறந்த தெய்வம் இல்லை என குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் தாய்மைக்கு அக்காலத்தில் இருந்த சிறப்பை அறிய முடிகிறது. தாய்மையின் சிறப்பை உணர்ந்து தான் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’8 என்;று கொன்றைவேந்தன் குறிப்பிடுகிறது.
வினையின் பயனே தாய் அமைதல்
ஒருவன் செய்யும் நல்வினை, தீ வினை காரணமாகவே அவனது மறுபிறப்பு அமையும் என்பது சமயங்களின் கொள்கையாகும.; தமிழகத்தில் சமண, பௌத்த சமயங்கள் காலுன்றி இருந்த காலத்தில் அற இலக்கியங்கள் இயற்றப்பட்ட காரணத்தினால் அச்சமயங்களின் கொள்கை இவ்விலக்கியங்களிலும் பதிவாகியுள்ளன. சமண காப்பியமான சிலப்பதிகாரத்தில்
‘ஊழ்வினை ஊர்ந்து வந்து ஊட்டும்’9
என்ற வரிகள் ஒருவன் செய்யும் தீயச்செயல்கள் தன்னை மறுப்பிறவியில் வந்து சேரும் என்று குறிப்பிட்டுள்ளது.
நான்மணிக்கடிகை தாய் என்பவள், தான் செய்த நல்வினையாள் அமைவாள் என கூறுகிறது, இதனை
…….தாயென்பாள்
முந்துதான் செய்த வினை (நான்.45:3-4)
என்ற வரிகள் புலப்படுத்துகிறது. இக்கருத்தின் மூலம் ஒருவர் நல்வினைச் செய்தால் நல்ல தாய் அமைவாள் என்ற சிந்தனையும் நல்வினை செய்யவில்லை என்றால் நல்ல தாய் அமையமாட்டால் என்ற சிந்தனையும் காணப்பட்டு இருப்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது.
தாய் விரும்பாத செயல்
மனிதன் நல்வாழ்வு வாழ இயற்றப்பட்ட அற இலக்கியம் அவனுக்கு சில நெறிமுறைகளை கூறியுள்ளது. அதன்படி வாழ்வதே சிறப்பு என அறிவுறுத்தியுள்ளது. கள்ளாமை, கொல்லாமை, ஊன் உண்ணாமை, மது அருந்தாமை போன்றவற்றை நீக்குதல் நல்லது என குறிப்பிட்டுள்ளது.
தன் மகன் எத்தகைய தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள கூடியவளாக தாய் கருதப்படுகிறாள். ஆனால் கள் குடித்த மகனை பார்த்தால் தாய் வெறுப்பாள் என்பதை,
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதாம் என்மாற்றுச்
சான்றோர் முகத்து களி (குறள்.923)
என்ற குறளின் வழி, தன் பிள்ளை எத்தகைய தவறு செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தாய் மது அருந்தும் செயலை செய்தால் ஏற்கமாட்டாள் என வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைப்பேறு
திரு.வி.க அவர்கள் குழந்தைப்பேறு பற்றி கூறும் போது, ‘பிள்ளைப்பேறு, தாய் தந்தையரை இயற்கை நெறியில் நிறுத்தும், உலக வளர்ச்சிக்குத் துணைபுரியும், இறைவன் அருள் நோக்கத்தை நிறைவேற்றும். பெற்றோரது அன்புக் கண்ணைத் திறக்கும்.
வாழ்வை இன்பமயமாக நடத்தல் வேண்டுமென்பது இயற்கையின் நோக்கம். தொடக்கத்தில் இன்பம் கல்வி வாயிலாகப் பிறக்கும். பின்னைத் திருமணம் வாயிலாக விளையும். முடிவில் பிள்ளைப்பேறு நிலை பெறும். பிள்ளைப் பேற்றில் ஒரு தனிச்சிறப்புண்டு. அது சோர்வு போக்குவது. சோர்வு கல்வியில் தோன்றுவதுண்டு, தொழிலில் தோன்றுவதுண்டு, நாயகனுக்கு நாயகி இடத்திலும் இவனுக்கு அவனிடத்திலும் தோன்றுவதுண்டு. பிள்ளையின்பாலோ எச்சோர்வும் தோன்றுவதில்லை’10 என்று பெண்ணின் பெருமை என்னும் நூலில் கூறியுள்ளார்.
இச்சமுதாயம் ஓரு பெண்ணுக்கு திருமணம் ஆனது அவளுக்கு குழந்தை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது, இல்லை என்றால் குழந்தை இல்லாமைக்கு அவள் மட்டுமே காரணமாக கருதப்படுகிறாள்.
மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லைனினும்
பூண்டான் கழித்தாற் கருமையால் – பூண்ட
மிடியென்னும் காரணத்;தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார் (நாலடி.56)
என்ற வரிகள் திருமணம் ஆனபின் மனைவிக்கு மாட்சிமைப்பட்ட குணத்தோடு குழந்தைப்பேறு இல்லையென்றாலும், கொண்ட கணவன் அவளை விட்டுவிடுவதற்கு அருமையாகுமாதலால் மேலும் தனக்கு உண்டாகும் வறுமை என்று எண்ணி தவநெறியில் பற்று செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
இக்கருத்தின் மூலம் அக்காலத்தில் குழந்தை இல்லா பெண்ணிற்கு இருந்த அவல நிலை புலனாகிறது.
குழந்தை பேற்றில் பெண்ணின் நிலை
ஒரு பெண் குழந்தை வளர்ப்பில் முக்கியபங்கு வகிக்கிறாள். குழந்தையை கருவில் இருந்து பாதுகாத்து பெற்று எடுப்பது மட்டும் ஒரு பெண்ணின் கடமையன்று, நன்முறையில் வளர்ப்பது ஒரு தாயின் கடமையாகும். கருவை அழியாமல் பாதுகாத்தலும், கரு சிதைந்தால் பிறர்க்கு வெளிப்படாமல் தாயைக் காத்தலும், குழந்தையைப் பாதுகாத்தலும், குழந்தைக்கு நோய்வரின் மருந்துக் கொடுத்து, குழந்தையை அச்சுறுத்தாமல் வளர்த்தலும் பெரிய அறமாகும் என்பதை,
கலங்காமைக் காத்தல் கருப்பஞ் சிதைந்தால்
இலங்காமை பேரறத்தால் ஈற்றம் – விலங்காமைக்
கோடல் குழவி மருந்து வெருட்டாமை
நாடின் அறம்பெருமை நாட்டு (சிறுபஞ்.74)
எனும் அடிகள் மூலம் குழந்தை வளர்த்தலின் அருமையை இந்நூல் உணர்த்துகின்றது.
குடும்ப வாழ்க்கைச் சிறக்கக் குழந்தைகள் இன்றியமையாதவர்களாவர். சிறுபஞ்சமூலமும், தான் ஈன்ற குழந்தையைத் தானே பாதுகாத்து வளர்த்தலும், தான் கொண்ட கர்ப்பத்தைப் பாதுகாத்தலும் வளர்ப்பாரில்லாத குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்தலும் கர்ப்பவதியைப் பாதுகாத்தலும் கணவனால் கைவிடப்பட்டவரைத் தன்னுடன் வைத்துப் பாதுகாத்தலும் என்று இவ்வைந்தும் சான்றோர்கள் சொன்ன அறமாகும் என்பதை,
ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை
ஏன்றெடுத்தல சூலேற்ற கன்னியை – ஆன்ற
ஆழிந்தாளை யில்வைத்தல் பேரறமா ஆற்ற
மொழிந்தார் முதுநூலார் முன்பு (சிறுபஞ்.72)
என்ற வரிகள் மூலம் இந்நூலாசிரியர் உணர்த்துகிறார்.
முடிவுரை
தாயின் பண்பு சிறப்பித்து தெய்வத்திற்கு நிகராக கூறப்பட்டுள்ளது. தாய்மைக்கு அழகு குழந்தைபேறு என்று குறிப்பிட்டுள்ளது.
வினையின் பயனே தாய் அமைவாள் என்ற சிந்தனை காணப்பட்டு இருப்பது புலனாகிறது. தாய்மையின் சிறப்பு, தாயின் பாலின் முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது. குழந்தை வளர்ப்பில் பெண்ணிற்கு இருக்கும் கடமைகள் விளக்கப்பட்டுள்ளன. தாய் விரும்பாத செயல் யாவை என்பதையும் இக்கட்டுரையின் வாயிலாக அறிய முடிகிறது.
சான்றெண் குறிப்புகள்
1. செந்தமிழ்ச் சொற்ப்பிறப்பியல் பேரகரமுதலி
2. கௌரா தமிழ் அகராதி
3. தமிழ் அகராதி
4. மெய்யப்பன் தமிழ் அகராதி
5. குறுந்தொகை, உ.வே. சாமிநாதையர்
6. பாரதியார் கவிதைகள், சந்திரகாந்தன்.
7. தொல்காப்பியம், ச.வே. சுப்பிரமணியன்
8. நீதிநூற் கோவை கொன்றை வேந்தன், சு.அ. இராமசாமிப்புலவர்
9. சிலப்பதிகாரம், உ.வே. சாமிநாதையர்
10. பெண்ணின் பெருமை, திரு.வி.க
renuka.d2511@gmail.com