மாஸ்ரர் படும் பாடு!

எழுத்தாளர் க.நவம்ஊரில் ஒரு கொஞ்சக் காலம் நான் ஒரு வாத்தியாராக வாழ்ந்திருந்தேன். அந்த மரியாதையின் நிமித்தமோ தெரியாது, இப்போதும் என் கண்முன்னே சிலர் என்னை ’மாஸ்ரர்’ என்று கூப்பிடுவர். கண்காணாத் தருணங்களில் சிலர் ‘வாத்தி’ என்றும், வேறு சிலர் ’சட்டம்பி’ என்றும் குறிப்பிடுதல் சாத்தியம்! என்னைப் பொறுத்தவரை, என் சொந்தப் பெயரைவிட இனிமையான வேறெந்த சொல்லையும் நான் இதுவரை கேட்டதில்லை! ஆகையால் மாஸ்ரர் என்ற அடைமொழி எனக்குப் பொதுவாகப் பிடிப்பதில்லை. நான் எதிலும், எவர்க்கும், எப்போதும் ஒரு மாஸ்ரராக இருந்ததில்லை என்பதுடன் – இருப்பதில் எனக்கு விருப்பும் இல்லை என்பது பிடிப்பின்மைக்கான பிரதான காரணங்களுள் ஒன்று. இதேவேளை, இந்த மாஸ்ரர் எனும் வார்த்தைக்குப் பின்னால், வரலாற்று அடிப்படையில் இன்னொரு மாசு படிந்த பக்கமும் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டி, அதன் தோற்றுவாயையும், சமகால சமூகத்தில் அது தோற்றுவித்துவரும் தொல்லை-தொந்தரவுகளையும் தொட்டுக்காட்டுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

‘உண்மை’ எனப் பொருளுணர்த்தும் Veritas என்ற இலத்தீன் வார்த்தையை, குறிக்கோள் வாக்காக வைத்துக்கொண்டுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஆகப் பழையதோர் உயர் கல்வி நிலையமாகும். 1636இல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், உலகின் மிகச்சிறந்த 5 பல்கலைக்கழகங்களுள் ஒன்று. 32 நாடுகளின் தலைவர்களையும், 47 நோபல் பரிசு பெற்ற மேதைகளையும், 48 புலிற்ஸர் பரிசுபெற்ற பத்திரிகையாளர்களையும் படைப்பாளிகளையும் உருவாக்கியது. சுமார் 18.9 மில்லியன் நூல்களடங்கிய நூலகத்தைக் கொண்டது. இத்தகைய சிறப்புக்கள் மிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தனது கல்விசார் பதவிப் பெயர்கள், சிறப்புப் பெயர்கள், தொழிற் பெயர்கள் மற்றும் தலைப்புக்கள் (titles) என்பவற்றிலிருந்து Master என்ற சொல்லை அகற்றிவிட, கடந்த மாதம் (பெப். 2016) தீர்மானம் எடுத்திருக்கிறது.

மாஸ்ரர் எனும் சொல்லானது அடிமை முறைமையின் கொடூரங்களையும் அவலங்களையும் எதிரொலிப்பதாகவும், அது உயர்கல்வி நிலையங்களிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் மாணவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமையே இம்முடிவுக்கான காரணமாகும். அறிஞர், ஆசிரியர் போன்ற பொருட்களை உள்ளடக்கிய Magister எனும் இலத்தீன் சொல்லின் வழிவந்த Master என்னும் பதத்தில், அடிமைத்துவத்தின் அடையாளம் எதுவுமில்லை என ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் வாதிட்டுவந்தது. ஆயினும் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அடிபணிய வேண்டிய நிலைமைக்குள் இப்போது பல்கலைக்கழகம் தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக, முதுமாணிப் பட்டத்தினைக் குறிக்கும் Master எனும் வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர, House Master என்ற விடுதிப் பொறுப்பாளரின் பதவிப் பெயர் போன்ற ஏனைய சுமார் 24 பதவிப் பெயர்களும் தலைப்புக்களும் அகற்றப்பட உள்ளன. இனவாத ஆதரவாளரான, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி Woodrow Wilson பெயரில் உள்ள முக்கிய கட்டடம் ஒன்றின் பெயரை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றும் ஹார்வார்ட் பல்கலைகழக நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஹார்வார்ட் பல்கலைக்கழக சட்டப் பீடத்தின் இலச்சினையை மாற்றியமைக்க வேண்டும் என்ற குரலும் தற்போது வலுவடைந்து வருகின்றது. சட்டப் பீடத்தின் உருவாக்கத்திற்கு நிதியுதவியளித்தவர் என்பதாலும், பீடத்தின் முதலாவது பேராசிரியர் என்பதாலும், பீடத்தின் இலச்சினையில் பேராசிரியர் Isaac Royall என்பவரது உருவம் பொறிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அவர் அணிந்திருக்கும் மேலங்கியிலுள்ள சின்னங்கள் சில அடிமை முறைமையைச் சுட்டுவன, அவர் அடிமைகளைக் கொடூரமாக நடத்தியவர், அடிமைகள் பலரை உயிரோடு எரித்தவர் போன்ற பல குற்றச் சாட்டுக்களை முன்வைத்து, அவரது உருவம் தாங்கிய சட்டப்பீட இலச்சினையும் அகற்றப்பட வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதால், அதனை மாற்றியமைப்பது குறித்தும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகின்றது.

18ஆம் நூற்றாண்டில், பெரியம்மை நோய்க் கிருமிகளை உயிரியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தி, அமெரிக்க ஆதிவாசிகளை அழித்தொழித்த பிரிட்டிஷ் இராணுவத் தளபதியும், அமெரிக்க வெர்ஜீனியாவின் முன்னாள் ஆளுனருமான ஃபீல்டு மார்ஷல் Jeffry Amherst என்பவரது பெயருடனான சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பலைகள் மேலெழுந்துள்ள நிலையில், Massachusetts மாநிலத்திலுள்ள உயர்கல்வி நிலையம் ஒன்றும் Amherst College என்ற பெயரை மாற்றியமைக்க வற்புறுத்தப்பட்டுள்ளது. இனம், மதம், நிறம் சார்ந்த துவேஷங்களுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் எதிர்ப்புணர்வின் பிரதிபலிப்பாகவே இன்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பலவும் இவ்வாறான மாற்றங்களை நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றன; மாஸ்ரர் எனும் சொல்லும் சேர்ந்து இப்போதெல்லாம் மானபங்கப்பட்டு வருகின்றது!

மாஸ்ரர் என்ற, ஒரு காலத்தின் மரியாதைக்குரிய, சொற்பதம் இப்படியொரு வில்லங்கத்தில் மாட்டுப்பட்டதற்கான வரலாற்றுக் காரணம் மிகுந்த கவனிப்புக்குரியது. எசமான் அல்லது ஆண்டான் எனத் தமிழில் சுட்டப்படும் மாஸ்ரர் என்ற ஆங்கிலப் பதத்திற்கு வேறுபல அர்த்தங்களும் சொல்லப்படுகின்றன. ஒரு சிறுவனை அல்லது இளைஞனை மரியாதையுடன் அழைப்பதற்கும், ஒரு முதுமாணிப் பட்டதாரி, ஆண் ஆசிரியர், ஆண் தலைமையாசிரியர், ஒரு வெற்றி வீரர், குடும்பம் ஒன்றின் ஆண் தலைவர், கலையொன்றில் அல்லது தொழிலொன்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஒருவர், மதத்தலைவர் போன்றோரைக் குறிப்பிடுவதற்கும், பதிவு அல்லது வரைபு அல்லது ஆவணம் ஒன்றின் மூலப்பிரதியைச் சுட்டுவதற்கும் இன்னும் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் மாஸ்ரர் எனும் சொல் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆயினும் ’அடிமை உடமையாளன்’ அல்லது ’அடிமையாளன்’ எனும் பொருள்தான் மாஸ்ரர் என்னும் சொல்லை இப்போது ஆபத்தினுள் மாட்டிவிட்டிருக்கிறது. இந்த அடிமையாளன் வெறுமனே தனது உரிமைகளுடன் அடிமைகளின் உரிமைகளையும் பேணிப் பாதுகாத்து வந்திருந்தால் இவ்வளவு தொந்தரவுகள் வந்திரா. பதிலாக அவனோ, உடலியல், உளவியல், பாலியல் வகையிலான வலியை விளைவித்து, அடிமைகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கட்டிவைத்துக் கொடுமைப்படுத்தினான்; கொலை செய்தான்; விலங்குகளாகப் பாவித்து வேலை வாங்கினான்; நுகர்வுப் பண்டங்களாகத் துன்புறுத்தி இன்பம் கண்டான். ஆட்கொள்ளும் ஆண்டவனாக இருப்பதற்கும், வேண்டிய வேளைகளில் ஆட்டிப்படைக்கும் பிசாசாக இருப்பதற்குமான அதிகாரத்தையும் ஆற்றலையும் அவன் பெற்றிருந்தான். இவ்வாறாக, மாஸ்ரர்மீது இந்நாள்வரை நீடித்து நிலைத்து நிற்கும் அதிருப்திக்கும் ஆத்திரத்துக்கும், அடிமைகளுக்கு அவன் இழைத்த ’சண்டாளச் சாட்சியங்கள்’ நிரம்பிய அடிமை வரலாறே காரணமாகும்.

அடிமை முறைமைக்கு மிக நீண்டகால வரலாறு உண்டு. வேட்டையாடி வாழ்ந்த ஆதி மனிதனுக்கு, அடிமை ஓர் ஆடம்பரப் பண்டமாக இருந்திருக்கலாம் எனவும், பயிர்செய்கைக் காலத்தின்போதே அடிமைகளுக்கான தேவை ஏற்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இதனடிப்படையில், ஆபிரிக்காவிலிருந்துதான் இந்த அடிமை முறைமை ஆரம்பமானது என அறியக்கிடக்கின்றது. ஆசியாவின் அடிமை வரலாற்றுக்கு உதாரணங்களாக, இந்திய உபகண்டத்தில் ஆதிகாலம் தொட்டு இன்றுவரை வேரோடிக்கிடக்கும் ஆண்டான்-அடிமை முறைமையும், சீனாவில் சிறுவர்களையும் குழந்தைகளையும் அபகரித்து வேலைக்கமர்த்தும் Mui-Tsai அடிமை முறைமையும் ஆதாரங்களாகக் காணப்படுகின்றன. மேற்குலக அடிமை முறைமை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர், இப்போது ஈராக் அமைந்திருக்கும் மொசப்பதோமியாவிலிருந்து ஆரம்பித்திருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. புராதன கிரேக்கத்தில் பெண்களும் சிறுவர்களும் வீட்டுப் பணிகளுக்கென அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தார்கள் எனவும் அதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்த ஆண்கள் கொல்லப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. ஆரம்ப ரோம இராச்சியங்களில் அடிமை முறைமை ஒரு இலாபகரமான வியாபாரமாக இருந்தமைக்கு நிரூபணங்கள் நிறைய உண்டு. இடைக்கால மத்திய ஐரோப்பிய தேவாலயங்கள் அடிமை முறைமையை எதிர்த்த போதிலும், மத மோதல்களின் விளைவாக மாற்று மதத்தவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டமைக்குச் சான்றுகள் பல சொல்லப்படுகின்றன. ”மனிதருள் சிலர் இயல்பாகவே அடிமைகளாகப் பிறந்தவர்கள்தான். ஆகையால் மனிதனை மனிதன் அடிமையாக்குதல் தர்மம்” எனக் கூறிய கிரேக்க மெய்யியலாளர் அரிஸ்ரோட்டில், அடிமைகளை ‘மனித கருவிகள்’ எனக் குறிப்பிட்டுள்ளமை அந்நாளைய ஆதிக்க மனோபாவத்தின் அச்சொட்டான ஓர் அடையாளமாகும்.

பண்டைய அமெரிக்கக் கண்டத்தில் போத்துக்கேயர் தொடங்கிய அடிமை வியாபாரத்தை ஸ்பானியர்கள் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. கொலம்பஸ் நிகழ்த்திய இனவழிப்பும் அட்டூழியங்களும் பூர்வீக இந்தியக் குடிமக்களது வரலாற்றில் குருதியால் வரையப்பட்டுள்ளன. பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியளார்கள் காலனி ஆதிக்கம் பெற்றிருந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலிருந்து அடிமைகளை அமெரிக்கக் கண்டம் உட்பட, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டுபோய்க் குவித்து, தத்தமது நாடுகளில் செல்வம் கொழிக்கச் செய்தனர். 1787ஆம் ஆண்டளவில் பிரித்தானிய குடிமகனான வில்லியம் வில்பர்ஃப்போர்ஸ் (William Wilberforce) என்பவரே அடிமை ஒழிப்புக்கென முதலில் குரல் எழுப்பியவர். தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறைமையைத் தடைசெய்ய முன்வந்தன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து அமெரிக்கர்கள் சுதந்திரம் பெறப் போராடி வெற்றியீட்டிக் கொடுத்த ஆபிரிக்க வம்சாவழிக் கறுப்பின மக்கள், பின்னர் அதே அமெரிக்கர்களால் பூட்டப்பட்ட அடிமை விலங்கினை அறுத்தெறிய இரத்தம் சிந்திப் போராடினர். ‘All men are created equal’ என எழுதிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திரப் பிரகடனத்தின் பிதாமகருமான Thomas Jefferson கூட, கறுப்பின மக்களைத் தமது அடிமைகளாக வைத்திருந்தவர்தான். 1861இல் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம், 38,000 கறுப்பினத்தவரின் உயிர் குடித்துப் பசியாறிய பின்னர்தான் அமெரிக்க அடிமை முறைமைக்குச் சாவுமணி அடித்தது.

உலகளாவிய அடிப்படையில் இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அடிமை முறைமை குறித்து, முன்னர் கண்டுகேட்டறியாத புதினங்கள் பல உண்டு. உதாரணத்திற்கு ஒருசிலவற்றைச் சொல்லலாம். புராதன கிரேக்கத்திலும் ரோமாபுரியிலும் உப்பைக் கொடுத்து அடிமைகள் வாங்கப்பட்டனர். 1530-1780களில் சுமார் 1 மில்லியன் ஐரோப்பியர்கள் அடிமை வியாபாரிகளால் கைப்பற்றப்பட்டு, வட ஆபிரிக்க நாடுகளில் விற்பனை செய்யப்பட்டார்கள். அமெரிக்காவின் முதல் அடிமை உடமையாளர் (1654) Anthony Johnson என்ற ஒரு கறுப்பு இனத்தவர். வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியைக் கட்டியெழுப்பியவர்கள், கறுப்பின அடிமைகள். அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க முதன் முயற்சி எடுத்த ஜனாதிபதியாக Benjamin Franklin (1790) கருதப்படுகிறார். அமெரிக்காவின் ஒன்பதாவது துணை ஜனாதிபதியான Richard M Johnson (1837–41) சட்டபூர்வமான ஒரு கறுப்பின ஆபிரிக்க அடிமையைத் தமது மனைவியாக மணம் முடித்திருந்தவர். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் மூலமாக, 06-12-1865இல் அமெரிக்காவில் அடிமை முறைமை சட்டவிரோதமாக்கப்பட்டது. ஆயினும் அமெரிக்காவில் தற்போது சுமார் 10,000 அடிமைகள் வாழ்ந்துவருவதாக கலிஃப்போர்னியா, Berkeley பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகின்றது. 1962இல் சவுதி அரேபியா, யெமென் ஆகிய நாடுகளில் அடிமை முறைமை ஒழிக்கப்பட்டது. பிரித்தானியாவில் 1833இல் அடிமைமுறை ஒழிக்கப்பட்ட போதிலும், 2010ஆம் ஆண்டிலேயே அது ஒரு சட்டவிரோத குற்றமாக்கப்பட்டது. அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாநிலத்தில், 2013 வரை அடிமை முறைமையை ஒழிப்பதற்கான அமெரிக்காவின் 13ஆவது திருத்தச் சட்டம் செயலிழந்திருந்தது. வடமேற்கு ஆபிரிக்க நாடான மௌறிரானியாவில் தற்போது 5 இலட்சம் அடிமைகள் வாழ்ந்து வருகின்றனர். முழு உலக நாடுகளிலும், இந்தியாவிலேயே மிகக் கூடுதலான அடிமைகள் (14 மில்லியன்) இப்போது வாழ்கிறார்கள். மனித வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத மிகப் பெரும் எண்ணிக்கையில், இன்று உலகு பூராவும் சுமார் 27 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். இதில் ¾ பங்கினர் பெண்கள் என்றும், ½ பங்கினர் சிறுவர்கள் என்றும் அறியக் கிடைக்கின்றது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு உதயமாகிய 1945ஆம் ஆண்டு ஒக்ரோபர் 24ஆம் திகதி முதல், உலக நாடுகள் பலவும் கொள்கையளவிலாவது அடிமை முறைமையை அகற்ற வாக்குறுதியளித்திருந்தன. ஆயினும் இன்னமும் உலகின் பல பாகங்களிலும் அடிமை முறைமையானது வெவ்வேறு வடிவங்களிலும் வகைகளிலும் உயிர் வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றது. அடிமை வாழ்வின் வலிகளும், வடுக்களும் இருக்கும் வரை – அவற்றின் அடையாளங்களும் குறியீடுகளும் இருக்கும் வரை – எதிர்க்குரல்கள் எழுவதைத் தடுக்கவே முடியாது. இத்தகைய அடிமை முறைமை விளைவித்த அந்த வலிகளின் வரலாற்றை எதிரொலிக்கும் ’மாஸ்ரர்’ எனும் வார்த்தையுடன் சம்பந்தப்படுவதில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு இடைஞ்சல்கள் இருப்பது போல, எனக்கும் சில சங்கடங்கள் இருப்பதை எனது நண்பர்கள் சிலர் அறியமாட்டார்கள்!

உசாத்துணைகள்:
Catherine Phillips, ‘India Tops Global Slavery,’ Newsweek, 17 Nov. 2014
Scan Goughan, ’Harward Abolishes Masters..,’ BBC Education Correspondent, 26 Feb. 2016
Jamier Frats, ‘10 Fascinating Facts about Slavery,’ Listverse.com, 14 Jan. 2009
New International Magazine, ‘A Brief History of Slavery,’ Issue 337

knavam27@hotmail.com