ஆய்வு: சிலம்பில் வஞ்சினம்!

ஆய்வு: சிலம்பில் வஞ்சினம் - முனைவா் பா.பொன்னி , உதவிப்பேராசிரியர்மற்றும் துறைத்தலைவா், எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -சிலப்பதிகாரம் சங்க காலத்தைத் தொடா்ந்து எழுந்த காப்பியம் ஆதலால் சிலம்பில் சங்க இலக்கியச் சாயல்கள் சில தொடா்ந்தும் சில மாற்றம் பெற்றும் அமைந்து வரக் காணஇயலுகின்றது.வஞ்சினம் என்பது புறப்பாடல்களில் காணக் கூடிய ஒன்று.சிலம்பில் வஞ்சினம் இடம்பெறக் கூடிய பல சூழல்களை நாம் அறிமுடிகிறது.சிலம்பில் கண்ணகி சேர மன்னன் ஆகியோரது வஞ்சின மொழிகள் தாண்டி வஞ்சினம் வெளிப்படக் கூடிய சில இடங்களும் காணப்படுகின்றன.

வஞ்சினம்
போருக்குச் செல்லக் கூடிய அரசன் ஓா் இலக்கை முன்மொழிந்து அதனை அடையாத நிலையில் தான் பெறவிருக்கும் கெடுதலையும் உடன்மொழிவது வஞ்சினம் ஆகும்.இந்த வஞ்சினத்தைத் தொல்காப்பியர் காஞ்சித்திணையுடன் பொருத்தி வஞ்சினக்காஞ்சி என்னும் துறையாக அமைத்துள்ளார்.

காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும்.போரில் தனக்கோ அல்லது தம்மை எதிர்த்து வரும் பகைவருக்கோ ஏதோ ஒரு புறம் அழிவு உண்டு என்னும் நிலையாமையை உணா்த்துவதால் இத்துறை காஞ்சித் திணையின் கீழ் அடங்குகிறது.வஞ்சினக் காஞ்சி குறித்து

இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்
( தொல்.பொருள்.புறத்.நூ – 19 )

என்று தொல்காப்பியா் குறிப்பிட்டுள்ளார்.வஞ்சினம் குறித்து “வீரயுகத் தலைவனின் ஆளுமைத்திறனை ( personality )  விரித்துரைக்கப் பாடல்களில் பாணா்களால் பயன்படுத்தப்படுகிறது.மறத்தின் அதன் ஆற்றலில் வெளிப்படும் வெஞ்சினத்தின் அடிப்படையே வஞ்சினம் என்றும் கூறுவா்” (ந.கடிகாசலம் ச.சிவகாமி சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு சிந்தனைப் பின்புல மதிப்பீடு ப.361 )என்று குறிப்பிடுவா்.

புறப்பொருள் வெண்பா மாலை காஞ்சிப்படலத்தில் ஏழாவது கொளு வஞ்சினக் காஞ்சியைக் குறிப்பிடுகிறது. போருக்குச் செல்லும் அரசன் இன்று மாலை சூரியன் மறைவதற்குள் பகைவரை வெல்வேன் என்று உறுதி கூறும் நிலையில் அவ்வாறு வெல்லத் தவறினால் வெற்றியைத் தேடித் தரும் வேலினைக் கையில் பிடிக்க மாட்டேன்.மாறாகப் பகைவரின் முன் நின்று அவரது ஏவல் மொழியைக் கேட்டு அவருக்குப் பணி செய்து காத்துக் கிடப்பவனாவேன் என்று குறிப்பிடுவதனை

இன்று பகலோன் இறவாமுன் ஒன்னாரை
வென்று களம் கொள்ளா வேல் உயிர்ப்பின் – என்றும்
அரணழியப் பாயும் அடையார் முன் நிற்பேன்
முரணழிய முன் முன் மொழிந்து
( புறப்பொருள் வெண்பா மாலை – வஞ்சினக்காஞ்சி – 69 )

என்பதால் அறியமுடிகின்றது.புறநானூற்றில் மூன்று அரசா்களின் வஞ்சினத்தைக் காணமுடிகிறது.ஒல்லையூா் தந்த பூதப்பாண்டியன் ( புறம் – 71 ) பாண்டியன் தலையானங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் ( புறம் – 72 ) சோழன் நலங்கிள்ளி ( புறம் – 73 ) ஆகிய மூன்று அரசா்களின் வஞ்சினம் புறநானூற்றில் இடம் பெறுகிறது.

கண்ணகி

கண்ணகி ஊழ்வினை செலுத்துவதால் தன் கணவனுடன் புகாரை விட்டு நீங்கி மதுரை மாநகா் வந்தடைகிறாள்.வந்த இடத்தில் ஊழின் வலிமையால் பொற்கொல்லன் சதிச்செயலால் கணவனை இழக்கிறாள்.கணவன் கொலைக்குக் காரணமான பாண்டிய மன்னனையும் மதுரை மாநகரினையும் அழிப்பதாக கண்ணகி வஞ்சினம் மொழிகின்றாள். கண்ணகியின் வஞ்சினத்தை விளக்க இளங்கோவடிகள் வஞ்சினமாலை என்று ஒரு காதையினையே அமைத்துள்ளார்.

கோவலன் குற்றமற்றவன் என்பதனை உணா்ந்த பாண்டிய மன்னன் உயிர்த் துறக்கின்றான்.கணவனோடு கோப்பெருந்தேவியும் தன் இன்னுயிர் நீக்கிறாள்.ஆனால் துன்பத்தில் இருந்த கண்ணகி அவளது இறப்பினை அறியாதவளாக கற்புடைய மகளிர் குறித்து கோப்பெருந்தேவியிடம் கூறுவாளாய் உரைக்கின்றாள்.அத்தகை கற்புடைய பெண்கள் பிறந்த பதியில் தோன்றிய நானும் கற்புடையவள் என்பது உண்மையானால் நீ இனிதிருக்க விடேன்.மன்னனோடு மதுரையையும் அழிப்பேன் என்று வஞ்சினம் கூறுவதனை

 

பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டேன் அரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையும் காண்குறுவாய் நீ
( சிலப்பதிகாரம், வஞ்சினமாலை 36-38 )

என்ற அடிகள் வழி அறியலாகின்றது.தன் கணவனை பழி சுமத்தி கொலைக்கு ஆளாக்கிய மன்னனோடு அம்மதுரை மாநகரினையும் அழிக்க வேண்டும் என்ற வஞ்சினம் கண்ணகி மனதில் எழுந்ததனை இதன்வழி அறிய முடிகிறது.

சேரன்செங்குட்டுவன்
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை எடுக்க இமயத்தில் இருந்து கல் கொணர விரும்புகிறான்.அந்நிலையில் வடபுலத்து வேந்தா்களின் இழிச்சொல்லைக் கேட்டு “இமயமலையிலிருந்து வந்த தவத்தினை உடைய முனிவா்கள் அறிவித்த முறையான வாழ்க்கையை அமைக்காதவரான வடபுல மன்னா்களின் பழிச்சொல்லானது அழியாது எம்மிடத்தே இருப்பதாயின் அது சோழ பாண்டியா்கள் எம்மை இகழ்ந்து பேசுவதற்குச் சரியாகி விடும்.ஆதலால் வடநாட்டு வேந்தா்களின் முடியினை உடைய தலையின் மீது இப்பத்தினித் தெய்வத்திற்கு உருவம் அமைப்பதற்குரிய கல்லினைக் கொண்டு வருவேன்.அவ்வாறு இல்லாமல் எனது வெற்றி வாளானது மீண்டு வருமேல் வீரக்கழல்களைக் கால்களில் அணிந்து சென்று கொடிய போர்க்களத்தில் பகைவா்களை நடுங்கச் செய்யாது நாட்டில் உள்ள குடிமக்கள் நடுங்குமாறு கொடுங்கோலாட்சி செலுத்தும் வேந்தன் என்று குடிமக்கள் பழிதூறறும் இழிந்த தன்மை உடையவன் ஆவேன்” என்று வஞ்சினம் கூறுவதனை

இமையத் தாபதா் எமக்கீங்கு உணா்த்திய
அமையா வாழ்க்கை அரைசா் வாய்மொழி
நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்குஅஃது
எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியும் தரூஉம்
வடதிசை மருங்கின் மன்னா்தம் முடித்தலைக்
கடவு ளெழுதவோர் கல்கொண் டல்லது
வறிது மீளுமென் வாய்வா ளாகில்
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுங்காது பயங்கெழு வைப்பில்
குடிநடுக் குறூஉங் கோலே காகென
( சிலப்பதிகாரம், கால்கோட்காதை -9-18 )

என்ற அடிகள் விளக்குகின்றன. பாண்டியன் தலையானங்கானத்துச் செறு வென்ற பாண்டியன் தன்னுடைய பாடலில்

என்நிழல் வாழ்நா் சென்னிழல் காணாது
கொடியன்எம் இறைஎனக் கண்ணீா் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
( புறம்72 10-12 )

என்று குறிப்பிடுகிறான். இதன்வழி தமிழக வேந்தர்கள் குடிமக்கள் தம்மைக் கொடுங்கோலன் என்று பழிதூற்றுவதற்கு அஞ்சியமையை அறியலாகின்றது.

நீலியின் சாபம்
கோவலனின் மறைவால் துயரம் கொண்டு மதுரையை எரித்த கண்ணகியிடம் மதுராபதித் தெய்வம் அவளது பழம்பிறப்பை உணா்த்துகிறது.சிங்கபுரம் கபிலபுரம் என்னும் இரண்டு நாட்டு வேந்தா்களான வசு மற்றும் குமரன் என்பவா்களுக்கு இடையிலான பகையினால் பரதன் என்பவன் சூழ்ச்சியால் சங்கமன் என்பான் கொல்லப்பட்டான்.அப்பரதனே கோவலன்.கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நீலி என்பவள் பதறித்துடித்து மன்றங்களிலும் தெருக்களிலும் அலைந்து திரிந்தாள்.பதினான்கு நாட்கள் சென்ற பின் கணவனை வணங்குவதற்குரிய நாள் இது எனக்கருதி அவனை வாழ்த்தி மலை உச்சியில் இருந்து விழுந்து தன் கணவனை அடைய எண்ணினாள்.அப்பொழுது எமக்கு இங்ஙனம் கொடிய துன்பத்தினைச் செய்தவா்கள் தாமும் இத்தகைய துன்பத்தினை அடைவார்களாக என்று கூறி உயிர்த்துறக்கிறாள்.இதனை

எம்முறு துயரம் செய்தோ ரியாவதும்
தம்முறு துயரமிற் றாகுக வென்றே
விழுவோள் இட்ட வழுவில் சாபம்
( கட்டுரை காதை 166 – 168 )

என்ற அடிகள் விளக்குகின்றன. நீலியின் வார்த்தைகளில் சாபம் காணப்பட்டாலும் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவா்கள் தானும் அந்நிலையை அடைய வேண்டும் என்ற வஞ்சினம் அவளது வார்த்தையில் ஒலிப்பதனைக் காணமுடிகிறது.

கீரிப்பிள்ளையைக் கொல்லுதல்
கோவலனின் பண்பு நலனை விளக்குமிடத்தில் கீரியைக் கொன்ற பார்ப்பினியின் கதை இடம் பெறுகின்றது.பார்ப்பினியின் குழந்தையைக் காக்கும் பொருட்டு கீரி பாம்பினைக் கொல்கிறது.வெளியில் இருந்து வந்த பார்ப்பினி கீரியின் வாயில் இரத்தத்தைக் கண்டு கீரி தன்னுடைய குழந்தையைக் கொன்று விட்டதாக எண்ணுகிறாள்.அதற்குப் பழி வாங்கும் செயலாக அக்கீரியினைக் கொள்கிறாள்.இந்நிகழ்வினை

பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளி மனையோன் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
( அடைக்கலக்காதை 54-56 )

என்ற அடிகள் வாயிலாக அறியமுடிகிறது.தன்னுடைய குழந்தையைக் கொன்ற கீரியைக் கொல்ல வேண்டும் என்ற வஞ்சினம் பார்ப்பினியின் மனதில் நிறைந்திருந்தமையை குறிப்பாக உணர இயலுகின்றது.     மனித மனதில் இயல்பாக எழும் உணா்வுகளே அன்பு கோபம் பொறாமை சினம் போன்றவையாகும்.அக்கோப உணா்வின் வெளிப்பாடாகவே இவ்வஞ்சினம் அமைகின்றது என்றால் மிகையில்லை.

உசாத்துணை நூல்கள்:

1. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
2. தொல்காப்பியம்
3. புறப்பொருள் வெண்பா மாலை

srisrijaa@gmail.com