நூல் அறிமுகம்: கே.எஸ்.சிவகுமாரனின் ‘முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்’; எஸ். முத்துமீரானின் ‘கக்கக் கனிய’ சிறுகதை நூல் பற்றிய இரசனைக் குறிப்பு; தெ. ஈஸ்வரனின் ‘அர்த்தமுள்ள அனுபவங்கள்’

வெலிகம ரிம்ஸா முஹம்மத்சினிமாக்கள் மனித வாழ்வோடு ஐக்கியமான ஒரு ஊடகமாகும். பொழுதுபோக்கிற்காக சினிமாவைப் பார்ப்பதாக பலர் கூறினாலும் சினிமாவில் சில யதார்த்தங்களும், சில யதார்த்த மின்மைகளும் காணப்படுவது கண்கூடு. வாழ்க்கையில் நடக்கின்ற சிலதையும், நடக்க வேண்டும் என்ற சிலதையும், நடக்கவே முடியாத சிலதையும் கூட திரைப்படங்கள் வாயிலாக நாம்  கண்டுகளித்து வருகின்றோம்.

சினிமாக்களைப் பார்ப்பது அன்றைய காலத்தில் மிகப் பெரிய சாதனையாக இருந்து வந்தது. அதாவது ஊருக்கே ஒரு திரையரங்கு.. அதில் திரைப்படக் காட்சிகள்! இன்று ஒவ்வொரு வீட்டிலும் சினிமாக்களைப் பார்க்கக் கூடிய சூழ்நிலை தோன்றியிருக்கின்றது. இறுவட்டுக்களாகட்டும், யூடியூப்களில் ஆகட்டும், ஆன்லைனிலாகட்டும், கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகளாகட்டும் சினிமாக்களை நாம் விரும்பிய வகைகளில் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

பொதுவாக சினமா என்று தமிழ்பேசும் மக்களிடம் சொன்னால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இந்திய சினிமாக்கள்தான். இந்திய சினிமாக்கள் தொழில்நுட்ப ரீதியில் பல மைல் தூரம் சென்றுவிடடதாலும், காட்சி அமைப்புக்களில் காணப்படும் வசீகரத் தன்மையினாலும் இவ்வாறாதோர் பிம்பம் தோற்றுவிக்கப் பட்டுள்ளது. அதையும் தாண்டி நல்ல சினிமாக்கள் நம் இலங்கை தேசத்திலும் வெளி;வந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் தற்போது தயாரிக்கப்படும் திரைப்படங்கள் முன்னைய நிலைகளிலிருந்து மாறுபட்டு புதிய வீச்சுடன் வெளியிடப்படுவது கண்கூடு. ஆனால் வெளிநாட்டுத் திரைப்படங்கள் மிகச் சிறப்பான கதையம்சம் கொண்டவைகளாக காணப்படுகின்றமை பலரும் அறியாத ஒரு விடயமாகும்.

இந்த வகையில் தான் ரசித்த அனைத்து தர சினிமாக்கள் பற்றிய பதிவுகளாகத்தான் கே.எஸ் சிவகுமாரனின் இத்தொகுப்பு 36 தலைப்புக்களில் 136பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.-

சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் நம் வாழ்வோடு ஒன்றியவை. எம்மால் கூற முடியாதவற்றை ஒரு கலைஞன் தன் கலைப் படைப்புகளினூடாக வெளிப்படுத்தும்போது அதை நாம் ரசிக்கின்றோம். தமக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கின்றார்கள்? அவர்கள் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுகின்றார்கள் போன்றவற்றை நாம் அறிவதற்கு ஆவலாக இருப்பதால் சினிமாக்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாக நாம் ஏன் திரைப்படம் பார்க்கிறோம் (பக்கம் 01) இல் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார். திரைப்பட திறனாய்வுக்கு தமிழில் ஒரு ஏடு (பக்கம் 10) என்ற பதிவில் காலத்தின் தேவையாக இருக்கும் தமிழ் ஏடுகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. அதன் பெயர் அகல்விழி. சினிமா, ஓவியம், புகைப்படக் கலைக்காக மலர்ந்த காலாண்டு இதழ். மிக நேர்த்தியாக அச்சிடப்பட்ட இந்த உயர்தர ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தின் கருத்துக்களை கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் தொகுத்துத் தந்திருக்கின்றார். நாம் காணாத சஞ்சிகைகள் பற்றிய தகவல்களும், அக்காலத்தில் அதன் ஆசிரியர் தலையங்கங்களில் அமைந்த கருத்துக்களையும் நாம் அவதானிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அந்த ஆசிரியர் தலையங் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

சினிமா பற்றிய புத்தகங்கள், விமர்சனங்கள், திரைப்பட விழாக்கள், திரைப்பட சங்கங்கள், சினிமா பத்திரிகைகள் அனைத்தும் இருந்தும் தமிழில் புதிய சினிமா உருவாகவில்லை. இதன் அடிப்படையை ஆராய்ந்தோமேயானால் நல்ல இயக்குனர்கள் இல்லாமற் போனதே இதற்கான காரணமாகும். தமிழ் நல்ல சினிமாக்கள் அனைத்துமே வணிக விதிகளுக்கும் ஊறிப்போன பழைய படிமங்களுக்கும் உட்பட்டவை.

இந்திய சினிமாத் துறை விடுத்து உலக அனைத்துலகத் திரைப்படங்களும் அதிக வரவேற்பு பெற்றவைகளாகும். 1996 இல் புது டில்லி அனைத்துலகத் திரைப்பட விழாவில் இந்தியப் பெண் நெறியாளர்களின் படங்களுடன், ஆசியாக் கண்டத்தின் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பெண்களின் படங்களும் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றுள் நாணம் என்ற சீன மொழிப் படம், ஊர்காவல் என்ற பீஜிங் மாநகரப் படம், சுதந்திரக் கும்பல் என்ற லெபனான் நாட்டுப் படம், நீல முக்காடு என்ற ஈரானியப் படம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அறிதற்கரிய தகவல்களை தன்னகத்தே சுமந்திருக்கும் இந்நூல் சினிமாத் துறையில் ஈடுபாடுள்ளவர்களின் வாசிப்புக்கு சிறந்த நூலாகும். நூலாசிரியருக்கு என் வாழ்த்துக்கள்!!!

நூல் – முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்
நூலின் வகை – ஆய்வு
நூலாசிரியர் – கே.எஸ். சிவகுமாரன்
ஈமெயில் – sivakumaranks@yahoo.com

kssivakumaran610@yahoo.com
வெளியீடு; – மணிமேகலைப் பிரசுரம்
விலை; – 100 இந்திய ரூபாய்


2. எஸ். முத்துமீரானின் ‘கக்கக் கனிய’ சிறுகதை நூல் பற்றிய இரசனைக் குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத்பல்வேறு துறை சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும் மனித வாழ்வியலை படைப்புக்களினூடாக சொல்வதை விரும்புவார்கள். சிறுகதைகள் அவ்வாறானதொரு தனித்தன்மையைப் பெற்றிருப்பதற்குக் காரணம் பாத்திரங்கள் உணர்வுகளை சொல்லும் விதத்தை மிகச் சரியாக சிறுகதைகளினூடாக கையாளலாம் என்பதனாலாகும்.

சட்டத்தரணி எஸ். முத்துமீரானின் படைப்புக்கள் அன்றாட வாழ்வில் நடக்கும் பல விடயங்களையும் தனக்குள் உள்வாங்கி, தானே கதைசொல்லியாகி வாசகர்களுக்கும் அறியத் தருவதாக அமைந்திருக்கும். கக்கக் கனிய என்ற தொகுதியானது நெஷனல் பப்ளிஷர்ஸ் வெளியீடாக 16 சிறுகதைகளை உள்ளடக்கி 144 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் ரமீஸ் அப்துல்லாஹ் கீழுள்ளவாறு குறிப்பிட் டிருக்கின்றார்.

`முத்துமீரானின் எழுத்துக்களில் ஒரு சமூகத்தின்  ஒட்டுமொத்தமான படப்பிடிப்பைக் காண முடியும். இலங்கை தமிழ் பேசுகின்ற மக்கள் என்ற வட்டத்துக்குள் முஸ்லிம்களும் அடங்குவர். அதனால் முஸ்லிம்கள் தமிழர்கள் ஆகி விடுவதில்லை. அவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வேறு சமூகத்தினர். அவர்களுக்கென்று தனியான மதம், மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதார அம்சங்கள் முதலானவை வேறானவையாக அமைகின்றன. இதற்கு முத்துமீரானின் எழுத்துக்கள் மிக ஆதாரமாக அமைகின்றன. அதனாலே அவரது கதைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னாலேயும் மண்வளச் சொற்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன’.

தாய்மை சாவதில்லை (பக்கம் 24) என்ற கதை தாய்ப் பாசத்தின் ஆழத்தை உருக்கமாக கூறி நிற்கின்றது. உலகில் உள்ள எல்லா உறவுகளும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் தான் பழகும். ஆனால் தாய் என்ற உறவு மாத்திரமே பாசத்துக்காகப் பழகும். தன் பிள்ளை எத்தகைய கெட்டவனாக இருந்த போதிலும் அவனது நன்மைக்காக சதாவும் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் தாயினுடையது. பத்து மாதங்கள் வயிற்றில் சுமப்பது முதல் குழந்தையின் எதிர்காலம், நன்மை பற்றி மாத்திரமே தாயுள்ளம் சிந்திக்கின்றது. அவ்வாறான உறவை சிலர் மதிப்பதில்லை. தாயின் பெருமையைப்பற்றி பேசுபவர்கள் கூட சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தாயின் மனதை உடைத்து விடுவார்கள். இஸ்லாம் மார்க்கம்; தாயின் காலடியின் கீழ் சுவர்க்கம் உண்டு என தாயின் சிறப்பு பற்றி கூறியுள்ளது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், மாதா, பிதா, குரு, தெய்வம் போன்றவற்றில் கூட தாய்க்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

இக்கதையில் வருகின்ற செய்யது ராத்தா என்ற மூதாட்டி சட்டத்தரணி மீரானின் வீட்டுக்குச் செல்கின்றார். அவரது நோக்கம்   அவரது பெயரில் இருக்கும் வீடு வளவை பிள்ளைகளுக்கு கொடுப்பது பற்றிய ஆலோசனையை மீரான் அவர்களிடம் கேட்பதற்காகும்.

“என்ன ராத்தா கடும் யோசனயோட இரிக்காய்?”

“ஒண்டுமில்லம்பி.. ஒனக்கிட்ட ஒரு புத்தி கேப்பமின்டு வந்தன்..”

“அதிலென்ன, எதப்பத்தி?”

“என்ர பேரில இருக்கிற, பேமிற்று வளவப் பத்தித் தான்..”

“அதுக்கென்னப்ப..?”

“அதயேன் கேக்காய்.. இதால என்ட ஊட்ட ஒரு மாசமா ஒரே கொழப்பம் தம்பி. என்ர புள்ளயலெல்லாம் அந்த வளவ  வித்துக் கேட்டு என்னோடச் சண்ட புடிக்கிதுகள். வூட்டுல நிம்மதியா இரிக்கேலாமக் கிடக்கு. என்னேரமும் கொம்பலும் கொழப்பமுமாக் கெடக்கு. ஒனக்கிட்டச் செல்றத்திக்கென்ன என்ர கொடலுக்க சோறு, தண்ணி போய் நாலஞ்சி நாலம்பி..”

இந்த உரையாடலில் செய்யது ராத்தா எந்தளவுக்கு மன உளைச்சலில் காணப்படுகின்றார் என்பது புலனாகின்றது.

அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறிய மீரான், செய்யது ராத்தாவுக்கு புத்திமதி சொல்கின்றார்.

“அப்ப லாவைக்கு நான் கடிதத்த எழுதி வெக்கன். நீ காலத்தால வந்து வாங்கிற்று போ லாத்தா. ஏதோ வளவ விக்கிற எல்லாக் காசயும் புள்ளயளுக்கு குடுத்திராத. கொஞ்சக் காச ஒன்ட மகுத்துச் செலவுக்கு வச்சிக்க”

அடுத்த நாள் செய்யது ராத்தா மீண்டும் தலையில் காயத்துடன் ஓடி வருகின்றாள். அவளது மகன், தாய் என்று கூட பாராமல் அவளைத் தாக்கிவிட்டு இறப்புச் செலவுக்கு வைத்திருந்த காசையும் எடுத்துக்கொண்டு போனதாகச் சொல்லி ஓவென அழுகின்றாள். அவரது நிலை கண்டு மீரானுக்கும் மிகவும் மனவருத்தம். அவனைப் பற்றி பொலிசில் முறைப்பாடு செய்வோம் என மீரான் கூறியதுற்கு அந்தத் தாயுள்ளம் அதனைத் தடுத்துவிடுகின்றது.

“அவன் சின்னப் புள்ள.. உட்டிரு வாப்பா.. அவன் எல்லாத்தயிம் மறந்து லாவெக்கி என்னப் பாக்க வருவான்..” என்கின்றாள்.

தாய்ப் பாசத்தை அணுவணுவாகப் புரிய வைக்கும் அழகிய கதை இது.

கொத்தும் கொறயுமா  (பக்கம் 33) என்ற சிறுகதை சமூகத்தில் நடந்தேறும் அராஜகங்களைச் சுட்டிக் காட்டியிருக்கின்றது. இன்று எல்லாவற்றுக்கும் பணம், பதவி, அந்தஸ்து போன்றவற்றையே எல்லோரும் மதிப்பாகக் கருதுகின்றார்கள். அவை இல்லாதவர்களை நாயைவிடக் கேவலமாக நினைக்கின்றார்கள். ஆனால் எல்லாத் தகுதியும் இருப்பவர்கள் பண்புகளை இழந்துவிடுகின்றார்கள்.

பள்ளிவாயல்களில் நடக்கும் பிரசங்கங்கள் சுயநலத்துக்காக இடம்பெறுகின்றன. தமக்குத் தேவையானதைக் கூறி மக்களை அதன்வழி இழுப்பதற்கு பலர் துணிவதாக இக்கதையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஹாஜியார் என்ற பட்டத்துக்காகவும், ஊரிலுள்ளவர்கள் தன்னை மதிப்பதற்காகவும், வெளிநாடுகளுக்குச் சென்று தங்கம் போன்றவற்றை கொண்டு வந்து உள்நாட்டில் விற்றால் இன்னும் இலாபம் பெற முடியும் என்பதற்காகவும் ஹஜ் யாத்திரை செய்யப்படுவதாக இக்கதை தெளிவாகக் கூறியிருக்கின்றது.

இக்கதையில் வரும் வட்டியன்ட மூத்தமகன் சின்னப்பிள்ளை என்பவர் சுலைமான் மௌலவியுடன் ஹஜ்ஜுக்கு செல்வதாக ஏற்பாடாகியிருக்கின்றது. போகும் போக்கில் காசை கூடுதலாக கொண்டு வருமாறும் மக்காவிலிருந்து நகை நட்டுக்களை வாங்கி வருவோம் என்றும் கூறுகின்றார் மௌலவி. அத்துடன் தாம் அங்கு தங்கியிருக்கும் ஹோட்டல்கள் ஏசி பூட்டிய ஆடம்பரமானவை என ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றார். கன்னிகளைக் கரை சேர்க்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள்; வரிசை கட்டிப் பார்த்திருக்க, பல தேவைகளை உடையவர்கள் தம்மைச் சூழவும் இருக்க, பகட்டுக்காக அல்லாஹ்வின் போதனைகளை மறுத்து இன்னும் சொத்து சேர்ப்பதற்காக ஹஜ்ஜுக்கு செல்லும் இவர்களின் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது சந்தேகம். அதை ஆணித்தரமாக சொல்லியிருக்கும் பாங்கு சிறப்பானது.

மைய்யத்து வீடு (116) என்ற சிறுகதை சுலைமான் சப் என்ற பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஊருக்குள் வட்டிக்குக் கொடுத்து, நாள் கொமிஷனுக்கு காசு கொடுத்து, பெண்களுக்கான கள்ள பாஸ்போர்ட் செய்து பணக்காரன் ஆனவன்தான் சுலைமான். அவன் அந்த ஊர் எம்.பியின் செல்லப்பிள்ளை. அந்த செல்வாக்கால் சுலைமானை ஊரார் பெரிய புள்ளியாகப் பார்க்கத் துணிகின்றனர். இஸ்லாம் மார்க்கத்துக்கு முரணாக பணம் சம்பாதிப்பவன் அல்லாஹ்வின் புனித மாளிகையின் தலைவனாக  நம்பிக்கையாளர் சபையின் அங்கத்தவனாக இருக்கின்றான். இவ்வாறான அசிங்கமான அரங்கேற்றங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். இறுதிநாள் நெருங்கும்போது தகுதியில்லாதவர்கள் எல்லாம் தலைவர்களாக மாறுவது சாதாரண விடயம். அந்தவகையில் சுலைமானும் செல்வாக்குள்ளவனாக ஆகிவிடுகின்றான்.

இவன் மையத்தை எடுப்பதற்காக தயாராகிக்கொண்டிருந்த சமயம் கொழுக்கட்டப் பொட்டிரக் கொழந்த என்பவள் வந்து தலையிலடித்து மையத்து வீட்டை அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டிருக்கின்றாள். காரணம் அவளது மகள் சவூதிக்குப் போவதற்காக வீட்டை சுலைமானிடம் அடகு வைத்திருக்கின்றாள். சுலைமான் அதற்கும் வட்டிக்கு மேல் வட்டி என்று பல ஆயிரங்களைகக் கறந்து இறுதியில் யாருக்கும் தெரியாமல் வீட்டின் உறுதியைத் தன் பெயருக்கு மாற்றிவிட்டான். சவூதியிலிருந்து கஷ்டப்பட்டு உழைத்த காசை எல்லாம் இந்தக் களவானிக்குக் கொடுத்தது போக சொந்த வீடும் தனக்கில்லை என்றால் யார் தான் தாங்குவார்? அவரின் நிலை வாசகரின் மனதையும் பிழிந்துவிடுகின்றது.

இப்தார் (பக்கம் 138) என்ற சிறுகதை யதார்த்தமாக நடக்கும் சம்பவமொன்றை மிக அருமையாக சொல்லியிருக்கின்றது.  நோன்புக்காலம் வந்தால் பலர் நம்மிடம் உதவி கேட்டு வருகின்றார்கள். நோன்பு காலத்தில் இவ்வாறு வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதாவது தமக்கு நோன்பு பிடிப்பதற்கு அல்லது நோன்பு திறப்பதற்கு போதுமான உணவு இல்லாதிருக்கலாம். அல்லது தம் பிள்ளைகளுக்கு வகை வகையாக சாப்பாடு கொடுக்க முடியாத கஷ்டத்தில் இருக்கலாம். அல்லது கணவன் மரணித்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நோன்புக் காலங்களில் தனவந்தர்களின் மனது இரங்கியிருக்கும் என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம். இஸ்லாம் ஸக்காத்தை மூன்றாவது கடமையாக ஆக்கியிருக்கின்றது. வசதி படைத்த ஒவ்வொருவரும் அல்லாஹ் நிர்ணயித்த ஸக்காத்தைக் கொடுத்தே தீர வேண்டும். இல்லாவிடில் மறுமையில் அவர் சேர்ந்த சொத்துக்கள்தான் அவரை நரகத்துக்கு இட்டுச் செல்லும். அல்குர்ஆனில் எட்டு கூட்டத்தார்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு கட்டாயமாக ஸக்காத்தை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் யாரையும் கஷ்டப்படுத்தவில்லை. அல்லாஹ் தமக்கு வழங்கிய செல்வத்தில் ஒரு பகுதியை ஏழை எளியவர்களுக்கும் கொடுத்துதவுமாறு கூறியிருக்கின்றது.

நோன்புக் காலத்தில் ஸக்காத் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதால்தான் இல்லாதவர்கள் கையேந்துகின்றார்கள். இக்கதையில் வரும் மீரான் என்பவர் பெரிய பெரிய செல்வந்தர்களுக்குக்கும், எம்.பிக்களுக்கும் இப்தாருக்கு (நோன்பு திறத்தல்) அழைப்பு விடுக்கின்றார். அவரது வீட்டில் கோழிக் கஞ்சும், இடியப்ப புரியாணியும் செய்து அசத்துவதில் குறியாக இருக்கின்றார். அப்போது ஸக்காத் பெற தகுதியானவர்கள் வந்து அவரிடம் கையேந்தும் போது வங்கியில் மாற்றக்கொடுத்த சில்லறைக் காசு நாளைக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லி திருப்பியனுப்புகின்றார். அள்ளிக்கொடுக்க வேண்டிய கைகள் கிள்ளிக் கொடுக்கின்றன. கதையை வாசிக்கும்போதே மனதில் நெருடல் ஏற்படுகின்றது.

இவ்வாறு மண்வளம் மாறாமல் படைப்பிலக்கியம் செய்கின்ற, சம்பவங்களை எல்லாம் சிறுகதைகளாய் படைக்கின்ற சட்டத்தரணி முத்துமீரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் – கக்கக் கனிய
நூலின் வகை – சிறுகதை
நூலாசிரியர் – எஸ். முத்துமீரான்
வெளியீடு – நெஷனல் பப்ளிஷர்ஸ்
விலை – 350 ரூபாய்


3. தெ. ஈஸ்வரனின் ‘அர்த்தமுள்ள அனுபவங்கள்’ நூல் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்திரு. ஈஸ்வரன் அவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். வல்லநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1949 இல் கொழும்புக்கு வந்தார். புனித பெனடிக்ஸ் பள்ளியில் படித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். தற்போது ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இவர் பேருபகாரியும் கூட. எழுத்தாளரான இவர் ஏனைய எழுத்தாளர்களுக்கும் கரம் கொடுத்து உதவும் ஒரு வள்ளல். பல முக்கிய சம்மேளனங்களில் தலைவராகவும் இருக்கிறார்.

இலங்கையின் இந்துக் கலாசார அமைச்சின் இறைப்பணிச் செம்மல் விருது, சிறந்த வணிக ஏற்றுமதியாளருக்கான இலங்கை ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவரது அனுபவங்களைக் கூறும் நூலாக அர்த்தமுள்ள அனுபவங்கள் என்ற கனதியான தொகுதி 264 பக்கங்களில் காந்தளகம் வெளியீடாக வெளிவந்துள்ளது.

முயற்சி திருவினையாக்கும் (பக்கம் 19) என்ற அவரது முதலாவது அனுபவத்தில் பல வியக்கத்தகு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதாவது இறைவனின் சித்தம் இருந்தால் எந்தக் காரியமும் கைகூடும் என்பது எல்லா மதத்தவரதும் நம்பிக்கை. திரு. ஈஸ்வரன் அவர்கள் தொழில் செய்துகொண்டிருந்த ஆரம்ப காலத்தில் இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த மாவு திரிக்கும் கூட்டுத்தாபனத்தினால் அனுப்பப்பட்ட மூடைகளில் பல இறாத்தல் எடை குறைவாக இருந்திருக்கின்றது. அதற்கு எதிராக செயல்பட்டால் அரசாங்கத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அந்த சந்தர்ப்பத்தில் தான் அவர் தனது தந்தையைப் பார்;க்கச் செல்லும் நேரம் அங்கிருந்த வரதராஜ விநாயகர் ஆலயத்திலிருந்து கேட்ட மணியோசை அவரை ஈர்த்திருக்கிறது.

அப்போது ஒரு சட்டத்தரணியைச் சந்தித்துப் பேசியதில் அவரது பிரச்சினை தீரும் வழி கிடைக்கின்றது. இது வரதராஜ விநாயகரின் அருள் என்று எண்ணிய ஈஸ்வரன் அவர்கள் கோயிலுக்கு தன்னாலான பங்களிப்பை நல்கினார். ஆனால் அவரைவிட இன்னொருவர் பெரிய தொகையைக் கொடுத்த போது தன் இறைவனுக்கு அதைவிட மேலானதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய இவர், தான் அடிமைப்பட்டிருந்த விஸ்கி குடிக்கும் பழக்கத்தை அன்று முதல் விட்டொழித்தாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

முயற்சி திருவினையாக்கும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் விளக்கம் சிந்திக்கத்தக்கது. இதை நூலாசிரியருக்குக் கற்றுக்கொடுத்தவர் சுவாமி வாகீசானந்தர். முயற்சி வினையாக்கும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்றுதான் சொல்லப்படுகின்றது. திரு என்பதன் அர்த்தம் இறைவனின் ஆசி என்பதாகும். முயற்சியும், இறைவனின் ஆசியும் இருந்தால்தான் எந்த காரியமும் வெற்றியடையும் என்கிறார் நூலாசிரியர்.

என்னைத் திருத்திய ஆசிரியர்கள் என்று அவர் தனது ஆசிரியர்கள் பற்றியும் இந்நூலில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆசிரியர்கள்தான் நம் வாழ்க்கையின் படிக்கட்டுக்கள். அவர்கள் போட்ட பாதையில்தான் நாம் நம் வாழ்வைக் கடந்து கொண்டிருக்கின்றோம். நல்ல ஆசிரியர்கள் மாணவர்களின் இன்னொரு பெற்றோருக்கு ஒப்பாவார்கள். இதில் வ. இராசையா மாஸ்டர் பற்றி நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

`இராசையா மாஸ்டர் பிரம்பினைத் தொட்டதில்லை. வெண் கட்டியையும் பேனாவையும் மட்டுமே அவர் கைகள் பிடித்தன. பாடம் எழுதாத போதுகூட அழப் பண்ணும் வார்த்தைகளை அவர் சொன்னதில்லை. பள்ளிப் படிப்பை முடித்து பற்பல ஆண்டுகள் கடந்த பிறகும் அவரோடு எனக்கு தொடர்பு இருந்து வந்தது. இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்நாள் முழுதும் எங்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாக வாழ்ந்து காட்டினார்’.

நட்பு என்பது நம்மை ஆறுதல் படுத்தும் சிறந்த உறவாகும். இந்த உறவு பொய்யாகிப் போகின்ற போது வாழ்க்கையே கசந்து விடுகின்றது. உண்மையான அன்பு எப்போதும் நிலைத்திருக்கும். முகம் காணாவிட்டாலும் கூட அகத்தில் நின்று நிலைக்கும் அன்பு சக்தி மிக்கது. சில கால நட்பாக இருந்தாலும்,  தொடர்புகள் அறுந்துவிட்டாலும் நண்பன் எங்கே இருக்கிறானோ எப்படி இருக்கிறானோ என்று எண்ணுவதே சிறந்த நட்பு என ஈஸ்வரன் அவர்கள் தன் நண்பர்கள் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார்.

நண்பர்களோடு கூடித் திரிந்த இளமைக்காலத்தில் ஒரு சிறுவனிடம் தான் ஏமாந்துவிட்டதான ஒரு அனுபவத்தையும் நூலாசிரியர் இதில் குறிப்பிடுகின்றார்.  தன் கையில் இருந்த காசை சிலர் பிடுங்கிக்கொண்டு போய்விட்டதாகக் கூறி ஒரு சிறுவன் ஈஸ்வரன் அவர்களிடம் உதவி கேட்கின்றான். இவரும் தாராள மனம் படைத்தவர் ஆதலால் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிடுகின்றார். நண்பர்கள் சிறுவன் அவரை ஏமாற்றிவிட்டதாக கிண்டல் செய்கின்றார்கள். நண்பர்களிடமும் அவமானம். ஒரு சிறுவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்ற வெட்கம் மறுபக்கம்.

இப்படியிருக்க ஈஸ்வரன் அவர்களின் தந்தையின் அழைப்பின் பேரில் ஒரு சுவிஸ் நாட்டு சாமியார் அவர்களது வீட்டுக்கு விருந்துக்கு வருகின்றார். அவரிடம் தன் மனக் கிலேசங்களை முன்வைத்த போது துறவி கூறிய கீழுள்ள அறிவுரை யாவருக்கும் பொருந்துவதாகக் காணப்படுகின்றது.

`மற்றவர்களை வெளித் தோற்றத்தைக் கொண்டு நீ போடும் கணக்கு உத்தேசமானதுதான். அதுவே முடிவு என்று சொல்லிவிட முடியாது. முதலில் செய்ய வேண்டும் என்று நினைத்தாய். உன் மனதில் கருணை சுரந்தது. இறைவன் தோன்றினான். கொடுத்தாய். அத்தோடு உன் கடமை முடிந்தது. சிறுவன் உண்மையிலேயே பணத்தைத் தொலைத்தானா? உன்னை ஏமாற்றினானா? பொய் சொன்னானா? வஞ்சித்தானா? என்று நினைத்து உன்னை நீயே குழப்பிக்கொள்ளாதே. எப்போது கொடுக்க வேண்டுமென்று தோன்றியதோ, நீ கொடுத்தாயோ அந்த எண்ணத்தையும் வினையையும் இறைவன் அறிவான். உன்னை ஆசீர்வதிப்பான். கொடுத்ததை மறந்து விடு’

முயற்சி திருவினையாக்கும், துள்ளித் திரிகின்ற காலத்தே, எந்தையும் தாயும், தம்பியுடையான், மனைவி மாணிக்கம், பயணங்கள் தந்த பாடங்கள், நகுதற் பொருட்டன்று நட்டல், இறைவனைத் தேடி ஆகிய 08 தலைப்புக்களில் நூலாசிரியர் தனது அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அனுபவங்களை எழுதுவதென்பது சுவாரஷ்யமான விடயம். தத்தமது அனுபவங்களில் பிறரும் பயனடைய வேண்டும். அத்தகைய தனது அனுபவங்களை நூலாசிரியர் வாசகர்களுக்காக வழங்கியிருக்கின்றார். ஈஸ்வரனின் சிறுகதைகள் என்ற சிறுகதை நூலையும் இவர் வெளியிட்டுள்ளார். இறைபக்தி நிறைந்த இவரது எழுத்துக்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள்!!!

நூல் – அர்த்தமுள்ள அனுபவங்கள்
நூலின் வகை – அனுபவங்கள்
நூலாசிரியர் – தெ. ஈஸ்வரன்
வெளியீடு – காந்தளகம் வெளியீடு
விலை – 500 ரூபாய்

poetrimza@gmail.com