எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எந்தவொரு விடயத்தைப் பற்றியும் ஒருவித கருத்திருக்கும். சில கருத்துகள் எம்முடன் ஒத்துப்போகக்கூடியவையாகவிருக்கும். வேறு சில கருத்துகள் முற்றிலும் ஒத்துப்போகாதவையாகவிருக்கும். அதற்காக அவரைத்தனிப்பட்டரீதியில் தாக்குவது முட்டாள்தனமானது. அவரது கருத்துகளை அவரது கருத்துகளினூடு எதிர்கொள்வது மிகவும் அவசியம். உதாரணமாக அவரது கருத்தான இந்திய அமைதி காக்கும் படையினர் பற்றிய கருத்து. அதற்காக நாம் ஆத்திரப்பட வேண்டிய தேவையில்லை. அவரது கூற்று தவறானதென்பதை தர்க்கரீதியாக ஆணித்தரமாக நிரூபிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக அவரைத்தனிப்பட்டரீதியில் தாக்குவதென்பது எதிர்மறையான விளைவுகளையே தரும்.
அதுபோல் அவருக்கு ஒவ்வொரு படைப்பாளி பற்றியும் ஒவ்வொருவித கருத்து இருக்கும். அவரது கருத்து தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அல்லது அவர் தன் எழுத்தை அவமதித்து விட்டார் என்பதற்காகத் துள்ளிக்குதிக்க வேண்டியதில்லை. அவரது கருத்தை மாற்றும்படி வற்புறுத்த முடியாது. அது அவரது கருத்து. அது அவரது கருத்துரிமை..
அவர் ஒரு படைப்பைப்பற்றி உயர்த்திக் கூறுவதாலோ அல்லது தாழ்த்திக் கூறுவதாலோ அந்தப் படைப்பின் தரம் குறைந்து போய்விடப்போவதில்லை. உண்மையிலேயே அந்தப் படைப்பு தரமானதாகவிருப்பின் நிச்சயம் காலத்தை வென்று வாழும். மாகவி பாரதியைப்பற்றியே அவர் ஒரு மகாகவி அல்ல என்று வாதிட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களெல்லாரும் காலத்தின் முன் மண்டியிட, இன்றும் பாரதி மாகவியாக உயர்ந்து நிற்கின்றார். இதுபோல் பல உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.
பொதுவாக ஜெயமோகனைப்போன்றவர்கள் ஒரு படைப்பைத் தூக்கிப் பிடித்ததும் ஆனந்தக் கூத்தாடுவது அவரது அங்கீகாரம் கிடைத்து விட்டதென்பதற்காக. அதுபோல் அவர் ஒரு படைப்பைத்தாழ்த்தி விமர்சித்து விட்டதும் ஆக்ரோஷக்கூத்தாடுவது அவரது அங்கீகாரம் தமக்குக் கிடைக்கவில்லையென்பதற்காக. இந்த மனநிலையிலிருந்து ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும். அங்கீகாரம் நாடும் போக்கினை எழுத்தாளர்கள், கலைஞர்கள் எப்பொழுதும் எதிர்க்க வேண்டும். மேலும் ஒருவரின் கருத்துகளையோ, படைப்புகளையோ அக்கருத்துகளினூடு, படைப்புகளினூடு எதிர்கொண்டு தர்க்கிக்க வேண்டுமே தவிர , தனிப்பட்டரீதியில் அவரை எதிர்கொண்டல்ல.
ஒருவரின் கருத்துகளை தர்க்கரீதியாக எதிர்கொள்வதற்குப் பதில், ‘நடத்தைப்படுகொலை’யினூடு அவரைத் தாழ்த்தி விட்டு, கருத்துகளையும் எதிர்கொள்வது எதிர்மறையானது. ஆரோக்கியமான நடவடிக்கையுமல்ல.
ngiri2704@rogers.com