“முரட்டுத்தனம் மிக்க சட்டத்தரணி, மரியாதையீனம் தொடர்பான, தமது மேன்முறையீட்டு முயற்சியில் தோல்வியுற்றார்.” ஜூன் 15, 2016 ‘ரொறன்ரோ ஸ்ரார்’ பத்திரிகை இப்படியொரு தலையங்கத்துடன் செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றது. இதில் சம்பந்தப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான Joseph Groia என்பவர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் ரொறன்ரோவில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, எதிர்த் தரப்பினருக்காக வாதாடிய இவர், வழக்குத்தொடுநர் குறித்துத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதுவே இவர் மீதான குற்றச்சாட்டு.
தாம் குற்றமற்றவர் என நிரூபிப்பதற்கு எடுத்த முதல் இரு முயற்சிகளும் தோற்றுப் போகவே, மூன்றாவது முயற்சியாக, ஒன்ராறியோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தமது முறையீட்டை Joseph Groia சமர்ப்பித்திருந்தார். அதுவும் தற்போது தோல்வியில் வந்து முடிந்துள்ளது! இங்கு சட்டத்தரணி ஒருவர் தண்டனைக்குள்ளாவதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது, தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் அவரது தகாத நடத்தை!
1974 ஜனவரி பத்தாம் திகதி, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் கடைசி நாள் நிகழ்ச்சியின்போது, 9 தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். அது தொடர்பான விசாரணை யாழ். நீதவான் மன்றில் நடைபெறுகிறது. அந்நாளைய யாழ். பொலிஸ் அதிபர் ஆரியசிங்க, இன்ஸ்பெக்ரர் பத்மநாதனிடம், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறார், “இவர்தான் பிரச்சினைக்குக் காரணம். இவரைக் கவனிக்க வேண்டும்.” இவ்வார்த்தைகள் அமிர்தலிங்கத்தின் காதில் விழவே அவர் எழுந்து, நீதிபதி பாலகிட்ணரிடம் முறைப்பாடு செய்கிறார். ஆனால் நீதிபதியோ முறைப்பாட்டாளரையே நீதிமன்றை விட்டு வெளியேற்றுகிறார். இதனை அவதானித்துக்கொண்டிருந்த முன்னாள் மாவட்ட நீதிபதி தம்பித்துரை, “திரு. அமிர்தலிங்கம் அவர்கள் மதிப்புக்குரிய, ஆற்றல் மிக்க, ஒரு சிறந்த சட்டத்தரணி மட்டுமல்ல, இலங்கையிலுள்ள சுமார் இரண்டரை மில்லியன் தமிழரது மரியாதைக்கும் உரிய ஒரு தலைவர். அத்தகைய ஒருவரை இவ்வாறு நீதிமன்றை விட்டு வெளியேற்றி அவமதிப்பது, முறையற்ற செயல்” எனக் கூறித் தமது ஆட்சேபனையை முன் வைக்கிறார். நீதிபதி பாலகிட்ணர் தமது தவறை உணர்ந்து, அமிர்தலிங்கத்தை மீள அழைத்து, மன்னிப்புக் கோரி, ஆசனத்தில் அமர வைக்கிறார். இங்கு சட்டத்தரணி ஒருவர் தண்டனைக்குள்ளாவதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது, அவரது அரசியல்!
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்ரன் அமைந்துள்ள கொலம்பியா மாகாணத்தில், 2007 இலையுதிர் காலத்தின்போது, Liyah Brown எனும் பெயருடைய, நிறத்தோல் கொண்ட பெண் சட்டத்தரணி ஒருவர் நீதிபதியால் தண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்தேறியது. குற்றம் சாட்டப்பட்ட ஓர் ஏழை சார்பாக, பொதுமக்கள் பிரதிவாதச் சட்டத்தரணியாக அவர் நீதிமன்றில் வாதிட்டுக்கொண்டிருக்கிறார். தமது தரப்பைச் சேர்ந்த பிரதிவாதி, வீடற்ற ஓர் ஏழை என்பதை நீதிபதிக்கு எடுத்துரைக்க முற்பட்டமையைத் தவிர, வேறு எந்தவித, பாரதூரமான குற்றத்தையும் அவர் செய்யவில்லை.
நீதிமன்றில் எல்லை மீறி நடந்ததாக John H. Bayly Jr. எனும் பெயருடைய நீதிபதியால் குற்றம் சாட்டப்பட்டு, தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, சட்டத்தரணி Liyah Brown தடுத்து வைக்கப்படுகிறார். முறையற்ற இத்தண்டனைக்காக நீதிபதி பின்னர் பகிரங்கமாகக் கண்டிக்கப்படுகிறார். தனித்துவமும் அர்ப்பணிப்பும் ஆர்வமும் மிக்க ஒரு சட்டத்தரணி எனப் பெயரெடுத்த Liyah Brown, இவ்வாறு தண்டனைக்குள்ளாவதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது என்னவாக இருக்கலாம்?
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் 23-05-2016 திங்களன்று இதனையொத்த இன்னொரு துன்பியல் சம்பவம் நடந்தேறியுள்ளது. பொதுமக்கள் பிரதிவாதச் சட்டத்தரணியாகக் கடமையாற்றும் Zohra Bakhtary எனும் பெயருடைய, நிறத்தோல் கொண்ட பெண்ணொருவருக்கே இம்முறையும் இது நடைபெற்றுள்ளது. நன்னடத்தைக் கட்டளையை மீறிய குற்றத்திற்காக தமது தரப்புப் பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட 6 மாதச் சிறைத் தண்டனையைக் குறைத்து, கருணை காட்டுமாறு அவர் வாதாடியதால் வந்த வினை.
சட்டத்தரணிக்கும் நீதிபதிக்கும் இடையே இடம்பெற்ற வாதாட்டம் சூடுபிடிக்கவே, “சத்தம் போடாதே, இனியொரு வார்த்தை தன்னிலும் பேசாதே, நீதிமன்றில் கேவலப்பட்டு, அவமதிக்கப்பட நீ விரும்புகிறாயா?” என அன்றையை விசாரணையை மேற்கொண்ட நீதிபதி Conrad Hafen, சட்டத்தரணி Zohra Bakhtary மீது சீறிப் பாய்கிறார். முடிவில், “இதோ பார், நான் உனக்கொரு பாடம் புகட்டுகிறேன்” எனக் கூறிக்கொண்டு, அங்கு கடமையிலிருந்த காவலதிகாரிகளிடம் கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கிறார். விளைவாக, கை விலங்கிடப்பட்டு, கைதிகளோடு கைதியாக, ஜூரர்களுக்கருகில் சட்டத்தரணி Zohra Bakhtary இருத்தி வைக்கப்படுகிறார்.
நீதிமன்றில் ‘குறுக்கிடுவது’ ஓர் ஒழுக்கமற்ற செயல் என்றும், அவ்வாறு குறுக்கீடு செய்த சட்டத்தரணிக்கு விலங்கிடுதல் பிரச்சினைக்குத் தீர்வு தரும் என்றும், அவ்வாறே விலங்கிட்டதால் அன்றைய விசாரணை சுமுகமாக நடந்து முடிந்தது என்றும் சம்பந்தப்பட்ட நீதிபதி Conrad Hafen கூறுகிறார்.
“நீதிமன்றில் ஒழுங்கை மீறுவோரைக் கட்டுப்படுத்தல் ஒரு நீதிபதியின் கடமையே” என்பதை ஒப்புக்கொள்ளும் சட்டத்தரணி Zohra Bakhtary, “ஆனால் ஒரு சிறு களவுக் குற்றத்திற்கான நன்னடத்தைக் கட்டளையை மீறிய ஏழையின் தண்டனையைத் தயைகூர்ந்து குறைத்து உதவுமாறு வாதாடியமைக்காக, நான் கைவிலங்கிடப்பட்டுக் கைதிகளோடு கைதியாக வைக்கப்பட்ட அந்த நாள், அமெரிக்க வரலாற்றில் ஒரு கரிய நாள்” என மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
“உரிய, நியாயமான, காத்திரமான சட்ட ஆலோசனைகளையும் உதவிகளையும் பெறும் உரிமையை இந்த நாட்டின் அரசியல் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியிருக்கும் நிலையில், அந்த உரிமையை வலியுறுத்தும் வகையில் முன்வைக்கப்படும் வாதங்களுக்குச் செவிமடுப்பதே ஒரு நீதிபதியின் கடமையன்றி, வாய் மூட வைப்பதல்ல” என அவர் மேலும் சுட்டிக் காட்டுகிறார்.
வழக்குத் தொடுநர்களுடனும் அறங் கூறுநர்களுடனும் (Jurors) சாட்சியாளர்களிடமும் சட்டத்தரணிகளிடமும் ஏனையோரிடமும் நீதிபதிகள் பொறுமையுடனும் பெருந்தன்மையுடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என அமெரிக்க நீதித்துறை ஆணையம் வலியுறுத்துகிறது. இதற்கமைய, அன்றைய சம்பவத்தின்போது நீதிபதி Conrad Hafen நடக்கத் தவறிவிட்டதாக பல்வேறு திசைகளில் இருந்தும் குற்றச் சாட்டுகள் வந்து குவிந்த வண்ணமுள்ளன.
“பாடம் படிப்பிப்பதற்கென்று ஒரு சட்டத்தரணிக்கு விலங்கிடுதல் ஒரு முறையற்ற, நீதியற்ற, முன்னொருபோதும் நடைபெற்றிராத செயல்” என்று கருத்து வெளியிட்டுள்ள Clark County Defenders Union, நீதிபதி Conrad Hafen செய்தது ஒரு தவறான செயல் எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமது 10 வருட சேவையில் இதுபோன்ற சம்பவத்தைக் கேள்விப்பட்டதேயில்லை எனக் கூறும் பிரதம பொதுமக்கள் பிரதிவாதச் சட்டத்தரணி Phil Kohn, நீதிபதி Conrad Hafenனின் அணுகுமுறையைக் கண்டித்ததுடன், “ஒரு சட்டத்தரணிக்கு உரிய கௌரவத்தை வழங்காதவராக, அவரை Zohra என முதற் பெயர்கொண்டு விழித்து, நீதிமன்றில் பாலபாட வகுப்பு ஒன்றினை நீதிபதி Conrad Hafen நடத்தியிருக்கிறார்” என விமர்சித்திருக்கிறார். அமெரிக்க நீதித்துறையை நீதிபதி Conrad Hafen அவமதித்திருப்பதாக நெவேடாவைச் சேர்ந்த 150 உறுப்பினர்களைக் கொண்ட பொதுமக்கள் பிரதிவாத சட்டத்தரணிகள் குழு ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நீதிபதி Conrad Hafen தடைசெய்யப்பட வேண்டும் எனவும் முறைப்பாடு செய்துள்ளது.
அமெரிக்காவின் 80-90 சதவீதமான நகரப்புறக் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்படுபவர்களுக்காக, பொதுமக்கள் பிரதிவாதச் சட்டத்தரணிகளே நீதிமன்றங்களில் வாதாடி வருகின்றனர். இச்சட்டத்தரணிகள் ஏழைகளுக்காகவும் அதிகாரமற்றவர்களுக்காகவும் நீதிமன்றங்களில் வாதாடுபவர்கள். அதிர்ஷ்டமற்ற அம்மக்களின் கவசமாகவும் காவலரண்களாகவும் விளங்குபவர்கள். குறைந்த பலாபலன்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் இடையே கடமையாற்றும் இச்சட்டத்தரணிகள், நெஞ்சுறுதியும், ஆழமான இலட்சிய வேட்கையும், மிகுந்த அர்ப்பணிப்பும் உடையவர்களாக இருத்தல் அவசியம் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல. போற்றுதலுக்குரிய இப்பொதுப் பணியாளர்களுக்கு, ஜனநாயகத்தின் காவல் தேசத்தில் சட்டத்தின் காவலர்களால் இவ்வாறு விளைவிக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கான அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது என்னவாக இருக்கலாம்?
ஓர் அரசாங்கத்திடம் சட்டமியற்றும் அதிகாரம், நிர்வகிக்கும் அதிகாரம், நீதித்துறை அதிகாரம் என மூவகை அதிகாரங்கள் இருத்தல் வேண்டும் என அரசறிவியல் அரிச்சுவடி சொல்கிறது. சட்டத்தின் சர்வ வியாபகத் தன்மையையின் அடையாளமாக, அந்த அரசாங்கத்தினால் இயற்றப்படும் சட்டங்களின் அடிப்படையில்தான் நாடு நிர்வகிக்கப்படுகிறது. அதே சட்டங்களின் அடிப்படையிலேயே நீதியும் நிலைநாட்டப்படுகிறது. இவ்வாறு நீதி நிலைநாட்டப்படுகையில், ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளான மக்கள் இறைமை, சமத்துவம், சுய ஆட்சி என்பன பேணப்படுதல் இன்றியமையாதது.
வடகொரியா, சீனா, வியட்நாம், கியூபா, அரபு நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் என உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த ஜனநாயகப் பண்புகள் புறக்கணிக்கப்படுவதாகவும், அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அமெரிக்கா அடிக்கடி புகார்செய்து வருகிறது. அவை குறித்து அவ்வப்போது அவ்வுலக நாடுகளுக்குப் பாடமெடுத்து வருகின்றது. பொருளாதாரத் தடையெனும் தடியெடுத்து ஆங்காங்கே தண்டனை கொடுத்தும் வருகிறது.
இதே அமெரிக்காவில்தான் இன, மத, நிற, பாலினப் பாகுபாடு மலிந்துபோய்க் கிடப்பதையும், ஜனநாயகத்தின் முதுகெலும்பான சமத்துவம் மெலிந்துபோய்க் கிடப்பதையும் அண்மைக்காலச் சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சட்டத்தரணி Zohra Bakhtary முகங்கொடுத்த துயர சம்பவம் அதற்கான ஒரு சிறு துளி உதாரணம்.
இங்கு வெள்ளைத்தோல் கொண்ட ஆண் நீதிபதி ஒருவர், தமது அதிகார பலத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். கடமையைச் சரிவரச் செய்யமுயன்ற நிறத்தோல் கொண்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கைவிலங்கிட்டு, அவரை மானபங்கப்படுத்தியிருக்கிறார். வெள்ளை, ஆணாதிக்க சமூகம் இன்னமும் தனது ஆணவத்தைக் கைவிடவில்லை என்பதனை இவர் அடையாளப்படுத்தியிருக்கிறார். சட்டத்தின் பாதுகாவலர்களது கைகளாலேயே பாலின சமத்துவமும், தோல்நிற சமத்துவமும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக, Liyah Brown, Zohra Bakhtary போன்ற அதிகாரமற்றவர்கள் தண்டனைக்குள்ளாவதற்கு அடிப்படைக் காரணம் பால், நிறம், வெள்ளை எனும் அடையாளங்களுக்கிடையிலான ‘பனிப் போர்’ மோதலன்றி வேறு என்னவாக இருக்கலாம்?
சான்றாதாரங்கள்:
Toronto Star, Wednesday, June 15, 2016
Matt Ferner, The Huffington Post, May 27, 2016
Keith L. Alexander, Washington Post, September 5, 2007
கனக. மனோகரன், ‘மின்னல் மனப் போர் வீரன்,’ வரலாற்றின் மனிதன், அ. அமிர்தலிங்கம், பவழ விழா மலர், 2002
knavam27@hotmail.com