ஜெயமோகன் இனப்படுகொலை பற்றிக்கூறிய கருத்துகளுக்கு உணர்ச்சி வசப்பட்டுப்பலர் இணையத்தில் அவரைத்தூற்றிக் காரசாரமாக எதிர்வினையாற்றி வருகின்றார்கள். அவரது பேட்டியினை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் இணையத்தில் வெளியான அந்நேர்காணல் கேள்வி/ பதிலை வாசித்திருக்கின்றேன். முதலில் அவரது கேள்வியினைப் பார்ப்போம்.
“விகடன் தடம்: ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருந்தன’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் இதுகுறித்த உங்கள் கருத்து என்ன? உங்களது ‘உலோகம்’ நாவல், இந்திய அமைதிப்படை குறித்த கட்டுரை ஆகியவை தொடர்ச்சியாக ஈழவிடுதலைக் குரல்களுக்கு எதிராக இருக்கின்றனவே?’’
ஜெயமோகன்: ``முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது. 1960, 70-களில் புரட்சிகரக் கருத்தியல் காலகட்டம் உருவானபோது, உலகம் முழுக்க அரசுக்கு எதிரான பல புரட்சிகள் நடந்தன. காங்கோ, பொலிவியா, இந்தோனேஷியா, மலேசியா என அது ஒரு பெரிய பட்டியல். இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது? இதேமாதிரியான செயல்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே, அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது. இலங்கை அரசு, தமிழர்களை மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை.”
இனப்படுகொலை பற்றிய இது போன்ற கேள்விகளுக்குப்பதிலளிக்கும்போது நம்மவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகின்றார்கள். உணர்ச்சி கண்ணை மறைக்கும். அறிவையும் தடுமாறச்செய்யும். வார்த்தைகள் வராமல், போதிய தர்க்கிக்கும் வல்லமை அற்று ஜெயமோகனின் கூற்றினை வரிக்கு வரி எதிர்ப்பதற்கான காரணங்களைக் கூறுவதற்குப் பதில் கொதித்தெழுகின்றார்கள்.
ஜெயமோகன் இனப்படுகொலை பற்றித்தான் தான் நம்பும் காரணங்களைக் குறிப்பிடுகின்றார். இந்தியா, இலங்கை உட்படப்பல நாடுகளில் நடைபெற்ற ஆயுதக் கிளர்ச்சிகளில் பலர் அரசபடைகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் கூட சிங்களவர்களான ஜேவிபியினர் படுகொலை செய்யபட்டிருக்கின்றார்கள். இவையெல்லாம் இனப்படுகொலைகளா? இவற்றை அரசு தனக்கெதிராகப் போரிடும் குழுக்களுடனான மோதல்கள் என்றுதான் தான் பார்ப்பதாகவும், இனப்படுகொலையாகப் பார்க்கவில்லையென்றும் கூறியிருக்கின்றார்.
ஜெயமோகன் தன் அறிவுக்குட்பட்டு, இனப்படுகொலை பற்றிய தனது புரிதலுக்கேற்பப் பதிலை அளித்திருக்கின்றார். ஆனால் இது பற்றிய ஜெயமோகனின் பதிலை இணையத்தில் குறிப்பிட்டுக் கொதித்தவர்களெல்லாரும் , ஜெயமோகனின் முழுப்பதிலையும் குறிப்பிடாமல் , தங்களுக்குச்சார்பான ஒரு பகுதியை மட்டும் தூக்கிப்பிடித்துக்கொண்டு குமுறுகின்றார்கள். ஜெயமோகன் இலங்கையில் நடந்ததை மட்டுமல்ல, காங்கோ, பொலிவியா, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கையில் நடைபெற்ற தமிழ், ஜேவிபி போராட்டங்கள் பற்றியெல்லாம் இனப்படுகொலைகள அல்ல என்று ஜெயமோகன் கூறியிருக்கின்றார்.
அவற்றைப்பற்றி எதுவுமே குறிப்பிடாமல், இலங்கைத்தமிழர்களுக்கெதிரான அரச படுகொலைகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டுப் பலர் குமுறி வெடித்திருக்கின்றார்கள்.
உண்மையிலென்ன செய்திருக்க வேண்டும்?
ஜெயமோகன் கூறிய முழுப்பதிலையும் குறிப்பிட்டு, அந்தப்பதிலின் ஒவ்வொரு வரியும் ஏன் தவறு என்று தம் கருத்தை நிரூபித்து வாதிட்டிருக்க வேண்டும்? அவ்விதம் செய்வதற்குப் பதில், ‘ஜெயமோகன் இனப்படுகொலை இல்லையென்று கூறிவிட்டார்.’ என்று கொதித்தெழுகின்றார்கள்.
இவ்விதம் கொதித்தெழுவதற்குப் பதில் இனப்படுகொலை பற்றிய அறிவினைச் சிறிது அதிகரித்துக்கொண்டு வாதிட்டிருக்கலாம். அவ்விதம் செய்யாமல், அல்லது செய்வதற்குப் போதிய ஆர்வமற்று ‘ஜெயமோகன் ஒழிக’ என்று குரலெழுப்புவது மிகவும் எளிதானது. எனவேதான் அவ்விதம் எதிர்வினையாற்றுகின்றார்கள்.
முதலில் ஜெயமோகன் கூறியவை பற்றிப்பார்ப்பதற்கு முன்னர் இனப்படுகொலை பற்றிய ஐக்கிய நாடுகள் சபை 1948இல் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தைச்சிறிது பார்ப்போம். அது பின்வருமாறு கூறுகின்றது:
“1948: The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide (CPPCG) was adopted by the UN General Assembly on 9 December 1948 and came into effect on 12 January 1951 (Resolution 260 (III)). Article 2:
Any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such: killing members of the group; causing serious bodily or mental harm to members of the group; deliberately inflicting on the group conditions of life, calculated to bring about its physical destruction in whole or in part; imposing measures intended to prevent births within the group; [and] forcibly transferring children of the group to another group. (Article 2 CPPCG)”
இதன் சாரத்தினைப் பின்வருமாறு கூறலாம்:
இத்தீர்மானத்தின்படி தேசிய, இன, மதக் குழுக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் எண்ணத்துடன் கொலை செய்வது மட்டும் இனப்படுகொலை அல்ல. அக்குழுக்களை , அல்லது அக்குழுக்களின் அங்கத்தவர்களை உடல் ரீதியாக, உள ரீதியாகத் துன்புறுத்துவதும் இனப்படுகொலைதான். அது மட்டுமல்ல அக்குழுக்களை முழுமையாக அல்லது பகுதியாக அழிக்கும் எண்ணத்துடன், திட்டமிட்டு அந்தக்குழுக்கள் மத்தியில் பிறப்பு வீதத்தைத்தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதும், குழந்தைகளைப் பலவந்தமாக ஒரு குழுவிலிருந்து இன்னுமொரு குழுவுக்கு மாற்றுவதும், இதற்கான வாழ்வியற் சூழலினை திட்டமிட்டு உருவாக்குவதும். இனப்படுகொலைக்குரிய குற்றங்கள்.
ஐக்கிய நாடுகள் சபை 1946இல் ஏற்றுக்கொண்ட இனப்படுகொலை பற்றிய வரைவிலக்கணம் வருமாறு:
“United Nations General Assembly Resolution 96 (I) (11 December) Genocide is a denial of the right of existence of entire human groups, as homicide is the denial of the right to live of individual human beings; such denial of the right of existence shocks the conscience of mankind, …and is contrary to moral law and to the spirit and aims of the United Nations. … The General Assembly, therefore, affirms that genocide is a crime under international law…whether the crime is committed on religious, racial, political or any other grounds…[10]
இதன் சாரத்தைப்பின்வருமாறு கூறலாம்: “:இனப்படுகொலை என்பது ஒட்டுமொத்தமாக மனிதக் குழுக்களின் வாழும் உரிமையை மறுப்பதாகும். ுகொலை என்பது தனிப்பட்ட மனிதரொருவரின் வாழும் உரிமையை மறுப்பதாகும்.”
இவ்விரண்டு தீர்மானங்களின்படி மிக எளிதாக ஜெயமோகனின் இனப்படுகொலை பற்றிய தடுமாற்றத்தினைபோக்கியிருக்கலாம். ஜெயமோகன் இனப்படுகொலை பற்றித் தடுமாறியதற்குக் காரணம் அரசுகள் எல்லாம் கிளர்ச்சி செய்பவர்களைத் தம்முடன் போர் செய்பவர்களாகக் கருதிக்கொல்கின்றார்கள். அவையெல்லாம் இனப்படுகொலைகளா என்று குழம்பியதுதான்.
ஐக்கியநாடுகளின் இனப்படுகொலை பற்றிய வரைவிலக்கணம், குற்றங்கள் பற்றிய தீர்மானங்களின்படி அவையெல்லாம் கூட இனப்படுக்கொலைகள்தாம். எனவே இலங்கையில் நடைபெற்றதும் இனப்படுகொலைதான். ஜெயமோகனின் தர்க்கத்தின்படி அவையெல்லாம் அரசுகளின் கிளர்ச்சிகளுக்கெதிரான போர் நடவடிக்கைகள். அந்த அடிப்படையில்தான் அவர் இலங்கைத்தமிழர்கள் மீதான அரச படுகொலைகளையும் அணுகுகின்றார்.
ஜெயமோகனின் அவையெல்லாம் இனப்படுகொலைகளா? என்னும் வினாவுக்குரிய விடையாக இனப்படுகொலை பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை கூறலாம். ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை பற்றிய தீர்மானங்களின் அடிப்படையில் அவையும் இனப்படுகொலைகளே.
இவ்விதம் தர்க்கபூர்வமாக ஜெயமோகன் கூறியதற்கெதிராக வாதிடுவதற்குப்பதில், அவர் கூறியதில் இலங்கைத்தமிழர்களுக்கெதிரான படுகொலைகளை மட்டும் பிரித்தெடுத்தும் கொண்டு, ஈழத்து எழுத்தாளர்கள் பலர் உணர்ச்சியில் குமுறியிருப்பதைப்பார்த்தால் ஒன்றினைக் கூறத்தோன்றுகிறது. தர்க்கம் செய்யும்போது ஆத்திரப்படாதீர்கள். கூறியவற்றை உங்களுக்குச் சார்ப்பாகத்திரிபு படுத்திக்கருத்துகளை வெளியிடாதீர்கள். முறையாக வரிக்கு வரி உங்கள் பக்க நியாயங்களை எடுத்துரையுங்கள். தர்க்கத்தில் உங்கள் பக்க நியாயங்களை வெளிப்படுத்துங்கள்.
இனப்படுகொலை பற்றிய பலரின் வரைவிலக்கணங்களைப் பின்வரும் இணையத்தளத்தில் வாசியுங்கள். அது பற்றிய புரிந்துணர்வினை அதிகரிக்க அது உதவும்.
https://en.wikipedia.org/wiki/Genocide_definitions