ஆய்வு: புதுக்கவிதைகளில் நில மாசுபாடு

நிஆய்வுக் கட்டுரைகள்!லமென்பது மண், நீர், காற்று மண்ணில் உள்ள தாதுப்பொருட்கள் தட்வெப்பம் முதலிய இயற்கை வளங்கள் எல்லாம் நிறைந்த இயற்கைச் செல்வம். இவ்வியற்கைச் செல்வங்கள் மனிதனுக்கு உணவு, உடை, மருந்து, உறைவிடம் ஆகியவற்றைத் தருகின்றன. சுற்றுச்சூழலில் நிலம் ஒரு முக்கியமான உள்ளுறுப்பாக உள்ளது. பூமியின் மேற்பரப்பானது வேளாண்மைப்பயிற்சி. கனிம வளங்களை வெளிக்கொண்டு வரச் சுரங்கம் தோண்டுதல், தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் வெளியேறுதல், நகரத் கழிவுகளைக் கண் மூடித்தனமாக அகற்றுதல் முதலிய அனைத்துக் காரணிகளாலும் மாசுபடுகிறது.

ஊட்டச்சத்துக் குறைபாடுகளினாலும், நிலத்தில் நீர் தேங்கிவிடுவதாலும் உவர்ப்புத் தன்மையினாலும், அளவுக்கதிகமாக ஆடு, மாடுகள் மேய்வதாலும், பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்காத காரணத்தினாலும் மண் வள பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கரித்துகள், புகை, தூசி, கதிரியக்க, வீழ்பொருள் போன்றவை காற்றின் மூலம் நிலத்தில் படிகின்றன. இவை மழை நீரால் அடித்துச்  செல்லப்படுவதும் உண். இதனால் நிலம் மாசடைகின்றது. இதனை

“நிலத்தின் மாசு மற்றும் மாசாக்கிகளின்
மூலங்கள் பற்றிய ஒரு பொதுக் கண்ணோட்டம்”
(சுற்றுச் சூழலியல், ப. 32)

நிலம்:

1. திடக்கழிவு, சாக்கடை – வீடுகள்
2. திடக்கழிவு    – உள்ளுர் ஆட்சி
3. தொழிலகக் கழிவு நீர் – தொழிலகங்கள்
4. தீங்குயிரிக் கொல்லிகள,;       
வேதிய உரங்கள்- வேளாண்மை
5. உலேகாகக் கழிவுப் பொருட்கள்
தூசி, எண்ணெய் – போக்குவரத்து
6.கதிரியக்கப் பொருட்கள் பயனற்ற வெப்பம்-    அணுக்கதிர்  நிலையங்கள், அணுக்குண்டு சோதனை

என்று சியாமளா தங்கமணி சுற்றுச் சூழலியல் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். பல்வேறு காரணிகளால் நிலம் மாசு அடையும் படிநிலைகளை கீழேக் காண்போம். வேளாண்மையில் நவீனம்
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில் பசுமைப்புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் உற்பத்தியைப் பெருக்க உயர் விளைச்சல் வகை, வீரிய ஓட்டு வகை விளைநிலப் பரப்புகளை அதிகரித்தல், ஒரே வருடத்தில் இரண்டு, மூன்று முறைகள் வேளாண்மை மேற்கொள்ளுதல், வேதியியல் உரங்களையும், பூச்சி மருந்துகளையும் கண் மூடித்தனமாகப் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் கையாளப்பட்டன. நிலப்பராமரிப்பிற்கு உழவர்கள் மிகுந்த முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுக்காத காரணத்தினால் மண்ணின் வளம் படிப்படியாகச் சீர்குலையத் தொடங்கியது. எனவே பெரும்பாலான விளை நிலங்கள் இன்று பயனற்ற நிலங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. வேதியல் உரங்கள் நிலங்களை மட்டும் பாதிப்பது இல்லை. நிலங்களில் விளைகின்ற உணவுத் தானியங்களையும் நச்சுத்தன்மை உடையதாக மாற்றுகின்றன. நஞ்சுள்ள உணவை உண்பதால் மனிதர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகின்றது. ஏனைய சுற்றுச் சூழலையும் பாதிக்கின்றது. இந்நிலையை இராஜசேகர்

“செயற்கை உரமும் நிலத்தினிலே
பயிரும் கருகும் நஞ்சினியே
சுற்றுச் சூழல் கேட்டினிலேநம் உயிரோ எமனின் பிடியினிலே”
(நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே.ப.90)

என்னும் கவிதை வரிகளில் சுட்டிக் காட்டுகின்றார். இயற்கைத் தன்னைத் தானே ஒழுங்குப்படுத்திக் கொள்ளும் தன்மையுடையது. மனிதன் செயற்கை உரங்களைப் பயன்படுத்தி அந்நிலையைச் சீர்குலைக்கின்றான். இச்சீர்குலைவு சூழலையும், மனிதனையும் அழிவுக்கு இட்டுச் செல்கிறது. எனவே செயற்கை உரங்களை எமனாக உருவகப்படுத்தியுள்ளார்.

நுண்ணியிர்கள் அழிவு – நிலம் சாரமிழத்தல்
வேளாண்மையைப் பன்மடங்கு பெருக்கவும் பயிர்களைப் பாதுகாக்கவும் பயிர்களைத் தாக்கி அழிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் பூச்சிக் கொல்லி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இம்மருந்துகளைப் பயன்படுத்தும் போது 150 வகைத் தாவரங்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் அழிவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மனிதனின் செயல்பாடுகளால் சிறிது சிறிதாக உயிர்கள் அழிவதை அன்பாதவனது ஹைக்கூ கவிதை,

“பூச்சி மருந்துத் தெளிப்பு
உடன் மடிந்தது பூச்சி
தவணையில் மனிதன்
(தற்காலக் கவிதைகள் ஒரு பார்வை, ப.75)

என்கிறது. மனிதனின் இயற்கைக்கு மாறுபட்ட செயல்பாடுகளால் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதிப்புக்குள்ளாகின்றது. உயிரினங்கள் மண்ணோடு மண்ணாக மடிகின்றன. இதன் விளைவு உணவுப் பற்றாக்குறை, இக்குறையினால் மனிதர்களும் மடிகின்றனர். இயற்கையை அழித்தால் அனைவரும் இறக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக இக்கவிதை விளங்குகின்றது.

காடுகள் அழிவு
காடுகளை அழித்ததால் தட்வெப்ப நிலைகள் மாறின. அதனால் உயிர்ச்சூழல் அமைப்புகளில் நுட்பமான நிலைகுலைவுகள் ஏற்பட்டன. இதனை விஜய்கங்கா,

“தடுமாறின
வாழிடங்களெங்கும்
தட்பவெப்பம்”
(மேகத்துளி விழ ப.54)

என்று குறிப்பிடுகின்றார். தாங்கள் வாழ்வதற்கேற்ற சூழலின்றி எண்ணற்ற உயிர்கள் அழிந்தன. உயிர்களின் அழிவினால் வளங்கள் குன்றின. இந்நிலையினை எவ்விதத்திலும் ஈடுசெய்ய இயலாது. இதனைப் புரிந்து கொள்ளாத சமூகத்தைப் பற்றி வருந்துகிறார்..

காடுகள் அழிவினால் பறவையினங்களின் வாழ்க்கைப் போராட்டம் நிறைந்ததாக மாறிவிட்டது. இதனைக் கவிஞர் இளைய பாரதி
“வெட்டுண்டு வீழ்ந்தன காடுகள்
பொந்துகள் இழந்த பறவைகள்
ஆகாயத்தில் அலைகின்றன
அடையக் கூடுகளின்றி”
(மரணத்தின் நட்சத்திரங்கள் ப.42)
என்னும் கவிதை மூலம் உணர்த்துகின்றார்.

இயற்கை வளங்களைச் சிதைத்துக் கொண்டிருக்கின்ற மக்கள் தொகைப் பெருக்கம் பற்றிக் கவிஞர் விக்ரமாதித்தயன்

“காணாமல் போய்க் கொண்டிருக்கிறது
காடுமலை அருவி ஆறு”
(கவிதைத் தொகுப்பு – ப.181)

என்றும், விஜயகங்கா கிராமங்கள் அழிந்து நகரங்கள் பெருகுவதை

“கிராமங்கள் நோக்கி
நகருகின்றன
நகரின்
நீட்சியுற்ற
எல்லைகள”
(மேகத்துளி விழ ப.29)

என்றும் குறிப்பிடுகின்றனர். நாகரிகம் தோன்றிய நிலையில் கிராமங்கள் தோன்றின. நாகரிக வளர்ச்சியின் உச்ச நிலையில் நகரங்கள் பெருகின. தொழில் மயமாக்கலுக்குப் பின்பு கிராமங்களும் நகரங்களாக மாறத்தொடங்கின. அத்துடன் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கக் கூடிய காடு, மலை, அருவி, ஆறு முதலியவையும் மறைந்துவிட்டன மக்களின் தேவைகள் பெருகிய நிலையில் இயற்கையின் வளம் குறைந்தது. இந்த எதிர்மறையான நிலையில் எஞ்சி நிற்பது மாசு மட்டுமே. இம்மாசினால் எதிர்காலம் இருண்ட நிலையை அடையக்கூடும். இனியாவது வரையறைக்கு உட்பட்ட வாழ்;க்கையை மேற்கொள்ளுங்கள் என்ற கருத்தினை இக்கவிதைகள் வெளிப்படுத்தியுள்ளன.

துணை நூற்பட்டியல்
1. சியாமளா தங்கமணி –     சுற்றுச் சூழலியல் பாரதி புத்தகாலயம் சென்னை.
2. வைகைச் செல்வி     –      நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே சுற்றுச்சூழல் கவிதைகள் அரும்பு பதிப்பகம்

*முனைவர் அ.ஜெஸிந்தா ராணி,  உதவிப்பேராசிரியர் தமிழாய்வுத்துறை ,புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி , திருச்சி – 2. | jpucandy@gmail.com