அத்தியாயம் இரண்டு!
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர்கள் இருவருடன் ராமேஸ்வரம் சென்றிருந்தேன்.மூவரும் கடலில் குளிக்கச் சென்றோம். அவர்கள் அளவுக்கு நீச்சலில் அனுபவம் எனக்கில்லை. கரையிலே நின்று குளித்துக்கொண்டிருந்த என்னை ஆழமான இடம்வரை இழுத்துச் சென்ற அவர்கள், நீச்சலடிக்கும்படி கட்டாயப் படுத்தியபோதுதான் கவனித்தேன், அவர்களது வாயிலிருந்து மதுவின் நெடி வீசியது. ஒரு கணம் அதிர்ந்தே போனேன்.
நல்ல நண்பர்கள் என்று பெயர் வாங்கிய அவ் இருவரும், இப்படியான குடிகாரர் ஆகியதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ராமேஸ்வரக் கடலில் போடும் முழுக்கு இவர்களது நட்புக்கும் சேர்த்தே என்பது எனது முடிவு.
அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்த்து.
எதிர்பாரா நேரத்தில், பெரியதோர் அலைவந்து, என்னை இழுத்துச் செல்ல, யாராலும் காப்பாற்ற முடியாத சூழ் நிலையில், இத்தோடு என் வாழ்வு முடிந்தது, என்று எண்ணியபோது, என் தலை முடியை ஓர் கரம் வலுவாகப் பற்றியது.
அது ஒரு பெண் என்பது மட்டுமே தெரிய, கண்கள் சொருகின.
சுய உணர்வு வந்தபோது, மீனவக் குடிசை ஒன்றிலே பாயில் படுத்திருந்தேன். கூட வந்திருந்த நண்பர்கள் கதை என்ன ஆனது தெரியவில்லை. அதுபற்றி அவசியமும் இல்லை. அருகே உட்கார்ந்து, அக்கறையொடு கவனித்தாள் அவள்.
அறிமுகமில்லா முகம். ஆனால், அன்பு ததும்பும் பார்வை. விலாசம் தெரியாத ஒருவன். அவனை விழுந்து,விழுந்து கவனிக்கும் உள்ளம். அதிர்ந்தேன்; ஆச்சரியப்பட்டேன். அவள் காட்டிய அன்பின்முன் அடங்கிப்போனேன். யார் என்று தெரியாத ஒருவனை, நீர் கொண்டு போகட்டுமே என்று எண்ணாமல், ஊர் அறிய வீட்டுக்குள் கொண்டு வந்தாள். பேர் கெடுமே என்பதுபற்றிக்கூட வருந்தாமல், ஒர் மருந்தாய் மாறினாள். குப்புறப்போட்டு மிதித்துக் : குடித்த நீரை வெள்ளியேற்றி, அப்புறம் என்வாயில் வாய்வைத்து…. தன் மூச்சைத் தந்து, என் மூச்சை ஓடவிட்டாள். நடந்தவற்றை அறிந்தபோது, என் பேச்சு நின்றது. அவளின் எழில் முகமே வென்றது. என்னுயிரைக் காத்ததற்கு நன்றியா..? எனக்குப் பணிவிடை செய்ததனால் பாசமா…? ஊராரைப்பற்றி அக்கறைப்படாமல் : உதவும் நோக்கைக்கண்டு காதலா…? தரம் பிரித்துச் சொல்ல எனக்குத்தெரியவில்லை. ஆனால் : “வரம்” என்று கிடைத்தசொத்து அவள்தான் என்று வரித்துக்கொண்டேன்.
அலைகடலில் காப்பாற்றி, அன்போடு ஆதரித்துக், கலைமகளாய்த் தோன்றும் அவள், “கலா”என்று பெயர் சொன்னாள். என் வாழ்வில் –நிலா என்று ஆகிவிட்டாள்…!
பெற்றோரின் மூத்தமகள் அவள். அடுத்த மகள் மாலா. இவர்கள் இருவருக்கும் மூத்தவன் வினாயகம். இரண்டாண்டுக்கு முன், ராமேஸ்வரம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, அந்நிய நாட்டு அரக்கர் படையால் கொல்லப்பட்டுவிட்டான். வெளியூர் சென்றிருந்த அவளின் பெற்றோரும், பள்ளிக்குச் சென்றிருந்த தங்கை மாலாவும் மாலைவேளையில் ஒன்றாக வந்தார்கள். என்னக் கண்டு அதிர்ந்தார்கள். ஆனால், நடந்த சம்பவத்தை பூரணமாகத் தெரிந்துகொண்ட்தும், தம் மகளால் ஒர் உயிர் காப்பாற்றப்பட்டதை எண்ணி ஆறுதல் அடைந்தார்கள். சம்பவத்தை அறிந்த பலரும் வேடிக்கை பார்க்க வந்தார்கள். தமக்குள் பற்பல வேட்டுக்களைத் தயார் செய்துகொண்டு, திரும்பினார்கள்.
உருண்டன இரண்டு நாட்கள். ஊருக்குப் புறப்பட நேரம் நெருங்கியது. வெகு சிரமத்துக்கு மத்தியில் யாருக்கும் தெரியாமல் கலாவைச் சந்தித்தேன். எனது கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றி, அவள் கரத்தில் அணிந்தேன். முதலில் சற்றுத் தயங்கியபோதிலும், பின்பு மறுக்கவில்லை.
“நான் திரும்பி வர்ரவரைக்கும் என் ஞாபகமாய் இருக்கட்டும்….”
“மோதிரம் போட்டால்தான் உங்க ஞாபகம் இருக்குமா….? ”
“பரவாயில்லை…. என் நினைப்பு மறந்துபோற டைம்ல இதைப் பாத்துக்க….”
என் முகத்தில் கள்ளச் சிரிப்பு.
“அப்பிடீன்னா…. இதைப் பாக்கவேண்டிய டைம்மே வராது….”
அவள் முகத்தில் பொய்க் கோபம்.
அதை வெகுவாக ரசித்தேன் நான். திடீரென்று கேட்டாள் கலா.
“இது சகுந்தலைக்கு துஷ்யந்தன் போட்ட கணையாழி இல்லையே..”
ஒருகணம் திக்குமுக்காடி விட்டேன். என் முகம் இலேசாகச் சுண்டிப் போனது.
மறுகணம், என்னைச் சுதாகரித்துக்கொண்டு பதில் சொன்னேன் :
“அப்போ துஷ்யந்தன் போட்ட மோதிரம் ஆத்துத் தண்ணியில போனது…. இப்போ நான் போட்ட மோதிரம் கடல்த் தண்ணியில வந்தது… ஆத்துத் தண்ணிச் சுவை தெம்பைக் குடுக்கும்…. ஆனா, கடல்த் தண்ணி உப்பு…, உணர்வையே குடுக்கும்….! இப்போ நான் உன்மேல வெச்சிருக்கிற உணர்வு உண்மையான காதல் உணர்வு….”
நான் பேசுவதை உள்வாங்கிய அதே சமயத்தில், பேசிய தொனியும், என் முகம் கொண்ட கடுகடுப்பும் அவள் கவனத்திலிருந்து விலகவில்லை.
சிரித்துக்கொண்டே பேசினாள் கலா..,
“ஒரு விளையாட்டுக்குச் சொன்னா, உடனையே மூக்கு நுனி செவந்து போயிடுமா…? சகுந்தலை மோதிரம் கடைசில கெடைச்சிச்சா இல்லியா…. அந்தப் பிரச்சினையாலதான், ‘சாகுந்தலம்’ காவியமே கெடைச்சிச்சு….”
“போதும் தாயே…. உங்க ‘சாகுந்தல’த்தை நானும் படிச்சிருக்கேன்…. அதுக்காக, அந்தப் பொண்ணு ‘சகுந்தலை’ பட்ட பாடும், கண்ட வலியும்…, யாருக்குமே வேண்டாம்…. ஏன்னா இது சாகுந்தலமும் இல்லை…. நான் காளிதாசனும் இல்லை….”
என் டென்சனைப் புரிந்துகொண்ட கலா, என்னைச் சமாதானப்படுத்த பேச்சைத் திசைதிருப்பினாள்.
“நீங்க குடுத்த இந்த மோதிரம் ரொம்ப அழகாயிருக்குங்க…”
மனதுக்கு ஆறுதலாயிருந்தது. புன்னகைத்தேன்.
அவள் மெதுவாக முணுமுணுத்தாள்.
“இந்த வார்த்தையை முதல்லையே சொல்லியிருக்கலாம்…. சும்மா லூசுமாதிரி, சகுந்தலையையும்-துஷ்யந்தனையும் இழுத்து…. மூடும் அவுட்டாக வெச்சு…. சே….”
அது – என் காதிலும் விழுந்தது. கண்டுகொள்ளாதது போல நின்றபடி, எனக்குள் பேசினேன்.
“பெரும்பாலான லேடீசுக்குள்ள ஸ்பெசாலிட்டிதானே இது…. யோசிக்காமே முட்டிட்டு அப்புறமா முழிக்கிறது…..”
என் அமைதியைக்கண்டு மகிழ்வுற்றாள் அவள்.
“நீங்க எங்கிட்ட குடுத்தது உங்களைப் பொறுத்தவரையில மோதிரம்…. ஆனா, என்னைப் பொறுத்தவரையில தாலிங்க….”
அவள் சொல்வது…, புரிந்தும் – புரியாமலும் என்னைக் குழப்பியது.
“கொஞ்சம் புரியிறமாதிரிச் சொல்லு கலா….”
“அதெல்லாம் சஸ்பென்ஸ்…. நீங்க ஊருக்குப் போய்ட்டு, உங்க அம்மா, அப்பா, சொந்தக்காரங்களைக் கூட்டிக்கிட்டு வாங்க…. வர்ரப்போ ஆட்டமெட்டிக்கா புரியும்….”
கலாவின் பெற்றோர் காட்டிய அன்பிலே, கரைந்துபோய் விட்டேன்.
“மணமாலை கொண்டு, மறக்காமல் வருவேன் : மகளின் கரம்பற்றி
மருமகனாய் ஆவேன்….”
உறுதிமொழி கூறியபடி கலாவை நோக்கினேன். முழுமையான
நம்பிக்கையைக் கண்களில் நிறைத்துக்கொண்டே விடை கொடுத்தாள் அவள்.
என் வீட்டில் கூறியபோது, எதிர்ப்பே வந்தது. ஏமாற்றத் தீ எழுந்து இதயவலி தந்தது. கவலையால் மயக்கமுற்றுக் காயம்பட விழுந்துவிட்டேன். கண்களை விழிப்பதற்குள், கழிந்தது ஓராண்டு. ஆமாம் : ஹோமா நிலையில் இருந்ததாகக் கூறினார்கள். அடக் கடவுளே… என் விதியை எழுதும்போது, என்னைப்போல தூங்கிவிட்டாயா…? நொந்துபோன என்னை, நோகடித்து மென்மேலும வெந்துபோக வைக்க, வீட்டார்கள் விரும்பவில்லை….! என்வழிக்கு அவர்கள் வந்தார்கள். கலாவீட்டுக்குவழியை நான் காட்டினேன்.
இரண்டு மாதத்துக்கு முன்புதான், கலா குடும்பத்தார்கள் ராமேஸ்வரம் விட்டு அகன்று சென்றதாக, அயலார்கள் கூறினார்கள். ஆனால், எங்கே என்ற தகவல், எவருக்குமே தெரியவில்லை. அங்குள்ள முதியவர் ஒருவர் என்னை அடையாளங்கண்டு, தனியே அழைத்தார்.
“தம்பி…. கலாவுக்கு நெறய இடங்களிலயிருந்தெல்லாம், மாப்பிள்ளை பேசி வந்தாங்க…. ஊரிலயுள்ள காவாலிப் பசங்க சிலபேரு, அவளையும் உன்னையும் பத்தி, மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட பத்தி வச்சு வச்சு வெரட்டிப்புட்டாங்கப்பா…. அதயும் மிஞ்சி ஒருசிலபேரு அந்தப் பொண்ணொட அழகுக்கு ஆசைப்பட்டுக் கட்டவந்தப்ப நிச்சயமா நீ ஒரு நாளைக்கு மாலையும் கையுமாவந்து, தன்னய கட்டிக் கொள்ளுவேண்ணு அந்தப் பொண்ணு அசராமெ சொல்லிப்புட்டா…! இனியும், இந்த ஊர்ல இருந்தா, சின்னப்பொண்ணு மாலாக்குகூட கல்யாணம் பண்ணி வெக்க முடியாதிண்ணு யோசனை பண்ணி, அவ ஆத்தாளும் ,அப்பனும் புள்ளைங்க ரண்டையுமே கூட்டிகிட்டுப் புறப்பட்டிட்டாங்கப்பா… எங்கேன்னு கேட்டப்ப்போ…அவங்கப்பன் சரியா பதில் சொல்லல்ல …வடக்கை எங்கயொ அவங்க அக்காளோ, தங்கச்சியோ இருக்கிறதா சொல்லிப்புட்டுப் போனான்…. இம்புட்டுதாம்பா நமக்குத்தெரிஞ்சது….”
ஏமாற்றத்துடன் திரும்பினேன்….. திரும்பினோம்….! அடுத்தவரின் ஆறுதலும், தேறுதலும் என் வாழ்வில் மாறுதலைத் தரப்போவதில்லை. சம்பந்தங்கள் பல வரலாம். என் பந்தம் அவள் மட்டுமே!
ஓடிக்கொண்டிருந்த பேரூந்தின் சாரதி, எதற்காகவோ திடீர் பிரேக் போட்டபோது, எனது “பிளாஸ் பேக்” நினைவுகளும் பிரேக் ஆனது.
[இன்னும் வரும்]